இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(151)

0

–சக்தி சக்திதாசன்.

 

அன்பினியவர்களே!

இனிய வணக்கங்கள்…

இவ்வார மடலுடன் உங்கள் முன்னே மீண்டும் ஒரு கருத்துப் பரிமாறல்.

மனிதப்பிறவி என்பது அளப்பரியது. இறைவன் மனிதனுக்கு அளிக்கும் வரப்பிரசாதமே மனிதப்பிறவியாகும்.

தாய், தந்தை, உடன்பிறந்தோர், மனைவி, மக்கள் என மனிதனுக்கு இறைவன் அளிக்கும் உறவுகள் ஆயிரம்.

எங்கே, எப்படி, யாருக்கு குழந்தையாகப் பிறக்கப்போகிறோம் என்பது எமது கைகளில் தங்கியிருப்பதில்லை.

யாரோ போட்ட விதையில் எங்கோ செடியாக முளைக்கும் எமக்கு விதைத்தவர் தந்தையென்றும் அதற்கு விளைநிலமானவரே அன்னை என்பதும் அறிவு தெரிந்தவுடன் புரிகிறது.

யார் தமக்கு குழந்தையாகப் பிறக்கப் போகிறார்கள் என்பதை அறியாமலே அக்குழந்தை மீது அளவு கடந்த பாசம் கொள்கிறார்கள் பெற்றோர்கள்.

பிறக்கும் அக்குழந்தையும் வளர்ந்து ஒரு விஞ்ஞானியாகவோ அன்றி ஒரு நாட்டின் தலைவராகவோ அன்றி ஒரு நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவராகவோ அன்றி ஒரு தீரா வியாதிக்குட்பட்டவராகவோ உருவெடுக்கலாம்.

இத்தகைய அளப்பரிய, அதிசயமான மனிதப்பிறவியாக உருவெடுக்கும் எமக்கு, எமது பிறப்பில் எந்த விதமான கட்டுப்பாட்டையும் கொண்டிராத எமக்கு எமது உயிரைப் பறிக்கும் அதிகாரம் இருக்கிறதா?

மிகவும் வியத்தக்க வினா இல்லையா?

என்ன சக்தியின் இக்கேள்வி எந்த வழிக்கு எம்மை இழுத்துச் செல்கிறது எனும் கேள்வி உங்களுக்குள் எழுவது இயற்கை.

நாம் அனைவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் எனும் எண்ணத்துடன் தான் எமது வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.

நாம் வாழும் போதும் சரி, அன்றி மறையும் போதும் சரி எமது உறவுகளுக்குப் பாரமாக அமைந்து விடக்கூடாது என்பதுவே பெரும்பான்மையானவர் மனங்களில் குடி கொண்டிருக்கும் நினைவாகும்.

ஆனால் நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்து விடுகிறதே!

வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் எமது வாழ்வினில் நாம் விரும்பாத முடிவுகளுக்கு எம்மைத் தள்ளி விடுவதை நாம் பலமுறை கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.

எந்த வழியைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று எண்ணுகிறோமோ அந்த வழிக்கு வாழ்வின் எதிர்பாராத நிகழ்வுகள் எம்மைத் தள்ளி விடுகிறது.

சில நாட்களுக்கு முன்னால் நடந்த ஒரு நிகழ்வு இப்போது இங்கிலாந்தில் மிகவும் பலமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

54 வயது நிரம்பிய ஒரு வெற்றிகரமான வியாபாரத்தின் சொந்தக்காரர் ஜெஃப்ரி ஸ்பெக்டர் (Jeffrey Spector) என்பவர். அவர் சுவிட்சர்லாந்தில் தனது வாழ்வின் முடிவைத் தேடிக் கொண்ட நிகழ்வே இவ்விவாதம் மீண்டும் தலைதூக்கக் காரணமாகிறது.

151                        151.2151.3

அவர் அத்தகைய ஒரு முடிவுக்கு வருவதற்கு என்னதான் காரணம் ?

அவருக்கு முதுகெலும்பில் ஒரு புற்றுநோய்க்குக் காரணமான “ட்யூமர்” ஒன்று வளர்ந்திருந்தது.

மருத்துவர்களின் கணிப்புகளின் படி இது மிகவும் பாரதூரமான நோய். மிகவும் மோசமான விளைவுகளைக் கொடுக்கக்கூடியது. அறுவை சிகிச்சையின் மூலமே இவரது வாழ்வை நீடிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தன.

அறுவை சிகிச்சையின் பின்னால் அவர் நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் எச்சரிக்கப்பட்டார்.

தான் எடுக்கும் எந்த முடிவுகளும் தனது குடும்பத்தினரை நீண்டகால உபாதைகளுக்கு உள்ளாக்கக் கூடாது என்பதில் இவர் மிகவும் உறுதியாக இருந்தார்.

எந்த வித அறுவை சிகிச்சைக்குள்ளாகாமல் இன்னும் எத்தனை காலத்திற்கு அவர் சாதாரணமாக நடமாட முடியும் என்பதை எந்த வைத்தியராலும் அறுதியாகக் கூறமுடியாத நிலைமை.

இங்கிலாந்துச் சட்டத்திட்டங்களின் படி எந்த ஒரு நிலையிலும் யாரும் தனது உயிரைத்தானே எடுத்துக் கொள்வது அனுமதிக்கப்படுவதில்லை.

மேலும் யாராவது அவர்களது தற்கொலைக்கு உதவினார்களேயானால் அவ்வுதவி செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

ஆனால் சுவிட்சர்லாந்தில் இத்தகைய தற்கொலைகள் அதாவது விரைவில் மரணமடையக்கூடிய தீராநோய் கொண்டிருப்பவர்கள் தனது உயிரைத் தாமே மாய்த்துக் கொள்வதற்கு அந்நாட்டுச் சட்டத்தில் இடமுண்டு.

இம்மனிதர் தனது குடும்பத்தினருக்கு தனது நிலையை விளக்கி விட்டு சுவிட்சர்லாந்துக்கு பயணித்து அங்கே இத்தகைய தற்கொலைக்கு உதவும் வைத்தியசாலையில் தானே தன்னை அனுமதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

இவரது மரணத்தைத் தொடர்ந்து இவரது நண்பர்களும், குடும்பத்தினரும் அவரது முடிவைத் தாம் மதிப்பதாகக் கூறியுள்ளார்கள்.

ஆனால் இங்கிலாந்தில் சட்டம் மாற்றப்பட்டு இத்தகைய முடிவு சட்டத்திற்கு புறம்பானதல்ல என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தால் தமது அன்புக்குரிய அம்மனிதரின் கடைசி நேரத்தில் தாம் உடனிருந்திருந்திருக்கலாம் என்பதுவே தமக்கு வேதனையளிக்கிறது என்கிறார்கள்.

சுவிட்சர்லாந்துக்கு செல்வதற்கு முன்னால் பேட்டியளித்த அம்மனிதர் இந்நாட்டில் தனது முடிவு சட்டப்பூர்வமானதாக இருந்திருந்தால் தான் இன்னமும் நடமாடும் நிலையில் இருக்கும் போது தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டியிருந்திருக்காது என்று கூறியிருந்தார்.

ஏன் என்கிறீர்களா ?

அவர் தனது உயிரை இப்போது எடுத்துக் கொண்டிருக்காவிடில், ஒருவேளை நோய் தீவிரமடைந்து நடமாடமுடியாத நிலை வந்திருந்தால், அதன் பின்னால் அவர் சுவிட்சர்சலாந்து சென்று தனது உயிரைத் தானாகவே எடுத்திருந்திருக்க முடியாது.

அந்நிலையில் தன்னை சுவிட்சர்லாந்துக்கு தனது குடும்பத்தினர் கொண்டு சென்றிருந்தால் அவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்பட்டு விடுவார்கள்.

இதுவே அவரது இந்த அவசர முடிவுக்குக் காரணம் என்றிருந்தார்.

இங்கிலாந்து சட்டம் அவரது எதிர்பார்ப்புக்கு அமைய மாற்றப்பட்டிருந்தால் அம்மனிதர் இன்னும் சிலகாலம் தன் அன்புக்குரியவர்களுடன் வாழ்ந்திருப்பார் என்று வாதிடுகிறார்கள் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று கோருபவர்கள்.

இல்லை, யாருக்கும் தமது உயிரை எடுக்கும் அதிகாரம் இல்லை. சட்டம் மாற்றப்பட்டால் அவசியமின்றி பலர் தமது வாழ்வை அனாவசியமாக முடித்துக் கொள்ளும் அபாயமிருக்கிறது என்கிறார்கள் அதை எதிர்ப்பவர்கள்.

“லார்ட் யங்” (Lord Young ) எனும் அரசியல்வாதி மீண்டும் இச்சட்ட மாற்றத்தை இங்கிலாந்தின் பாரளுமன்றத்தின் முன்னால் விவாதத்திற்குக் கொண்டு வரும் முயற்சியிலீடுபட்டிருக்கிறார்.

இம்மனிதப் பிறப்பு . . . ஆண்டவன் நிர்ணயிப்பு …

இம்மனிதனின் முடிவு . . . . ?

பொறுத்திருந்து பார்ப்போம்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *