அமெரிக்காவில் காச நோய் பற்றிய பதைப்பு

0

நாகேஸ்வரி அண்ணாமலை

ஏப்ரல் 4-ஆம் தேதி இந்தியாவிலிருந்து அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகருக்கு விமானத்தில் ஒரு பெண் வந்து இறங்குகிறார்.  எல்லோரையும்போல் அவருக்கும் குடிபுகல் பகுதியில் வழக்கமான சோதனைகள் முடிந்து விமான நிலையத்தை விட்டுக் கிளம்புகிறார்.  காரில் இல்லினாய் மாநிலத்திலும் அதற்கு அருகில் இருக்கும் மாநிலங்களான டென்னஸி, மிசௌரி மாநிலங்களிலும் இருக்கும் தன் உறவினர்களின் இல்லங்களுக்குச் செல்கிறார்.  மே மாதம் பதினெட்டாம் தேதிவரை இம்மாதிரி இடங்களுக்குச் சென்றவருக்கு ஏதோ உபாதை ஏற்பட்டு இல்லினாய் மாநில மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அட்மிட் ஆகிறார்.  அப்போது அங்கு அவருக்கு நடந்த பல மருத்துவ சோதனைகளில் மருந்துகளுக்கு எளிதில் கட்டுப்படாத XDR-TB என்னும் ஒரு வகைக் காச நோய் இருப்பது தெரிய வருகிறது.  காச நோய் மட்டுமல்ல, இம்மாதிரி கிருமிகளால் பரவும் எந்த நோய் என்றாலும் அமெரிக்கா பதைபதைத்துவிடும்.  போன வருடம் எபோலா என்ற கொடிய உயிர்கொல்லி நோய் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அங்கிருந்து வரும் பயணிகள் மூலம் பரவுவதைத் தடுக்க அமெரிக்கா வெகுபாடு பட்டது.  இப்போது இந்தப் பெண் கொடிய வகை டி.பி.யைத் தனக்குள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும் அது அமெரிக்காவில் மற்றவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன.  அந்தப் பெண்ணுக்குப் பரிசோதனைகள் செய்த மருத்துவர்கள் உடனேயே அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்கள்.  அந்த மருத்துவமனையிலேயே மற்ற நோயாளிகளிடமிருந்து தனிமைப்படுத்தபட்ட அந்தப் பெண் ஒரு சில தினங்களிலேயே மேரிலாந்து மாநிலத்திலுள்ள தேசிய உடல்நல நிறுவனத்திற்கு (National Institute of Health) மாற்றப்பட்டு அங்கும் தனிமைப்படுத்தப்பட்டார்.

இவரை மற்ற எல்லாக் குடிமக்களிடமிருந்தும் தனிமைப்படுத்தி அவரிடமிருந்து வேறு யாருக்கும் வியாதி பரவுவதைத் தடுத்த பிறகு இதுவரை இவருக்கு அருகில் இருந்தவர்கள் யாருக்காவது இவரிடமிருந்து வியாதி பரவியிருக்கிறதா என்று கண்டறியப் பல முயற்சிகளைக் கையாண்டனர். முதலில் அவர் அமெரிக்காவிற்கு பயணம் செய்த விமானக் கம்பெனிக்குத் தெரிவித்து இந்தப் பெண்ணோடு பயணம் செய்த எல்லாப் பயணிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தும்படி யோசனை கூறப்பட்டது.  பின் அவர் சந்தித்த உறவினர்கள், மனிதர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுரை கூறப்பட்டது.

இந்தப் பெண்ணோடு விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு இந்த வியாதி வருவதற்குரிய வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றாலும் வருவதற்குரிய வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாதாம்.  தொத்து வியாதியால் பீடிக்கப்பட்டவர்களோடு நீண்ட தூரம் விமானத்தில் பிரயாணம் செய்தவர்களுக்கு வியாதி பரவியிருக்கிறதாம்.  அதனால்தான் அத்தனை பயணிகளையும் மருத்துவ சோதனைகளுக்கு உள்ளாக்குகிறார்களாம்.  இந்த வகைக் காச நோய், ஃப்ளூ, தட்டம்மை போன்ற வியாதிகளைப் போல் எளிதாக மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பு இல்லையென்றாலும் அவரோடு நெருங்கிப் பழகிய உறவினர் போன்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பு இருக்கிறதாம்.

பொதுவாக அமெரிக்காவிலேயே தங்கிவிடுவதற்குரிய விசா வாங்கிக்கொண்டு அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன் அவர்களுக்கு இம்மாதிரிக் கொடிய நோய்கள் இருக்கின்றனவா என்று அவரவர்கள் நாட்டிலேயே பரிசோதித்த பிறகுதான் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கிறார்கள்.  ஆனால் தினம் தினம் அமெரிக்காவிற்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு இம்மாதிரியான காச நோய் இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்கு இயலாது.  ஏனெனில் இந்தப் பரிசோதனை நீண்ட நேரம் எடுக்கக் கூடியது.  இதை விமான நிலையத்தில் வைத்துப் பார்க்க முடியாது.

காச நோயுள்ள பெண்ணோடு தொடர்பு கொண்டிருந்தவர்களை சில மணி நேரங்களிலேயே தொடர்பு கொண்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தினார்கள்.  அதில் எத்தனை பேருக்கு வியாதி பரவியிருக்கலாம் என்ற விபரத்தை வெளியிடவில்லை.  இப்படி சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களை இன்னும் பத்து வாரங்களில் மறுபடியும் சோதிப்பார்களாம்.  ஏனெனில் முதலில் வியாதி இருப்பதற்குரிய  அறிகுறி இல்லையென்றாலும் பின்னால் வருவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.

கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்க தேசிய உடல்நல நிறுவனம் இம்மாதிரியான கடும் நோயாளிகள் இருபது பேரைக் குணப்படுத்தியிருக்கிறதாம்.  வியாதியின் அறிகுறிகள் வெளியே தெரியாமல் உள்ளேயே இருந்தாலும் அவர்களுக்கும் சிகிச்சை கொடுக்கிறார்களாம்.  வியாதி பலருக்குத் தொற்றுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை.

இந்தியாவிலிருந்து வந்திருக்கும் பெண் மருத்துவமனையில் எல்லோரிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.  அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நர்சுகள் அனைவரும் கையுறைகள், முகமூடிகள், உடல் முழுவதையும் மூடிக்கொள்ளும் உடைகள், கண்களைப் பாதுகாக்கும் சாதனங்கள் ஆகியவற்றை அணிந்துகொள்ள வேண்டும்.  இத்தனை பாதுகாப்பிற்குப் பிறகும் இவர்கள் வருடத்திற்கு ஒரு முறை பரிசோதிக்கப்படுகிறார்கள்.

இந்தப் பெண்ணை அவர் முழுவதுமாகக் குணமடைந்த பிறகே மருத்துவமனையிலிருந்து அனுப்புவார்கள்.  டி.பி.யை குணப்படுத்த நான்கு மருந்துகள் வேண்டுமாம்.  இந்த வகை காச நோயைக் குணப்படுத்த இன்னும் சில மருந்துகள் வேண்டும் என்பதோடு அதிக நாட்களும் எடுக்குமாம்.  இந்தப் பெண் பல மாதங்கள் வரை மருத்துவமனையில் இருக்க நேரிடலாமாம்.  இதற்கு எக்கச்சக்க செலவு ஆகலாம் என்கிறார்கள்.  ஆனால் இந்தப் பெண்ணிடம் எதையும் வசூலிக்க மாட்டார்களாம்.  இம்மாதிரியான நோயாளிகள் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அந்த நாட்டின் அரசிடமிருந்தும் எந்தப் பணமும் வசூலிப்பதில்லையாம்.  பொதுவாக மருத்துவச் செலவுகளுக்கு நிறையச் செலவாகும் அமெரிக்காவில் இந்த தேசிய உடல்நல நிறுவனத்தில் எல்லோருக்கும் மருத்துவ வசதி இலவசம்.  நாட்டில் வைரசுகள் பரவுவதைத் தடுக்க அமெரிக்கா எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் இவை.

எப்போதுமே அமெரிக்கர்கள் வைரசுகள், பாக்டீரியாக்கள் தங்களிடம் வந்து சேர்ந்துவிடக் கூடாதென்று மிகவும் ஜாகிரதையாக இருப்பார்கள்.  சூப்பர்மார்க்கெட்டுகளில் கிருமி கொல்லி மருந்து தெளித்த காகித டவல்களை எல்லா இடங்களிலும் வைத்திருப்பார்கள்.  அங்கு வாங்கும் சாமான்களை ஒரு சிறிய வண்டியில் வைத்து எடுத்துச் சென்று கடைசியில் பணம் கட்டி எடுத்து வரலாம்.  அந்த வண்டிகளைத் தொடுவதற்கு முன் மேலே கூறிய டவல்களைக் கொண்டு அவற்றைச் சுத்தப்படுத்திவிட்டுத்தான் அந்த வண்டிகளைத் தொடுவார்கள்.  ஒரு முறை ஒரு அமெரிக்கப் பெண்ணிடம் ‘இந்தியாவில் நாங்கள் கையால் சாப்பிடுவோம்’ என்றபோது அந்தப் பெண்ணுக்கு அப்படியொரு ஆச்சரியம்.  ‘எதை எதையெல்லாமோ தொட்ட கையால் எப்படி உணவைத் தொட்டுச் சாப்பிடுவது?’ என்று அந்தப் பெண் கேட்டாள்.  ‘சாப்பிடுவதற்கு முன் கைகளை நன்றாகக் கழுவிவிட்டால் போயிற்று’ என்று நான் சொன்னதை அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளவில்லை.  அலுவலகத்தில் யாருக்காவது தடுமன் பிடித்தால் ‘அது போகும்வரை தயவுசெய்து வேலைக்கு வராதீர்கள்’ என்பார்கள்.  தடுமன் பிடித்தவர்கள் மற்றவர்களுக்கு எளிதாக அதைக் கொடுத்துவிடுவார்கள் என்பதால் இப்படிக் கேட்டுக்கொள்வார்கள்.  அதிலும் கணினியில் வேலைபார்ப்பவர்கள் வீட்டிலிருந்துகொண்டும் வேலைபார்க்கலாம் என்பதால் இப்படி கேட்டுக்கொள்ள வசதியாக இருக்கிறது.

அமெரிக்கர்கள் பிறந்ததிலிருந்தே இப்படி எல்லா விஷயத்திலும் கிருமிகள் பற்றி ஜாக்கிரதையாக இருப்பதால் அவர்களுக்கு நோய் தடுப்புச் சக்தி மிகவும் குறைந்துவிடுகிறது.  அதனால் இன்னும்  ஜாக்கிரதை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பிறகு தடுப்புச் சக்தி மேலும் குறைகிறது.  சிறு வயதில் குளத்துத் தண்ணீரைக் குடித்து வளர்ந்த எனக்கு நல்ல எதிர்ப்புச் சக்தி இருந்தது.  அமெரிக்கா வந்த பிறகு அது எவ்வளவோ குறைந்துவிட்டது.  தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக இயற்கையாகவே தங்களுக்கிருந்த எதிர்ப்புச் சக்தியை இழந்துவிட்டு இப்போது தங்களைக் கிருமிகளிடமிருந்து காத்துக்கொள்ள என்னென்னவோ செய்கிறார்கள்.  முதலிலேயே குழந்தைகளிடம் கொஞ்சம் வளர்ப்புச் சக்தியை வளர்த்திருக்கலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *