வையவன்

அவ்வளவு சீக்கிரம் சிவா திரும்பி விடுவான் என்று தெரு வாசலில் நின்று கொண்டிருந்த திஷ்யா எதிர்பார்க்கவில்லை.
“என்ன இவ்வளவு சீக்கிரம்?”
தன் மனசில் திடீரென்று வந்து கவிந்திருந்த தனிமைக்கு அவளைப் பார்ப்பது உற்சாக மளித்தது.
“விடுதலை கெடைச்சுடுச்சு” என்றான் கிண்டலாக.

“அப்ப ஜெயில்லேருந்து தான் வர்றீங்களா ஐயா?” என்றாள் திஷ்யா.
ஆம். பாசம் என்ற சிறையிலிருந்து. அதை இவள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? சிவா மாற்றிச் சொன்னான்.
“நண்பன் கிட்டேயிருந்து விடுதலை. ஒனக்கு அத்தை கிட்டேயிருந்து கெடைச்சுடுச்சா?”
உனக்கு என்ன வாய்க் கொழுப்பு என்பது போல் திஷ்யா அவனைப் பார்த்து நாக்கைக் கடித்தாள். இது ஒரு படி முன்னேற்றம் என்று சிவாவுக்குத் தோன்றியது.

“அத்தை சாயங்கால வண்டியிலே ஊருக்குப் போறாங்க. நீங்க வந்து டிக்கெட் வாங்கிக் கொடுங்க. பிரேம் வியாசர்பாடிக்குப் போயிருக்கான். வேற ஆள் தொணையில்லே….”
“நானா…” சிவா சற்று தயங்கினான். பிறகு ஒப்புக் கொண்டான்.
அறைக்குப் போன போது தாமுவிடமிருந்து வந்த கார்டு கிடந்தது.

‘அப்பா தேறி வருகிறார். விரைவில் வருகிறேன்’ என்று இரண்டு வரிகள் மட்டும் எழுதியிருந்தான்.
சிவா குளித்து விட்டு சிறிது நேரம் படுத்தான்.

பிறகு எழுந்து உட்கார்ந்து மற்றொரு சிறுகதை எழுதத் தொடங்கினான். வெளியே எங்கும் போகவில்லை.
மாலை ஐந்து மணி ஆனபோது சீதா வந்து “ஸ்டேஷனுக்குப் போக ஒங்களை அக்கா ரெடியாகச் சொன்னா” என்று தகவல் கொடுத்தாள்.

அத்தையை ரயிலேற்றி அனுப்பிவிட்டுத் திரும்பும் போது சென்ட்ரலின் நடுவே போட்டிருந்த ஆசன வரிசைகளைப் பார்த்தபோது சிவாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

“கொஞ்ச நேரம் இங்கே உட்கார்ந்துட்டுப் போவோமா?”
“ஆஹா… எப்படிப்பட்ட இடம் கெடைச்சிருக்கு ஒனக்கு”
“ஃபேன் ஓடறது. நாலஞ்சு ஸீட் காலியா இருக்கு…”

“அங்கே பசங்கள்ளாம் தனியா இருக்குமே…” என்று அரை மனசோடு சொல்லியவாறே திஷ்யா சம்மதித்தாள்.
சிவா அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.

உட்கார்ந்தவுடனே அவள் கேட்ட முதல் கேள்வி.
“நீ எதுக்குக் கதை எழுதறே?”

சிவாவுக்கு அவளுக்கு ஒரு ‘கூல் டிரிங்’ வாங்கிக் கொடுக்கும் நினைப்பு எழுந்தது.
“நாம்ப ஒரு கூல் டிரிங் சாப்பிடலாமா?”
“மொதல்லே என் கேள்வி!”
“கொஞ்சம் கூலாச் சொல்லலாமே”
“காசு வச்சிருக்கியா?” என்று விஷமத்தனமாகக் கேட்டாள்.

“நீ வாங்கிக் கொடுப்பேண்ணு ஒங்கிட்டே கேக்கறதா நெனப்போ?”
“சீ… சும்மா வேடிக்கைக்குக் கேட்டேன்.”
“அப்ப வா போவோம்” என்று எழ முயன்றான் சிவா.

“எழுந்து போனா எடம் போயிடும்”
“ஒண்ணு செய்யறேன்… நான் போயி ரெண்டு கூல்டிரிங் வாங்கிட்டு வர்றேன். நீ எடத்தைப் பார்த்துக்க” என்று சிவா சம்மதம் கேட்டான்.

“ஐயைய… நான் தனியா ஒக்காந்திருக்க முடியாது.. நான் போய் வரட்டா?” என்று கேட்டாள் திஷ்யா.
“நீ போய் எனக்காக வாங்கிட்டு வந்தா எனக்கு ஷாஹென்ஷா மாதிரி ஒரு ஃபீலிங் வரும்”
“எனக்கு மட்டும் ஒரு ஷா ஹென்ஸி மாதிரி வராதா”

“ஷா ஹென்ஷாவுக்கு பெண் பால் ஜஹானரா”
“தாங்க்யூ பண்டிட்… ரெண்டு பேருமே போக வேண்டாம். வீட்டுக்குக் கௌம்பறப்ப குடிச்சுப்போம். நான் கேட்ட கேள்வி?”
“சென்ட்ரல் ஸ்டேஷன் நடுவிலே ஹோன்னு இரைச்சலுக்கு மத்தியிலே கேக்கற கேள்வியா இது? சரி நீ ஏன் அதைப் படிச்சே?”

“எல்லாரும் ஒன் கதையைப் படிச்சிட்டு அழுதாங்க.. ஏன் அழணும்ணு வாங்கிப் படிச்சேன். எனக்கு சிரிப்பு வந்தது?”
“எதுக்கு சிரிச்சே?…” என்று அவளைக் கூர்ந்து பார்த்தான் சிவா.

“வாழ்க்கையிலே எத்தனையோ கஷ்டம் இருக்கு. அதிலே என்னமோ ஒன்னைப் பிடிச்சு ஓஹோன்னு பிரமாதப்படுத்திட்டே ஸோ வாட்?”

அவள் சொல்வது முழுக்க நிஜமில்லை என்று சிவாவுக்குப் பட்டது. நான் ஒன்றும் உன் ரசிகை இல்லை என்று காட்டிக் கொள்கிற மாதிரி அவள் முயற்சிக்கிறாள். அவன் அதை ரசித்தான்.

எழுத்தாளனின் ரசிகையாக இருப்பதை விட சிவாவுக்கு வேறு என்னவோவாக இருப்பதில் ஒரு சமத்துவம் தேடுகிறாள் என்று புரிந்தது.
“திஷ்யா, ஒரு விஷயம் தெரியுமா?”

“சொல்லு” தன் விரல்களுக்கு வைத்திருந்த மருதாணி நன்கு பற்றியிருக்கிறதா என்று கைகளை திருப்பிப் பார்த்துக் கொண்டே விவாதிக்கத் தயாரானாள்.

“அந்தக் கதை வெளிவந்தப்புறம் சில பேர் எங்கிட்டே தங்களோட சொந்தக் கதையைச் சொல்லி அங்கலாய்க்கிறாங்க.. இதோ இப்ப ரயிலேத்தி அனுப்பினோமே ஒங்க அத்தை.. அவங்க என்கிட்டே ரெண்டு கதை.. சொந்தக் கஷ்டங்கள்தான்… சொல்லிட்டாங்க”

“நீ அதைக் கதையா எழுதித் தீர்த்து வச்சுடுவியாக்கும்?”

சவுக்கைச் சொடுக்குவது மாதிரி இவளிடம் ஒரு குத்தல். சிவா அவள் கண்களைப் பார்த்தான். மிக மெல்லிசாக மை தீட்டியிருந்தாள். குத்தல் விடும் போதெல்லாம் அந்த முகத்தில் தோன்றிய ஒரு தனி சோபை நெஞ்சை அள்ளுவதாயிருந்தது.

‘கஷ்டங்களைத் தீர்த்துக்கறதை விடவும் அதை நாலு பேரு தெரிஞ்சுக்கிட்டா மேல்ணு பெரும்பாலோர் நெனைக்கிறாங்க!”
“ஏன் அப்படி?”

“கேக்கவும் சொல்லவும் பிரச்னை இருக்கறதாலே! மனுஷாள் அப்ப தான் உயிர் வாழறதா நெனைக்கிறாங்க. வாழ்க்கையின் வெகுமானமே அந்தப் பரிவுதான்.”
“அதுக்குதான் நீ எழுதறியா கதை?”

“எஸ் அண்ட் நோ”
“இது ஒரு பதிலா?”
“திஷ்யா..ஒன் கேள்விக்கு ஒரு பதில்..ஒற்றைப் பதில் தர முடியாது”
“சமுதாய சீர்திருத்தம்…புரட்சி..லட்சியம்?”

“அதையெல்லாம் நான் சொல்லிக்கிட்டே எழுத ஆரம்பிச்சா… கதை வராது. பெருக்கல் வாய்பாடுதான் வரும்… எனக்கு ஒரு கதை எழுதினா ஒரு பிரார்த்தனையை முடிச்ச திருப்தி… ஒரு நிறைவு… ஒரு விடுதலை… அதான் பொருத்தம்…”
“என்ன சொன்னே…பிரார்த்தனையா?”
“ஆமா” என்றான் சிவா.
“நீ என்ன ரிஷியா?”

ஸீட்டுக்கும் முதுகுக்கும் இடையே கூந்தல் உறுத்தியதால் திஷ்யா அதை எடுத்து முன்னே விட்டாள். மார்பின் மீது கன்னங்கரேலென்று விழுந்த அந்த கூந்தல் அவளை ‘ஸெக்ஸி’ யாக்கிற்று.

அந்த உதடுகளின் சிவப்பிற்கு அந்தகூந்தல் கருமை காட்டிய மாறுபாட்டில் தான் வசமிழப்பதை சிவா உணர்ந்தான்.
தான் ரிஷியல்ல. அது அப்போது நன்கு உறைத்தது.

“ரிஷி மட்டும்தான் பிரார்த்திக்கணுமா?”
“ஏன்… கிழவர்கள்… கிழவிகள்… கையாலாகாதவங்க… கனவு காணும் குழந்தைகள்…” திஷ்யா அடுக்கிக் கொண்டே போனாள்.

“ஸ்டாப்… உன் லிஸ்ட்லே எழுத்தாளனையும் சேத்துக்க.. அவனும் பிரார்த்திக்கிறான். பரிவிற்காக.. மனித உணர்வுகள் செத்துப் போயிடாம இருக்க. அன்புக்காக”

அவனுக்குக் கோபம் வருவிக்கும் முயற்சியில் தான் தோற்றதை ஒப்புக் கொள்ள அவனைப் பார்த்தாள்.
அவன் விழிகளில் ஒரு இரக்கம் அவளுக்குப் புலப்பட்டது. சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்கள் தங்களைக் கவனிக்கிறதைப் பார்த்தாள்.

உதட்டைச் சுளித்து இமைகளைத் தாழ்த்தினாள்.. அவனுக்கு அவளுடைய கவர்ச்சி அதிகரித்தது.
கீழே பார்த்துக் கொண்டே கூப்பிட்டாள்.
“சிவா”

“ம் ம்”
“அசடு வழிய ஆரம்பிச்சாச்சா?”
அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“இது சென்ட்ரல் ஸ்டேஷன்.. இதெல்லாம் கதையிலேயே வச்சுக்க… என்ன?”
“என் கதையிலே இதெல்லாம் வச்சுக்கறதில்லே”
“குட்… அப்பதான் கதை ஆரோக்கியமா இருக்கும்.”
“சொல்லுங்க விமர்சகரே”

“ரெண்டு விஷயம் ஒங்கூடப் பேசணும்னு தான் அத்தையை வழியனுப்ப ஒன்னைத் தொணைக்குக் கூப்பிட்டேன்.”
“அப்ப டிக்கட் வாங்கித் தர்றதுக்காக அழைச்சுட்டு வரலியா?”

“அட… அட… க்யூவிலே நிண்ணு அடிதடி பண்ணி சூர பராக்கிரமத்தோடே எப்படி டிக்கெட் வாங்கினே பாரு.. இதுக்கு நீ இல்லாமே எங்கே முடியப் போறதுண்ணு ஒன்னைக் கூட்டிகிட்டு வந்தேன் இல்லே?…”
“எந்நன்றி கொன்றார்க்கும்…” என்று ஒரு குறளை ஆரம்பித்தான் சிவா.

“சொல்லட்டுமா.. இல்லே கௌம்பலாமா?”
“சொல்ல விரும்பினா சொல்லு”
“இதுதான் வரணும்ணு எதிர்பார்த்தேன்”
“எது?”
“கோபம்”

“வரலே…வராது…உன்கிட்டே வரவே வராது”
“சிவசிவா… ஒன்னைச் சொல்லலே; அசல் சிவனைச் சொல்றேன். நேத்து சாயந்திரம் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டுக்குப் போயிட்டு வர்றப்ப ஒருத்தன் கார்லேருந்து என்னை மொறைச்சுப் பார்த்தான்.”
திஷ்யா சொன்னதும் குறுக்கிட்டான் சிவா.

“வழக்கப்படிண்ணு சொல்லு-”
“இல்லே… இது அப்படி இல்லே… நாலஞ்சு நாளா ஒரு மோட்டார் பைக் வாலா தெனம் நான் அன்ஸ்டிடியூட்டுக்குப் போற போதெல்லாம் அந்த நேரத்துக்கு நான் வருவேண்ணு காத்திருக்கிற மாதிரி பழியா கெடப்பான். இன்னிக்கு அவனும் அந்த காரிலே ஒக்காந்திருந்தான்.”
“நீ பயந்துட்டியா?”

“நோ… நான் என்ன தப்புப் பண்ணினேன். பயப்பட? முழுக்கக் கேளு”
அவள் ‘சீரியஸாக’ச் சொல்ல ஆரம்பித்தாள்.

“காரை நான் இன்னிக்கு ‘பாஸ்’ பண்றப்ப ‘மிஸ்’னு அவன் என்னைக் கூப்பிட்டான். மோட்டார் சைக்கிள்காரன் கார் டிரைவரைப் பார்த்து இவர் யார் தெரியும்லேண்ணு கேட்டான். ‘ஐ டோண்ட் பாதர்’னு சொன்னேன். அந்த ‘கட்’டை வாங்கிக்கிட்ட மாதிரியே காட்டிக்காமே வளவளத்தான். இவர்தான் பிரபல டைரக்டர் தினேஷ்குமார்.

“இவருடைய புதுப்படத்திலே நடிக்க ஒரு ஹீரோயின் தேவை. ஒங்களுக்குச் சௌகரியப் படுமாண்ணான். எனக்கு மகா கோபம் வந்தது.”

“என்ன பண்ணே?” என்று சிவா ஆவலோடு கேட்டான்.
“நோ… டெஃபனிட்லி நோண்ணு சொல்லிட்டு வந்துவிட்டேன்.”
“தட்ஸ் குட்.. அவ்வளவுதானே!”

“இல்லே… அதுக்கு மேலே போய்ட்டாங்க அவங்க. இன்ஸ்டிடியூட்டுக்குப் போய் என் அட்ரஸைக் கேட்டிருக்காங்க. அங்கே இருக்கற சினிமா சபலம் ஒண்ணு ரெண்டு சொல்லியிருக்கு. நேரா ஹாஸ்பிடலுக்குப் போயி அப்பாவைப் பார்த்திருக்காங்க.”
“ஓ”
“எடுத்த எடுப்பிலே எழுபத்தஞ்சாயிரம் தர்றோம்ணு ஆரம்பிச்சாங்களாம்.”
“அப்பா என்ன சொன்னார்?”

“வாரா வாரம் லாட்டரி டிக்கெட் வாங்கிட்டு கிண்டி ரேஸுக்குப் போறவர் என்ன சொல்லியிருக்கப் போறார்? அதுக்கென்ன ஆகட்டும்னு தலையை ஆட்டிட்டு வந்திருக்கிறாரு!”
“ஒன்னை வந்து கேட்டாரா?”

“கேட்டாராவது… ராத்திரி சாப்பிடவேயில்லே.. முடியவே முடியாதுண்ணு அடிச்சு சொல்லிட்டதிலே அவருக்கு ஏகக் கோபம்.”
சிவா ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்தான்.

“என்ன பாக்கறே?”
“நீ எதை மறுத்துக்கிட்டிருக்கேண்ணு ஒனக்குத் தெரியுமா?” சிவா அவளைப் பரீட்சை செய்வது போலக் கேட்டான்.
“நான்சென்ஸ்.. அந்த அதிர்ஷ்டம் எப்படிப்பட்டதுண்ணுதான் தெருத் தெருவா துணி இல்லாமே தொங்கற வால்போஸ்டர்கள்ளே தெரியுதே…”
“அப்புறம் இது என்ன?”
சிவா கண்ணிமைகளை மூடிக்கொண்டு பதில் தந்தான்.

“இதான் டெம்ப்டெஷன்… பைபிள் பாஷையிலே சொன்னா சைத்தானின் தூண்டுதல்.”
“எப்படி?”
“இன்னிக்கு லட்சோப லட்சம் பேருக்கு சினிமா நடிகையாயிடணும்.. லட்சம் லட்சமா சம்பாதிக்கணும்னு வெறி இருக்கறப்ப அதை நீ வேணாங்கறியே”
“நான் டெம்ப்ட் ஆகலே.”
“ஒங்க அப்பா”

“அவருக்கு சைபர் சைபரா எண்களைச் சொன்னாலே டெம்ப்ட் ஆயிடுவார்.”
“அவர் நிர்ப்பந்திச்சா நீ என்ன பண்ணுவே?”
“அவர் ரொம்ப ஓவரா வற்புறுத்தினா ஓடிடுவேன்.”
“எங்கே?”

அவள் நிசப்தமானாள்.
அவன் காத்திருந்தான்.
“ஐ’ம் ஸாரி சிவா..நான் ஓடமாட்டேன்…எங்க குடும்பத்திலே ஒருத்தர் ஓடினது போதும்.”
யாரு… என்று வாய் வரை வந்த கேள்விக்கு அவன் ‘ஸீல்’ வைத்தான்.

திஷ்யாவின் அம்மா ஓடிப்போன சங்கதி அந்த வீட்டில் அவன் கால் வைத்த முதல் வாரத்திலேயே தெரிவிக்கப்பட்டு விட்டது.

ஒரு சூதாடியோடு வாழ முடியாமல் போராடிப் பார்த்து நாலு குழந்தைகளையும் விட்டு விட்டு ஒரு வைர வியாபாரியோடு அவள் ஓடிப் போனாளாம்.
“நான் ஓடமாட்டேன்.”

சென்ட்ரலில் என்ஜின்கள் முழங்கின. ட்ராலிகள் காது பிளக்க உருண்டு வந்தன.
ஓடுவோர் நடப்போர் யந்திரம் மனிதர் என்று அந்த மாபெரும் கூரையின் கீழ் ஒலிகளின் சங்கமம் கடல் மாதிரி கேட்டது.

சப்தக் கடல்.
“ஐ வில் ரெஸிஸ்ட்… ரெஸிஸ்ட் இட்”
“நான் அப்பாகிட்டே பேசிப் பார்க்கறேன்.”
அவள் மறுப்பு தெரிவிக்கவில்லை.
“ரெண்டு விஷயம்ணு சொன்னியே.. இன்னொரு விஷயம்?”

“எங்கே ஒங்க பாஸ்”
“பாஸா… யாரது”
“தாமு”
“மதனபள்ளி போயிருக்கார்..ஏன் என்ன விஷயம்?”
“எப்ப வருவார்?”
“தெரியாது”
“வந்தா ஒண்ணு சொல்லி வை” அவள் முகம் சட்டென்று சிவந்தது.

“என்னது?”
“அவரை ஜாக்ரதையா இருக்கச் சொல்லு.. எல்லாப் பொண்ணுங்களும் மலையாளத்து நர்ஸ் மாதிரின்னு நெனைக்க வேண்டாம்னு சொல்லு.”
“என்ன… என்னது திஷ்யா?”

‘இதை மட்டும் நீ சொல்லு. மத்ததை நேரம் வர்றப்போ சொல்றேன்”
சிவாவுக்குத் திறக்கக் கூடாத ஜன்னல் ஒன்றைத் திறந்துவிட்ட மாதிரி ஒரு திகைப்பு.
“திஷ்யா.”

பெண்ணாகவும் அழகாகவும் பிறந்துவிட்ட விபத்துக்கு வருந்துவது மாதிரி அவள் ஒரு ‘சிலுவைச்’ சிரிப்பு சிரித்தாள்.
அதில் பலவீனம் இல்லை. போராட முடியும் என்ற வைராக்கியம் தெரிந்தது.
“இப்ப சொல்லு… நீ கதை எழுதி எழுதி என்ன சாதிக்கப் போறே?”
“கண்ணீரின் உப்பு விளையும் கருவூலத்தைத் தரிசனம் பண்ணுவேன். பிரார்த்திப்பேன்”
“நீ கவிதை கூட எழுதலாம்!”

“கூல் டிரிங்ஸ் சாப்பிடலாம் எழுந்திரு”
அவர்கள் எழுந்தனர்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *