மேகி நூடுல்சு அதிர்வலை!

1

பவள சங்கரி

தலையங்கம்

பன்னாட்டு நிறுவனமான நெஸ்லேயின் ‘மேகி நூடுல்சு மசாலா’, உணவுப் பொருளில் காரீயம், மோனோசோடியம் குளுட்டாமேட் ஆகிய வேதிப்பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக உத்தரப் பிரதேச மாநில உணவுக் கலப்படத் தடுப்புப் பிரிவு நடத்திய ஆய்வில் தெரிய வந்ததால் இராணுவத்தினர் மேகி நூடுல்சு உட்கொள்ள தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்சு, ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலா ரிலையன்சு செலக்ட் இன்ஸ்டன் ட் நூடுல்சு, வே வே எக்ஸ்பிரஸ் நூடுல்சு, ஆகிய நூடுல்சுகள் உணவுப்பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தில்லி அரசு 13 இடங்களில் இருந்து மேகி நூடுல்சு மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்தில் சோதனை நடத்தியுள்ளது. இன்று பல மாநிலங்களில் இது தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை ஒத்த மற்ற பொருட்களும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. மற்ற உணவுகளை ஒப்பிடும்போது, இதன் மலிவான விலையினால் இன்று கீழ்த்தட்டு மக்களின் குழந்தைகளையும் எளிதில் கவர்ந்திழுக்கும் இந்த நூடுல்ஸ் கவர்ச்சிகரமாக சந்தைப்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இன்னொரு அதிர்ச்சியான தகவல், நூடுல்சில் உள்ள கெடுதல் விளைவிக்கும் வேதிப் பொருளான மேனோசோடியம் குளுட்டோமேட் என்பதன் சந்தைப் பெயர் அஜினோமோட்டோ என்பதுதான். இன்று பெரும்பாலான வீடுகளில், பாரம்பரிய சமையல் உள்பட, அனைத்து வகையான பதார்த்தங்களிலும் இயல்பாகக் கலந்துவிட்ட இந்த அஜினோமோட்டோ ஏற்கனவே பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று அனைத்து வகையான குளிர்பானங்களும், அனைத்து பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களும் உடனடியாக ஆய்விற்கு உட்படுத்தப்படவேண்டும். இதில் முக்கியமாக பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து அளிக்கும் உணவுப் பொருட்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

உணவுப் பொருட்களைத் தவிர்த்து ரியல் எஸ்டேட் துறையும், நகை முதலீட்டுத் திட்டங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் மிகப்பெரும் நகைக் கடைகளும் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்படவேண்டியதும் அவசியம். உணவுப் பொருட்கள், நகை, ரியல் எஸ்டேட், மற்றும் நுகர்வோர் சம்பந்தப்பட்ட பொருட்களின் விளம்பரத் தூதர்களின் பொறுப்புகள் இன்னும் சரியான முறையில் வரையறுக்கப்படாத சட்டங்கள்தான் இன்று நம் அரசியல் சாசனத்தில் உள்ளன. எதற்கெல்லாமோ அவசரச் சட்டங்கள் பிரகடனம் செய்யும் நாம், மக்களுக்காக இதுபோன்ற வரையறுக்கப்பட்ட அத்தியாவசிய சட்டங்களை உடனே அமல்படுத்த வேண்டியது அவசியம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மேகி நூடுல்சு அதிர்வலை!

  1. தலையங்கக் கருத்து அருமை. முன்வாசலில்  நடவடிக்கை எடுக்கிறோம் என்பதுபோல எடுத்து பின்வாசல் வழியாக வேறு பெயரில் பொருள்கள் பிரபல மானவர்களின் விளம்பரத்தோடு சந்தைக்கு வருவதை கண்டும் காணாமல் இருப்பதும், மீண்டும் ஒரு எதிர்ப்புக் குரல் வந்தால் விழித்துக் கொள்வதுபோல நடிப்பதும் மாறினால்தான் நல்லது. இல்லையேல் பன்னாட்டு வியாபாரிகளின் தரகர்களாகிப்போன பிரபலங்களுக்கும் , அரசியல் வாதிகளுக்கும் கொண்டாட்டம் தான். 
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *