வையவன்
“எங்கே கூட்டிக்கிட்டுப் போறே?”
“பேசாம வாயேன்”
அவர்கள் ராயப்பேட்டையில் பஸ் ஏறி எலியட்ஸ் ரோட் ஸ்டாப்பிங்கில் இறங்கி ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தனர்.
குவார்ட்டர்ஸுக்குப் போய்ப் பார்த்தான் சிவா. பிரீதா இல்லை. கதவு பூட்டியிருந்தது. பக்கத்தில் கேட்டான்.
“டே ஷிப்ட்!”
“எப்ப முடியும்?”
“மாலை ஆறு மணி.”
“அஞ்சு மணிக்குள்ளாரே கொழந்தைங்க எல்லாம் ஸ்கூல்லேருந்து திரும்பி வந்துடும்” என்று கவலையோடு சொன்னாள் திஷ்யா.
இவள் தான் செத்துப் போவதாகச் சொன்னவள் என்று நினைத்தான் சிவா. அசந்தர்ப்பமாக அவனுக்குச் சிரிப்பு வந்தது. அதை திஷ்யா பார்த்து விட்டாள்.
நர்ஸிங் ஹோமுக்குப் போகும் பாதையில் அவனை அவள் தொடர்ந்தவாறே கேட்டாள்.
“என்ன சிரிப்பு?”
“வீட்டைப் பூட்டினியா?” என்று பேச்சை மாற்றினான்.
“இந்த ‘டெக்னிக்’ வேண்டாம். நீ எதுக்கு சிரிச்சே?”
அவன் பதிலளிக்கவில்லை.
“இவதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாகப்போறேன்னு சொன்னவண்ணு நெனச்சியாக்கும்?”
“அபாண்டம்”
“செத்துட்டா கவலையில்லே. உயிரோட உள்ள வரைக்கும் உண்டு. போகட்டும். அந்த நர்ஸ்கிட்டே நீ என்ன கேக்கப்போறே? ஐடியாவா?”
“எக்ஸாக்ட்லி”
“ஒனக்குன்னு ஒரு ஐடியாவும் தோணலியா?”
“நீ மேஜராயிட்டியா?”
“ஏன், திருநீர்மலையிலே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைக்கறியா?”
“அதுக்கில்லே; ஒன்னை கடத்திக்கிட்டுப் போனதா ஒங்கப்பா போலீஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்திடப் போறாரு.”
“கவலைப்படாதே முந்தா நாளு எனக்கு பதினெட்டு முடிஞ்சு போச்சு. அந்த அளவுக்கு அவர் போகமாட்டார். ஒன் ஐடியா என்ன.. அதைச் சொல்லு.”
“அதான் யோசிக்கிறேன்.”
“சிவா, நான் எனக்கு ஒரு பிரச்னையா இருந்தது போயி ஒனக்கு ஒரு பிரச்னையாயிட்டனா?”
சிவாவுக்கு அந்த நிராதரவில் மனசு விண்டு போயிற்று.
“இந்த மாதிரி பேசாதே!” என்று வருத்தமாய்ச் சொன்னான். திஷ்யா மௌனமாய் விட்டாள்.
ரிசப்ஷனில் அவர்களை நிற்க வைத்தாள் ரிசப்ஷனிஸ்ட். ஃபோனை எடுத்து நர்ஸிங்ஹோமின் உள்ளே எங்கோ பேசினாள்.
“யார் வேணும்?”
“நர்ஸ் பிரீதா.”
“ப்ளீஸ் வெய்ட் தேர்” எதிரிலிருந்த பெஞ்சை சுட்டிக்காட்டினாள்.
லாமினெட் வழவழப்பு மின்னிய அகலமான பெஞ்சில், மின் விசிறியும் சுற்றியிருந்த மர நிழலும் தந்த குளிர்ச்சியில் அவர்கள் உட்கார்ந்தபோது மனசு சற்று ஓய்ந்தது.
பத்து நிமிஷத்தில் பிரீதா வந்தாள். நர்ஸ் உடையில் தலைக்கு ஹுட் வைத்து மலர்ந்து சிரித்துவரும் அவளைக் கண்டதும் ஒரு தேவதையைக் கண்ட ஆஸ்வாசமாக இருந்தது.
“ப்ராப்ளமாணோ?”
காலையில் தானே சொல்லியனுப்பினேன் என்ற தொனியில் சிரித்துக் கொண்டே கேட்டாள்.
“தனியாப் பேசணும்” என்றான் சிவா.
பிரீதா ரிஸ்ட்வாட்சைப் பார்த்தாள்.
பெஞ்சில் உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் திஷ்யா நெளிந்தாள்.
பிரீதா ரிஸப்ஷனிஸ்டை நெருங்கி “மேரி வந்நோ?” என்று கேட்டாள்.
“ஓ… ஷி கேம் ஜஸ்ட் ஹாஃப் அன் அவர் அகோ.”
“கனெக்ஷன் தரூ.”
போனில் அந்த மேரி உடனே கிடைத்தாள்.
“ஞானாணு ப்ரீத. எனிக்கொரு அர்ஜண்ட்ஜோலி. கேட்டோ. ரிலீவ் மீ ஃபர் ஹாஃப் அன் அவர், ஐயே நாட்டி! கஸ்ட் வன்னதா! ஷ்யூர்… இன்ஃபார்ம் தி சீஃப் ஐ’ல் மேனேஜ்.”
பிரீதா போனை வைத்தாள்.
“போகாம்.”
அசோகமர நிழல் படர்ந்த சிமெண்ட் பெஞ்சு ஒன்று வெளியே காலியாக இருந்தது. மூவரும் அதில் போய் உட்கார்ந்தனர்.
“ஒய் திஷ்யா ஈஸ் டல்?” என்று பிரீதா ஆரம்பித்தாள். திஷ்யா சிரிக்க முயன்றாள். சிவா மளமளவென்று விஷயத்தைச் சொன்னான்.
“இவளுடைய அப்பா இவ சினிமாவிலே நடிக்கணும்னு கம்பெல் பண்றார். இவளுக்கு இஷ்டமில்லே. இன்னிக்கு ஸ்கிரீன் டெஸ்ட். வீட்டுக்கு வண்டி வர்றதா இருந்தது. இவ ஒர்க்ஷாப்புக்கு என்னை வரச்சொல்லி ஆள் அனுப்பினா. போனேன். அங்கிருந்து நேரா இங்கே வர்றோம்.”
பிரீதா ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கேட்டாள்.
“சினிமாவிலே ஆக்ட் பண்ண இஷ்டமில்லே! வாட் எ குட் கர்ல்!” பிரீதா சிலாகித்தாள்.
“இதைச் சொல்ல ஈ காலத்திலே ஒரு மனோ திடம் வேணும்” என்று மலையாளத் தமிழில் சொன்னாள்.
“அப்பா ரொம்ப கம்பெல் பண்றார். ஹி ஈஸ் மேட் ஆஃப்டர் மனி.”
பிரீதா பெருமூச்சு விட்டாள்.
“அவர்கிட்டே…” என்று அவள் பேச ஆரம்பிக்கும் முன் சிவா குறுக்கிட்டான்.
“பேசிப் பார்த்துட்டேன். ஷி வில் டைன்னு கூடச் சொன்னேன்.
அவர் அசையறதா தெரியலே!”
திஷ்யா உதட்டைக் கடித்துத் தலை குனிந்தாள்.
“நீ வீட்டை விட்டு வரான் தயாரோ?” என்று தடுமாறும் தமிழில் கேட்டாள். திஷ்யா இந்தக் கேள்வி தனக்கு என்று உணர்ந்து நிமிர்ந்தாள்.
“எப்படி?”
“என்னோட வந்து இரு.”
“தெரியாமயா… திருட்டுத் தனமாவா…”
“நோ. நீ வந்துடு. நான் அவர்கிட்டே போய்ப் பேசிக்கறேன்.”
திஷ்யா தயங்கினாள்.
“நாட் ஃபர் எவர். அவருடைய தவறு அவருக்குப் புரியற வரை.”
“கொழந்தைகளுக்கெல்லாம் யார் சமைப்பாங்க? வீட்டை யார் கவனிச்சுக்குவாங்க? சிவா அவளுக்குப் பிரதிநிதியாகக் கேட்டான்.
“இவ சினிமாவிலே ஆக்ட் பண்ண சம்மதிச்சிருந்தா வீட்டை யார் கவனிச்சுக்குவாங்க?”
திஷ்யா அந்தக் கேள்வியில் இருந்த நியாயத்தை உணர்ந்தாள்.
“இவ இல்லேன்னா அந்த வீடு என்னவாகும்னு அவருக்குத் தெரியணும். லெட்ஸ் டு ஒன் திங். இவங்க ரிலேடிவ்ஸ் யாரும் கிட்டே இல்லியா?”
“வியாசர்பாடியிலே சித்தி இருக்காங்க. அவங்க ரொம்ப கஷ்டப்படறாங்க. பெங்களூர்லே அத்தை இருக்காங்க. அங்கே வீடு சின்னது. எல்லாரும் அங்கே போக முடியாது” என்றாள் திஷ்யா.
“நான் சொல்ல வந்தது அது இல்லே. அவங்க எல்லோரும் என் க்வார்ட்டர்ஸுக்கு வரட்டுமே!”
சிவா திஷ்யாவைப் பார்த்தான்.
“இட்ஸ் டூ மச் ஃபர் யூ” என்று திஷ்யா சொன்னாள். அப்படி வரட்டுமே என்று சொன்ன வார்த்தைக்கே அவள் மனசிலவ் நன்றி நிரம்பிவிட்டது. பிரீதா மீது வைத்திருந்த ஓரிரு தப்பபிப்ராயங்களும் அதில் மூழ்கிப் போயின.
‘பட் திஸ் ஈஸ் மோர் தான் டூ மச் ஃபர் எ கர்ல்M!”
சிவாவைப் பார்த்து சிரித்து கொண்டே பிரீதா தொடர்ந்தாள்.
“இந்த ஆண்களுக்கு விக்கிறதுக்கு பெண்ணைத் தவிர இப்ப வேற எதுவும் கெடைக்கலே.”
“எல்லா ஆண்களுக்குமல்ல” என்று உஷ்ணமாக மறுத்தான் சிவா.
“ஆல் அஃப் யூ அட்மிட் இட்! ஒய் காண்ட் சம் ஒன் ஃபைட் இட்? ஏன் ஒர்த்தர் கூட இதுக்குப் போராடலே.”
“அதான் வந்திருக்கேன்.”
“இன்னிக்கு சாயங்காலமா நான் வீட்டுக்கு வர்றேன். நீயும் நானும் அவர்கிட்டே பேசுவோம். இப்ப இவ நம்ம க்வார்ட்டஸ்ல இருக்கட்டும். அவர் பிடிவாதம் பிடிச்சா கொழந்தைகளை இவ போயி அழைச்சிட்டு வரட்டும்.”
திஷ்யா குறுக்கிட்டாள்.
“இல்லே. நான் வீட்டுக்குப் போறேன். நீங்க ரெண்டு பேரும் சாயங்காலம் வாங்க. பேசிப்பாருங்க. ஒத்துக்கலேன்னா கௌம்பி வர்றேன்” என்று நிறுத்தினாள் சிவாவைப் பார்த்து.
“நல்லது” என்றான் சிவா.
“ஐ அக்சப்ட். நானும் சிவாவும் சாயங்காலம் வர்றோம்.”
சிவா எழுந்தான்.
“நானும் வர்றேன். லெட்ஸ் ஹாவ் எ கூல்டிரிங்க்” என்று அவர்களை வழியனுப்ப வந்தாள் பிரீதா.
பஸ்ஸில் வரும்போது திஷ்யா கேட்டாள்.
“ஏன் நீ இங்கே போகப் போறோம்னு மொதல்லே சொல்லலே?”
“சொல்லியிருந்தா ஒனக்குப் பிடிச்சிருக்காது. நீ அந்த பிரீதாவை அநாவசியமா வெறுத்தே!”
“சீச்சீ… அவ நல்லவள்.”
தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *