அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 42

0

42. நியாண்டர்தால் அருங்காட்சியகம் – டூசல்டோர்ஃப், ஜெர்மனி (3)

சுபாஷிணி

நியாண்டர்தால் அருங்காட்சியகம் ஒரு தகவல் சுரங்கமாக திகழ்கிறது. மனித இனத்தின் படிப்படியான வளர்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியான இக்காலகட்டத்தில் பண்டைய பழங்கூறுகளையும் அதன் பொதுத் தன்மைகளையும் வெளிப்படுத்தும் ஒரு காட்சிக்கூடமாகவும் இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது.

கற்கால மனிதர்களின் ஈமச்சடங்கு முறைகளை ஆராயும் போது உலகின் பல மூலைகளில் இவ்வகைச் சடங்குகளில் இருக்கும் ஒற்றுமைக் கூறுகளைக் காண முடிகிறது. பூகோள ரீதியாக மனிதர்கள் நிலப்பரப்பில் பிரிக்கப்பட்டிருந்தாலும் அடிப்படையில் மனித மனம் ஒரே வகையில் சிந்திப்பதை பொதுக்கூறுகளாகக் காணமுடிகிறது. உதாரணமாக, பெருங்கற்காலத்தில் இறந்து போன மனிதர்களின் நினைவாக அமைக்கப்பட்ட கற்திட்டை வடிவங்களைக் கூறலாம். ஐரோப்பிய நிலப்பரப்பில் பிரித்தானியாவில் வரலாற்றாய்வாளர்கள் சுட்டும் stonehenge வடிவங்களை இவ்வகையில் இருக்கும் ஒற்றுமையாகக் குறிப்பிடலாம். இதே போன்ற ஈமக்கிரியை தொல் வடிவங்களைத் தமிழக நிலப்பரப்பிலும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

a

மற்றொரு ஈமக்கிரியை தொல்வடிவம் வட்டக் கல் என்பது. நான் சென்னைக்கு புற நகர்ப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்த ஒரு வரலாற்றுப்பயணத்தில் இவற்றை நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். அதே போல கொடுமணல் அகழ்வாய்வுப் பகுதியிலும் இதே போன்ற வடிவங்களைக் கண்டேன்.இதே போன்ற மெகாலித்திக் காலகட்டத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கபப்ட்ட Mystical Circle எனப்படுபவை பிரித்தானிய தீவுகளில் இருப்பதையும் இங்கே புகைப்படங்களுடன் கூடிய தகவல் வழி இங்கு வருவோர் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.

தாய் தெய்வ வழிபாடு என்பது தொண்மையான ஒரு வழிபாட்டு முறை. பழம் நாகரிகங்கள் அனைத்திலும் ஏதாகினும் ஒரு வகையில் தாய் தெய்வ வழிபாடு என்பது அமைந்திருந்தது என்பதும் அவற்றின் உருவப் படிமங்களும் உலகின் பல நாடுகளில் அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பதும் வரலாற்று உண்மை.

1

இதன் தொடர்பில் ஐரோப்பிய நிலப்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட தொண்மையான தாய்தெய்வ வடிவங்களை இந்த அருங்காட்சியகத்தில் சிறு தொகுப்பில் காணமுடிகின்றது. ஆஸ்திரிய நிலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 25,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாய்தெய்வ வடிவத்தின் ரெப்ளிக்கா ஒன்றினை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம். இதன் அசல் வடிவம் ஆஸ்திரியாவின் வீன் அருங்காட்சியகத்தில் இருக்கின்றது. இதனைப் போலவே உக்ரயேன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட 22,000 ஆண்டு பழமையான ஒரு தாய்தெய்வ வடிவமும் இங்கு உள்ளது.

உலகில் வேறெங்கும் சென்று ஆச்சரியங்களைத் தேடவேண்டியதில்லை. நம் உடலே ஆச்சரியங்கள் பல கொண்ட ஒரு அற்புதப் புதையல் தான். நம் உடலில் இருக்கும் பாகங்களில் ஒவ்வொன்றும் ஒரு செயலைச் செய்தாலும் பிராதன முக்கியத்துவத்தைப் பெறுகின்ற மூளையானது ஆச்சரியத்தும் மேல் ஆச்சரியம் நிறைந்த ஒன்றாக இருக்கின்றது. காலங்காலமாக நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியில் மனித உடலின் வளர்ச்சியில் மனித மூளையில் அளவின் வளர்ச்சி என்பதும் அடங்கும். மூளைவின் அளவு பெரிதாகப் பெரிதாக அதன் திறன்களும் அதிகரிக்கின்றன. சிந்தனையின் ஆழமும் சிந்தனைப் பதிவின் திறமும் மூளையின் அளவு பெரிதாகும் போது அதற்குத் தகுந்தார் போல பெரிதாகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் ஒரு பகுதியில் மனித மண்டை ஓடுகளும் மூளை பற்றிய ஆய்வுகளும் அமைந்துள்ள பகுதியில் இத்தகைய தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

2

மனித இனம் விலங்கினமாக இருந்து பின்னர் வேட்டையாடும் திறனை அமைத்துக் கொண்டு குடும்பம், சமூகம் என வளர்ந்து விவசாயத்தையும் கற்றுக் கொண்டு, அதனை பெருவாரியாக விரிவாக்கி, நாடு, நகரம், அரசியல், ராஜ்ஜியம் என இருந்து பின்னர் மொழி, கலை, வழிபாடு, சடங்குகள், மாந்திரீகம், தத்துவம் என தன் ஆளுமையை விரிவாக்கிக் கொண்டு, வர்த்தகம், தொழில் நுட்பம் என்றும் உயர்வடைத்து விட்டது. இந்தத் தொடர் வளர்ச்சி பல போராட்டங்களைக் கடந்து வந்த ஒரு வரலாற்று நிகழ்வு. இது பல தேடுதல்களும் மாற்றங்களும் இருந்தமையால் மட்டுமே சாதிக்க முடிந்த ஒரு வளர்ச்சி.

மாற்றங்களை விரும்பாத, தேடுதலில் ஈடுபடாத ஒரு இனம் வளர்ச்சி பெற முடியாது. மனித இனத்தின் தேடுதல் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

Was ist der Mensch? (மனிதன் என்பர் யார்?)
Was soll ich tun? (நான் என்ன செய்ய வேண்டும்?)
Was kann ich wissen? (நான் என்ன தெரிந்து கொள்ள முடியும்?)
Was darf ich hoffen? (நான் எதை எதிர்ப்பார்த்திருக்க முடியும்?)
-Immanuel Kant

3
நமது தேடலையும் தொடர்வோம். அடுத்த கட்டுரையில் மற்றுமொரு நாட்டில் வேறொரு அருங்காட்சியகத்தில்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *