-செண்பக ஜெகதீசன்

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும். (திருக்குறள்:1068 – இரவச்சம்)

புதுக் கவிதையில்…

யாசித்தல் என்பது
வீசும் காற்றில்
விடப்பட்ட மரக்கலம்,
அது
கொடுக்காமல் மறைத்தல் எனும்
பாறையில் மோதிப்
பாழாகும் உடைந்தே…!

குறும்பாவில்…

இரத்தல் தோணிக்கு
இல்லை பாதுகாப்பு,
மோதியுடையும் மறைத்தல் பாறையில்…!

மரபுக் கவிதையில்…

இடுவார் பிச்சை என்றலையும்
இரப்பு எனப்படும் மரக்கலமும்,
அடுத்து வந்திடும் இடரதைமுன்
அறிந்தே தடுக்க இயலாது,
கொடுக்க ஏதும் இல்லையெனக்
கரக்கும் பாறையில் மோதிவிட்டால்,
தடுக்க வியலா துடைவதையும்
தாங்கிக் கொள்ள வேண்டியதே…!

லிமரைக்கூ…

இரத்தல் தோணிக்கு பாதுகாப்பேதும் இல்லை,
உடைந்தே அழிவது உறுதியாகும்
மோதினால் மறைத்தல் பாறையின் கல்லை…!

கிராமிய பாணியில்…

எரக்காத எரக்காத
எங்கேயும் எரக்காத,
எரப்புஎப்பவும் கப்பல்போல
கடல்லபோற கப்பல்போல…

ஓடுறவர ஓடிப்போவும்
ஒடஞ்சிபோவும்
ஒரசிப்போனா பாறயில,
இல்லங்கிற பாறயிலமோதி
எரப்புக்கப்பல் ஒடஞ்சிபோவும்…

எரக்காத எரக்காத
எங்கேயும் எரக்காத…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *