பகத் சிங்கும் குலசேகர ஆழ்வாரும் சந்தித்து விலகும் புள்ளி….

0

எஸ் வி வேணுகோபாலன்

unnamed (3)

மாபெரும் புரட்சிக்காரன் என்ற அடையாளத்தை, பகத் சிங் தனது அரசியல் உணர்வில், போராட்ட குணத்தில், விடுதலைக்கான வேட்கையில் மட்டும் பிரதிபலிக்கவில்லை. 24 வயதுகூட நிரம்பாத பருவத்தில் அவரை வெள்ளை ஏகாதிபத்தியம் தூக்கிலிட்டமைக்கு கூடுதல் காரணிகள் இருக்கக் கூடும். நண்பர் ஒருவரது புத்தகத்தின் மீது தோழமை கெழுமிய காத்திரமான நூல் விமர்சனமும், மகாத்மா காந்தியே ஆனாலும் கேள்விகளுக்கு உட்பட்டவர்தான் அனைவரும் என்று சொல்லும் நெஞ்சுரமும், பெற்றெடுத்த தந்தை பாசத்தோடு தன்னைச் சிறையில் இருந்து மீட்கத் துடித்தபோது, தன் அர்ப்பணிப்பு உணர்வைக் கொச்சை செய்யவேண்டாம் என்று அவரிடத்துச் சொல்லும் தீர்க்கமான மன வலிமையும் கொண்டிருந்தவர் பகத் சிங். அடிப்படையில் அவர் இறை நம்பிக்கை அற்றவராக இருந்தது காலனி ஆதிக்கத்தைக் கட்டியாண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ராஜ துரோக செயலாகவே பட்டிருக்கும் என்பது கவனிக்க வேண்டியது.

அடிமைத் தனத்தைக் கேள்வி கேட்காமல் ஒப்புக் கொள்ள வைக்கும் மத உணர்வை வெளிப்படையாக விமர்சிக்கும் யாரும் மக்களைப் பெரிய கலகத்திற்குத் தூண்டுகின்றனர் என்பது மாட்சிமை தாங்கிய மகாராணிகளுக்குத் தெரியும். தான் நாத்திகன் ஆனதை ஆவணப் படுத்திச் சென்றிருக்கிறார் பகத் சிங் என்பது சிந்திக்க வேண்டிய முக்கிய வரலாற்றுக் குறிப்பு.

பொதுவாக இறையுணர்வு இல்லாதிருப்போரை மண்டைக்கனம் படைத்தவராகவே சமூகம் பேசும். திமிர், அகங்காரம் என்ற சொல்லாடல்களை பகத்சிங் அற்புதமாக மறுத்து முன்வைக்கும் வாதங்கள் அடங்கிய ‘நான் ஏன் நாத்திகன்” என்ற அந்த நூல் இளைய தலைமுறை வாசிக்க வேண்டிய முக்கிய பிரதி ஆகும்.

பள்ளிப்பருவத்தில் கூச்ச சுபாவம் நிறைந்திருந்த தனக்கு, அகங்காரம் எப்படி தோன்றி இருக்க முடியாது என்பதைச் சொல்லும் பகத் சிங், கடவுளை தனது விரோதியாகவும் தான் பார்க்கவில்லை, ஏனெனில் அப்படி கருதுவது, ஒரு கடவுளின் இருப்பை ஒப்புக்கொள்வதாகிறது, தான் கடவுள் இருப்பதையே நம்பவில்லை என்று விவாதத்தைத் தொடர்கிறார்.

நிறுவனமயமாக்கப்பட்ட எதையும் கேள்வி கேட்பவருக்கு நேரும் பழி, அவப்பெயரே தனக்கும் நேர்கிறது என்று குறிப்பிடும் பகத் சிங், உலகில் உயிரின் தோற்றம், துயரங்கள், அழிவு என அனைத்து அம்சங்களையும் காரணம் காட்டி, இதில் கடவுளின் பங்கு பாத்திரம்தான் என்ன என்று கேட்கிறார். டார்வின் எழுதிய உயிரினங்களின் தோற்றம் எனும் ஆய்வு நூலை வாசிக்க பரிந்துரை செய்யும் பகத் சிங், ஸோஹம் சுவாமி எழுதிய பொதுபுத்தி எனும் புத்தகத்தையும் படிக்குமாறு சொல்கிறார்.

ஒவ்வொரு மதமும் உயிர்கள் குறித்துப் பேசுவதைக் கேள்விகளுக்கு உள்ளாக்கச் சொல்லும் பகத் சிங், இந்து மதம் சொல்லும் முற்பிறப்பின் பாவங்கள் பற்றியும் கேள்விகளை எழுப்புகிறார். உயிர்களை பரிதவிக்க விட்டு, அவர்களுக்கு சோதனைகளைத் தந்து பிறகு அவர்களை உணரவைத்து ஆட்கொள்பவர் எப்படி கடவுளாக இருக்க முடியும் என்பது அவரது வலிமிகுந்த கேள்வி.

பகத் சிங் குரலிலேயே அந்த இடத்தைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்போம்:

அதுதான் கடவுளின் சட்டம் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்; இறைவன் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவன் என்றால், அவன் அனைத்திற்கும் மேலானவனாக இருக்க முடியாது; அவனும் நம்மைப் போலவே ஒரு அடிமைதான். அவனுடைய மகிழ்ச்சிக்கான திருவிளையாடல் என்று தயவுசெய்து கூறாதீர்கள்; நீரோ மன்னன் ஒரு ரோம் நகரை எரித்தான். அவன் கொன்றது எண்ணிக்கையில் அடங்கக்கூடிய அளவு மக்களைத்தான். சில துயரச் சம்பவங்களை நிகழ்த்தினான். எல்லாம் அவனுடைய மகிழ்ச்சிக்காக. ஆனால் வரலாற்றில் அவனுடைய இடம் எது? வரலாற்று ஆய்வாளர்கள் அவனை என்ன பெயர் சொல்லி அழைக்கிறார்கள்? இருக்கிற வசைச் சொற்கள் அனைத்தும் அவன்மேல் பொழியப்படுகின்றன. அவன் கொடுமைக்காரன், இதயமற்றவன், வெறிபிடித்தவன் என்ற வசைச் சொற்களால் வரலாற்று நூல்களின் பக்கங்கள் எல்லாம் கறைபடிந்துள்ளன.

ஒரு செங்கிஸ் கான் தன் மகிழ்ச்சிக்காக சில ஆயிரம் உயிர்களை பலி கொடுத்தான்; நாம் அவன் பெயரையே வெறுக்கிறோம். இப்படி இருக்கையில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் எண்ணற்ற துன்பங்களை ஏற்படுத்தி வந்திருக்கிற, இப்போதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற உங்களுடைய அந்த எல்லாம் வல்லானை, நிலைபேறுடைய நீரோவை எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறோம்? செங்கிஸ்கான் செய்ததை விட அதிகமாக ஒவ்வொரு கணமும் செய்கிற கொடுமைகளை ஆதரிக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் நினைக்கிறீர்கள்? நரகம் என்ற பெயருக்கேற்ப எப்போதும் துன்பங்கள் நிலவுகிற இந்த உலகத்தை அவன் எதற்காகப் படைத்தான் என்று நான் கேட்கிறேன். இதெல்லாம் எப்படி நியாயமாகும்?

இங்கேதான் ஒரு நுட்பமான கேள்வியை பகத் சிங் எழுப்புகிறார். இதை வாசிக்கையில் எனக்கு, பள்ளிக்கூட வாசிப்பில் தமிழ் பாட நூலில் படித்த குலசேகர ஆழ்வார் செய்யுள் ஒன்று நினைவுக்கு வந்தது. என்னை மிகவும் கவர்ந்த அந்தப் பகுதி, நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் “பெருமாள் திருமொழி” எனும் பிரிவில் அடங்குவது. அற்புதமான தமிழ் இலக்கிய வாசிப்பான நாலாயிரத்தில் வரும் அந்த பாசுரம் இப்படி இசைக்கிறது:

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே

எனக்கு எத்தனை சோதனைகள் அளித்தாலும், உன்னை விடமாட்டேன் என்று பற்றுதல் கொள்ளும் பக்தனின் குரல் இது. கத்தியை வைத்தும், வேறு விதத்திலும் சிகிச்சைகளை மேற்கொண்டாலும் மருத்துவனை வெறுக்காது அவன்பால் அன்பு கொண்டாடும் நோயாளியைப் போலவே, நீ எனக்கு எத்தனை துயர் தந்தாலும், உனக்கு நான் ஆட்பட்டே தீருவேன் என்கிற குதூகலக் கொண்டாட்டக் குரல் அது.

தான் படைத்த உயிர்களுக்கே சோதனை தருவதும், பின் அதிலிருந்து அருள் பாலிப்பதும் எதற்கு என்று இந்த இடத்தில்தான் கேள்வியை வைக்கிறார் பகத் சிங். தனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரைப் பேசுகிறார் ஆழ்வார். அந்த மருத்துவரே நோயையும் பரிசளித்தவராக இருந்திருப்பாரானால் எப்படி அதை ஏற்க முடியும் என்று கேட்கிறார் பகத் சிங்!

துன்பப்படும் அப்பாவிகள் அடுத்த பிறப்பில் அதற்கான பரிசு பெறுவார்கள், தவறு செய்தவர்கள் அடுத்த பிறப்பில் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறுகிறீர்களா? சரி, இந்தப் பிறப்பில் உங்கள் உடலில் காயத்தை ஏற்படுத்தியவன் அடுத்த பிறப்பில் அதன்மீது மருந்தைத் தடவுவான் என்பதை எந்த அளவுக்கு நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்?

கிளேடியேட்டர் காட்சிகளை நிகழ்த்திக் காட்டியவர்களும் அதன் ஆதரவாளர்களும் பசியோடு இருக்கிற சிங்கங்களின் முன்னால் மனிதர்களை வீசினார்கள்; அந்த விலங்குகளிடமிருந்து அவர்கள் தப்பி வந்தால் அவர்களை நன்றாகக் கவனித்து ஆதரவு அளிப்போம் என்றார்கள்; இதை எந்த அளவுக்கு நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்?

அதனால்தான் நான் கேட்கிறேன்: “அனைத்துக்கும் மேலான அந்தக் கடவுள் எதற்காக உலகையும் அதில் மனிதனையும் படைத்தான்? உல்லாசத்துக்காகவா? அப்படியானால் அவனுக்கும் நீரோவுக்கும் என்ன வித்தியாசம்?”

எனவே தான் மேற்சொன்னபடி வாதிடுகிறார் பகத் சிங். இந்தப் பகுதிக்குத் தொடக்கத்தில் முதலிலேயே பின்வரும் கேள்வியையும் அவர் எழுப்பிவிடுகிறார்:

ஒருவேளை நீங்கள் நம்புவதுபோல, அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாவற்றுக்கும் மேலான, எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த இறைவன் உண்டு என்றால், இந்த பூமி அல்லது உலகத்தைப் படைத்தது யார்? அதைப் படைத்தது எதற்காக என்று தயவுசெய்து சொல்லுங்கள். துன்பங்களும் துயரங்களும், முடிவே இல்லாத எண்ணற்ற துயரச் சம்பவங்களும் நிறைந்த, உலகத்தில் உள்ள ஒரேயொரு மனிதன்கூட முழுக்கவும் திருப்தியடைய இயலாத உலகம் இது.

இறப்பிற்குப் பிறகு தொடர்ந்து வருவது எதையும் எதிர்பார்த்தோ, மறு ஜென்மம் பற்றிய கவலையோடோ, முந்தைய பிறவி குறித்த புகார்களோடோ தாம் சுதந்திர போராட்டத்திற்குள் இறங்கவில்லை என்று தெளிவாக்கும் பகத் சிங், மனிதர்கள் நிம்மதியாக வாழும் ஓர் அற்புத உலகை இங்கேயே படைக்கவே தான் புரட்சியில் இறங்கியதை அருமையாகப் பதிவு செய்யும் முயற்சியே இந்த நூல்.

விரக்தி உணர்வால் கடவுளை வெறுத்த மொழி அல்ல அது, இறை உணர்வின் பாற்பட்டு அடங்கிப் போய் தங்களை ஒப்புக் கொடுக்கும் கோடிக்கணக்கான மக்களை விழிப்படைய வைக்கும் தெளிவு பெற்ற மதியின் வெளிப்பாடு அது.

ஆத்திகம் எப்படி மதிக்கத் தக்கது என்று சமூகம் செயல்படுகிறதோ, நாத்திக உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்ற முழக்கமே பகத் சிங்கின் ஆவணம். எனவேதான் ஜீவா அதை மொழிபெயர்த்துக் கொடுக்க, பெரியார் அதைக் குடியரசு இதழில் வெளியிட்டார். அந்தக் ‘குற்றத்திற்காக’ (?), ஜீவாவும், பெரியாரின் சகோதரர்-பதிப்பாளர் ஈ வெ கிருஷ்ணசாமியும் பிரிட்டிஷ் அரசால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மத உணர்வை அடிப்படை உணர்வாக தக்க வைப்பதை, தேவைப்பட்டால் அதை வெறியாக ஊட்டுவதை ஆட்சியாளர்கள் காலம் காலமாகக் கடைப்பிடித்து வந்திருக்கின்றனர். அதைச் சுட்டிக் காட்டும் முற்போக்கு சிந்தனையாளர்களை நாத்திகர்கள் என்று சொல்லி மக்களிடம் இருந்து தனிமைப் படுத்துவதில் குறியாக இருக்கின்றனர்.

இந்திய விடுதலை வேள்வியில் தன்னையே ஆகுதியாக ஆக்கிக் கொண்ட மாவீரன் பகத் சிங் நாத்திகன் என்பதை பாமர மக்கள் அதிகம் அறிய மாட்டார்கள். எனவேதான், மத அடிப்படைவாதிகள் இப்போது பகத் சிங்கையும் அபகரிக்கத் துணிந்திருப்பது. எல்லா உன்னதமிக்க ஆளுமைகளையும், தேதிகளையும், நிகழ்வுகளையும் மதவெறி சக்திகள் தன்வயப்படுத்தி மக்களைக் குழப்பி, மோதவிட்டுத் தங்களது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல துடிக்கும் நேரம் இது. அதற்காகவும் ஒரு புரட்சிக்காரர் குறித்த அரிய பக்கங்களையும் முன்வைப்பது தேவையாகிறது.

****************
நன்றி: வண்ணக்கதிர்: மார்ச் 29, 2015

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *