நிர்மலா ராகவன்

தெரியக்கூடாத  இரகசியங்களல்ல

உனையறிந்தால்

மூன்று வயதுவரை ஆடையின்றி வீட்டுக்குள் ஓடியாடிக் கொண்டிருந்த பையனுக்கு மழலையர் பள்ளிக்குப் போனதும் ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது. `பெண்கள் ஏன் தனி டாய்லெட்டுக்குப் போகிறார்கள்?’

டிராயரைச் சரியாகப் போட்டுக்கொள்ளத் தெரியாமல் அவன் வெளியே வர, `ஷேம், ஷேம்!’ என்று அவனையொத்த பிற மாணவர்கள் இணைந்து பாட, குழப்பம் அதிகரித்தது.

விரைவில், அவனும் அவர்களைப்போல நடக்கக் கற்றான். வீட்டில் குட்டித் தம்பிக்கு அம்மா டயாபர் மாற்றும்போது, `ஷேம், ஷேம்!’ என்று சொல்லிச் சிரித்தான்.

தன்னைப்போலவே பிறருக்கும் கண், காது எல்லாம் இருக்கின்றன என்றவரை அவனுக்குப் புரிந்தது. அம்மாவுக்கும் `ஷேம் ஷேம்’ இருக்குமோ?

அன்று அம்மா குளிக்கப் போகையில், `நான் ஒன் ஷேமைப் பாக்கணும்,’ என்றபடி, தானும் உள்ளே நுழையப்போனான்.
`இந்த வயசிலேயே கெட்டுப் போயிட்டியா?’ என்று அம்மா கண்டபடி திட்டியிருந்தால், அந்த நிகழ்ச்சி அவன் பிஞ்சு மனதில் ஆழமாகப் பதிந்து, ஏதாவது பிரச்சனையில் கொண்டுவிட்டிருக்கலாம். அவளோ, அவனை மெல்லத் தள்ளிவிட்டு, கதவைச் சாத்திக்கொண்டாள். பின்பு, அப்போதுதான் குளித்திருந்த ஒரு பெண் குழந்தையின் நிர்வாணமான உடலைக் காட்டி, `இது பொண்ணு. நீ பையன்!’ என்று விளக்க, அவன் வாயை மூடியபடிச் சிரித்தான். அந்த வயதில் புதிய அனுபவங்கள் எல்லாமே வேடிக்கை.

பெரியவர்களுக்கு மட்டும் மார்பகம் ஏன் பெரிதாக இருக்கிறது என்ற ஆர்வம் மூன்று, நான்கு பெண் குழந்தைகளுக்கு உண்டாகும். தற்செயலாகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டு, பேச்சை மாற்றிவிடலாம். அவர்களும் மறந்து விடுவார்கள். ஆனால், பிறர் சிரிக்கிறார்களே என்று அதைப்பற்றியே பேசுவதும் சரியல்ல. பிஞ்சிலேயே பழுக்க வைக்கும் வேண்டாத முயற்சி இது.

ஏன் மாத விலக்கு வருகிறது என்று புரியாது, உதிரப்போக்கால் தான் இறந்துவிடுவோமோ என்று பயந்ததாகப் பல பெண்கள் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

நான் பதினான்கு வயது மலாய் மாணவிகளிடம் கலந்து பேசியபோது, வயதுக்கு வந்ததும், `இனி பையன்களுடன் அதிகம் பேசாதே!’ என்று மட்டும் தாய்மார்கள் அறிவுரை வழங்கியதாகச் சொன்னார்கள். வேறு ஒன்றும் சொல்லவில்லையாம். நான் ஒரே வரியில் உடலுறவை விளக்கினேன், எந்தவித உணர்ச்சியுமில்லாது. (விஞ்ஞானப் பாடத்தில், குரலில் உணர்ச்சி காட்டாது தகவல்களை மட்டும் தெரிவிக்க வேண்டும்).

`இவ்வளவுதானா! இதற்கு என்ன, இவ்வளவு ஆர்ப்பாட்டம்!’ என்றாள் ஒரு மாணவி.

பழமைவாதிகளான பெற்றோர், `தானே தெரிந்துவிட்டுப் போகிறது!’ என்ற அசிரத்தையுடன், என்ற ரீதியில் உடலுறவைப்பற்றிப் பேசவே மறுப்பார்கள். ஒரு குடும்பத்தில், பதின்ம வயது ஆண் ஒருவன் பெண்ணைப்பற்றியோ, இல்லை, பெண் ஆண்களைப்பற்றியோ பேசுவது தகாது என்பதுபோல் நடந்துகொண்டால், பிள்ளைகள் குழம்பி விடுவார்கள். கல்யாணத்துக்குப் பிறகு பிரச்னைகள் ஏற்படலாம்.

30, 35, 45 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான மூன்று பெண்கள் என்னிடம் கூறியது: `அவர் என்னைத் தொட வந்தபோது, `இதெல்லாம் தப்பு’ என்று நான் என் கணவரிடம் மன்றாடினேன். அவர் வாரக்கணக்கில் என்னுடன் இதைப்பற்றி என்னிடம் பேசினார்’.

தம்மை எவ்வளவு அறிவிலிகளாக வளர்த்திருக்கிறர்கள் பெற்றோர் என்று அவர்கள் மீதும், தம்மீதும் ஆத்திரம் அவர்களுக்கு.

பதினெட்டு வயதுப்பெண் ஒருத்தி இப்படித்தான் குழந்தைத்தனம் மாறாமல் இருந்தாள். தில்லியில் பஸ்ஸில் போகும்போது எல்லா ஆண்களும் தன்னை ஏன் இடிக்கிறார்கள் என்று குழம்பி, என்னிடம் ரகசியமாகக் கேட்டாள். பெற்றோரிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாது, `நான் இனி பஸ்ஸில் போக மாட்டேன். கார் வாங்கிக் கொடுங்கள்,’ என்று நச்சரித்திருக்கிறாள். அவள் தாயிடம் விசாரித்தேன். நான் நினைத்தபடியே, தாய்க்கு ஆண்-பெண் உறவைப்பற்றி அவளிடம் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. பெண்ணிடம் நான் விளக்கிச் சொல்லி, புண்ணியம் கட்டிக்கொண்டேன்! அந்தப் பெண் சர்வசாதாரணமாக, `எங்கம்மாவுக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி எதுவும் தெரியாது,’ என்றாள்.

முன்காலத்தில், கூட்டுக் குடும்பங்களாக இருந்தபோது, அக்கா, அத்தை என்று யாராவது ஒரு பெண்ணின் கர்ப்பம், பிரசவம் நிகழும். பன்னிரண்டு வயதில் ரகசியமாக வைக்கப்பட்டவை லேசாகப் புரிய ஆரம்பிக்கும். இப்போது அப்படியா! பெற்றோர் நாணிக் கோணாமல் எடுத்துச் சொன்னால், அதை ஏற்பார்கள் குழந்தைகள். இல்லாவிடில், தவறான முறைகளில் நண்பர்களிடமிருந்து கற்கும் அபாயம் இருக்கிறது.

ஒரு குழந்தையின் இயற்கையான ஆர்வமும், தனக்கு நிறைய விஷயங்கள் தெரியும் என்ற பெருமையும் புரியாது, அலட்சியமோ, அவமதிப்போ செய்தால், அதன் பாதிப்பு பல வருடங்கள் நிலைக்கும்.

படித்த கதை: ஆலோசகராக (COUNSELLOR — நாடி வருபவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்) பணியாற்றிய ஒரு பாதிரியார் தனது புத்தகத்தில் எழுதியிருந்தது:

“எனக்கு நினைவு தெரிந்த நாளாக, `கண் எங்கே?’ என்று யாராவது கேட்டால் கண்ணைச் சிமிட்டி, `கை?’ என்று கேட்டபோது பெருமையுடன் கையைத் தூக்கிக் காட்டியிருக்கிறேன். மூன்று வயதில், யாராவது எங்கள் வீட்டுக்கு வந்தால், புதிய உறுப்பு இதுதான் பெருமையுடன் அதைக் காட்டி, அதன் பெயரும் எனக்குத் தெரியும் என்று காட்டிக்கொள்வேன். அதிர்ச்சியும், அவமானமுமாக, என் பெற்றோர் என்னை அவசரமாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றுவார்கள்.

அப்போது, எனது ஆண் உறுப்பு ஒரு அவமானச் சின்னம்தான் என்று தோன்றிப்போயிற்று. அதனால், சிறுநீர் கழிப்பதுகூட கஷ்டமாக ஆகியது. நான் செய்யும் காரியம் யாருக்கும் தெரியக்கூடாது என்று குழாயைத் திறந்துவிடுவேன். வளர்ந்து பெரியவனானதும்கூட இதே நடத்தை தொடர்ந்தது. குழாய்த் தண்ணீர் ஓசை இருந்தால்தான்தான் சிறுநீர் கழிக்க முடிந்தது”.

தமது அந்தரங்கமான பாகங்களின் பெயர்களோ, அல்லது அவைகளின் பயன் என்ன என்றோ குழந்தைகளுக்குத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்படுவது இயற்கை. ஒரு குழந்தை எப்போது தனக்குப் புரியாத ஒன்றைப்பற்றி அறிய விரும்பி, கேள்வி கேட்கிறதோ, அப்போதே அது பதிலுக்கும் தயார் என்பதை உணரலாம். எளிமையான, அதிர்ச்சி தராத விதத்தில் விளக்கினால், குழப்பமின்றி, மன ஆரோக்கியத்துடன் வளரும்.

தொடருவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *