நிர்மலா ராகவன்

உனையறிந்தால்11

ஆத்திரக்காரனாக வளரும் குழந்தை

கேள்வி: சில பிள்ளைகள் எளிதாக ஆத்திரம் அடைகிறார்கள். மனோநிலை சரியாகத்தான் இருக்கிறது. எதனால் இப்படி?

விளக்கம்:

பெற்றோரில் ஒருவர் மிகுந்த கோபக்காரராக இருந்தால், குழந்தையும் ஆத்திரக்காரனாக வளரும். சிறு குழந்தைகள் ஓயாது அழுதால், அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். பசி, தூக்கம், உடல் நலமின்மை, எதையாவது பார்த்துப் பயந்துபோவது — இவைகளோடு, பொழுது போகாமல் அழுவதும் உண்டு. அழுகைதான் அவர்கள் மொழி.

கூர்ந்து கவனித்தால், இப்படி அழுதால், இன்னது தேவை என்று புரிந்துகொள்ள முடியும். அணைப்பினால் அழுகையை உடனடியாக நிறுத்த முடியும். நாமும் பதட்டப்பட்டு, இல்லை, ஆத்திரப்பட்டு, குழந்தைகளையும் ஆத்திரக்காரர்களாக வளர்ப்பது எதற்கு?

இரண்டு வயதுக்கு மேற்பட்ட எந்தக் குழந்தையும் தான் இனியும் பச்சைக்குழந்தை இல்லை, அதுதான் நடக்கவும், பேசவும் தெரிகிறதே என்று எண்ணிக்கொள்ளும். தன் சுதந்திர உணர்வை வெளிக்காட்டுவதேபோல், `வேண்டாம்,’ `மாட்டேன்,’ என்ற வார்த்தைகளைத்தான் அதிகம் பயன்படுத்தும். மற்றபடி, அர்த்தம் புரிந்து பேசும் வார்த்தைகளில்லை.

தாம் சொல்வதை உடனுக்குடன் கேட்கவில்லை என்றால் சில பெற்றோர் ஆத்திரம் அடைகிறார்கள். இவர்களுக்கு தம் வயதிலும், அனுபவத்திலும் மிகுந்த பெருமை. அதை அதிகாரமாகக் காட்டிக்கொள்வர்.

`என் பேச்சைக் கேட்காது, எதிர்த்துப் பேசுவதா!’ என்று சிறு குழந்தைகளின்மேல் ஆத்திரப்படலாமா? இந்த `குற்றத்துக்காக’ சிறுபிள்ளைத்தனமாக பெற்றோர் தண்டிக்கும்போது, தான் செய்த தவறு என்ன என்றே புரிவதில்லை குழந்தைக்கு.

சின்னக் குழந்தையை அடித்தாலோ, திட்டினாலோ, பெற்றோருக்குத் தன்மேல் அன்பில்லை என்றெண்ணி அஞ்சும். வருந்தி அழும். இதனால்தான், தன்னை அடித்த தாய் மீண்டும் அணைத்துச் சமாதானம் செய்யும்வரை அழுகை ஓய்வதில்லை. அடிப்பது ஒரு வினாடி என்றால், சமாதானப்படுத்த அரை மணி பிடிக்கும். இந்த அவதிக்கு, சின்னத் தவறுகளைக் கண்டும் காணாமலிருக்கலாம்!

ஏழெட்டு வயதுக் குழந்தைகளுக்கு இத்தகைய நடத்தை குழப்பத்தை விளைவிக்கும்.

`நான் எந்தத் தப்பும் செய்யவில்லையே! அப்பா ஏன் அடிக்கிறார்? அம்மா ஏன் கத்துகிறாள்?’

இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காது, சமாளிக்க முடியாத எது நேர்ந்தாலும், ஆத்திரப்படுவதுதான் வழி என்று நிச்சயித்து, அதன்படி நடக்கிறார்கள்.

முதல் குழந்தை பிறந்ததும், அதை நல்லவிதமாக வளர்க்கவேண்டும், தன்னால் முடியாத சிகரங்களையெல்லாம் அதைத் தொட வழி வகுக்க வேண்டும் என்று பல கனவுகளைக் காண்பார்கள் சில இளம் பெற்றோர். அதனால் படபடப்பும், பயமும் உண்டாவதுதான் கண்ட பலன். ஏனெனில், குழந்தைகளும் வளர வளர, அதே உணர்வுகளுக்கு ஆளாகிறார்கள்.

என் மலாய் மாணவி ஒருத்தி என்னிடம் வந்து கேட்டாள், “நான் பாடங்களை நன்றாகப் படித்துக்கொண்டுதான் ஒவ்வொரு பரீட்சைக்கும் வருகிறேன். வினாத்தாளில் வரும் எல்லாக் கேள்விகளுக்குப் பதில் தெரியும். ஆனால், எழுத முடியாமல் போகிறது. ஏனிப்படி, டீச்சர்?” என்று. கலக்கத்தில் அவளுக்கு அழுகை வரும்போல இருந்தது.

ஒரு முறை, நான் அவள் வகுப்பு மாணவிகளைக் கோபித்தபோது, விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள் — என் மனம் நொந்து விட்டதே என்று! எவ்வளவு தூரம் அவள் தன் தாயை நேசித்தால், ஆசிரியையும் அப்படியே பாவித்து நடப்பாள்!

“நீ மூத்த பெண்ணா? மிக நன்றாகப் படித்து, உன் தாயைப் பெருமைப்படுத்த நினைக்கிறாயோ?” என்று கேட்டேன்.
அவள் ஒப்புக்கொண்டாள்.

தான் செய்வதெல்லாமே பெற்றோரைத் திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்ற ஓயாத கவலையால் இவளால் தன் முழுத்திறமையையும் காட்ட இயலாது போய்விட்டது.

பரீட்சைக்குப் போகும்போதும், எழுதும்போதும் மனம் நிச்சலனமாக அல்லவோ இருக்க வேண்டும்!
இவளைப்போல் தம் மனக்குறையைப் பிறரிடம் சொல்லி, அதைப் போக்கும் வழியை நாடுபவர்கள் அரிது. சிலர் தம் குறையைப் பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லி, அதிலேயே திருப்தி அடைந்துவிடுவார்கள்.

`ஏனோ இப்படி எதிலுமே வெற்றி பெற முடியவில்லையே!’ என்பவர்களது ஏக்கமும், நிராசையும் காலப்போக்கில் ஆத்திரமாக மாற வாய்ப்புண்டு..

இப்படி எழும் ஆத்திரத்தைப் பிறர்மீது காட்டுவோரும் உண்டு, தம்மீதே காட்டிக் கொள்பவர்கள் கூடாத சகவாசம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை நாடுகிறார்கள் — தம்மையே அழித்துக்கொள்ள விரும்புவதுபோல.

பெரியவர்களுக்கு எரிச்சல் வர எத்தனையோ காரணங்கள்; மேலதிகாரியின் அவமதிப்பு, போக்குவரத்து நெரிசல், பணத் தட்டுப்பாடு இப்படி. அதை வெளிக்காட்டும் வகை புரியாது, பிள்ளைகளை வடிகாலாக ஆக்கிக் கொள்வது என்ன நியாயம்!
சில பெற்றோர் தம் வயதொத்தவர்களுடன் அரட்டை அடித்து, ஓய்ந்து வீட்டுக்கு வரும்போது, பிள்ளைகளைக் கவனிப்பது எங்கே!

இன்னும் சிலர் மனத்தளவில் குழந்தைப் பருவத்திலேயே தங்கிவிட்டவர்கள். அவர்களுடைய நினைப்பெல்லாம் கடந்த காலத்திலேயே இருக்கும். `அப்பா என்கூடப் பேசியதுகூட இல்லை, அக்காதான் அவருக்குச் செல்லம்,’ என்றெல்லாம், எப்போதோ சிறுவனாக இருந்தபோது நடந்ததைச் சொல்லிச் சொல்லி மாய்வார்கள். இதனால் நிகழ்காலத்தின் சுவையான சம்பவங்களை அனுபவிக்க முடியாது போய்விடுகிறது.

சமீபத்தில் ஒரு மாது என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அவரை நான் பார்த்ததில்லை. என்னிடம் பேசினால் ஆறுதலாக இருக்கிறது என்றார்.

`என் கணவர் முன்கோபி. ஒன்றுமில்லாததற்கெல்லாம் கெட்ட வார்த்தை உபயோகிப்பார். அவர் போய்விட்டார். இப்போது, இரு மகன்களும் அவர் மாதிரியே இருக்கிறார்கள்! எனக்கு எங்காவது தனியாகப் போய்விட வேண்டும்போல இருக்கிறது!’ என்று பிரலாபித்தார்.

`எங்கப்பா எப்பவும் திட்டுவார், அடிப்பார்,’ என்று இவரது மகன்கள் சிறு வயதில் தம் நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கலாம். நாம் யார்மீது குற்றப் பத்திரிகை வாசிக்கிறோமோ, அவர்கள் மாதிரியே ஆகிவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

`நாம் ஏன் இப்படி ஆனோம், நம் பிள்ளைகளும் நம்மைப்போலவே இளமைப் பருவத்தைக் குழப்பத்திலும், ஆத்திரத்திலும் கழிக்க வேண்டுமா?’ என்று நிறைய யோசித்தால், மாற வழியுண்டு.

குழப்பத்தை வெளிக்கொணர, நம் மனதில் தோன்றியவற்றை எழுத்தாக வடிக்கலாம். இல்லையேல், படமாக வரையலாம். எழுதுவதும், வரைவதும் மிகச் சிறந்த வடிகால்கள். மனதில் நிம்மதி பிறந்தால் கோபமும், ஆத்திரமும் பறந்துவிடாதா!

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *