பொல்லாத சமுதாயம் புண்ணானது என் இதயம்!

0

ஆர். எஸ். கலா

ஒட்டிப் பிறந்தோம்
வெட்டிப் பிரித்து
ஒன்றாக வளர்ந்தோம்.
தாய்  தந்தைக்கு இரு
பிள்ளையென வாழ்ந்தோம்.
அன்புக் கடலில் ஆழமாக
புதையுண்டு மகிழ்ந்தோம்.
குறை இல்லாச் செல்வத்தில்
புரண்டே வந்தோம், படிப்பில்
இருவரும் பட்டம் பெற்றோம்.
அன்புக்கு இலக்கணமாகத்
திகழ்ந்தோம்; தாயின் பாசத்துக்கும்
அரவணைப்புக்கும் பணிந்து அடங்கி
நடந்தோம்; குறை சொல்ல ஏதும் இல்லை
எங்களைப்  புகழ்ந்து கூற விரும்புவதில்லை.
பெற்றோர் பிறரிடம் தன் புகழ்ச்சியை
அவர்கள் விரும்புவதும் இல்லை.
இருந்தும் எங்களின் நேர்மையான
உழைப்பு ஊருக்குள் அடையாளம்
காட்டியது; பல பத்திரிகையிலும்
வானொலியிலும் முகநூலிலும்
தொழிலாளர் தினம் அன்று வெளியாகி
எங்களுக்குப் பெருமையைப் பெற்று
தந்தது; அனைத்து ஊடகங்களும்
இதைப் பார்த்த பல தொழில்அதிபரின்
வீட்டில் இருந்து எங்களை மாப்பிள்ளை
கேட்டு வர ஆரம்பித்தனர்; அம்மா
முடிவை எங்களிடமே விட்டு விட்டார்.
ஆஹா! இது  நமக்குச் சரி வராதுடா
தம்பி என்றான் அண்ணா;  நாங்கள்
இருவரும் ஒரு சிறு மாற்றத்துக்காக
அண்ணா தம்பி என்று அழைப்போம்.
மற்றபடி இருவரும்  ஒட்டியவர்கள்தானே!
நானும்  ’ம்ம்’  என்று தலை அசைத்தேன்.
திடீரென அப்பாவை பார்த்துக் கூறினான்,
”அப்பா நீங்களே பாருங்கள் எங்களுக்கு
அது போதும்!” என்று கூறி என்னை நோக்கினான்.
நானும்  ”சரி” என்பது போல் தலைஅசைத்தேன்.
அப்பா வேறு வழி இல்லாமல் தானே  தன்
மருமகளைத் தேடத் தயார் ஆனார்; அம்மா
அப்பாவை அவர் இளமைக் கால நினைவைச்
சொல்லி ஏதோ கேலி செய்தார்;  பல
நாள் சென்று அப்பா இரு படம் கொடுத்துச்
சொன்னார், ”இவைதான் நான் பார்த்த
மருமக்கள்!”  என் பெயர்  ’தீபக்’, அண்ணா
பெயர் ’திலிப்’;  எங்கள் பெயரைக் கூறி
அடையாளம் சொன்னார், எந்தப் பெண்
யாருக்கு என்று; எனது வருங்காலதேவதை
ஒரு அதிபரின் மகள்; திலிப்பின் தேவதை
ஒரு தொழில்அதிபரின் மகள்; இருவரும்
இரு புகைப்படங்களையும் பார்த்துச்
சம்மதம் தெரிவித்தோம்;  பிறகு என்ன?
அம்மா சும்மா இருப்பாரா? ஓடி ஓடி
வேலைகளை ஆரம்பித்தார்;  ஜாதகம்
பார்ப்பதும் அவை சரியெனக் கூறியதுமே
பெண் பார்க்கும் படலம்; இப்படி எல்லா
சடங்கு சம்பிரதாயமும் முடிந்து  தாலி
கட்டுவதுதான்  இனி வேறு ஒரு தடையுமே
இல்லை;  சில வாரங்களில் அதுவும் பல
பெரியோர் மதிப்பு நிறைந்த மனிதர்கள்
சொந்தம் பந்தம் என்று  திருமண மண்டபமே
பத்தாத அளவு மக்கள் கூட்டம்! சும்மாவா
பின்னே? இரு வீட்டுச் சொந்தங்கள் உறவுகள்
தெரிந்தோர்  ’ம்ம்’  சொல்லவே முடியாத
அளவு பட்டியல் நீளும்;  மங்கள வாத்தியத்தின்
ஓசையுடன் இருவருக்கும் இனிதே திருமணம்
நடந்து முடிந்தது; அமைதியான வாழ்க்கை
நிறைவான இல்லற இன்பம் என்று வாழ்ந்து
வந்தோம்;  வேறு வேறு வீட்டுப் பெண்ணாக
இருந்தாலும் அவர்களும் எங்களுடன் சேர்ந்து
ஒற்றுமையாகப் பழகியே வந்தனர்; அம்மா
அப்பா அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே
இல்லை;  ஒரு நாள் சும்மா சுத்திப் பார்க்கச்
சென்றோம்  நான்கு பேரும்; அன்றுதான்
எங்கள் பின்னாடியே வந்தான் எமன்!
ஒரு குடிகாரனின்  லாரி மோதியதில்
எங்கள் வண்டி விபத்தானது; சில மணி
நேரம் சென்று நான் கண் திறந்தேன்.
அருகில் எங்கள் உறவினர் இருந்தார்
அவரிடம் மற்றவர்களைப் பற்றி வினா
எழுப்பவே, அவர் சிறு சிறிதாக எனக்கு
எடுத்து உரைத்தார்; இறுதியில் கூறிய
வார்த்தை என் தலையில் இடி விழுந்தது
போல் இருந்தது; ”ஐயோ!” என்று கதறினேன்.
என்ன பயன்? எமன் அழைத்து விட்டான் என்
மனைவியையும் சகோதரனையும்! இரு
உயிர் போய் இரு உயிர் எஞ்சியது; அம்மா
என்ன ஆனாரோ என்று ஏங்கியவாறு
ஓடி வந்தேன்; அம்மா உயிர்உள்ள பிணமாக
இருந்தார் சகோதரன் இறந்த உடல் அருகே.
அதற்குப் பக்கவாக்கில் என் மனைவி அமைதியாக
உறங்குகிறாள்; என் கரம் கட்டிய தாலிதான்
முன் இருக்கு; நான் ஒரு ஆண் என்றதையும்
மறந்து கதறினேன், துடித்தேன், தவித்தேன்!
உடன் பிறப்பா? மனைவியா? யார் அருகில்
இருப்பேன்?  என் சகோதரன்  மனைவிக்கு
இன்னும் நினைவு திரும்பவில்லை; அவள்
வந்து கேட்டால் எப்படி பதில் உரைப்பேன்?
இப்படியே அழுது அழுது ஓடாகத் தேய ஆரம்பித்த
நான் ஓராண்டு வரை அழுதேன்; அண்ணா
மனைவியும்  அழுது அழுது ஓய்ந்து போய்
அவள் உடல் நோய்க்குத் துணையாகப் போனது
பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார்; நேரம்
இருக்கும் போது போய் வருவேன்; அதிகம்
போவது இல்லை; என்னைக் கண்டால்
அவர் கணவன் ஞாபகம் வரும்; பாவம்!
எனப் போவதைக் குறைத்து விட்டேன்; நானும்
இப்போது கொஞ்சம் கவலையில் இருந்து
நீங்கி வேலையில் கவனத்தைச் செலுத்திக்
கொண்டு இருக்கின்றேன்;  இந்த நேரத்தில்
தான் அம்மா எனக்கு மறுமணம் செய்யத்
தயாரானார்; இதைஎன்னால் ஏற்றுக் கொள்ள
இயலவில்லை; என் மனைவி புன்னகையுடன்
புகைப்படத்தில் என் கட்டில் அருகே இருக்க,
கட்டிலில் இன்னொருத்தியா மனம் இடம்
கொடுக்கவில்லை;  அப்போது ஒரு கேள்வியை
அம்மாவிடம் கேட்டேன்; சகோதரன் மனைவிக்கு
ஏன் இதைச் செய்ய நீங்கள் நினைக்கவில்லை
என்று! உடனே அம்மா பொங்கி எழுந்தார்! அவள்
விதவை, மறு மணமா? அது எப்படி சாத்தியம்?
வெள்ளை உடையுடன்தானே இருக்க வேண்டும்?
அது தமிழன் கலாச்சாரம் என்றார்;  ஒரே மேடையில்
தாலி கட்டியது;  ஒரே நாள் இருவரும் துணையை
இழந்தது; ஆனால் எனக்கு மட்டும் மறுமணம்,
அவர் வீட்டுக் கைதி! என்ன ஞாயமடா இந்தப்
பொல்லாத உலகத்தில்?  நான் மறுத்து விட்டேன்.
அம்மா பிடிவாதம்  பிடித்தார்; உடனே ஒரு
ஆலோசனை கூறினேன்; ”நான் மறுமணம்
செய்வதாயின் ஒரு விதவையைப் பாருங்கள்;
இல்லை என்றால் எனக்கு வேண்டாம், விடுங்கள்!”
என்றேன்;  அம்மா ஆடிப்போனார்; பொல்லாத
சமுதாயத்தின் போலி வாழ்க்கையைப்  பின்
பற்றும் வரை பெண்ணுக்கு முழுமையாக இல்லை
எதிலும் சுதந்திரம்! நினைத்தாலே இதயம்
கனக்கிறது; ஐயோ பாவம் சகோதரன்
மனைவி!!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *