முனைவர் ஜ.பிரேமலதா,

தமிழ் இணைப் பேராசிரியர்,

அரசுகலைக் கல்லூரி,

சேலம்-7

 

Evening-Tamil-News-Paper_19744074345

தெய்வத்திற்கும் மனிதர்க்கும் 
தொடர்பு ஏற்படுத்த கடவுளால்
போடப்பட்ட உறவுப்பாலங்கள்!

சக்தியின் வடிவானவர்களுக்கு
 உறவுகள் அனைத்தும்
சக்தியின் வடிவங்களே!

பெறுவதால் பேறு பெற்ற தாயர்க்குமுன்
இழப்பதால் வீடு பெறு பெற்ற
தாயம்மாக்கள்!

வாழ்வாதாரங்கள் தொடர்ந்து
மறுக்கப்பட்டபோதும்
இருப்பியலுக்குப் போராடும்
ஆதிப்போராளிகள்!

வர்த்தக நோக்கம் கொண்டோர்க்கு
புரிந்தாலும் புரியாது
இறைவனே விரும்பி மேற்கொண்ட
இவர்களின் வித்தகக் கோலம்!

ஆண்பாலாய்ப் பிறந்து
பெண்பாலாய் உணர்ந்து
பலர்பாலாய் மாறிய
உயர்பிறப்புகள்!

தாயின் கருவறையில்
அனைத்து மனிதர்களும்
முதல் ஆறுவாரம்
பெண்ணினமே!

ஒவ்வொரு
ஆணுக்குள் பெண்மையும்
பெண்ணுக்குள் ஆண்மையும்
இயற்கை அளித்த பெருவரம்!

y குரோமோசோமும்
டெஸ்டோஸ்ட்ரோனும்
ரிசெப்டரும் முறைதவறுவதால்
 உருவாவதே மூன்றாம் பாலினம்!.

தாயின் கருவறை மரபணுவை
வீரியமிழக்கச்செய்யும்
அண்ணன்களின் மரபணுவும்
தம்பி அரவாணியாக ஒரு காரணம்!. 
எங்கும் உள்ளது  அரவாணியம்
 எழுத்து வகையில் ஆய்தம்!
சொல்நிலையில் இடையினம்!
திணையிலோ முறைமையில் திரிந்த பாலைகள்!

இவர்கள் பாக்களிலோ மருட்பா!
பூக்களிலோ வாடாமல்லி!
தெய்வத்திலோ அர்த்தநாரி!
மனிதரிலோ பால் கடந்த ஞானிகள்!

மல்லாக்கப்படுத்து எச்சில் துப்பும்
ஒன்பது வாயில் கொண்ட
மனிதர்க்கு மட்டுமே இவர்கள்
எண்களில் ஒன்பது!

சாதி,மதம்
பால், இனம் கடந்த
இவர்கள் தான் உண்மையிலேயே
மகத்தான மானுடர்கள்!

 

—————————————————————————————————————————————————-

நான்  யார்?
மழலை பேசிய நாட்களில்
எடுத்த புகைப்படங்களில்
அதிகம் கவர்ந்தவை
தலைசீவி மட்டை வைத்து
பூ அலங்காரம் செய்த
பாவடை சட்டைக் கோலம்!

கண் நிறைய அப்பப்பட்ட
மையையும் மீறி வெளிப்பட்டன
பிஞசு முகத்தில்
அம்மா திணித்த
அலங்கார ஆசைகள்!

 

தன் கல்யாணக் கனவுகளை
 வெளிப்படுத்த இவனுக்கும்
பள்ளி நாட்களில்
அழகான கைகளென்று இழுத்து
அக்கா வைத்த மருதாணிப்பூச்சு
சிவக்க வைத்தது இருவரையும்!

அக்காவிற்கு கிடைத்த
பெண்பிள்ளைகளுக்கான
ஓசிச் சைக்கிளில்
 பழக்கிவிட்ட
அப்பாவிற்கும் தெரியாமல்
படர்ந்து விட்டன ஆசைக்கிளைகள்!

அனைவரின் விருப்பத்திற்கும்
இணங்கிப் போய்…
பருவவயதில் தனக்காக வாழ
மஞ்சள் தேய்த்து
பாவாடை தாவணி உடுத்திய
போது கிடைத்ததோ

 

வசவும் சாட்டையடியும்!
உடன் பயின்ற தோழர்களோ
வேற்றுமை கண்டும்
தோழியரோ ஒற்றுமை கண்டும்
ஒJங்கிய நிலையில்
அவனுள் நொறுங்கிப்போனது
உலகமென்ற ஏதோவொன்று!

நான் யார்….?
திரிகால ஞானிகளும்
கண்டுணர முடியாத தொடர்ந்த
கேள்விகளினால்
பாழாகிப்போனது பாழாய்ப்போன
பள்ளிப்படிப்பு!

நான்  உடலா…? உள்ளமா?
சித்தர்களும் விடைதேட  காட்டிற்குள்
ஓடிய நிலையில்
ஓடாமலிருக்க
ஒளித்து ஒளித்து
வாழ்ந்த வாழ்க்கை
சந்ததிகளினால் 
பிழையாகிப்போனது!

குடிகார அப்பாவுக்கும்
முதிர்கன்னி அக்காவுக்கும்
தாயாயிருந்தும் தாய்மையில்லாத
அவனை வெறுக்கும் தாய்க்கும்
இடமுண்டு அவனுக்கு
இடமில்லாத வீட்டில்!

ஆண் உடல் – பெண்தன்மை
பாலறியாமல்  ஐயுற்று குழம்பி
அறிவு பேதலித்து உடல் நலிவுற்று
உறவினர் வரும்போது
கழிவறைக்கு விரட்டபட்ட நிலையில்
உணர்ந்தான் அவ்வீட்டில்
தன்னை ஒரு மலமாய்!

கண்டும் காணாத உறவுகளினால்
காணாமலே போய் விட்டான்.
உடலாலும் மனதாலும்
வெந்து நொந்து….  மகளாய்
 பாசம் காட்ட ஆளிருந்தும்
 பெற்ற பாசம் துரத்த
ஓடினாள் வீடு தேடி…!
வாசலில் அவன்….. அவளாக
அதிகாலை இருட்டில் .
 பாம்பைக் கண்டதுபோல்
உள்ஓடி கதவடைத்த ஓசை
அவள் பாடிய தாலாட்டையும் மீறி
ஒப்பாரியாய் வந்து விழுந்தது 1

அவ்வோசை அவனின்
 உயிர்நரம்புகளை மட்டுமா அறுத்தது
கோடானுகோடி ஆண்டுகளாய்
தாயின் மீது கட்டமைக்கபட்ட
அத்தனை
புனைவுகளையும்தான்!

தவமிருந்து பெற்ற ஒற்றை ஆண்பிள்ளை
தாயுமில்லை தந்தையில்லை
நான் தனியன் என்று
கடைகடையாய்
கைதட்டி பிச்சை கேட்குமென்று
யார்தான் நினைத்திருப்பார்?

சாபமுமில்லை….
ஊனமுமில்லை….
இருத்தலியல் சிக்கல்
பிறந்த அனைவருக்குமிருக்க
சாதித்துவிட வேண்டுமென
தினவெடுத்தன அவள் தோள்கள்!

பிச்சை, பாலியல் தொழில் மறுத்து
 முப்பெரும் கடவுளின்
முதற்தொழிலை…..
அன்னம் படைத்தலை
முனைப்போடு மேற்கொள்ள
ஆரம்பமாயிற்று போராட்டம்!

அன்புச்செழியன்
அன்னலட்சுமியானாள்
அரவாணியர் சுயஉதவிக்குழு
அரவாணியர் கலைக்குழு
அரவாணியர் குழந்தைகள் காப்பகம்
அரவாணியர்  முதியோர் காப்பகம்
அரவாணியர் பணிமகளிர்சங்கம்
அரவாணியர் காப்பகப்பள்ளி….

இருபதாண்டுகள்
இணையற்ற விருதுகள்,உறவுகள்
இணையில்லா பெருமைகள்
எனினும் நெஞ்சில் ஏக்கங்கள்
வந்தவழி நினைத்து
பயணிக்க ஏங்கும் பாதங்கள்!

கூத்தாண்டவரின் பாதங்களில்
கண்ணீரால் கரைக்க முயன்றும்
கரையாத பாறைகள்.
கண்மூடி திறந்தாலோ இரத்தவழி உறவுகள்..
தத்தெடுத்த பிள்ளைகள் தாங்கி நின்றாலும்
ஒரு மகனாய் ஏங்கிய பாச நினைவுகள்!

முப்பதாண்டு …
முனைப்புகள் கூர்மையாகி
வாசலிலே நின்றுவிட்டாள்
புறத்தில் மாறாத பழைய வீடு
பயத்தோடு கதவுதட்டி காத்திருக்க
காப்பவளே இப்போது யாசகனாய்…!

யார் வேணும்?இடுங்கிய கண்களோடு
உள்ளிருந்து வந்த தேய்நத குரலுக்கு…
“அன்னலட்சுமி…அன்புச்செழியன்….”
வா என்ற சொல்லுமில்லை
வாஞ்சையோ சிறிதுமில்லை
வேதனை மென்றிட
மரணத்தைப் பார்த்துவிட்டாள்!

கால்களோ மறத்துவிட
மறந்துவிட்டாள் காலெடுத்து வைப்பதற்கு.
ஆனாலும் உள்ளிருந்து கிழிந்தசேலையும்
இடுங்கிய கண்களும்
தேகமென்று ஒரு  குச்சி  நடந்துவர
இருள் ஒளியானது .

சொல்லாமல் சொல்லின
இவர்களின் இருப்பை….
அவனை விரட்டிய கௌரவம்
அவர்களையும் விரட்டி விட்டதென்று.
இறுக்கம் உடைந்து இரங்கிய பேச்சில்
பசி அவர்களை தத்துதெடுத்து
ஆண்டுகள் பல ஆயிற்றென்று.

கைநீட்ட வைத்த
அப்பாவின் குடிப்பழக்கம்
கம்பி எண்ண வைத்ததோடு
வேலையையும் பறித்துவிட
நின்றபோன அக்காவின்
காலம் கடந்த திருமணம்,

மகளோடு சுமந்த தாயின்
பொருளாதார சுமை உணராது
காசநோய் அப்பாவைப்
படுக்கையில் தள்ளிவிட
நடைப்பிணமாய் மாறிப்
போனது அவர்களின்  வாழ்க்கை.

கேட்ட கதைகள் அத்ததனைக்கும்
தன் சோகத்தையும் மறந்து கண்ணீர் விட்டாள்.
அவள்பட்ட வேதனையும்
அவளைச்சோதித்த சோதனையும்
நினைத்துப் பார்க்கத் தெரியாத
பெரியமனசுக்காரி!

தான் சாபம் விடாதபோதும்
தெய்வம் தணடித்துவிட்டதென
நினைக்கக் கூடத்தெரியாத
அரவாணி  அன்னலட்சுமி
பெற்றவர்களைத்
தத்தெடுத்துக் கொண்டாள்!

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “என்கவிதைகள் – அரவாணிகள்

  1. இவர்கள் எழுத்துப் பிழையல்ல…
    எழுதியவன் பிழை…
    அருமை மிகுந்த கவிதை
    ஆழ்ந்த நல் சிந்தனை…

    காவிரிமைந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *