மீ.விசுவநாதன்

சிறுவயது முதற்கொண்டு சிவனையும் மாலனையும்

சிறுகாலைப் பொழுதுமுதல் சிந்தையிலே வைத்ததனால்

சிறுமையாம் பேதங்கள் சேராத மதிகொடுத்து

சிறுவநெனை நெறிசெய்த சிதம்பரனை மறப்பேனோ !     (4)

 

குருடனாகிக் குலவழியைக் கொள்ளாத வீணான

திருடநெனை,  திருத்திடவே தெளிந்தவோர் நல்ஞான

குருதாளில் விழவைத்துத்  தொடர்பிறப்பை துண்டிக்க

அருள்செய்த அம்மையப்பன் அவனின்றி யாரெனக்கே !   (8)

 

சங்கரநா ராயணனைச்  சரியாகப் புரியவைத்த

பங்கிற்கு குருபாதப் பரம்பரையைத் தொழவேண்டும் !

எங்கிருந்து நினைத்தாலும் எளியனிவன் பரம்பரையை

அங்கிருந்தே காத்தருள்வார் ! அவரிருதாள் போதாதோ!   (12)

 

நெல்வயலில் இளங்காற்று நெற்றிதொட்டு வாழ்துதல்போல்

பல்முளைக்கும் முன்னேயே பாலுடனே பண்பூட்டி

நல்வயலாய்ப் பிறப்பினையே நற்பயிராய்ச் செய்தவளை

எல்லையிலா பராசக்தி என்பதிலே பொய்யுண்டோ?             (16)

(வாய்பாடு: காய், காய், காய், காய்….”.தரவு கொச்சக் கலிப்பா” )

                                      (08.06.2015)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *