நாகேஸ்வரி அண்ணாமலை

கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புகளைப் பற்றிய வாதங்களும் பிரதிவாதங்களும் முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணி அம்மா அரியணை ஏறிவிட்டார்.  இனி தமிழ்நாட்டிற்கு நல்ல காலம் பிறந்துவிடும்!  இப்படி அம்மா திரும்ப வந்து, தான் அவர் விரும்பியபடி நடக்கவில்லையென்று தன் மீது குற்றம் சாட்டப்பட்டால் தன் கதி அதோகதிதான் என்று நன்றாகவே உணர்ந்திருந்த பன்னீர்செல்வம் (இனிமேல் இவர் தன்னை முன்னாள் தமிழக முதல்வர் என்று சொல்லிக்கொள்ளக் கூடப் பயப்படுவார் என்று நினைக்கிறேன்) இப்போது பெருத்த நிம்மதி அடைவார்.  இனி அம்மாவின் ஆணையைத் தலைமேல் தாங்கி அவர் சொல்வது போல் நடக்கலாம்.  தானாக எதையும் செய்து அதனால் பின்னால் அம்மாவின் கோபத்தில் மாட்டிக்கொள்வோமே என்று பயப்படத் தேவையில்லை.  அம்மா எப்படியும் திரும்பவந்துவிடுவார் என்று எதிர்பார்த்துச் செயல்பட்ட மற்ற மந்திரிகளும் அ.தி.மு.க. உறுப்பினர்களும் அவ்வாறே நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

அரசு அதிகாரிகள் தங்களுக்குரிய லஞ்சத்தை நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து சதவிகிதமாகக் கூட்டிக் கேட்ட ‘அநியாய’த்தைப் பற்றி அரசு கட்டடங்களைக் கட்ட டெண்டெர் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் புகார் கொடுத்தார்கள்.  அப்போது அவர்கள் அம்மா இவ்வளவு சீக்கிரம் அரியணை ஏறுவார் என்று எதிர்பார்க்கவில்லை.  ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.  இனி அவர்கள் அரசு அதிகாரிகள் எத்தனை சதவிகிதம் லஞ்சம் கேட்டாலும் தயங்காமல் கொடுப்பார்கள்.  அது தவிர்க்க முடியாதது என்பதையும் உணர்ந்திருப்பார்கள்.  அம்மாவின் பொன்னாட்சி அல்லவா மீண்டும் மலர்ந்திருக்கிறது!

அம்மாவின் பொன்னான ஆட்சியில் அவரைக் குறைகூறுபவர்களுக்குக் காவல்துறை என்ன தண்டனை வேண்டுமானாலும் வழங்கலாம்.  அவர்களை யாரும் தட்டிக் கேட்கப் போவதில்லை.  வேண்டாத யார் மேலும் எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடலாம்.  நடப்பது அம்மாவின் ஆட்சி.  அம்மாவைத் தட்டிக் கேட்க யாருக்கும் தைரியம் வராது.

அம்மாவும் அரசு ஊழியர்களும் யாரிடம் வேண்டுமானாலும் தைரியமாக லஞ்சம் கேட்கலாம்.  மதிப்புமிக்க நீதிபதியே லஞ்சம் வாங்குவது தவறில்லை என்று தீர்ப்பு வழங்கிவிட்டார்.  இனி அம்மாவின் அணுக்கத் தொண்டர்கள் யாரும் சட்டத்திற்குப் பயப்படத் தேவையில்லை.  அம்மாவை யாரும் எதிர்த்தால் அதைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக நிலைநாட்ட காவல்துறை அதிகாரிகள் எந்த உத்தியையும் கையாளலாம்.

மாநிலங்களில் அராஜகம் நிலவினால் அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு படையை அனுப்பும்.  ஆனால் அம்மா மாநில முதல்வரின் அதிகாரத்தைக் காப்பார்.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அங்கு சட்டம் ஒழுங்கு குலைந்தாலும் அம்மாவின் ஆட்சியில் எந்தத் தவறும் நடக்காது என்று மக்களுக்கு உறுதி அளிப்பதற்கு இருக்கவே இருக்கிறது மத்திய அரசு.  ஊழலை ஒழிப்பதாகச் சூளுரைத்துப் பதவிக்கு வந்து இப்போது ஊழல் மிகுந்த அரசை எப்படியும் ஆதரித்தே தீருவது என்று முடிவுகட்டிவிட்ட பி.ஜே.பி. அரசு மத்தியிலும் ஊழலில் ஊறிப்போன அ.தி.மு.க. அரசு தமிழ்நாட்டிலும் கோலோச்சும்வரை தமிழ்நாட்டில் ஊழல் புரிவோர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

அம்மா மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு விட்டதே என்று பலர் அப்போது தற்கொலை செய்துகொண்டார்கள்.  இனி தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணிக்கை குறைந்துவிடும்!   குற்றங்களிலிருந்து அம்மா புடம் போட்ட தங்கமாக வெளிவந்துவிட்டார்.  இனி தமிழ்நாட்டில் பொன்னான, நிலையான ஆட்சி அம்மாவின் தலைமையில் நடக்கும்.  தேனும் பாலும் ஓடும், அமைச்சர்களின், அதிகாரிகளின் வீடுகளில்.  லஞ்சம் கொடுத்துக் காரியங்களைச் சாதித்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் லஞ்சம் பெற்றுக்கொள்ளக் காத்திருப்பவர்களுக்கும் இனி வரப் போகும் நாட்கள் பொன்னானவை.  அவர்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.  அம்மா பக்கம் சாய்வதா வேண்டாமா என்று தயங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு இப்போது தெளிவான பதில் கிடைத்துவிட்டது.  அம்மா திரும்ப வருவாரா? அவரை விட்டு விலகலாமா என்று தயங்கியவர்களிடம் அம்மாவுக்கு ஆதரவாக இருந்து அவரோடு சேர்ந்து உங்கள் பைகளையும் நிரப்பிக்கொள்ளுங்கள் என்று கூறாமல் கூறிவிட்டார்கள் உயர்நீதி மன்ற நீதிபதியும் மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசும்.

தமிழ்நாட்டில் ஊழல் புரிந்து பணம் பண்ணப்போகும் சமூகத்தின் அதிகாரவர்க்கத்தினருக்கு மட்டுமல்ல ஏழை எளியவர்களுக்கும் இனி பொன்னான காலம்தான்.  அம்மா உணவகங்கள் இன்னும் சில பொருள்களை குறைந்த விலைக்கு வழங்கலாம், ஏன் இலவசமாகக் கூடக் கொடுக்கலாம்.  அடுத்து என்ன இலவசமாகக் கொடுக்கலாம் என்பதிலேயே அம்மாவின் இருபத்தி நான்கு மணி நேரச் சிந்தனையும் இருக்கும்.  அம்மா இவர்களின் இதய தெய்வமல்லவா?  இவர்களின் இதயங்களின் தேவைகளை அறிந்து செயல்படுவார்.

அம்மா போட்டியிடப் போகும் தொகுதியில் மற்ற கட்சிகளும் போட்டியிட வேண்டும் என்று அத்தொகுதி மக்கள் கேட்கிறார்களாம்.  அம்மாவின் கட்சி மட்டும் போட்டியிட்டால் அப்புறம் அவர்களுக்கு அம்மா கட்சி உட்பட எல்லாக் கட்சிகளிடமிருந்தும் எப்படிப் பணம் கிடைக்கும்?  தங்கள் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடந்தால் ஆயிரக் கணக்கில் பணம் கிடைக்குமே.  அவர்களும் அம்மாவைத் தேர்ந்தெடுக்கத் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.  ஜனநாயகமாவது மண்ணாங்கட்டியாவது!  யாருக்கு வேண்டும் ஜனநாயகம்?

அம்மா ஆட்சிக்கு வந்துவிட்டார்.  இனித் தமிழ்நாட்டிற்குப் பொற்காலம்தான்!

வளர்க ஊழல்!  வாழ்க தமிழகம்!!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அம்மா அரியணை ஏறிவிட்டார்

  1. //அம்மா மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு விட்டதே என்று பலர் அப்போது தற்கொலை செய்துகொண்டார்கள்.//

    இவர்களை முட்டாள்கள் என்று சொல்லக்கூட நா எழவில்லை.  அந்த அறியாத அப்பாவிகளுக்காகக் கண்ணீர் சிந்துகிறேன்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *