வையவன்

ஹோட்டலை விட்டு வெளியேறி காரை நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தனர்.

வெற்றிவேல் கார்ச் சாவியை சிவாவிடம் நீட்டிய வாறே கேட்டான்.
“காரை ஓட்டிப் பாக்கறியா?”
“ஏன்?”

“ஒரு டோயோடா எப்படி இருக்குண்ணு ஓட்டி அனுபவி. நீயும் நானும் ஒரு ஓட்டை பியட்லே டிரைவிங் கத்துகிட்டோம். இப்ப இது எப்படிண்ணு அனுபவி”
சிவா சிரித்தான்.

“எல்லாக் காரும் ஒரு கார் தானே, இது அது மாதிரி ஒரு எக்ஸ்பீரியன்ஸ். லெட் இட் பி. எனக்கு வேண்டாம் ஒரு மூன்றாம் நபரின் வாகனம்”

சாவியை வெற்றிவேல் அவன் கையில் திணித்தான்.
“மஹாபுருஷரே… அட் எ ஸ்ட்ரெச் ஓட்டிட்டு வந்ததிலே என் காலும் கையும் வலிக்கிறது. தாங்கள் ஓட்டி வருவீர்களாக”
“அதை மொதல்லே சொலவ்லி இருக்கலாமேடா”
வண்டி சீறிக் கொண்டு சிக்னல் வழங்கிய சுதந்திரத்தில் பறந்தது.

“மெட்ராஸிலே என்ன செய்யறே சிவா?”
“சமையல் செய்யறேன். வேலை தேடறேன். கதை எழுதறேன்.”
“சமையல்?”

“ஆமா… நீ வந்தியே அந்த ராயப்பேட்டா வீட்டிலே சமையல் வேலை செய்யறேன்!”
“யார்” என்று கூவினான் வெற்றிவேல். அவனுக்கு அதிர்ச்சி தாளவில்லை. “யாருக்கு?”
“ஒரு மாஜி ஜமீந்தார் பிள்ளையான மோட்டார் மெக்கானிக்குக்கு”

“ஓ… நம்ம மாதிரி அவனும் ஒரு ஃப்ரீக்கோ?”
“ஃப்ரீக் இல்லே, ஒரு கனவான், ஃப்யூடல் மிச்ச சொச்சம்.”
“அப்ப உனக்கு ஒரு ஹீரோ கெடைச்சாச்சு?”

ஒரு ‘பல்லவன்’ பஸ்ஸுக்கு முந்திச் செல்ல வழிவிட்டான் சிவா.
“நமது ஹீரோ 1948 ஜனவரி 30-ல் சுட்டுக் கொல்லப்பட்டார் வெற்றிவேல். நாம பொறக்கறதுக்கு முன்னாடியே இட்வாஸ் ஓவர். நாம ஹீரோவைத் தேடிக்கிட்டிருக்கோம் இன்னும்.. இன்னும்”
வெற்றிவேல் அதற்கு இசைவு தெரிவிப்பது போல் வாய்க்குள் சிரித்தான்.

“எப்படி இந்த வேலை கெடைச்சுது?”
“ஜஸ்ட் ஒரு வேலை கேட்க அங்கே அந்த ஆட்டோ ஒர்க்ஷாப்புக்குப் போனேன். இங்கே எந்த வேலையும் காலியில்லே. எங்க வீட்டிலே என் சமையல்காரன் ஓடிட்டான். அந்த வேலை காலியாயிருக்குண்ணு அவர் கிண்டலா சொன்னார்.”

“வயசானவரோ”
“இல்லே…நம்மை விட மூணு நாலு வயது அதிகம். ஆனா அந்த மரியாதைக்கு உரியவர்.”
“மேலே சொல்லு”

“என் சமையலைப் பார்த்துட்டு அப்பாயிண்ட்மெண்ட் குடுங்கண்ணேன். ஐம் ஸாரி; நீ ஒரு கிராஜுவேட்னார். சமையல்லே வித்தியாசம் இருக்காதுண்ணு சொன்னேன். ஹி லைக்ட் தட் ரிப்ளை டெங்கனிக் கோட்டா எங்கே இருக்கு?”
“ஹோசூர் போய் கட் பண்ணணும்?”

“பெங்களூர் ரூட்…”
“ஆமாம்… நீ உங்க முதலாளி கிட்டே லீவ் சொல்லிட்டு வர்லியே…”
“வெற்றி… அவர் முதலாளி இல்லே. நண்பராயிட்டார். தாமு ஊரிலே இல்லே. வந்தாலும்.. அடடே அவங்க அப்பா ஸீரியஸ்ணு போயிருக்கார். நான் ஏதாவது நடந்துட்டா மதனபள்ளி போகணும்… அண்செட்டியிலே எஸ்.டி.டி. பண்ண முடியுமா?”
“ஓ… எஸ்”
நகர எல்லையைக் கடக்கும் வரை வெற்றிவேல் பேசவில்லை.

சிவாவுக்கும் காரைத் தொட்டு நெடு நாட்களானதால் நெடுஞ்சாலைப் போக்குவரத்து அவனது கவனத்தை அதிகம் கோரியது.

இடையிடையே அவனுடைய தந்தை கைலாசம் கவனத்தில் வந்து வந்து போனார்.
என்ன விசித்திரமான பயணம் இது!
பத்து வருஷத்துக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய தந்தையை, எங்கோ முகம் தெரியாத சிற்றூரில் ஒரு மகன் சந்திக்க அவன் நண்பன் ஏற்பாடு செய்திருக்கும் பயணம்.

இரண்டு நாட்களுக்கு முன் அவரைச் சந்திக்கும் வேட்கை வந்ததை நினைத்தான்.
இவ்வளவு சீக்கிரம் அது இப்படி நிறைவேறி விடுமா? இன்னும் அவனுக்கு நம்பிக்கை வரவில்லை.
தன் தந்தையைத் தான் சந்திக்க வேண்டும் என்று வெற்றிவேலுக்கு ஏன் தோன்றியது?
எதிரில் வந்த லாரி ஒன்றிற்கு டிம்…டிப் என்று ஹெட் லைட்டில் சிக்னல் காட்டிக் கொண்டே யோசித்தான் சிவா.
அப்பாவுக்கு விசாலமான முதுகு. திண்ணையில் உட்கார்ந்து அடிக்கடி முதுகு தேய்க்கச் சொல்வார்.

அவர் வலது தோள் பட்டையில் புளியங்கொட்டை அளவு உருண்டு திரண்ட ஒரு கறுப்பு மச்சம் உண்டு. முதுகு தேய்க்கும் போதெல்லாம் செவேலென்று விரிந்த அந்த முதுகில் ண் முளைத்த மாதிரி நிற்கும் அந்த மச்சத்தை சிவா தடவிப் பார்ப்பான்.

“டேய், டேய்…கூச்சமாய் இருக்குடா” என்று அவர் நெளிவார். சிவா கிளுகிளுவென்று சிரிப்பான்.
அவனுக்கு எட்டு வயதான போதிருந்து அவனைச் சைக்கிளில் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு வெங்களாபுரம் சுடுகாடு தாண்டி ஒரு பம்ப் ஷெட்டுக்குக் குளிக்கக் கூப்பிட்டுச் செல்வார்.

“பச்சத் தண்ணி ஊத்தி ஊத்தி புள்ளைக்கு ஜன்னி வர வக்கப் போறீங்க” என்று அடிக்கடி ஆட்சேபிப்பாள் அம்மா.
‘தாட்சாயணி… சுடுதண்ணி ஊத்தி வளத்தா பையன் சீக்காளியாய் போயிடுவான்!”
சனிக்கிழமையில் ஒரு புட்டியில் நல்லெண்ணெய் ஒரு டப்பாவில் சீயக்காப்பொடி.

தலைக்கு எண்ணெய் தேய்த்து விட்டு கண்ணுக்கு விட்டுக் கொண்டால் ஒரு கதை. அழாமல் சீயக்காய் தேய்த்துக் கொண்டால் ஒரு கதை. சைக்கிளில் வரும்போது ஒரு கதை… எத்தனை கதைகள்!

சிவாவுக்கு பளிச்சென்று கூரைச் சந்திலிருந்து ஒரு வெளிச்சக் கற்றை வீட்டில் விழுந்த போது அதை ஒரு கண்ணாடிச் சில்லில் பிரதிபலிக்கச் செய்து வீடு முழுதும் அவற்றில் அதை அவன் ஓடிப் பிடிக்க வைத்த நிகழ்ச்சி ஞாபகம் வந்தது.
அப்பா எதற்காக வீட்டை விட்டுப் போனீர்கள்?

எல்லாரும் சொல்வது போல் ஒரு ஜடாமுடிச் சாமியாரா உங்களை அழைத்துச் சென்று விட்டார்?
சிவா தனக்குள் கேட்டுக் கொண்டான் அவரைக் கேட்கப் போகிற கேள்வி அதுதான்.
அதைக் கேட்க முடியுமா?

திடீரென்று மௌனம் கலைந்து சிவா வெற்றிவேலைப் பார்த்து “என்ன சைலன்ஸ் ஆயிட்டே?” என்றான்.
“யாரு?”
“ஓ….நாந்தாண்ணு சொல்றியா”

“ரெண்டுபேரும் தான். ரொம்ப நாள் கழிச்சு பிரிஞ்சு சேர்ந்தா மௌனம் ரொம்ப நெருக்கமா இருக்கு”
“அப்பா கிட்டே நீ பேசினயா?”
“உம்ம்…”

“என்ன சொன்னார்… அம்மாவைப் பத்தி, என்னைப் பத்தி ஏதாவது விசாரிச்சாரா?”
“அமிஞ்சிகரை தாண்டியிருப்பமா?”

“ஓ…”
“வண்டியை ஓரமா நிறுத்து. எனக்கு ஒண்ணுக்குப் போகணும்.”
வண்டியை ஓரமாய் நிறுத்தினான் சிவா.

டாஷ் போர்டிலிருந்து ஒரு சிகரெட் பாக்கெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு சாலையோரம் ஒரு மூலைக்குப் போனான் வெற்றிவேல்.

தீக்குச்சி வெளிச்சம் சிகரெட்டை வாயில் பொருத்திய அவன் முகத்தில் செஞ்சுடராக விழுந்தது. அவன் சிறுநீர் கழித்து விட்டுத் திரும்பி வந்தான்.
சிகரெட் புகை மணந்தது.

“இப்ப நான் ஏன் வேலை வெட்டியை எல்லாம் விட்டு விட்டு உன்னைத் தேடி வந்தேன் தெரியுமா?” என்று கூறி விட்டு சிகரெட் சாம்பலைச் சொடுக்கினான்.

“வேலை வெட்டியா… அப்படி ஒண்ணு உனக்கு இருக்கா?”
சிகரெட்டை ஆழ்ந்து உறிஞ்சி நிமிர்ந்த வெற்றிவேல் முகத்தில் எதிரில் வந்த காரின் ஹெட்லைட் வெளிச்சம் விழுந்தது. சிவாவின் குத்தலை அவன் ரசித்துச் சிரிப்பது தெரிந்தது.

“சிவா… நாம தேடுவதை… ஐ மீன் நான் தேடுவதை உனது தகப்பனார் அடைஞ்சுட்டார்னு நெனைக்கிறேன்…”
வெற்றிவேலின் குரலில் ஓர் உண்மை ஒலித்தது. சிவா தெளிவாகப் புரிந்து கொள்ள விரும்பினான்.
“ஒவ்வொரு வயசிலேயும் நாம ஒவ்வொண்ணைத் தேடினோம்… நீ எதைச் சொல்றே?”
சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்தான் வெற்றிவேல்.

“நம் மீது… நம் மனசின் மீது ஒரு வெற்றி”
“மனசு உள்ள வரை… அதன்மீது வெற்றி இல்லையடா வெற்றி”
“அவர் அதைச் சாதிச்சிருக்கார்னு நெனக்கிறேன்.”

“வெற்றிவேல்… நீ ஞானிகளைப் பற்றி பேசறே… எனக்கு ஞானம் வேண்டாம். ஒரு வேலை வேண்டும்… எங்கம்மாவின் ஓயாத உழைப்பிலிருந்து ஒரு விடுதலை வேண்டும்… அவளை அந்த நிலைக்கு ஆளாக்கிய மனிதனிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்.”

“எந்தக் கேள்வியை வேணும்னாலும் கேளு. ஆனா அவரை வேலை கேட்காதே…”
சிவா மௌனமாயிருந்தான்.

“வேலை… வேலை…நீ எதுக்குடா படிச்சே? ஏண்டா கிராஜுவேட் ஆனே…உன் தன்னம்பிக்கையை இழந்துட்டு எவனோ கொடுக்கப் போற ஒரு ஃபில்தி வேலைக்கு சலாம் போடவா?”
“உன் கோபத்தைப் பார்த்து ரொம்ப நாளாச்சு”

“இதுவும் கோபமில்லே…”
பொறப்படலாமா… நாம ரொம்ப தூரம் போகணும்”
“சரி”

காரில் அமர்ந்தனர். வண்டி சிறிது தூரம் ஓடியபின் சிவா கேட்டான்.
“அப்பா என்ன சொன்னார்?”

“நீ மொதல்லே கேட்டதை மறந்துட்டேண்ணு நெனச்சுட்டியால… இவ்வளவு நேரம் நான் சொன்னதெல்லாம் அதற்குப் பதில்தான்”
சிவா மௌனமானான்.

“நான் ரிஷிகேஷிலிருந்து வர்றேன். அவர் ஒங்க அப்பா கைலாச கவுண்டர் இல்லே. பாபா ஓம்கார்நாத் அவரோடே தான் ஆறு நாளா தங்கியிருந்தேன்… அந்த அமெரிக்கன், அவர், நான், மூணு பேரும் அண்செட்டி வந்தோம்.”

சிவாவுக்கு முதன் முறையாக வெற்றிவேலுக்கு எங்கோ மறை கழன்று விட்டது என்ற சந்தேகம் வந்தது. அட்வென்சர்.. அட்வென்சர் என்று தேடித் திரிகிறவனிடத்தில் எங்கேயாவது ஒரு வழுக்கலில் அது நேர்ந்து விடுவது சாத்தியம் என்று நினைத்தான்.

“ஸோ…எங்க அப்பா நாட்டிலுள்ள பாபாக்களில் இன்னொரு பாபாவாய்ட்டார்னு சொல்லு”
வெற்றிவேல் பெருமூச்சு விட்டான்.

“அண்ட்.. நீ அவருடைய சிஷ்யன் ஆய்ட்டே”
“தப்பு.. அவர் குருவென்று தன்னைச் சொல்லிக் கொள்ளவில்லை. சிஷ்யன் என்று எவனையும் ஏற்கவில்லை.”
“ஆனா அவர்தான் ஒனக்கு ஒன் மீது வெற்றியைக் கண்டுபிடிக்கச் சொல்லிக் கொடுத்தார்..இல்லியா?
“அவர் சுட்டிக்காட்டினார். நான் கண்டுபிடிச்சேன்”

‘உன் மீது நீ எப்போதும் வெற்றி பெற்றுத்தான் வருகிறாய். திடீரென்று எதுவும் நேர்ந்துவிட வில்லை. நேராது’ என்று வெற்றிவேலுக்குச் சொல்ல நினைத்தான்.
சொல்லவில்லை.

வெற்றிவேல் நேரடி அனுபவத்தை நம்புகிறவன். ஒருவேளை அவன் அனுபவித்திருக்கலாம்.
“வேற பெர்ஸனலா எதுவும் கேக்கலியா நீ?”
தனக்குள் லயித்துச் சிரிப்பவன் போன்று வெற்றிவேல் வாய்க்குள் நகைத்தான்.

“அவர்கிட்டே பெர்ஸனல்..இம்பெர்ஸனல் எதுவும் தோணாது. அவர் மொழியே நெடிய மௌனம். ஒரு நாளைக்கு அவர் ரொம்ப அதிகமாப் பேசினா பத்து வார்த்தைகள் தான் பேசுவார்.”

“பேசாதவரிடம் நீ ஏண்டா என்னைக் கூட்டிட்டுப் போறே?”
“மகனே, உன் தந்தையை சந்தி”
“நீ சொல்கிறவர் என் தந்தை மாதிரி இல்லை. ஏதோ மகான் மாதிரி இருக்கு..மகனுக்கு தந்தை தான் வேண்டும். மகான் வேண்டாம்”

“அதை நீ சந்தித்தபிறகு சொல்.”
சிவா ஆக்ஸிலரேட்டரை மிதித்தான், வெகுதூரம் போக வேண்டும்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *