— கவிஞர் காவிரிமைந்தன்.

 

kannaa

கண்ணா கருமை நிறக் கண்ணா …

கண்ணனின் பெயரில் கொண்ட அபிமானத்தால் கண்ணதாசன் என்ற பெயர் சூட்டிக்கொண்டாரா? தெரியவில்லை … வேலை தேடி அலைந்த காலத்தில் ஏதோ ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் … உன் பெயரென்ன என்கிற கேள்விக்குச் சட்டென்று சொன்ன பதில்… கண்ணதாசன்… எனவே அறிகிறோம். பெயரின் முன்பாதி கண்ணனை முன்மொழிய அவனின் தாசனாகவே வாழ்ந்த கண்ணதாசன் எழுதிய பாடல்கள் பல… கண்ணன் என்கிற வார்த்தையோடு தொடங்குதல் காண்கிறோம். அதுவும் அவை வெற்றிப்பாடல்களாகவே உலா வருவது கண்கூடு! அந்த வரிசையில் இதோ ஒரு பாடல்!

பணமா பாசமா என்றால் பணத்தின் பக்கம் தலைசாயும் உலகம்!
நிறமா குணமா என்றால் நிறத்தின் பக்கம் அலைமோதும் கூட்டம்!
இதுதானே நடைமுறையில் நாம் காணும் இயல்புகள்!

நல்ல குணமுடைய நங்கை ஒருத்திக்கு இல்வாழ்க்கை அமைகிறது. புகுந்த வீட்டில் உள்ள அனைவரும் பெண்ணின் நிறம் கருப்பு என்பதால் வெறுக்கிறார்கள்… முகம் சுளிக்கிறார்கள்!
செய்வதறியாது தவிக்கிறாள் நங்கை…
கண்களிலே ஊற்றெடுக்கும் கங்கை…
பெண்களிலே இவள்போலப் பலபேர்…
அவர்கள் சார்பில் குரல் கொடுத்தாள் இங்கே!

படைத்த ஆண்டவனையே அழைத்துக் கேள்விகள் தொடுத்து வடிக்கிறாள் பாடல்! ஏ.வி.எம். நிறுவனத்திற்காக “நானும் ஒரு பெண்” திரைப்படத்தில்… தயாரிப்பாளரின் முழுமையான திருப்திக்கு பாடல் அமையாமல் போக … அந்தப் பெண்ணின் அவலத்தை, அவள் படும் பாட்டை முதலடியிலேயே பட்டென்று சொல்ல வேண்டும் என திரு.மெய்யப்பச் செட்டியார் விரும்ப, முடிவாக கண்ணதாசன் அவர்கள் வரவழைக்கப்பட்டு எழுதிய பாடலிது! இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் அவர்களின் இனிய இசையில் உருவான ஸ்வரங்களில் வடிவம்பெற்ற பாடல்! கண்ணதாசன் வரிகள் தர… பி.சுசீலா குரல்கொடுக்க… இதோ அந்தக் குற்றால அருவியின் சுகம்… சோகத்தை சுமந்துகொண்டு நம் உள்ளம் நோக்கி வருகிறது!

கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை – என்னைக்
கண்டாலும் பொறுப்பாரில்லை
கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
காணாத கண்ணில்லையே

மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா – நல்ல
இடம் பார்த்து நிலையாக அமர்ந்தாய் கண்ணா

பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா – அதில்
பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா – எந்தக்
கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா
கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
காணாத கண்ணில்லையே

உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை – என்னைக்
கண்டாலும் பொறுப்பாரில்லை
கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
காணாத கண்ணில்லையே
_______________________________________________

திரைப்படம்: நானும் ஒரு பெண்
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: R. சுதர்சனம்
பாடியவர்: பி. சுசீலா
காணொளி: https://youtu.be/xO1RW80P8YU

 

ஒரு பெண்ணின் வேதனையைக் கவிஞனே இப்படி வெளிக்காட்ட முடியுமென்று உன் கவிதை வரிகள் திரைப்படத்திற்கு எழுதியதோடு நின்று விடாமல்… பல்லாயிரம் எம் குலப்பெண்களுக்கு ஆறுதலாய்… ஆறாம் விரலாய்… அழுத கண்ணீரைத் துடைத்து நின்றதனை என்னென்பேன்?

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *