பவள சங்கரி

தில்லை வனம் காசி திருவாரூர் மாயூரம்
முல்லை வனம் கூடல் முதுகுன்றம் நெல்லைகளர்
காஞ்சி கழுக்குன்றம் மறைக்காடு அருணை காளத்தி
வாஞ்சியம் என முத்தி வரும்.

avanji

நம் தென் இந்தியாவில் திரும்பிய புறமெல்லாம் எண்ணற்ற திருத்தலங்கள் இருப்பதை நாமறிவோம். ஆனால், தர்மராசர், நீதிமான் என்று போற்றப்படுகிற, செல்வந்தன், வறியவன், ஞானி, அஞ்ஞானி என்ற பாரபட்சம் ஏதுமின்றி அவரவர் விதியை முடித்து வைப்பவர் எமதர்மராசர் என்ற இவருக்கென்று தனியொரு ஆலயம் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த வகையில் இக்கோவில் மிகவும் தனிப்பட்ட ஒரு கோவில். திருவாரூர் மாவட்டத்தில், முடிகொண்டான் மற்றும் புத்தாரு எனும் ஆறுகளுக்கிடையே எழும்பியிருக்கும் திருவாஞ்சியம் எனும் இத்திருத்தலத்தில்தான் எமதர்மராசருக்கான தனிப்பட்ட ஆலயம் அமைந்துள்ளது. சிவபெருமானார், அன்னை பார்வதி தேவியாரிடம், காசியைக்காட்டிலும் மிகச் சிறந்த தலமான ‘திருவாஞ்சியம்’ தாம் மிகவும் விரும்பி உறையும் திருத்தலம் என்று சொல்லியிருக்கிறார். வாரனாசிக்கு ஈடாகக் கருதப்படும் ஆறு புனிதமான தலங்கள், காவிரிக் கரையில் அமைந்துள்ள திருவெண்காடு, திருவையாரு, சாயாவனம், மாயூரம், திருவிடைமருதூர் மற்றும் திருவாஞ்சியம் என்பதாம். இவையனைத்திலும் திருவாஞ்சியம் தனிச்சிறப்பு பெற்றதாம்.

ShriVanjiyam

‘திருவாஞ்சியம்’ என்ற இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள லிங்க வடிவம், சுயம்புவாகத் தோன்றிய, உலகிலேயே மிகப்பழமையான 64 ஆலயங்களில் ஒன்று. திருவாஞ்சிய நாதரின் பெயர் சொன்னாலே முக்தி கிடைக்கும் என்ற அளவில் காசி திருத்தலத்தைக்காட்டிலும் 1000 மடங்கு மகிமை வாய்ந்ததாம் இத்தலம். காவேரி நதியின் தென்புறம் அமைந்த தலங்களுள் திருவாஞ்சியம் 70 வது தலம் என்று திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆலயம், சோழர் காலத்தில் இராச கம்பீர சதுர்வேதி மங்களம் என அழைக்கப்பட்டுள்ளது. திருவாஞ்சியத்தில் ஒரு கணமேனும் வசித்தாலோ அன்றி நினைத்தாலோ, ஐயனின் திருநாமத்தைச் சொல்லி பிரார்த்தனை செய்தாலோ பாவம் நீங்கி முக்தி பெறலாம் என்றும் இதனை ‘பூ கைலாயம்’ என்றும் அகத்திய முனிவர் உரைக்கிறார். அந்த வகையில் திருவாஞ்சியம் ஈடு இணையற்ற ஒரு ஆலயம் என்று புராணங்கள் உரைக்கின்றன. மகாலட்சுமியை அடைய விரும்பி திருமால் தவம் இருந்ததால் இத்தலம் திருவாஞ்சியம் என்று பெயர் பெற்றுள்ளது. பிரமன், திருமால், சூரிய பகவான், தேவர்கள் என அனைவரும் சிவனருள் பெற்ற சிறப்பான தலம் இது. சந்தன மரங்கள் அடர்ந்த பகுதி என்பதால் கந்தாரண்யம் என வழங்கப்படுகிறது.

அமைவிடம்: திருவாஞ்சியம் எனும் இப்புண்ணியத்தலம், தமிழகத்தில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து 31 கி.மீ தொலைவில் நன்னிலம் வழியாக செல்ல வேண்டும். நன்னிலம் இரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும், திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

avana

மூலவர் : திரு வாஞ்சிநாத சுவாமி (சுயம்புலிங்கம்)
அன்னை: திரு மங்களாம்பிகை – மருவார்குழலி
தலவிருட்சம் ; சந்தன மரம்
தீர்த்தம் ; குப்தகங்கை, எம தீர்த்தம்
விசேச மூர்த்தங்கள் ; எமதர்மராசர், சித்ரகுப்தர், யோக பைரவர் (அமர்ந்த திருக்கோலம்) மகாலட்சுமி, மகிசாசுரமர்த்தினி, ராகு, கேது.
பாடல் : நாயன்மார்கள் நால்வராலும் பாடல் பெற்றதோடு, அருணகிரிநாதர், இராமலிங்க சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், கோவை சிவராம பிள்ளை ஆகியோரும் பாடியுள்ளனர்.
காலம்: நான்கு யுகங்களிலும் சிறப்புப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

avanjiya

திருவாஞ்சியத்தில் நான்கு வீதிகளுடன், கிழக்கு திசையை நோக்கி 110 அடி உயர ஐந்து நிலை ராசகோபுரம் அமைந்துள்ளது. இராச கோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன், கங்கை பிரகாரத்தில் வடபுறம் குப்த கங்கையும், கரையில் கங்கைக்கரை விநாயகரும், தென்புறத்தில் அக்னி மூலையில் எமதர்மராசர் மற்றும் சித்ரகுப்தர் அமர்ந்த திருக்கோலத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கின்றனர்.

aku

ஆலயத்தின் இரண்டாம் கோபுர நுழைவாயிலில் இடது புறம் அபயங்கர விக்னேசுவரரும், வலது புறம் பாலமுருகனும், இரண்டாம் பிரகாரத்தில் இடது புறம் நட்டுவன் விநாயகர், வலது புறம் அருள்மிகு மங்களாம்பிகையும் எழுந்தருளியுள்ளனர். இடது புறம் மடப்பள்ளியும், வலதுபுறம் பள்ளியறையும் அமைந்துள்ளது. இரண்டாம் பகுதியில் கொடி மரம், பலிபீடம், நந்திகேசுரர் அலங்கார மண்டபம் அமைந்துள்ளது.

avi

ஆலயத்தின் மூன்றாம் கோபுர வாயிலில் இரட்டை விநாயகர், அதிகார நந்தி, மூன்றாம் பகுதியில் நர்த்தன மண்டபத்தில் ஒரு நந்தியும், மகா மண்டபத்தில் துவாரபாலகர்கள் மற்றும் கருவறையில் திருவாஞ்சிநாதரும் அருள்பாலிக்கின்றனர். சுவாமியின் வலது புறம் சோமாசுகந்தர் சந்நிதியும், முகப்பில் வெண்ணெய் விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். உட்பிரகாரத்தில் தென்திசை நோக்கியவாறு தட்சிணாமூர்த்தியும், கிழக்கு நோக்கி காசி விசுவநாதர் சந்நிதியும், திருமாலப்பத்தியில் 63 நாயன்மார்களும், ஒன்பது தொகையடியார்களுடன், உமாமகேசுவரரும் காட்சியளிக்கின்றனர். மேற்கு உள்பிரகார நிருதி மூலையில் சந்திரமௌலீசுவரர், கன்னிமூலை கணபதி, சட்டநாதர், மீனாட்சி சொக்கநாதர், வள்ளி தெய்வானையுடன் சண்முகர், மகாலட்சுமியும் தனித்தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர்.

வடக்கு உட்பிரகாரத்தில் தென் திசை நோக்கி சனி பகவானும், பஞ்சலிங்கங்கள், துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.

DSC_0042[1]

உள்வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசுரரும், கிழக்கு நோக்கி மகிசாசுரமர்த்தினியும், சூரியன், சந்திரன், யோக நிலையில் பைரவர், இராகு, கேது சந்நிதியும், தெற்கு முகமாக ஆடல் அரங்குடன் அற்புதமான திருமேனியுடன் நடராசப் பெருமான் அருள்பாலிக்கின்றார்.

இரண்டாம் சுற்றுப் பிரகாரத்தில் யாகசாலையும், மங்கள நாயகி அம்மன் சந்நிதியும் , மேற்கு கங்கை பிரகாரத்தில் கருவருத்தான் சந்நிதியும் அமைந்துள்ளன. அதாவது, 3 கோபுரம், 3 கட்டு சுற்றுச்சுவர்களுடன் 5.73 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது இத்தலம்.

கட்டிடக் கலை : இந்த ஆலயம் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டு திராவிட கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1120 அடி நீளமும், 640 அடி அகலமும், 20 அடி உயரமும் கொண்ட பெரிய மதிற்சுவர், 558 அடி நீளம், 320 அடி அகலம், 30 அடி உயரம் கொண்ட உள் மதிற்சுவர், மூன்று கோபுரம், மூன்று பிரகாரங்களுடன் அமைந்து தூல, சூக்கும காரணம் எனும் மூவகை சரீரங்களை விளக்கும் கோயில்களுள் ஒன்றாகும்.

DSC_0034[1]

மேல் கோபுரத்தில் எண்கோண விமான அமைப்பும், ஐந்து தளங்களும் கொண்டாதாக உள்ளது. அர்த்த மண்டபம் 38 க்கு 29 என்ற அளவில் 10 தூண்களுடன் அமைந்துள்ளது. முதல் திருச்சுற்றில் 63 நாயன்மார்களும், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனீசுவரர், அட்டலிங்கங்கட்கு துணை கோட்டங்களும், இரண்டாம் திருச்சுற்றில் 109 அடி நீளம், 27 அடி அகல திறந்த வெளி மண்டபமும், மூன்றாம் திருச் சுற்றில் 440 அடி நீளம், 168 அடி நீளம் கொண்ட குப்தகங்கை எனும் திருக்குளமும், எமதர்மருக்கு ஏகதள விமானத்துடன் தனி சந்நிதியும் அமைந்துள்ளது. ஐந்து நிலைகளுடன், 110 அடி உயரம் உள்ள இராச கோபுரம் ஐம்பொறி தத்துவத்தை உணர்த்தக்கூடியது. பிற்கால சோழர் கட்டிடக் கலைக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தட்சிணாமூர்த்தி திருமேனி கி.பி. 10ம் நூற்றாண்டு , பால சுப்பிரமணியர் 15, 16ம் நூற்றாண்டு மற்றும் துர்க்கை 13ம் நூற்றாண்டான, குலோத்துங்கன் கால சிற்பக்கலையைச் சார்ந்தது. ஆடல் வல்லான் நடராசப் பெருமானார் 108 சுவாலைகளுடன் 51 புள்ளிகளில் திருவாட்சியுடன் பஞ்ச உலோகத் திருமேனியாகக் காட்சியளிக்கின்றார்.

சுயம்புவாகத் தோன்றியுள்ள இச்சிவலிங்கம், பிரளய காலத்தில் தேயு வடிவாகவும், கிருத யுகத்தில் இரத்தினமயமாகவும், திரேதாயுகத்தில் பொன்மயமாகவும், துவாபரயுகத்தில் வெள்ளிமயமாகவும், கலியுகத்தில் கல்மயமாகவும் காட்சியளிப்பதாக சாம்போபுராணம் திருவாஞ்சிய லிங்க மகிமை வருணனை 14ம் அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றது.

amman

மருவார்குழலி என்று அழைக்கப்படும் அம்பிகையை, “மருவார்குழலே திருவாஞ்சை வாழ்வே வருக வருகவே” என பிள்ளைத்தமிழ் பாடுகிறது. அன்னை தானே மனம் விரும்பி இத்திருத்தலத்தில் விசுவேசுவரருடன் வாழ வந்ததால் வாழ வந்த நாயகி எனவும் கல்யாணி எனவும் போற்றப்படுகிறார். அன்னையே மாலை நேரத்தில் வெண்பட்டு உடுத்தி கலைவாணியாகக் காட்சியளிப்பதால் இவரை வணங்கினால் கல்வியும், செல்வமும், புகழும் மேம்படும் என்பது திண்ணம் என்கிறது சாம்போபுராணம்.

கிருதாயுகத்தில் திருமாலிடம் கோபம் கொண்டு இலக்குமி தேவி மறைந்துவிட, தேவியார் இன்றி வாடிய திருமால் கண்ணபிரான் பல காலம் திருவாஞ்சியத்தில் பூசை செய்ய, அனைத்து தேவர்களும் சிவபெருமானை துதிக்க சிவபெருமானார் இலக்குமி தேவியின் கோபத்தை தீர்த்து, திருமாலுடன் சேர்த்து வைக்கிறார். இதனால் இத்திருத்தலம் திருவிழைந்ததென்று பொருள்படும் திருவாஞ்சியம் என்றாயிற்று. கண்ணனும், இலக்குமியும் நீராடிய திருக்குளம் கிருதயுகத்தில் மிகத்தூய புண்ணிய புசுகரணியென வழங்கலாயிற்று. அகலிகை, இந்திரன் சாபம் நீங்கிய வரலாறு போன்ற பல புராணக்கதைகள் வழங்கப்படுகின்றன.

DSC_0039[1]

ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களும் தனித்தனி மூர்த்தியாக, இணைந்து வீற்றிருந்து அருள்பாலிப்பதால், இரு கிரகத்திற்குரிய பரிகாரங்களையும் இங்கு செய்யலாம். இந்த அமைப்பு சண்ட ராகு என்றழைக்கப்படுகிறது.

Yama

திருவாஞ்சியத் திருத்தலத்தில் பைரவர் தனது கோலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் யோக பைரவராக மேற்கு பார்த்து அமர்ந்த நிலையில் யோக பைரவராக காட்சியளிக்கின்றார். சனீசுவர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர்.

தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இத்திருத்தலம், 400 ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலமும், பல கட்டளைகளும் கொண்டது. இங்கு தினசரி ஆறுகால பூசையும், செவ்வாய் கிழமைகளில் இராகு காலத்தில் துர்கா பூசை, ஆடிப் பூரம் 10 நாட்கள் உற்சவம், ஐப்பசி அன்னாபிசேகம், சூரசம்காரம், மாசி மகம் என அனைத்து உற்சவங்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆலயம் காலை 5.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

சமயக்குரவர்களில் நால்வர் என வழங்கும் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடப்பெற்ற வெகு சிலவேயான தலங்களில் சிறந்து விளங்குவது திருவாஞ்சியம்.

DSC_0036[1]

திருவாஞ்சியம் – 2-ம் திருமுறை

வன்னி கொன்றை மதமத்த மெருக்கொடு கூவிளம்
பொன்னி யன்றசடை யிற்பெ லி வித்த புராணனார்

தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட வுகந்ததே;
(1)
தென்றறுன் றும்பொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத்
தென்று நின்றவிறையானை யுணர்ந்தபடி யேத்தவால்
நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்
ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே.

திரு ஞான சம்பந்தர்

படையும் பூதமும் பாம்பும் புல்வாய்அதள்-
உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம்,
புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம்
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே

பறப்பையும் பசுவும் படுத்துப் பல-
திறக்கவும்(ம்) உடையோர் திகழும் பதி,
கறைப் பிறைச் சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்பு உடை, திரு வாஞ்சியம் சேர்மினே!

புற்றில் ஆடு அரவோடு புனல் மதி
தெற்று செஞ்சடைத் தேவர்பிரான் பதி,
சுற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க்குப் பாவம் இல்லையே.

அங்கம்ஆறும் அருமறைநான்குஉடன்
தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர்,
செங்கண் மால இடம் ஆர், திரு வாஞ்சியம்
தங்குவார் நம் அமரர்க்கு அமரரே.

நீறு பூசி நிமிர்சடைமேல் பிறை
ஆறு சூடும் அடிகள் உறை பதி,
மாறுதான் ஒருங்கும் வயல், வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க்குச் செல்வம் ஆகுமே.

அற்றுப் பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு
உற்ற நல்-துணை ஆவான் உறை பதி,
தெற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம்
கற்றுச் சேர்பசவர்க்குக் கருத்து ஆவதே.

அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்தும் சேவடியான் திகழும் நகர்,
ஒருத்தி பாகம் உகந்தவன், வாஞ்சியம்
அருத்தியால் அடைவார்க்கு இல்லை, அல்லலே.
திருநாவுக்கரசர்

7.76 திருவாஞ்சியம்
பியந்தைக்காந்தாரம் – சுந்தரமூர்த்தி நாயனார்

1 பொருவனார்; புரிநூலர்; புணர் முலை உமையவளோடு
மருவனார்; மருவார் பால் வருவதும் இல்லை, நம் அடிகள்;
திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
ஒருவனார்; அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே.

2 தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென, இடி குரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓட, செங்கயல் பங்கயத்து ஒதுங்க,
கறுவு இலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள்
மறு இலாத வெண்நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே.

3 தூர்த்தர் மூ எயில் எய்து, சுடு நுனைப் பகழி அது ஒன்றால்,
பார்த்தனார் திரள் தோள் மேல் பல்-நுனைப் பகழிகள் பாய்ச்சி,
தீர்த்தம் ஆம் மலர்ப் பொய்கைத் திகழ் திரு வாஞ்சியத்து அடிகள்
சாத்து மா மணிக் கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே.

4 சள்ளை வெள்ளை அம் குருகுதான் அது ஆம் எனக் கருதி,
வள்ளை வெண் மலர் அஞ்சி, மறுகி, ஓர் வாளையின் வாயில்
துள்ளு தெள்ளும் நீர்ப் பொய்கைத் துறை மல்கு வாஞ்சியத்து அடிகள்
வெள்ளை நுண்பொடிப் பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர், தாமே.

5 மை கொள் கண்டர், எண்தோளர், மலை மகள் உடன் உறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர்,
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள்,
பைதல் வெண் பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே?
உரை

6 கரந்தை கூவிள மாலை கடி மலர்க் கொன்றையும் சூடி,
பரந்த பாரிடம் சூழ, வருவர், எம் பரமர், தம் பரிசால்;
திருந்து மாடங்கள் நீடு திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
மருந்தனார், அடியாரை வல்வினை நலிய ஒட்டாரே.

7 அருவி பாய்தரு கழனி, அலர் தரு குவளை அம் கண்ணார்,
குருவி ஆய் கிளி சேர்ப்ப, குருகு இனம் இரிதரு கிடங்கின்
பரு வரால் குதி கொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும்
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே.

8 களங்கள் ஆர் தரு கழனி அளி தரக் களி தரு வண்டு
உளங்கள் ஆர் கலிப் பாடல் உம்பரில் ஒலித்திடும் காட்சி,
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில், வாஞ்சியத்து அடிகள்
விளங்கு தாமரைப் பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே.

9 வாழை இன் கனி தானும், மது விம்மி, வருக்கை இன் சுளையும்,
கூழை வானரம் தம்மில், “கூறு இது சிறிது” எனக் குழறி,
தாழை வாழை அம் தண்டால் செருச் செய்து தருக்கு வாஞ்சியத்துள்,
ஏழை பாகனை அல்லால் இறை எனக் கருதுதல் இலமே.
உரை

10 செந்நெல் அங்கு அலங்(கு) கழனித் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறைகழல் பரவும்
பொன் அலங்கல் நல் மாடப் பொழில் அணி நாவல் ஆரூரன்
பன் அலங்கல் நல் மாலை பாடுமின், பத்தர் உளீரே!

திருவாஞ்சியம்

இத்தலத்தில் மயிலின் முகம் பெருமானின் இடப்பாகம் உள்ளதால்
அசுரமயில் எனப்படுகிறது

அருணகிரிநாதர்

தனதாந்த தத்த தனதன
தனதாந்த தத்த தனதன
தனதாந்த தத்த தனதன தனதான

இபமாந்தர் சக்ர பதிசெறி
படையாண்டு சக்ர வரிசைக
ளிடவாழ்ந்து திக்கு விசயம ணரசாகி
இறுமாந்து வட்ட வணைமிசை
விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
யெழிலார்ந்த பட்டி வகைபரி மளலேபந்
தபனாங்க ரத்த வணிகல
னிவைசேர்ந்த விச்சு வடிவது
தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு வியபோது
தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு
பிடிசாம்பல் பட்ட தறிகிலர்
தனவாஞ்சை மிக்கு னடிதொழ நினையாரே
உபசாந்த சித்த குருகுல
பவபாண்ட வர்க்கு வரதன்மை
யுருவோன்ப்ர சித்த நெடியவன் ரிஷிகேசன்
உலகீன்ற பச்சை யுமையணன்
வடவேங்க டத்தி லுறைபவ
னுயர்சார்ங்க சக்ர கரதலன் மருகோனே
த்ரிபுராந்த கற்கு வரசுத
ரதிகாந்தன் மைத்து னமுருக
திறல்பூண்ட சுப்ர மணியஷண் முகவேலா
திரைபாய்ந்த பத்ம தடவய
லியில்வேந்த முத்தி யருள்தரு
திருவாஞ்சி யத்தி லமரர்கள் பெருமாளே.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருவாஞ்சியம்

  1. தரமான படைப்பு..
    வாழ்த்துக்கள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *