-பா வானதி வேதா. இலங்காதிலகம்

பூவினை ஒன்றொன்றாய் மாலையில் தொடுத்துப்
பாவினைப் பண்ணாகப் பாடித் தொழுது
என்வினை தீர இறையை வணங்கி
வாழ்வினையொரு சுப வினையாக்குதல் நோக்கு!

அன்பினைப் பெற அருகினில் நெருங்கி
அறிவினை வளர்க்க ஆய்வினை நகர்த்தி
உயர்வினைத் தாருமெனப் பாவினை ஆக்கத்
தேய்வினை எண்ணாது அறிவினைத் தீட்டலாம்!

தீங்கினைப் பாங்காக விலக்கி நம்முள்
தேங்கிட நல்லவை நிறைத்துத் திருப்தியாய்
ஓங்காரனை, காங்கேயனை ஓயாது துதித்துப்
பூங்காவென வாழ்வைப் பயமின்றித் தேடலாம்!

குயவனைக் குவலயம் அமைத்த குருபரனின்
தயவினைத் வேண்டித் தலைவணங்கி
அருளினைத் தாருமென அன்பினைக் கொட்டி
ஊழ்வினை, பாவவினை உதறிட வணங்கலாம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *