மீ. விசுவநாதன்

புளியமரத்தடி ஜோசியர்

அவன் பிறந்த பின்பு , அதன் குறிப்புகளை எடுத்துக் கொண்டு கல்லிடைக் குறிச்சியில் உள்ள கோட்டைத் தெரு புளியமரத்தடி ஜோசியர் ப்ரும்மஸ்ரீ இராமநாத ஐயரிடம் கொடுத்து அவனது ஜாதகத்தைக் கணித்தார்கள்.

கல்லிடைகுறிச்சி புளியமரத்தடி ஜோசியர் மிகப் பிரபலம். அவரைத் தேடி வெளியூர்களில் இருந்தெல்லாம் மக்கள் வந்து பார்த்துச் செல்லவது இன்றும் தொரடர்ந்து நடந்து வருகிறது. கல்லிடைக் குறிச்சி கிராமத்தின் ஆஸ்தான ஜோசியர் இவர்கள்தான். ஊர்க் கோவில் உற்சவங்களுக்கு நாள் பார்த்துச் சொல்வதும், பரிகாரங்கள் சொல்வதும், சாஸ்தாப்ரீத்தி போன்ற நிகழ்ச்சிகளுக்கு நாள் குறித்துச் சொல்வதும் இவர்தான். இராமநாத ஜோசியருக்குப் பின் அவரது பிள்ளைகள் கோபால சர்மா, ராதா கிருஷ்ண சர்மா, செல்வி சுபா ஆகியோர் அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர். இன்றும் சிங்கம்பட்டி ஜமீனுக்கு ஆஸ்தான ஜோதிடர் செல்வி. சுபா தான். இவர் ஒரு கணித ஆசிரியையும் கூட.

amv

கல்லிடைகுறிச்சியில் இருந்து ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சிங்கம்பட்டி என்ற சிறிய கிராமம். அங்குதான் மிகப் பிரபலமான சிங்கம்பட்டி ஜமீன் – சமஸ்தானம் இருக்கிறது. இயற்கை எழில் சூழ்ந்த மிக அழகிய ஊர். சுற்றி எங்கும் வயல் வெளிகளும், தோப்புகளுமாகக் கண்களுக்குக் குளிர்ச்சியான பூமி. சிங்கம்பட்டியில் இருந்து மிக அருகிலேயே உள்ளதுதான் மணிமுத்தாறு. பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட மணிமுத்தாறு நீர்த்தேக்கம் (118 அடி ஆழம் கொண்டது) இங்கு உள்ளது. நெல்லை மாவட்டத்தின் கால்வாய்ப் பாசனத்துக்கு மிக முக்கியமான பங்கு வக்கிக்கும் நீர்த்தேக்கமிது. மணிமுத்தாறு அருவியும், எண்பதடி ஆழங்கொண்ட தடாகமும் அழகாக இருக்கும். தண்ணீர் பளிங்கு போல இருக்கும். இளைஞர்களுக்கு இந்தத் தடாகத்தில் பாய்ந்து விழுந்து, முங்கி, எழுந்து நீந்தி விளையாடுவது தனி ஆனந்தம். அதற்கு மேலே மாஞ்சோலை என்ற பச்சைப் பசேல் என்றிருக்கும் குளிர்ந்த மலை சார்ந்த ஊர். இங்கு தேயிலைத் தோட்டங்கள் அதிகம். இங்கு விளையும் தேயிலை உலகப் பிரசித்தி பெற்றது. அதற்கும் மேலே உள்ளது கோதையார் என்னும் ஊர். எப்பொழுதும் “சில்” லேன்றுதான் இருக்கும். இக்காடுகளில் புலி, சிறுத்தை, மான், மிளா , யானைகள் போன்ற வன விலங்குகள் வாழ்கின்றன. இந்த மலை புலிகளின் சரணாலயம்.

அழகழகான வண்ண வண்ணப் பறவைகளும், சிங்கவால் குரங்குகளும் இந்தக் காடுகளில் அதிகம் காணலாம்.

அந்தத் தென்பொதிகை மலைத் தொடரில் இன்னொரு பக்கத்தில் உள்ளது பாபநாசம். இங்கு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டு உள்ளது. அதன் கொள்ளளவு 144 அடி. மூன்று புறம் மலைப்பகுதியைக் கொண்ட அணைக்கட்டு. இந்த அணைக்கு நீர் வருகின்ற முக்கியமான பகுதியே “பாணதீர்த்த அருவி” ஆகும். இந்த அருவிக்கரை திரைபடத் துறையினருக்கு மிகவும் பிடித்தமான இடம். “ரோஜா” படத்தில் வரும் “சின்னச் சின்ன ஆசை”ப் பாடல் இங்குதான் எடுக்கப் பட்டது. இந்த அருவி நீர் விழுந்து ஓடிப் பெருகிய இடமே “பாபநாசம் அணைக்கட்டு”. அதில் இருந்து வெளிவரும் நீர்தான் மலையின் வழியாக ஓடி “கல்யாண தீர்த்தம்” என்று விழுந்து, அதற்கும் கீழே “அகஸ்தியர் அருவி” என்னும் பெயருடன் வருடம் பூராவும் வற்றாமல் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியது. இந்த கல்யாண தீர்த்த அருவியில் குளிக்கும் பொழுது கால்வழுக்கி விழுந்த தன் மகளைக் காப்பாற்றச் சென்று தானும் அந்த அருவித் துறையிலேயே விழுந்து மறைந்தவர்தான் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகி “வ.வே.சுப்பிரமணியம் ஐயர்”. அவர் அருவியில் குளிக்கச் செல்லும் முன்பாக, தனது உடைகளை கரையில் அமர்ந்திருந்த ஒருவரிடம் வைத்திருக்கும் படித் தந்து சென்றார். அவர்தான் காமராஜர் அமைச்சரவையில் கல்வி மந்திரியாக இருந்த சி. சுப்பிரமணியம் அவர்களுடைய சித்தப்பா, பின்னாளில் துறவறம் பெற்று சுவாமி சித்பவானந்தர் என்ற பெயருடன் திருப்பராய்துறை ஆஸ்ரமம் நிறுவி, ஆன்மிகத் தொண்டாற்றியவர். அவரது சீடரே சுவாமி ஒம்காரானந்தர். தேனீயில் வேத புரியில் ஆஸ்ரமம் அமைத்து மிகச் சிறந்த முறையில் ஆன்மிகச் சேவை செய்து வருகின்றார்.

T .N. S. முருகதாஸ் தீர்த்தபதி

amv1

தென்பொதிகையில் களக்காடு, மணிமுத்தாறு, பாநாசம் மலைத் தொடரில் சுமார் எண்பதாயிரம் ஏக்கர் காட்டு நிலப்பரப்பு சிங்கம்பட்டி ஜமீன் – சமஸ்தானத்துக்குச் சொந்த மாக இருந்தது. ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய வரலாறு கொண்டது இந்த ஜமீன். இதன் 32வது பட்டத்து ராஜாதான் “தென்னாட்டுப் புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெய தியாக முத்து ஷண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி” . சுருக்கமாக T .N. S. முருகதாஸ் தீர்த்தபதி. இவருக்கு இப்பொழுது சுமார் வயது எண்பதுக்கும் மேலாகிறது. நன்கு கல்வி கற்றவர். சிறந்த ஆன்மிகவாதி. இவர்தான் இந்த ஜமீன் பரம்பரையின் கடேசி ராஜா. ஜமீன் பட்டத்தைத் துறந்தவர்.

தீர்த்தபதிப் பட்டம் வந்த வரலாறு

சிங்கம்பட்டி ஜமீன் – சமஸ்தானத்தின் குரு சிருங்கேரி ஸ்ரீ சங்கராசார்யார். இப்போதைய ராஜா T .N. S. முருகதாஸ் தீர்த்தபதி அவர்களின் கொள்ளுத்தாத்தா (பூட்டனார்) திவான் பகதூர் சுப்ரமணியத்தேவர் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 33வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யார் அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ ந்ருசிம்ஹ பாரதீ மகாஸ்வமிகளை பாபநாசத்தில் தரிசித்தார். அப்பொழுது சாதுர்மாஸ்ய விரத காலம். ராஜா சுவாமிகளை வணங்கி தங்களது சிங்கம்பட்டி ஜமீனுக்கு விஜயம் செய்யும் படி வேண்டுகிறார்.

தனக்கு வாரிசு வேண்டும் என்று பிராத்தித்து, சாதுர்மாஸ்யம் விரதம் முடிந்த பின்பு சுவாமிகளின் பல்லக்கைச் சுமந்துகொண்டு தங்களது ஜமீனுக்கு அழைத்துச் செல்கிறார். சிங்கம்பட்டியில் சில பிராமணக் குடும்பங்களை குடி அமர்த்தி அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து தருகிறார். அப்பொழுது சிருங்கேரி ஸ்ரீ சங்கராசார்யார் அவர்களது ஜமீன் பாரம்பர்யம் பற்றித் தெரிந்து கொள்கிறார். பாணதீர்த்தம் வரை அவர்களது ஜமீனுக்கு உட்பட்டு இருந்ததால், அந்தப் பரம்பரைக்கு “தீர்த்தபதி” என்று பட்டம் தந்து ஆசீர் வாதித்தார்.

அதனால் அடுத்த பரம்பரை ராஜாவின் பெயர் “முருகதாஸ் தீர்த்தபதி” என்று அழைக்கப் பெற்றார். அவர் தனது காலத்தில் சிருங்கேரி பீடத்தின் 34வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வமிகளை பாபநாசத்தில் தரிசனம் செய்து தனது குருநாதரை அவரும் பல்லக்கில் சுமந்து சென்று தனது குருபக்தியை வெளிப் படுத்தினார். இப்போதய ராஜா T .N. S. முருகதாஸ் தீர்த்தபதி அவர்களும் தங்களது குருநாதரை இப்பொழுதும் குரு விச்வாசத்துடன் தரிசனம் செய்து வருகிறார்.

ஒவ்வொரு வருடமும் ஆடி அம்மாவசை அன்று பாபநாசம் காரையாறு மலையில் உள்ள ஸ்ரீ சொரிமுத்தையனார் கோவிலில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு, இரவில் “இரவில் ராஜ தரிசனமும்” தருகிறார். இந்த விழாவைக் காண லட்சக் கணக்கான மக்கள் இன்றும் கூடுகின்றார்கள். சிங்கம்பட்டி சமஸ்தான வாரிசுகள்தான் இந்தக் கோவிலின் பரம்பரை அறங்காவலர்கள்.

1953 க்குப்பின் ஜமீன்கள் மறந்தது விட்டன. இருந்தாலும் அதன் பாரம்பர்யச் சின்னங்களை இன்றைய ராஜா பாதுகாத்து வருகிறார்.

அதில் முக்கியமானது சுவாமி விவேகானந்தர் சிகாகோ சென்று திரும்பிய சமயம், இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதிக்குப் பரிசளித்த மரத்தாலான யானைச் சிறப்பம். பாஸ்கர சேதுபதி மன்னர், இப்போதய முருகதாஸ் தீர்த்தபதியின் தாய்வழிப் பூட்டன் ஆவார்.

இத்தனை பெருமை பெற்ற சிங்கம்பட்டி ஜமீன்தார்களால் அழைத்து வரப்பட்டு கல்லிடைகுறிச்சி கோட்டைத் தெருவில் குடியமர்த்தப் பட்டக் குடும்பம் தான் “புளிய மரத்தடி” ஜோதிடக் குடும்பம்.

அவன் பிற்காலத்தில் 1996ல் அவனது முதல் சிறுகதைத் தொகுதி “இரவில் நனவில்” புத்தகத்தை கவிஞர் வாலி அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துக் கொடுத்தான். அவர் அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு, அவனைப் பார்த்து அவர் கேட்ட முதல் கேள்வி, ” ஒய் ஒமக்கு எந்த ஊர்?”

“எனக்குக் கல்லிடைக் குறிச்சி என்றான்.”

உடனே அவர்,” நான் “செல்வம்” படத்திற்காகப் பாட்டெழுதக் குற்றாலம் சென்றிருந்தேன்.. அப்பொழுதுதான் எனக்கு மகன் பிறந்த செய்தி வந்தது… பக்கத்தில் இருந்த படத் தயாரிப்பாளரும், நடிகருமான வி.கே. ராமசாமி என்னிடம், “கவிஞரே இப்படியே கல்லிடைக்குறிச்சிக்குப் போயி புளியமரத்தடி ஜோசியரைப் பார்த்து உங்க மகனோட ஜாதகத்தைக் குறிச்சிக்கிட்டுப் போகலாம் என்றார்..” என்று கல்லிடைகுறிச்சியின் பெருமையைச் சொன்னார். அதன் பிறகு கவிஞர் வாலி அவர்களை அவன் பல முறை சந்தித்து உரையாடும் பேரு பெற்றான். அதை அவன் சமயம் வரும் பொழுது எழுதுவான்.

அவனுக்கு ஒரு வயது நெருங்கும் சமயம், அவனுக்குத் தாய்வழிப் பாட்டியின் வீட்டில் இருந்த பொழுது, வீடு வாசல் படியை முதல் முதலாகத் தாண்டியதற்காக திருஷ்டி சுற்றிப் போட்டார்களாம். எப்படித் தெரியுமோ?…உப்புக் கொழக்கட்டை செய்து, அதாவது சிறிது சிறிதாக அம்மணிக்கொழகட்டை செய்து, குழந்தை மெதுவாகப் படி தாண்டும் பொழுது அதன் தலையில் அந்தக் கொழக்கட்டைகளைக் கொட்டுவார்களாம். அதன் பின் அவைகளை எடுத்து வாய்காலில் மீனுக்கு உணவாகப் போட்டுவிடுவார்கள். அந்த நிகழ்ச்சியைப் பார்த்து ஆசிதர வந்தவர்களுக்கு வெற்றிலை, பாக்குப் பழத்துடன் கொஞ்சம் கொழக்கட்டையும் தருவார்களாம்.

இதுஎப்படி அவனுக்குத் தெரியும் என்று கேட்கிறீர்களா?..

அவனுடைய நண்பனின் சகோதரி, போலீஸ் காரராத்துக் கோமு அக்கா , சென்னையில், தியாகராயநகர் பஸ்நிலையம் பின்புறம் போலீஸ்கோர்டேர்ஸ்ல் இருந்த (1973 ஜூலை மாதம்) பொழுது அவனுடைய நண்பர்கள் குட்டிச் சங்கர், பிரபுவுடன் பார்க்கச் சென்றான்.

அப்பொழுது ,”அடேய்யப்பா..எப்படி வளந்துட்டே…ஒனக்கு ஒரு வயசாகற போது, வாசப்படி தாண்டின ஒடனே ஒன்னோடு பாட்டி எங்க எல்லார் கைலயும் கொழக்கட்டையைக் கொடுத்துக் கொழந்தை தலைவழியாக் கொட்டுங்கோடி” என்று சொன்னதுதான் ஞாபகம் வருது என்று சொன்னாள்.

அதன் பிறகு அவன் படிப்படியாக முன்னால் வந்தான்….

(01.02.2015)

இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *