பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

11422691_844431505611050_742462370_n

133641499@N02_rதிரு. ஜபீஷ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.06.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடையவலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

27 thoughts on “படக்கவிதைப் போட்டி (16)

  1. நீரால்
    ———–
    காதலியின்
    கண்களிலிருந்து விழும்
    ஒரு சொட்டு

    நீருக்காக மாய்ந்த
    உலகம் அன்று !

    குழாயின்
    சொட்டு நீருக்காய்
    மாயத் துணிகிறது

    இன்று !!

  2. மொழி
    ————
    வானமேறி
    கிரகங்களை
    பிடிக்க
    தெரிந்தவனுக்கு
    தெரியவில்லை
    பூமி நீரின்
    அருமை

  3. பழியோரிடம்
    ————————
    பூமியின்
    கதறல் புரியாத
    மனிதனுக்கு

    வானம்
    புகட்டும் பாடம்

    பாவப்பட்ட பிற
    இனங்களையும்
    பாதிக்கிறது

  4. ஆவதெல்லாம்
    —————————
    அந்தரடித்தாலும்
    நாக்கு நனையாது

    கூா்மமானாலும் 
    தொண்டை நிறையாது

    மனித நிலை 
    மறந்து

    மலைகளையும்
    வனங்களையும்

    மொட்டையடித்தால்

  5. கேளும் மானிடா
    ——————————

    நிலத்தினருமை
    புரியாத போது

    பொழுது புகட்டும்
    பாடத்தை

    மூதையரும்
    உணர்ந்தால்

    வளா்சிதை மாறும்
    நிலை உண்டென

    தாயாய் நிற்பதால்
    எச்சரிக்கை

  6. என்னை வரவழைக்க என்ன செய்தாய்?

    என் கண்ணீரைக் கேட்கிறாய்
    எனக்காக நீ என்ன செய்தாய்?

    மலையில் பிறந்து
    நிலத்தில் ஊர்ந்து
    கடலில் விழுகிறேன்
    இடையில்
    மரமும் மனிதர்களும்
    பருகிய மிச்சமாய்!
    உன்னை நனைக்கும்
    என்னைப் பாதுகாக்க
    நீ மண்ணையாவது
    கூட்டினாயா?

    மணலோ ஈர்த்து
    மரத்தை உயிர்க்கிறது
    மரமோ சக்தியை எடுத்து
    உயிர் சக்தியை உமிழ்கிறது
    என்னை விழுங்கிய
    நீ எதைத் தருகிறாய்?

    என் கண்ணீரை வரவழைக்க
    நீ இன்னும் யாரை
    சித்திரவதைச் செய்வாய்?
    மரத்தை வெட்டுகிறாய்
    மனிதத்தைப் புதைக்கிறாய்
    என் அழுகையின் ஆன்மா
    ஆக்ஸிஜனற்றக் காற்றுதான்
    வெப்பச் சலனமல்ல
    என்பது தெரியாமல்!

    உன் மாய்மால
    ஆட்டங்களில் மயங்கி
    அழுவேன் என்று நினைத்தாயோ?
    அழுதாலும் வீணே விழுவேனோ?
    நான் ஓங்கி அழுதால்
    ஆலங்கட்டி எடை
    தெரியுமா உனக்கு?

    உனக்காக நான் விழுவதற்கு
    எனக்காக நீ என்ன செய்தாய்?
    என்னைத் தாங்கிட
    பல்லக்குத் தந்தாயா?
    என்னைத் தேக்கிட
    கொள்ளிடம் செய்தாயா?

    என் கண்ணீரைக் கேட்கிறாய்
    எனக்காக நீ என்ன செய்தாய்?

  7. நீரில்லா ஊர் பாழ் !

    சி. ஜெயபாரதன்.

    உண்டி கொடுத்தோர்
    உயிர் கொடுத்தோர் ஆயினும்
    மண்டினி ஞாலத்தில் பருகப்
    புனித நீர் இன்றேல் 
    மனிதம் மரிக்கும் ! 
    விலங்கினம் மாயும் !
    பயிரினம் காயும் !
    உயிரினம் தேயும் !
    குழாயில் சொட்டிய நீருக்குத்
    தவிக்கும் வானரம்
    துளி நீரின்றி மயங்கி
    விழப் போகுது !
    நீர்க்கோளைப் படைத்த
    நெடுமால்  
    வேர்க்க விடுவான் இந்த
    விலங்கை !

    ++++++++++++++++

  8.                     மெல்ல எழுந்து விடு ….!!
                          “““““““““““““““““““`
    வாசித்துப் பார்த்தாயோ வங்கியம் என்றெண்ணி 
    மாசில்லா உள்ளமுடன் மந்தியே !- நேசித்த 
    புல்லாங் குழலல்ல பூரித்து நீயிசைக்க 
    மெல்ல எழுந்து விடு .

  9. ஒரு மந்தியின் வாக்குமூலம்
    ——————————————–

    ஓ ! மனிதர்களே !
    பூமித்தாய் கருவறை ஆழம்வரையிலுமா
    ஆழ்துளையிட்டு உயிர்நீரை உறிஞ்சிவிடவேண்டும்?
    மேகத்தாயின் கருவறையிலும்
    ஈரக்கரு சிதைக்கப்பட்டதுவாம்.
    என்ன செய்யப் போகிறீர்கள் ?
    மரங்களை கொன்ற பாவத்திற்கு
    தலைமூழ்கி பரிகாரம் தேட
    கூவத்திலும் புனிதச்சாக்கடை ஓடாதே?
    என்ன செய்யப் போகிறீர்கள்?
    நாளை தலைமுறைக்கு
    ஒன்று செய்வீர்களா?
    உங்கள் உமிழ்நீரை ஊற்றியவாது
    ஒரு மரக்கன்றையேனும் வளர்த்துவிடுவீர்களா? 

    ஓ ! உலக கவிஞர்களே !
    கொஞ்சம் அவசரமாய்
    உங்கள் பேனாவின் முனையை
    மரித்துப்போகும் மரங்களுக்கு
    முட்டுக்கொடுப்பீர்களா ?
    உங்கள் பேனாவின் மையினால்
    மரத்துப்போன மானிடர்களின்
    முகத்திலாவது
    விழிப்புணர்ச்சியினை தெளிப்பீர்களா? 

    இதோ…!
    உங்கள் மீதுதான் குற்றஞ்சாட்டி
    ஒரு மரண வாக்குமூலம் பதிவிட்டவாறே
    உலகின் கடைசி நீர்த்துளியினை
    உறிந்துக்கொண்டிருக்கிறேன்.


    -இரா.சந்தோஷ் குமார் 

  10. உடைய எத்தனித்த நீரின் முந்தைய முகம்…..

    நான் கழற்றிக் 
    கொண்டேயிருக்கிறேன் 
    கழன்று, 
    உடைந்து கொண்டே 
    இருந்த முகத்தில் 
    கடைசியாக 
    கழன்ற 
    முகம்தான் எனது முகம்..
    சற்று யோசித்த 
    பொருளில் 
    தத்துவ முதல்வாதமென 
    இப்போது 
    மாட்டிக் கொண்டேயிருக்கிறேன் 
    பொருத்தமில்லாத 
    ஒன்றை…
    அதுவும் எனது 
    முகம்தான் என்பதே 
    உடைய எத்தனித்த எனது  
    முந்தைய முகம் சொன்ன 
    வாதம் மற்றும் 
    பிரதிவாதமென நீரும்… பரிணாமமும்…..

    கவிஜி 

  11. பார் பார் குரங்கே பார் !
    கீழே பார் உலகை பார் !
    சூரியன் பார் பூ க்கள் சிரிக்குது பார் !
    மிருகம் பார் பறவைகள் பார் !
    அலையை பார் ! மலையை பார் !
    மழலை பார் ! புன்னகையை பார் !
    கீழே இறங்கி பார் !
    கூடி ஆடி பார் ! குரங்கின் ஆரவாரம்

  12. காங்ரீட் காடுகள்!

    அடர்வனக் காடுகளின் பசுமைபோர்த்த
    வெளியெங்கும் கவிந்த இருள்கிழித்து
    கிளைதுளைத்துப் பாயும் சூரிய விசிறிக்கீற்றில்
    கொடிபற்றி கிளைதாவி குதூகலித்த
    நாட்கள்…
    ஈரமண் வாசத்தில் வண்டுகளின் ரீங்காரத்தில்
    கொழுத்த மரக்கிளை தனிலே
    பழுத்த பலகனிச் சுவைதேடித் திரிந்த பொழுதுகள்…
    முப்பொழுதும் பசுமையோடு காட்டாற்றுக் கரைதிரிந்து
    கூட்டுக் குடும்பத்திலே குறையற வாழ்ந்தே
    கூடிக் கழித்த சலிக்காத நினைவுகள்…
    பொய்யாய் பழங்கதையாய் போனதோ இமைப்பொழுதில்
    பசுமைதொலைத்த காங்ரீட் காடுகளில்
    கதறியழும் தனிமை சூழ
    பழுத்தகனி கிளைபற்றிய கரங்களில்
    வாழ்வா சாவா போராட்டம் நிகழ்த்தி
    ஒற்றைக் கம்பியில் ஊசலாடும் உயிர்வாழ்க்கை…
    வாழத்தான் யாசிக்கிறேன்
    பற்றுக்கோள் ஏதுமின்றி யோசிக்கிறேன்…
    எந்திரங்களின் பூமியில்
    உயிர்வாழ்க்கை அவ்வளவு வசப்படவில்லை!
    – ச. சாசலின் பிரிசில்டா.

  13. பூகோளச் சூடேற்றம் !

    சி. ஜெயபாரதன்.

    தீப்பிடிக்கும் கானகத்தில்
    விலங்கின்
    கூப்பாடு கேட்கிறதா ?
    குடிநீர் வழங்கிய குளம் 
    துளி நீரின்றி
    அழுகிறது.
    நகர்ப் புகைக்கரி மண்டலம் 
    நாட்டை இருட்டடித்து 
    காட்டைத் தாக்குது 
    இப்போது !
    மழைத்துளி பார்த்து
    மாதங்கள் 
    கணக்கில்லை ! 
    குடிக்க நீரில்லை !
    குளிக்க நீரில்லை ! 
    கழுவ நீரில்லை !
    காபி அருந்த நீரில்லை !
    வாய்க்காலில் நீரில்லை !
    வானரம் 
    வாய் வைத்த குழாயில்
    வருமா நீர் ?

    +++++++++++++

  14.                     குடிநீர் கொஞ்சம் கிடைக்காதோ ….???
                          “““““““““““““““““““““““““““““`
    குறிஞ்சி நிலமும் பாலையாச்சோ 
    குடிக்கும் நீரும் வற்றிடுச்சோ 
    குன்ற மெங்கும் காய்ந்திடுச்சோ
    குட்டைக் குளமும் வறண்டிடுச்சோ
    குதித்துத் தாவ மரமுமில்லை 
    குடலின் பசிக்கு கனியுமில்லை 
    குழாயு மிருந்தும் பயனுமில்லை 
    குடிக்கத் தண்ணீர் வரவுமில்லை 
    குரங்கின் தாகம் தீராதோ 
    குடிநீர் கொஞ்சம் கிடைக்காதோ ….!!!

  15. அனுபவி ராஜா
    —————————-

    உன் ஆசை
    விரிந்த
    பொழுதில்
    விளைந்த

    மனிதனின்
    தவறல்லவா
    அனுபவி ராஜா
    நீயும்

  16. ஏக்கம்
    ————
    அட
    அதோ
    பாருங்கள்
    தண்ணீா்
    தேடி
    உயரத்தில்
    குரங்கின்
    சேட்டை ;

    கைதட்டி
    சிரிப்போம்
    வேறெதுவும்
    செய்யோம் 
    செய்யவும்
    தெரியாது ;

    போதிக்கப்
    பட்டதெல்லாம்
    அவ்வளவே 
    சுயபுத்தி
    போயாச்சு
    சொல்புத்தி
    சிதைஞ்சாச்சி ;

    புதுசென்ன
    இன்னும்
    இருக்கு
    ஆமாம்
    பாரேன்
    அதன்
    மேலாடை ;

    எத்தனை
    பளபளப்பு
    நமக்கு ?
    இயற்கை
    ரொம்ப
    மோசம்
    ஓரவஞ்சனை;

  17. குரங்கு  புத்தி

    திருகி திருகி  பார்க்கிறேன்

    திடீரென இரண்டு சொட்டு  நீர்

    அது தண்ணீர்  அல்ல

    என் கண்ணீர்

    ஆம்   இது தண்ணீர் தேசமல்ல

    கண்ணீர் தேசம் 

    இருக்கும்போது

    அருமை தெரிவதில்லை 

    மூடாமலே கிடக்கும் குழாய்

    இப்போது திறந்தே கிடந்தாலும்

    காற்றுகூட வரவில்லை

    நாக்கு வரளுகிறது கண்கள் இருளுகிறது

    யாராவது அம்மா பாட்டில் தண்ணியாவது

    தாருங்களேன்

    குடியிருப்புகளில் உள்ள

    தண்ணீர் டாங்குகளில் மூடியை

    தூர வீசிவிட்டு
    உள்ளேகுதித்து குதுத்து
    கும்மாளமிட்டு நீரை

    சிந்தினேன் இன்று கண்ணீரை
    ச்ந்துகிறேன்
    என்னிலிருந்து பிறந்தவன் தானே

    மனிதன் அவனுக்கும் என் புத்திதானே?

    சரஸ்வதிராசேந்திரன்

  18. பெருமூச்சு…

    மரத்தை யெல்லாம் வெட்டிவிட்டார்
         மழையின் வரவைக் கட்டிவிட்டார்,
    வரவாய் ஆற்றில் நீருமில்லை
         வறண்டா லங்கே மணலுமில்லை,
    தரையில் நீரையும் மாசாக்கினர்
         தண்ணீர் இருப்பதைக் காசாக்கினர்,
    குரங்கு குடிக்கவும் நீரிலையே
         குழாயதும் ஏங்குது பெருமூச்சிலே…!

    -செண்பக ஜெகதீசன்…

  19. குரங்கு சொல்லும் சேதி!

    வலது பக்க உடலைக்கூட
    வலது கையால் சொறியும்
    வனத்துக் குள்ளே மரத்திலேறி
    தாவித் தாவித் திரியும் 
    தாவுகின்ற கிளைகள் எல்லாம்
    பூமி நோக்கிச் சரியும்
    பூவைப் பிய்த்து போடும்போது
    குரங்கின் சேட்டை புரியும் 

    குதித்து வந்து வாழைப்பழத்தை
    பறித்துக் கொண்டு விரையும்
    பல்லைக் காட்டி சீறும்வாயும்
    காதை நோக்கி விரியும் 
    காசுக்காக ஆடச் சொல்வான்
    மனிதன் என்று அறியும்
    மனமுமொரு குரங்கு என்று
    மனிதருக் கெல்லாம் தெரியும்

    மரத்தை வெட்டி காடழித்தால்
    மழையும் அங்கே பொய்க்கும்
    நீண்ட தூரம் நீருக்காக
    நடக்கும் நிலை வாய்க்கும்
    வழியும் துளியாம் குடிநீரை
    வாயை வைத்து உறியும்
    நிலமை வந்து சேருமென்று
    நமக்கும் கூடத் தெரியும் 

    இயற்கை பறவை விலங்குகளின்
    இயல்பில் மனிதன் கற்பான்
    அறிவு ஆற்றல் சிந்தனையால்
    அரிய செயல்கள் புரிவான்
    குரங்கு தரும் எச்சரிக்கை
    புரிந்தால் வாழ்வு சிறக்கும்
    பூமியெங்கும் பசுமை யானால்
    புதிய வாழ்வு பிறக்கும்

  20. சூட்டு யுகம்  வருகுது

    சி. ஜெயபாரதன்

    சூடு காலம் வருகுது !
    நமக்குக்
    கேடு காலம் வருகுது !
    நாடு, நகரம், வீடு, மக்கள்
    நாச மாக்கப் போகுது ! 
    காடு,மேடு, சூடு போட்டு
    ஆடு, மாடு, மந்தி எல்லாம்
    வாடி வதங்கப் போகுது !
    அசுரப் புயல் எழுப்ப வருகுது !
    பூத மழை பொழியப் போகுது !
    நீரை, நிலத்தை, குளத்தை,
    பயிரை, உயிரை, வயிறை
    முடக்கிப் போட வருகுது !
    கடல் வெப்பம்,
    கடல் மட்டம் மெல்ல ஏறி
    கரை நகரை மூழ்க்கப் போகுது !
    மெல்ல மெல்ல ஏறி
    வெப்பம்,
    எல்லை மீறிப் போகுது !
    சூட்டு யுகப் பிரளயம்,
    வீட்டை, நாட்டைத் தாக்குது !
    உன்னை, என்னை,
    உலகின் கண்ணை ஒன்றாய்ப்
    பிதுக்கப் போகுது !

    +++++++++++++

  21. நானும் பழகிக் கொள்ளுகிறேன்!

    நீர்த்தேடி நித்தமும்
    நீண்ட குழாயின்
    குமிழ் திறந்து பார்க்கிறேன்
    உஸ்ஸென்று சத்தம் மட்டுமே
    உள்ளிருந்து வருவது ஏன்

    உழைத்து வியர்த்தும்
    உயரம் அடையாத 
    உழைப்பாளியின்
    உஷ்ண மூச்சா

    அன்னைத் தமிழிருக்க
    ஆங்கில மோகங்கொண்டலையும்
    உம்மவரைப் பார்த்து
    உலகம் விடும்
    ஏளன இழி மூச்சா

    ஊழல் பெருச்சாளிகள்
    நாட்டையே நாசம் செய்ய
    ஏதும் செய்ய இயலா
    ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சா

    ஆறு குளம்  ஏரியென 
    அத்தனையையும் கட்டிடங்களாக்கி
    வனங்களோடு வளங்களையும்
    இரக்கமின்றி அழித்ததால்
    இயற்கை விடும் எரிச்சல் மூச்சா

    பாய்ந்து வரும் ஆறுகளில்
    பக்கத்து மாநிலங்கள்
    அடுக்கடுக்காய் அணைகள் கட்ட
    அழிந்து வரும் உம்
    வாழ்வாதரத்தின் இறுதி மூச்சா

    என்னவென்று நீங்களே
    உடன் வந்து பாருங்கள்
    அப்படியே
    பத்து ரூபாய் தண்ணீர் பாட்டிலிருந்தால்
    எனக்கொன்று கொடுங்கள்
    நானும் பழகிக் கொள்ளுகிறேன்!

  22. தரணியை விட்டோடு குரங்கே!

    உருகிய பனிமலை ஓடி மறைய 
    ==உலகமே பாலை வனமாய் நிறைய 
    பருகிட நீர்த்துளி தேடி அலைந்து 
    ==பார்வையில் பட்டதோர் குழாயி னுள்ளே 
    குறுகிய அறிவை கொண்டேத் தேடும் 
    ==குட்டிக் குரங்கே வாயை எடு நீ  
    அறிவிலா மனிதன் செய்த தவறால் 
    ==அழிந்த காட்டின் கல்லறை அதுவே! 

    கட்டிடம் கட்டும் அனுமதி பெற்றுக் 
    ==காட்டிடம் காட்டும் அவமதிப் பிற்கு 
    வட்டியும் முதலுமாய் வாங்கியே கட்டும் 
    ==வாட்டமும் வருவதை உணரா மனிதன் 
    திட்டியும் திருந்தா திருக்கும் நிலைக்கு 
    ==திட்டமும் வகுத்து இயற்கை மூலம் 
    பட்டயம் போட்டு பகிர்ந்து அளிக்கும் 
    ==பரிசே வற்றிடும் நீரால் மரணம்.

    தொழுதே அழுது துடிக்கும் வாழ்வின் 
    ==துயரம் ஓசோன் மண்டலம் வழியே 
    விழாமல் விழுமே பேரிடி என்று 
    ==விழிநீர் சிந்தவும் கண்ணீர் அற்று 
    அழாமல் நாளை அடக்கம் ஆகும் 
    ==அகில மனிதன் அத்தனை பேரும் 
    குழாயின் வழியே அக்கினி குடிக்கும் 
    =கோலம் வருமே குட்டிக் குரங்கே! 

    கல்லறை கட்ட மணல்சீ மேந்து 
    ==கலந்திடக் கூட நீரும் இன்றி 
    கல்லென சமைந்து காய்ந்து மண்ணில் 
    ==கருவாட் டைப்போல் கிடக்கப் போகும் 
    நல்லவன் கெட்டவன் அத்தனை பேரும் 
    ==நாளை என்பதை உணரா வண்ணம் 
    செல்வம் குவித்து இலாபம் என்ன? 
    ==செல்லமாய் கேட்டிடு சின்னக் குரங்கே!

    தாண்டவம் ஆடும் தரணியின் மாந்தர் 
    ==தன்னை மறந்த நிலைக்குத் தண்டனை 
    ஆண்டவன் கொடுக்கும் வடிவம் உலகில் 
    ==அக்கினி மழையாய் பொழிய உயிர்கள்  
    மாண்டவை  என்ற பெயரைத் தாங்கி 
    ==மண்ணுக் குள்ளே மறைந்த பின்னே 
    வேண்டிடும் நீரைப் பருகுத லுந்தான் 
    ==விதியென இருந்தால் விடைபெறு குரங்கே!

    மனிதன் போக்கில் மாற்றம் தோன்றி  
    ==மண்ணில் மரங்கள் காடாய் வளர்ந்து
    புனித பூமி உதிக்கும் போது 
    ==பூக்கள் சொட்டும் தேனில் குளித்து 
    இனிக்கும் இன்பம் காண வேண்டி 
    ==இன்னொரு பிறவி எடுத்து நீயும் 
    தனித்து வமாகவே தாகம் தீரு 
    ==தரணியை விட்டு அதுவரை ஓடு!

    *மெய்யன் நடராஜ்  

  23. தித்திக்கும் நீர் பொங்க

    குதித்தாட்டம் போட்ட ஆறும்

    வற்றித் தான் போனது !

    தொங்கித் தாவிய

    ஆற்றங்கரை மரமும்

    வெட்டுண்டு தான் போனது !

    வசிப்பிடம் பறிபோக

    வாழ்வாதாரம் தேடி

    ஊரினுள் படையெடுத்தேன் –

    மானுடரின் பழக்கமெலாம்

    சிரமமின்றி கற்றுக் கொண்டேன் !

    சமயங்களில் உணவெலாம்

    எளிதாக கையில் கிட்ட

    எம் குணமனைத்தும்

    மறந்தே போனேன்!

    அருவி கண்டு பழகிய

    எனக்கு – இக்குழாயும்

    அருவியெனவே தோன்றவே

    கொட்டும் அருவியில்

    நீரெடுக்க ஏனிந்த வனிதையருள்

    இத்தனை போராட்டமென்றே

    எண்ணினேன் !

    அருவிக்கு சிறியதாய் வாயிருக்க

    அசந்து போய் நின்றிருந்தேன் !

    காட்டருவியில் நீரை நிறுத்த

    எவருமில்லை ! – இங்கு இந்த

    அருவியை குழாயினுள்

    அடைத்தவரும் யாரோ ?

    கொட்டும் அருவியை

    பட்டென்று இறுக்கிப்

    பிடித்தவரும் யாரோ ?

    மனதினுள் பதிலறியா

    கேள்விகள் தலைதூக்க

    சுற்றும் முற்றும் பார்க்கிறேன் –

    ஒரு பெண்மணி

    சொல்லிச் செல்கிறார் –

    “அதற்குள் நிறுத்தி விட்டார்களே !

    அதற்குள்ளாகவா மூன்று மணி

    நேரமாகி விட்டது ?”

    அந்தோ !

    இப்போதல்லவா புரிகிறது –

    இந்த அருவியில் வாரமொருமுறை

    அதுவும் மூன்று மணி நேரமே

    நீர்வரத்து என்று !

  24. தாகம் தீர்த்திட நீர் நிலை தேடும்

    நீர் வளங்கள் தூர்ந்து போயின
    ஏர் பிடிப்பவர் வானம் பார்த்திட
    பார் எங்கும் அக்கினி தகிக்க
    வேர் அறுத்த மரங்கள் தரிசு நிலங்களில்

    கட்டிடம் கட்டிட பெயர்த்த மரங்கள்
    விட்டுச் சென்றிட்ட நீள் பெரு வெளிகள்
    கொட்டும் வானத்து தூவான மழையை
    மீட்டுக் கொடுக்காமலே கட்டிடங்கள்!

    அரக்கர்கள் போல பூமியெங்கும்
    நிரைக்கு நின்றன கட்டிடங்கள்
    விரைந்து விலைக்கு வாங்கிய
    புரையோடிய புது மாந்தர் மடமை

    மழை அவை தாரதென்றறியார்
    விழைந்து தறித்த மரங்கள் மொண்டு
    குழைகள் தேக்கித் தரும் வான் நீரை
    கோழைகள் தொலைத்தனர் பூமியில்

    நிலங்கள் பாளங்களாகி வெடித்தன
    சில துளி கூட சிந்தாமல் வானம்
    காலம் காலமாய் நிரம்பிய வாவிகள்
    கோலமிழந்தன வறண்ட தரைகளாய்

    சூரியன் மட்டும் வந்து போகிறான்
    வீரியமான உக்கிரத்துடன் கோடையில்
    நீரினைத் தேடும் உயிரினம் யாவும்
    பாரினில் எங்கும் பதட்டமாய்ப் பரிதவித்து!

    தாகம் தீர்த்திட நீர் நிலை தேடும்
    ஈகம் ஆக உயிரையும் ஈயலாம்
    ஊகமான மந்திக் குரங்கார் இங்கு
    வேகமாக நீர்க் குழாயாயைத் திருப்பி

    சொட்டும் சிறிய நீர்த் திவலைகள்
    எட்டி நாக்கால் ஏக்கமாய் நக்கிறார்- மனிதரோ
    வெட்டிய மரங்களின் வேர்கள் பதிய
    விட்டு வைக்கவேயில்லை சிறுதுளி நீரையும்

    ஏமாளி மனிதன் ஏமாறினான் போலியாய்
    ஏமாற்றினான் மற்றும் எல்லா உயிரையும்!
    நாமாகவே மரங்கள் நாட்டுவோம் மீண்டும்
    தாமாகவே ஊறிடும் நீர் நிலை பூமிஎங்கணும்

    வானத்து நீரைத் தேக்கி வைப்போம் வையம்
    வனங்கள் வளங்கள் வளர்ப்போம் செறிந்து
    கனக்கின்ற மேகங்கள் சுமக்கும் துளிகள்
    நனைக்கும் தரையில் மரங்கள் வளர்ப்போம்

    நீருக்குப் பஞ்சம் ஊரில் தவிர்ப்போம்
    வேருள்ள மரங்கள் நீர் தேக்கும் தருக்கள் ….
    சீருடன் தரையில் என்பதை உணர்வோம்
    ஊருக்குள் நிறைந்து மரங்கள் நாட்டுவோம்

    புனிதா கணேசன்
    12.06.2015

  25.                                          நீ விழும் நேரம் -கார்த்திகா AK

    ஆறறிவு கொண்ட விலங்கினம்  
    மனித இனமாம்!

    பல கோடி வருடங்களுக்கு முன்பான  
    எம் மூதாதையர்கள் 
    உன் தோற்றம் கொண்டவர்களே..

    நாகரீகம் வளர்ந்ததில்  
    நடக்கும் பாதையையும் 
    தாங்குகின்ற தரையையும் கூட  
    நம்ப இயலாத  
    சிதறுண்ட நிலை !

    என்றாவது ஒருநாள் 
    இந்த வானம்  
    உடைந்து வீழலாம்..
    தலை மேல்  இல்லாவிட்டாலும்  
    புதை குழிகளுக்குள் !அப்போது 

    நீர்நிலைகளை துடைத்தெடுத்து  
    அதன் கரைகளை சொந்தம் கொண்டாடியோர்  
    விரிசல் கண்ட புவிக்கு கிழிசல் 
    ஆடை தைத்துக் கொண்டிருப்பரோ?

    தகிக்கும் வெப்பச் சூட்டில் 
    சொட்டு நீரையும் 
    அனல் உண்டுவிட  
    இரும்புக் குழாய் பற்றியிருக்கும் 
    உன் கால்களை பலமாக்கிக் கொள்!
    குழாய் சீரமைப்பு  முடிந்த 
    தேர்தலின் வாக்குறுதிகளில் ஒன்று!

    சுட்டிடும் வாய் 
    சொட்டாத நீர்..
    எச்சில் வற்றுவதற்குள் 
    கொஞ்சம் சுவாசித்து விடு..
    சமூகத் தொண்டு ஆற்றும் 
    எவரேனும் வெற்றுக் குழாய்களில் 
    மீத்தேன் எரிவாயு அனுப்பலாம்..
    நச்சுப் புரையேறி உன் 
    உயிர் குடிக்கப்படும்..

    நீரின் வறட்சியும்
    விலங்கினத்தின் அழிவும்  
    அவர்களுக்கு எங்கே புரியப் போகிறது?

    தாகம் கொண்டால் 
    செவ்வாயில் தீர்த்துக் கொள்வான் மனிதன்,
    “நர மாமிசம் நல்வழிபடுத்தும்”என்று 
    சொன்னாலும் அது மிகையாகாது..

    எங்காவது தப்பி ஓடிவிடு மந்தியே..
    உன் இனத்தின் வேர்கள் 
    தீக்கிரையாக்கப்படுவதற்குள்..

    பொய் மனிதம் பேசும் 
    இம்மனிதர்கள் மாய்ந்து ஓயட்டும் ….
    புதிய பூமி சமைத்தலில் 
    நீ மீண்டும் மனிதனாக 
    மாறாமல் இருக்கக் கடவாய்!!

       
     

     

  26. அடுக்குமாடி வரவுகளினால்
    தொலைந்த மரங்களைத் தேடி
    மேக அண்ணா மறைந்துவிட்டார்!
    மீன் மாமி குடியிருந்த குளம்கூட
    மட்டைப் பந்துக் களமாகி
    வெகுநாளாகிவிட்டது!

    பானையாக நீயிருந்தால்
    காக்கையாக  மாறியிருப்பேன்!
    ஒரு கல் போட்டால்
    வாராத நீரே!
    ஆறிலிருந்து ஒன்றுதான் குறைவெனக்கு!
    ஆனால் ஆறறிவுபோல செய்கை
    அளந்து தந்தது யாரோ!
    சஞ்சீவிநீர் அருந்த
    நான் எங்கே செல்வது? 
    உஃப் என்று ஊதி இழுத்தால்
    என்றாவது ஒருநாள்
    என் தாகம் தீர்க்க வந்திடுவாய்!
    என்ற நம்பிக்கையில் காத்திருக்கும்
    நன்றியுள்ள இனம் வடித்த மடல்!

  27. தண்ணீருக்கான யுத்தக்குழாயிலிருந்து
    மொத்தமாய் சத்தமாய் உயிராய்
    உறிஞ்சிக்குடிக்கிறது
    பரிதாபப்பட்ட மந்தி . 

    மரமும் வேண்டாம்
     மழையும் வேண்டாம். 
    மனிதர்களே உறிந்து உறிந்து
    உறிய கற்றுக்கொள்ளுங்கள் 


    இரா.சந்தோஷ் குமார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *