–சக்தி சக்திதாசன்.   

 

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்கள்.

மூன்று வாரங்களின் பின்னே இம்மடல் வழியாக உங்களைச் சந்திப்பதில் ஆறுதல் அடைகின்றேன்.

எதற்கிந்த இடைவேளை? எனும் எண்ணம் உங்களுக்கு ஏற்படலாம் காரணம் இருக்கிறது .

எனது மனைவியின் தந்தை, எனது மாமனார் தனது 87வது வயதில் சென்னையில் ஏப்ரல் மாதம் 2ம் திகதி காலமானார்.

அவரது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்று கடந்த ஞாயிறு காலை லண்டன் திரும்பினோம்.

ஏ. எஸ். ராமஸ்வாமி ஐயர் !

ஆமாம் அவர் தான் எனது மாமனார்… இல்லை… எனது தந்தையின் மறைவின் பின்னால் எனது தந்தை எனும் ஸ்தானத்தில்இருந்தவர்.

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி எனும் ஊரில் 1927ம் ஆண்டு சுப்பிரமணியம் ஐயருக்கும், அம்மாளு அம்மாளுக்கும் மூத்த மைந்தனாகப் பிறந்தார்.

அந்நாளில் தங்கப்பதக்கம் பெற்று சட்ட வல்லுநராகத் தேறி அரசாங்கப் பணிபுரிந்த சுப்பிரமணி ஐயரின் மறைவுக்குப்பின்னால் தனது தம்பியுடன் தாயாரின் ஊரான கடையநல்லூரில் அமைந்துள்ள கிருஸ்ணாபுரத்தில் வாழ்ந்து வந்தார்.

வாழ்வில் பல சிரமங்களுக்கு ஊடாக, தனது விடாமுயற்சியாலும் தாயாரின் அன்பான வழிகாட்டுதலினாலும் கல்வியில்தேர்ச்சி பெற்று இந்திய வெளிநாட்டுச் சேவையான Indian Foreign Service இல் பணியாற்றினார்.

பிரெஞ்சு, ஸ்பானிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த இவர் இந்திய வெளிநாட்டுத் தூதரகங்கள் பலவற்றில் உயர்அதிகாரியாகப் பணியாற்றினார்.

1987ம் ஆண்டு தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1994ம் ஆண்டு தனது மனைவியைப் பறிகொடுத்தார்.

தனது அந்திமக்காலம் வரை தனது கால்களிலேயே நிற்க வேண்டும் என்பதில் மிகுந்த சிரத்தை கொண்டிருந்தார்.

எனது எழுத்துக்களை மிகவும் விரும்பிப் படிக்கும் அவரின் வேண்டுகோள் எனது படைப்பான தமிழ்ப்பூங்கா எப்போதும்வெளிவரவேண்டும் என்பதுவே.
எனது நூல்களில் ஒன்றான “கண்ணதாசன் ஒரு காவியம் ” வெளியீட்டின் போது என்னால் பங்குபெற முடியாத போது எனதுசார்பாக அவ்விழாவில் கலந்து கொண்டு மறைந்த அமரர் கே . பி. பாலச்சந்தர் அவர்களிடமிருந்து அந்நூலைப் பெற்றுச்சிறப்பித்தார்.

பொறுமைக்கு ஒரு முழு உதாரணமாகத் திகழ்ந்தவர் எனது மாமனார். நான் அவரது மகளைக் கைப்பிடித்த நாளிலிருந்துஅவர் மறைந்த காலம் வரை எமக்கிருவரிடையே இருந்த அன்பில் எப்போதுமே மாசு படிந்ததில்லை.

இதனை அவர் மறைவதற்கு சிலநாட்களுக்கு முன்னால் தொலைபேசியில் அவர் என்னிடம் கூறியபோது என்னையறியாமல் என் கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது.

தன் தந்தையின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவள் என் மனைவி மைதிலி. ஒவ்வொரு வருடமும் இங்கிலாந்திலிருந்து மூன்றுவார கால விடுமுறையில் ஓடோடிச் சென்று தன் தந்தைக்கு தன் கைகளினால் அவருக்குப்பிடித்தவற்றை ஆக்கிக் கொடுப்பதையே தனது முக்கிய பணியாகக் கொண்டிருந்தாள்.

இம்முறையும் கடந்த ஜனவரி மாதம் எனது மாமனாருடன் ஒரு மூன்று வார காலம் மிகவும் மகிழ்வாகக் களித்திருந்தோம்.

தெய்வத்துடன் இணைந்து விட்ட பொறுமைத் திலகமாம் என் மானாரின் ஆத்மசாந்திக்காய் பிரார்த்திப்பதோடு அவரின்அன்பான ஆசியுடன் வழிகாட்டுதலும் தொடர்ந்து எனக்குக் கிடைக்க வேண்டும் என அவர்தம் பாதம் பணிந்துவேண்டுகிறேன்.

20150421_183546(0)

பொறுமைக்கு உதாரணமாய் திகழ்ந்த
புண்ணிய சீலனாம் அயோத்தியின்
இராமபிரானின் வழியில்
பொறுமையின் பெருமையைக் காத்த
இராமஸ்வாமியின் மருமகனாய்
கிடைத்திட்ட பாக்கியத்தை நானும்
கிளர்ந்திட்ட உணர்வுகளின் வழி
உணர்ந்திட்ட பொழுதென்று அறிந்தேன்
புலர்ந்திட்ட நாட்கள் அனைத்தும்
புகட்டிட்ட பாடங்கள் எல்லாம்
புகுத்திட்ட அனுபவங்கள் எனக்கு
கற்பித்த பாடங்கள் ஆயிரம்
தெரிந்திட்ட நிகழ்வுகளில் நானும்
தெளிந்திட்ட பொழுதில் எல்லாம்
மறைந்திட்ட என் மாமனார் மூலம்
மனதினில் உறைந்திட்ட அறிவு ஆயிரம்
எதையும் தாங்கிடும் இதயம் என்பார்
அதையும் வாழ்வில் நான் கண்டிட்டது
இருவராம் என் தந்தையும் மாமனாரும்
தந்தை எனும் ஒளி வாழ்வில் மறைந்து
இருளான மனம் மீண்டும் ஒளி கொண்டது
மாமனார் எனும் பெரு ஒளிவிளக்கினால்
இன்றதுவும் அணைந்தது என்று நான்
மயங்கிய பொழுது எங்கிருந்தோ அசரீரியாய்
எப்போதும் என்றும் உன் மனதில் ஒளியாய்
நாமிருப்போம் என்று இருகுரல் ஒலியாய்
மாமனாரும் தந்தையும் கூறினரே
அன்பினுமினிய மாமனாரின் பாதம் பணிந்து
ஆசி வேண்டியே அவரின் ஆத்மசாந்திக்காய்
பிரார்த்திக்கிறேன்.

 

 

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(146)

  1. பெண்ணைப் போற்றும் ஒவ்வொரு நபரும் சமுதாயத்தில் சிறப்புக்குரியவர்கள் என்பதும், மனைவியின் தந்தையோடு உங்களுக்கு இருந்த வாஞ்சையை வண்ணத் தமிழால் வடித்திருப்பது கண்டும்,

    இத்துயரத் தருணத்திலும் ஆறுதலாத் தமிழைப் பிடித்து இருப்பதும் வாழ்க்கை அனுபவத்தை படிப்பவர்க்கு பகர்கிறது.

    என்னுடைய ஆந்த்த அனுதாபங்கள் தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார்க்கும்!

    இறை இராமனும்; இறையடி சேர்ந்த அய்யா இராமசாமியும் நிச்சயம் உங்கள் ஆக்கங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்!

    அன்புடன்
    சுரேஜமீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *