பழமொழி கூறும் பாடம்

0

தேமொழி.

 

பழமொழி: வேல்குத்தின் காணியின் குத்தே வலிது

 

தெருளா தொழுகும் திறனிலா தாரைப்
பொருளா லறுத்தல் பொருளே – பொருள்கொடுப்பின்
பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேற்குத்தின்
காணியின் குத்தே வலிது.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

 

பதம் பிரித்து:
தெருளாது ஒழுகும் திறன் இலாதாரைப்
பொருளால் அறுத்தல் பொருளே; பொருள் கொடுப்பின்,
பாணித்து நிற்கிற்பார் யார் உளரோ?-வேல் குத்தின்
காணியின் குத்தே வலிது.

பொருள் விளக்கம்:
தனது தகுதியை உணராது ஆணவத்துடன் செயல்படும் திறமையற்றப் பகைவரை, பொருள் கொண்டு அழித்தலே சரியான நடவடிக்கை. (அந்த எதிரியை ஒழிக்கும் நோக்கில் கைக்கூலியாக) தேவையானப் பொருளைக் கொடுத்தால் பகையை நீக்கத் தயங்குபவர் யாராவது உள்ளார்களா? கூரிய வேலைக் கொண்டு அழிப்பதைக் காட்டிலும் பணத்தால் அடிப்பதே வலிமையானது.

பழமொழி சொல்லும் பாடம்: எல்லோருக்கும் ஒரு விலையுண்டு, பணம் எதையும் சாதிக்க வல்லது என்பதால் செல்வதைத் தக்க முறையில் பயன்படுத்தி எதிரியின் இடையூறை நீக்க வேண்டும்.

காணி என்பது பெருஞ்செல்வத்தில் ஒரு சிறு பகுதி, அதனைப் பயன்படுத்தி எதிரியின் இடையூறை நீக்க வேண்டும். இந்தப் பழமொழி கூறும் பொருளில் உள்ள திருக்குறள்,

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில். (குறள்: 759)

பகைவரின் செருக்கை அழிக்கத் தகுதியான கூர்மையான ஆயுதம் செல்வம் போன்று வேறொன்று இல்லை என்பதால் செல்வத்தை ஈட்டுவது தேவையாகிறது என்று அறிவுறுத்துகிறது.

இந்தப் பழமொழியின் கருத்தை ஒத்த பல பழமொழிகள் தமிழில் உண்டு. ஈட்டி எட்டியவரைப் பாயும், பணம் பாதாளம் வரை பாயும். பணம் பத்தும் செய்யும். குரைக்கும் நாய்க்குப் போடும் எலும்புத்துண்டு நாயை அமைதிப்படுத்தும். இக்காலத்து அரசியலில் எதிரியை ஒழிக்க அல்லது விலைக்கு வாங்கிவிட உதவுவது பணம். இப்பழமொழியை ஒத்த ஆங்கிலப் பழமொழிகள் “A golden dart kills where it pleases”, “A golden hammer breaks an iron gate” ஆகியன.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *