-மேகலா இராமமூர்த்தி

ஆய கலைகள் அறுபத்து நான்கில் காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, அவர்தம் கண்களுக்கும், கருத்துக்கும் ஒருங்கே விருந்து படைப்பவை ஆடற்கலையும், நாடகக் கலையுமே! அதிலும் மெய்ப்பாடுகள் (உடலில் தோன்றும் உணர்வு வெளிப்பாடுகள்; வடமொழியில் இதனை ‘ரசங்கள்’ என்பர்) சிறப்பாய் வெளிப்படுவது ஆடற்கலையிலேயே என்றால் அது மிகையன்று. மெய்ப்பாடுகளை எட்டு என்று கொள்வர் ’ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர்; வடநூலாசிரியர்கள் இவற்றை ஒன்பது என்று கொண்டு ’நவரசங்கள்’ என்பர்.

இன்று மிக உயர்ந்ததாய்ப் போற்றப்படும் ஆடற்கலை முற்காலத்தில் இத்தகைய சிறப்பைப் பெற்றிருக்கவில்லை. இக்கலை ‘கணிகையர்க்கே’ உரியது என்பதுபோல் குலமகளிரால் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதை இலக்கியங்கள் நமக்கு அறியத்தருகின்றன.  கலைகளில் உயர்ந்த இவ்வாடற்கலையில் நல்ல தேர்ச்சிபெற்று, தன் ஈடிணையற்ற கலைத்திறனால் அனைவரையும் பெரிதும் கவர்ந்த ‘ஆடலரசி’ ஒருத்தியைச் சிலப்பதிகாரம் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. அவள் வேறுயாருமல்லள்! சேற்றில் மலர்ந்த செந்தாமரையாய்க் கணிகையர் குலத்தில் பிறந்தும் ஒப்பற்ற கற்பரசியாய் வாழ்ந்த ‘மாதவியே’ அம்மாதரசி!

madhavi2சிலப்பதிகாரத்தின் ‘அரங்கேற்று காதை’ மாதவியின் நாட்டியச் சிறப்பையும், நளினத்தையும் அற்புதமாய் விளக்குகிறது. தேவமகளிரில் ஒருத்தியான ஊர்வசியின் மரபைச் சேர்ந்தவளாய்க் கருதப்படும் மாதவி, ‘ஆடல், பாடல், அழகு’ என்ற மூன்றிலும் ஒன்றில்கூடக் குறைவுபடாதவள் என்று இளங்கோவடிகளால் போற்றப்படுகின்றாள். தன்னுடைய 5-ஆம் அகவையில் ’தலைக்கோல் ஆசான்’ என்று அழைக்கப்பெறும் நாட்டிய ஆசிரியரிடம் நடனம் பயிலத்தொடங்கிய அவள் 7 ஆண்டுகள் இடைவிடாப் பயிற்சிக்குப்பின் தன் 12-ஆம் அகவையில் சோழமன்னன் முன்னிலையில் நாட்டிய அரங்கேற்றத்தை வெகுசிறப்பாய் நிகழ்த்துகின்றாள்.

”ஆடலும் பாடலும் அழகும் என்றிக்
கூறிய மூன்றில் ஒன்றுகுறை படாமல்
ஏழாண் டியற்றியோர் ஈரா றாண்டிற்
சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி…”
என்று அவள் அரங்கேற்றம் பற்றிப் பேசுகிறது அரங்கேற்று காதை.

அவள் ஆடலின் அற்புதத்தைக் கண்டு வியந்த சோழமன்னன் அவளுக்குச் சிறந்த ஆடலரசி என்ற பொருளில் தரப்படும் ’தலைக்கோலி’ பட்டத்தையும், ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்னையும், பச்சைமாலை ஒன்றையும் பரிசாய்த் தருகின்றான்.  

”தலைக்கோ லெய்தித் தலையரங்கு ஏறி,
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத் தெண்கழஞ்சு
ஒரு முறையாகப் பெற்றனள்”
என்பது அடிகள் வாக்கு.

மாதவியின் ஆடலை மன்னன் மட்டுமல்லாது, மேட்டுக்குடியைச் சேர்ந்த பிரமுகர் பலரும் வைத்தவிழி வாங்காமல் கண்டுகளித்திருந்தனர். அதில் ’ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடியை’ச் சேர்ந்த கோவலனும் ஒருவன். அவள் ஆடலிலும் அழகிலும் கள்ளுண்ட வண்டாய் மயங்கியிருந்த அவனை மாதவியும் கவனிக்கத் தவறவில்லை.

madhavi3கலைநுணுக்கம் அறிந்தவனாய்த் தன் நாட்டியத்தை இரசித்த அவன்மீது அவளுக்கும் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. அவன் உள்ளத்தை இன்னும் தெளிவாய் அறிந்துகொள்ள விரும்பியவள், தான் பரிசாய்ப் பெற்ற பச்சைமாலையைக் கூனி ஒருத்தியின் கையிற்கொடுத்து ‘இம் மாலை ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பெறுவது; இவ்வளவு பொன் கொடுத்து இதனைப் பெறுவோர் மாதவிக்கு மணமகனாவர்’ எனக் கூறச்செய்து, நகரத்து  நம்பியர்(ஆண்கள்) திரிகின்ற வீதியில் அவளை நிற்கச் செய்திருந்தாள்.

அவள் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. அழகன் கோவலனும் அம்மாலையை ஆவலுடன் வாங்கிக் கூனியுடன் மாதவி மனையை அடைந்தான். அதன்பின்னர், தன்னருமை மனைவி கண்ணகியையும், அவளோடு நடாத்திக்கொண்டிருந்த இல்லறத்தையும் முற்றும் மறந்தான்; மாதவியை விட்டு நீங்கா விருப்புடையவன் ஆயினான் என்று அவன் மனநிலையைத் தெளிவாய் விளக்குகிறது சிலப்பதிகாரம். இவ்வாறு கோவலனும் மாதவியும் மனமொத்த இணையராய், மலரும் மணமும்போல் வாழ்ந்துவரும் வேளையில், ஒவ்வோராண்டும் வெகுசிறப்பாய்ப் புகாரில் கொண்டாடப்படும் ‘இந்திரவிழா’ தொடங்கியது.  சித்திரை முழுமதி நன்னாள் தொடங்கி 28 நாட்கள் தொடர்ச்சியாய் நடைபெறும் அவ்விழாவின் 27-ஆம் நாள் வந்தது.

அன்று நடைபெறவிருந்த மாதவியின் ஆடலைக் காண்பதற்காகப் புகார் நகரமே ஆவலோடு திரண்டிருந்தது ஆடரங்கில். புகார் நகரத்து மக்கள் மட்டுமா அவள் ஆடலைக் காண வந்திருந்தனர்? இல்லை…இல்லை…தேவலோகத்தைச் சேர்ந்த விஞ்சையன் ஒருவனும் (விஞ்சையர்கள் பதினெண் கணங்களில் ஒருவர்; இவர்கள் இசைவல்ல தேவச் சாதியர்) அவன் காதலியும் புகாரில் நடைபெற்றுக் கொண்டிருந்த புகழ்வாய்ந்த இந்திரவிழாவைக் காண மானிட உருவில் அங்கு வந்திருந்தனர்.  தோரணங்களாலும், மாலைகளாலும் பொலிவுற்று விளங்கிக்கொண்டிருந்த புகாரை இரசித்துக் கொண்டே வந்துகொண்டிருந்த அவர்கள் ஓரிடத்தில் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தைக் கண்டதும் சற்று நின்றனர்.

அப்போதுதான் மாதவியின் ஆடல் அங்கே தொடங்குவதாயிருந்தது. அதோ! இருமுக எழினி (double-sided curtain) விலகுகின்றது. வழக்கமாய் வானில் தோன்றும் முழுமதி அப்போது மேடையில் தோன்றியது கண்டு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அதுமட்டுமா? அம்முழுமதி தன் தேனொழுகும் குரலில் அனைவருக்கும் முகமன் கூறி அவர்களை வரவேற்கவும் செய்தது. 

பேசும் பொற்சித்தரமாய் மேடையில் ஒளிர்ந்த மாதவியைக் கண்டதும் ’சட்டென்று’ அடையாளம் கண்டுகொண்ட விஞ்சையன் பரவசத்தோடு தன் காதலியிடம், ”இவள் யாரென்று தெரிகிறதா?” எனக்கேட்க, அவளோ ”தெரியவில்லை” என்பதாகத் தலையசைத்தாள். நீ கட்டாயம் இவளைத் தெரிந்துகொள்ள வேண்டும். சாதாரணப் பெண்ணா இவள்? தேவ மாதான ‘ஊர்வசி’யின் மரபில் வந்த ஆரணங்கு! ஆடற்கலைக்கு இலக்கணம் வகுத்த கலையரசி மாதவியிவள்!” என்று மாதவியைப் பற்றித் தன் காதலியிடம் கூறியவன், ”சரியான நேரத்துக்குத்தான் இங்கு வந்திருக்கின்றோம். இவள் ஆடலைக் கண்டுகளித்துவிட்டுச் செல்வோம்!” என்று பரபரப்போடு கூறிவிட்டு அவளோடு சென்று பார்வையாளர்கள் வரிசையில் கலந்து அமர்ந்துகொண்டான்.

ஆடல் தொடங்குவதற்குமுன் தேவபாணி (கடவுள் வாழ்த்து) இசைக்கப்பட்டது. அடுத்து மாதவி ஆடியவை அதிஅற்புதமான பதினோருவகை நடனங்கள்! அவற்றை நாமும் கண்டுகளிக்க வேண்டாமா?

வாருங்கள்…அரங்கத்திற்குள் செல்வோம்!

தொடரும்…

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஆடல் காணீரோ – பகுதி 1

  1. கதை சொல்லியவிதம் அருமை மேடம்

  2. கடலாடு காதையின் மாண்பைச் சிறப்பிக்கும் வகையில் அமையப்பெற்ர இந்தக் கதையின் துவக்கமே அபாரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *