கிரேசி மோகன்

 
தூணப் பிளந்து அழகிய சிங்கர் பிரகலாதனை அள்ளியணைத்து அருள் பாலிக்கிறார்(நன்றி உபயம்-ரங்கம் பாலாஜி)….முன்பு எப்பவோ ‘’பாகவதத்தை’’ ‘’வெண்பாகவதம்’’ ஆக்க முயன்றபோது(பாற்கடலை குடிக்கப் போன கம்பனின் பூனைதான் நினைவுக்கு வந்தது) என் தம்பி பாலாஜி மனைவி மீரா கொடுத்த ‘நாரயணீயத்தை’ படித்து ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒரு வெண்பா என்று எழுதினேன்….கபிலாவதாரத்தோடு நிற்கிறது….பெருமாள் அனுக்கிரகம் இருந்தால் முடித்து விடலாம்….அப்போது எழுதிய ‘நரசிம்மாவதாரம்’ ….கிரேசி மோகன்….

 

நரசிம்மாவதாரம்….
————————

crazy
அல்லில் பகலில் அகத்துள் அதன்வெளியில்
புல்புழு பூச்சி பறவையால் -கொல்லும்
மனிதனால் காட்டு மிருகத்தால் சாகா
தனதுயிர் கேட்டுத் தவம்….(1)

இரணியன் வேள்விக்(கு) இரங்கி அயனும்
வரனெனத் தந்தனன் வாக்கு -தரணிகள்
மூன்றையும் வென்றஅம் மூர்கன் மகனாக
தோன்றினன் நாரணத் தொண்டு….(2)

”நாரா யணஓம் நமஹவை நாள்தோறும்
பாரா யணம்செய் பிரகலாதா” -பூரண
கர்ப வதிகயாது காதுவழி சேய்க்குரைத்தான்
நற்கதியை நாரதன் நன்கு….(3)

அச்சுதன் நாமம் அனவரதம் ஓதுவோனை
அச்சுறுத்தி தன்வழிக்(கு) ஆட்படுத்த -அச்சன்
இரணியன் போட்ட இடர்களைத் தாண்டி
மறையென நின்றான் மகன்….(4)

முட்டவந்த ஆனைககள் எட்டு திசைகளிறும்
முட்டியிட்டுச் சுட்டி மழலையை -வட்டமிட்டு
காட்டியபின் கூறும் கஜேந்திர மோட்ஷத்தைக்
கூட்டியவன் பக்தனுக்கு காப்பு….(5)

பக்தீயில் மூழ்கும் பிரகலாத சாமியை
பத்தி எரியும்தீ பூவாகி -சுத்திவரும்
மீறிய நஞ்சும் மிதமாய் அமிழ்தாகும்
சூரியன்மேல் வைப்பாரோ சூடு !….(6)

விண்முகடு கொண்டுபக்தி வீரத்தை வீசிட
மண்மகள் ஏற்றாள் மலர்மகளாய் -பின்முதுகில்
பாறையைப் பாம்பால் பிணைத்தாழி போட்டிட
பேரலை போலெழுந்தான் பிஞ்சு….(7)

கோவிந்தா என்றுரைக்க குத்தவந்த ஈட்டியின்கண்
நாவின்தன் மென்மையாய் நைந்தது -சாவிந்த
பிள்ளைக்கு இல்லையென போயுரைத்தார் மன்னனிடம்
நொள்ளையான ஆட்கள் நமுத்து….(8)

ஆருனக்குத் தந்தார் அதிசிய சக்தியை
கூறெனக்கு என்று கொதித்தஅப -சாரனுக்கு
நாரண சக்திக்கு பூரண பக்தியே
காரணம் என்றான் கொழுந்து….(9)

காட்டடா அந்தக் கருநீலப் பூதத்தை
போட்டடைப்பேன் இத்தூணில் பூச்சியாய் -வேட்டையை
ஆடத் துவங்கிய அப்பனுக்குக் காட்டினான்
கூடத்து தூணுக்கே கை….(10)

பக்தப் பிரகலாதன் பேச்சை ருஜுப்படுத்த
சக்திக்கு மீறிய சங்கடமாய் -திக்கெட்டை
தேகமாய்க் கொண்டவன் ஏகினான் தூண்வேக
வேகமாய் வைகுண்டம் விட்டு….(11)

கள்ளத் தனம்செய்தென் பிள்ளை பிடித்தவனே
உள்ளத் துணிவிருந்தால் ஊர்ந்துவா -முள்ளிட்ட
பாதுகையால் தூணுதைக்க பாதிநர பாதிசிங்கம்
காதுசிகை கோதி குதிப்பு….(12)
சாயங்கா லம்வரை சண்டை புரிந்தந்த
சீயங்கா லைமடித்து, சோர்ந்தெழுந்து -பாயும்
இரணியனை தூக்கி இடைவாசல் வைத்து
கரநுனியால் கீறிக் கிழிப்பு….(13)

ஆவேச மான அரியை அடக்கிட
பூவாசத் தாயே பயந்திட -சாவாச
மாகவந்த பிள்ளை மடியமர்ந்து சிங்கத்தின்
தேகம் தழுவத் தணிவு….(14)

கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
உச்சரிக்க நாமம் உரத்தப்போ -உச்சி
குளிர்ந்தவன் உச்சியைக் கோதிய சிங்கம்
மெலிந்துகர் ஜிக்க மியாவ்….(15)

ஏந்தி இலக்குமியை யோக நரசிம்மமாய்
சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
களைத்தல் கதையின் கருத்து….(16

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *