(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 17

“திரைப்படப் பாடல்களில் ஈர்ப்பு”

அவனுக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன், வாலி ஆகியோரின் திரைப்படப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். கவிஞர் வாலியின் தனிப்பாடல்களில் “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்”, “ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும்” போன்றவை அவனுக்குப் பிடித்தமானவை. அவனது கிராமத்தில் ஒருவர் தினமும் காலை வேளையில் ஒவ்வொரு வீடாக இந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டே வருவார். அவனும் அந்தப் பாடல்களை ரசித்துக் கொண்டே அவர்பின்னால் சில வீடுகள்வரைத் தொடர்ந்து செல்வான். அந்தப் பாடகர் வள்ளலாரைப் போல வெள்ளை உடை அணிந்திருப்பார். நெற்றியில் திருநீறும், புருவ மத்தியில் சந்தனப் பொட்டும், கும்குமமும் இருக்கும். கழுத்தில் ஒரு ருத்ட்ராக்ஷ மாலையும் உண்டு. வலது கையில் ஒரு அலுமினியத் தூக்கு தொங்கிக் கொண்டிருக்கும். அதில்தான் ஒவ்வொரு வீட்டிலும் கிடைக்கும் அரிசியை வாங்கிப் போட்டுக் கொள்வார். அருணகிரிநாதரின் “முத்தைத்திரு பத்தித்திரு” பாட்டை அவர் பாடும்பொழுது கண்களை மூடிக்கொண்டு கேட்டால் T.M. சௌந்தரராஜன் பாடுவது போலவே இருக்கும். தமிழ் வார்த்தைகளை அத்தனை அழகாக அவர் உச்சரிப்பர். திரைப்படத்தில் இருந்தும் பக்திப் பாடல்களை அவர் பாடுவார். “கையில் ஒரு கிடிக்கியை” வைத்துத் தாளம் தப்பாமல் வாசித்துக்கொண்டே பாடுவார். பின்னாளில் அவரை மையமாக வைத்து “தெருப்பாடகன்” என்ற சிறுகதையை அவன் எழுதினான். அவரது பாடல்களைக் கேட்டுக் கேட்டுத்தான் திரைப்படப் பாடல்களில் அவனுக்கு ஈர்ப்பு வந்தது.


அவனுடைய வீட்டில் வானொலிப் பெட்டி கிடையாது. அவனது வீட்டிற்கு கிழக்கில் நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் அவனது நண்பன் “ரகு”வின் வீட்டிலும் , நேர் எதிர்ப் புறத்தில் இருக்கும் மற்றொரு நண்பன் “சுரேஷ்” வீட்டிலும் பெரிய “மர்பி” ரேடியோ எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். காலையில் கர்னாடக சங்கீதமும், மாலையில் “விவித பாரதி” நிகழ்ச்சியில் திரைப்படப் பாடலும், இரவில் பத்து மணிமுதல் பதினொரு மணிவரை நல்ல கர்நாடக சங்கீதக் கச்சேரிகளும், ஞாயிறு தோறும் மாலை “வானொலி அண்ணா கூத்தபிரானின்” சிறுவர் நிகழ்ச்சியும், மாலை நாலுமணி முதல் ஐந்து மணிவரை திரைப்படப் பாடலும் வைப்பார்கள். அவன் வீட்டிற்கும் அந்தப் பாடல்கள் நன்றாகக் கேட்கும். அவன் அவனுடைய வீட்டின் வாயில் திண்ணையில் அமர்ந்தபடி அந்தப் பாடல்களைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்பான். சில வேளை களில் அவன் அந்த நண்பர்களின் வீட்டிற்கே சென்று பாடல்களைக் கேட்பதுண்டு. பாடல்களில் உள்ள கவித்துவத்தைத் தானே பாடிப் பாடி ரசிப்பான். ஆற்றுக்குக் குளிக்கச் செல்லும் பொழுதும், பள்ளிக்குச் செல்லும் பொழுதும் நல்ல திரைப்பாடல்களை மனதிற்குள்ளே ரசித்துப் பாடியபடியே செல்வது அவனுக்குப் பழக்கம்.

கிராமத்தில் பார்த்த நாடகங்கள்

அவனைவிட வயதில் பெரிய நண்பர்கள் சேர்ந்து அந்த கிராமத்தில் “என்னதான் முடிவு”, மெழுகுவர்த்தி, “பங்களூரில் பிரும்மச்சாரிகள்” போன்ற நாடகங்களை நடத்தினர். “என்னதான் முடிவு” என்ற நகைச்சுவை நாடகத்தை எழுதி இயக்கியவர் “கண்ணன்”சார். இவர் சிறிதுகாலம் திலகர் வித்யாலயம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். எழாபுரம் தெருவில் அரிசி அப்பளம் வியாபாரம் செய்து வந்த குத்தாலம் ஐயரின் மைத்துனர்தான் இந்தக் “கண்ணன்” என்பவர். வேடிக்கை வேடிக்கையாகப் பேசும் குணம் இவருக்கு இருந்தது. அது “என்னதான் முடிவு?” நாடகத்திலும் பிரதிபலித்தது. அதன் பிறகு மெழுகுவர்த்தி, “பெங்களூரில் பிரும்ம சாரிகள்” போன்ற நாடகங்களும் அவன் குடியிருந்த குத்துக்கல் தெருவிலேயேதான் நடந்தது. மூன்று பையன்கள் ஒரு பெண்ணைக் காதலிப்பார்கள். அந்தப் பையன்களின் அப்பவே அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு விடுவார். இந்த ஒரு வரிக் கதையை நல்ல நகைச்சுவையோடு சொன்ன நாடகம் தான் “பெங்களூரில் பிரும்மச்சாரிகள்”. இந்த நாடகங்களில் சாமிநாதன், V. குருசாமி, H. குருசாமி, சங்கரமணி, பேப்பர் ராமலிங்கம், ராமலிங்கம் போன்றவர்கள் நடித்தனர். இதில் H. குருசாமி, சங்கரமணி இருவரும் பெண்வேடம் போட்டு மிகச் சிறப்பாக நடித்திருந்தது அவனுக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது.

amvs
இந்த நாடகங்களுக்கு இசை அமைத்தவர் ” C. S. கண்ணன். இவர் பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் அவர்களின் மகன். இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ் இருவரில் “சங்கர்” இவருக்குச் சித்தாப்பா. இவர் பிறந்தது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூருக்குப் பக்கத்தில் இருக்கும் “சிந்தாமணி அக்ரஹாரம்”. சி.ஆர். சுப்புராமன் அவர்கள் இசையமைத்த கடேசிப் படம் தியாகராஜ பாகவதர் நடித்த “தேவதாஸ்”. அந்தப் படம் வெளியாகும் முன்பே 1952ம் வருடம் சி.ஆர்.சுப்புராமன் காலமாகிவிட்டார். அந்தப் படத்தின் பின்னணி இசைச்சேர்ப்பு வேலைகளை சி.ஆர். சுப்புராமனிடம் உதவியாளர்களாக வேலை செய்து வந்த எம்.எஸ். விஸ்வநாதனும், T. K. ராமமூர்த்தியும்தான் பூர்த்தி செய்த்தனர்.

தந்தை இறந்த பின்பு சென்னையில் மூன்று வருடங்கள் இருந்த பின்பு, சி.எஸ்.கண்ணனின் தாயாரின் மூத்த சகோதரியின் கணவரும், சிங்கம்பட்டி கிராமத்தின் கணக்கையருமான “வேங்கட்ராமையரின்” அழைப்பின் பேரில் கல்லிடைக்குறிச்சிக்கு வந்து விட்டனர். சி.எஸ். கண்ணன் தேரடித்தெருவில் இருந்த சரஸ்வதி பள்ளியிலும், திலகர் வித்யாலயம் பள்ளியிலும் கல்வி கற்றிருக்கிறார்.

“சிறுவயதில் கிரிகெட் விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்ததால் திலகர்வித்யாலயம் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்கள் வீ. சங்கரராமன், காசிராமன் ஆகியோர்தான் தனக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஊக்கம் கொடுத்து உயரே வர வழிகாட்டினார்கள் என்றும், அதன் பிறகு “தாழையூத்தில்” சங்கர் பாலிடெக்கினிக்கில் படிக்கும் பொழுது, இந்தியா சிமிண்ட்ஸ் கம்பெனிக்கு எதிரணியில் K.S. காசிவிஸ்வநாத ஐயரின் “கார்பைடு” கம்பெனிக்காக விளையாடி வெற்றி பெற்று அதிக “ரன்” எடுத்தவன் என்ற பெருமையும் தனக்குக் கிடைத்தது என்றும், அந்த விளையாட்டில் இந்தியா சிமிண்ட்ஸ் சார்பாக விளையாடிய கே.எஸ். ராமன் ( Geneal Manager-India cements) தான் சிறப்பாக “பௌலிங்” செய்ததோடு மட்டுமல்லாது எதிரணியில் நன்றாக விளையாடிய என்னை ரொம்பவும் பாராட்டியதாகவும் ” சி.எஸ். கண்ணன் அவனிடம் பெருமையாகத் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். கல்லிடைக்குறிச்சியில் சு.ராமைய்யா, ஸ்டேட் பேங்க் ஹரிஹரன், சங்கரமணி, சாமிநாதன், சின்னப்பா, ரங்கன், சந்துரு போன்ற நண்பர்கள் சேர்ந்து ஒரு “கிரிகெட்குழு” வைத்திருந்ததாகவும், விகிரமசிங்கபுரம் “ஆர்வி”மில் அணியுடன் போட்டியிட்டு வென்றதாகவும் அவனிடம் சொன்னார். சமையல் வேலை செய்து வந்த “கைலாசம் ஐயர்” சில நாட்கள் தங்களுடன் விளையாடுவார் என்றும், அவர் பந்தை அடித்தால் அது சிக்ஸர்தான். அதனால் அவரை “சிக்ஸர் கைலாசம்” என்றுதான் அழைப்போம் ” என்றும் சொன்னது அவனுக்குப் பெருமையாக இருந்தது. ஏன் என்றால் அவன் “கைலாசமையருடன்” கிட்டிப்புள் விளையாடி இருக்கிறான். பிரமாதமாக விளையாடுவார். அவர் “கிட்டிப்புள்” அடித்தால் அது யார்வீட்டு மொட்டை மாடியிலோ அல்லது தெருக்கோடியிலோதான் சென்று விழும். தெருப்பிள்ளைகளோடு நெருங்கி விளையாரும் குணம் அவருக்கு இருந்தது.

ஒருமுறை எம்.எஸ்.விஸ்வநாதன் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நெல்லை சங்கீத சபாவின் நடந்திருக்கிறது. அப்பொழுது அந்த இசை நிகழ்ச்சிக்குச் சென்று கேட்ட சி.எஸ்.கண்ணனும், நன்னி சங்கரராமையரின் இளைய மகன் எஸ். சாமிநாதனும் தாங்களும் திரைப்படத்தில் பங்கு பெறவேண்டும் என்ற ஆசையில் கல்லூரிக்குக் கட்ட வேண்டிய பணத்தைக் கட்டாமல், அந்தப் பணத்தில் சென்னைக்குச் சென்று சி.எஸ். கண்ணனின் சித்தப்பாவான இசையமைப்பாளர் “சங்கரை”ச் சந்தித்து தங்களையும் அவரது இசைக்குழுவில் சேர்த்துக் கொள்ளக் கெஞ்சி இருக்கிறார்கள். அவர் அவர்கள் இருவரையும் உடனேயே ஊருக்குத் திரும்பிச் சென்று படிப்பை முடித்துவிட்டு வரச் சொல்லி அறிவுரை கூறித் திருப்பி அனுப்பி இருக்கிறார். எப்படியாவது தாங்களும் திரைப்படங்களுக்கு இசை அமைக்கவேண்டும் என்ற ஆர்வத்தில், தங்களது திறமையைக் காட்டவே, ஊருக்குத் திரும்பியதும் சாமிநாதன், சந்துரு, சங்கரமணி போன்ற நண்பர்களுடன் சி.எஸ்.கண்ணன் “ப்ளூ பேர்டு ஆர்கெஸ்ட்ரா” என்ற மெல்லிசைக் குழுவை ஏற்படுத்தியுள்ளார். அந்த மெல்லிசைக் குழுவின் இசை நிகழ்ச்சியை அவன் பலமுறை கேட்டிருக்கிறான். அந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை, சி.எஸ். கண்ணன் வீட்டில் வைத்து நடக்கும். அப்பொழுது அவர்கள் வைத்தியப்பபுரம் தெருவில் குடி இருந்தனர். அவனது நண்பன் சங்கரன் (ரகுவின் அண்ணன்) அந்தக் குழுவில் வயலின் வாசிப்பான். ஒத்திகையைப் பார்க்க அவனை சங்கரன் அழைத்துக் கொண்டு போனான். “நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே” என்ற பாட்டுக்கு ஒத்திகை நடந்தது. சி.எஸ். கண்ணன் சங்கரிடம் ,”இந்த இடத்தில் “தாரார” என்று அழுத்தமாக வயலின் வாசிக்க வேண்டும்” என்று சொல்லிக் கொடுத்தார். அந்தப் பாடல் முழுவதும் கேட்ட பொழுது அவனுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. “பாவை பாவைதான் ஆசை ஆசைதான்” என்ற சுசீலா பாடலுக்கு இடையில் வருகின்ற “பாங்கோஸ்” வாத்தியத்தின் லயம் “சந்துரு” வாசிப்பில் பிரமாதமாக இருந்ததை அவன் நன்றாக அனுபவித்தான். சந்துரு தாள வாத்தியங்கள் வாசிப்பதில் “கை”தேர்ந்தவர். கந்தப்பபுரம் தெரு லக்ஷ்மணனின் அண்ணா அனந்தராமனும், பாவா சங்கரன் மாமாவின் மகன் “கோவை ராமகிருஷ்ணனனும்” T.M.S. குரலுக்கு மிகப் பொருத்தமானவர்களாக இருந்தனர். “கல்லிடை ரமேஷ்” என்ற பெயரில் சாமிநாதன் எஸ்.பி.பி., பி.பி.எஸ். பாடல்களைப் பாடுவார். மாடு கறக்கும் மூக்காண்டியின் சகோதரி சுசீலா பாடல்களை பாடவும் அவன் கேட்டிருக்கிறான். ஒரு திறந்த சத்துரமான பெட்டியின் ஓரத்தில் ஒரு பெரிய கம்பைக் கட்டி, அதிலிருந்து ஒரு கயிற்றை கீழ்முகமாக இறக்கி அந்தப் பெட்டியின் வாய்ப்பகுதியில் கட்டி இருப்பார்கள். அந்தக் கயிற்றின் நடுப்பகுதியை தனது வலது கையால் சங்கரமணி இழுத்து இழுத்து விடும் பொழுது “தொம் ..தொம்..” என்று மெல்லிய குரல் வரும். அது ரசிக்கும் படியாகவே இருக்கும். அந்த வாத்தியத்தின் அமைப்பு அவனுக்கு வேடிக்கையாக இருக்கும். அதை சங்கரமணி ரசித்து வாசிப்பார். இதை அவனுக்கு நண்பன் பிரபுவும் அவனோடு பகிர்ந்து கொண்டான். “அக்காடின், ஆர்மோனியம்” என்று அந்த குழுவினர் கலக்கத்தான் செய்தனர். டைட்டில் பாடலாக “நாளாம் நாளாம் திருநாளாம்” பாடலையும், கச்சேரிக்கு இடையில் “பூமாலையில் ஓர் மல்லிகை” பாடலையும் வாத்தியத்தை மாத்திரம் வைத்து அற்புதமாக இசைப்பார்கள். அப்பொழுதெல்லாம் அவர்களுக்கிருந்த சில வாத்தியங்களை வைத்துக் கொண்டே அசுர சாதனைகளை சி.எஸ்.கண்ணன் குழுவினர் செய்தது “முயற்சி திருவினையாகும்” என்பதற்கான விளக்கமாகவே அவன் புரிந்து கொண்டான்.

ams

திருமணத்திற்குப் பிறகு “கண்ணன் லதா” குழுவினர் என்று மெல்லிசை நிகழ்சிகளை நிறைய ஊர்களுக்குச் சென்று செய்து வந்தனர். சி.எஸ். கண்ணனின் மனைவி “லதா” அருமையாகப் பாடுவார். சுசீலாவின் குரல் அப்படியே இருக்கும். திரைப்படங்களுக்கும் சி.எஸ்.கண்ணன் இசையமத்திருக்கிறார். வெளிநாடுகளுக்கும் தனது குழுவினருடன் சென்று பல இசை நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறார். கண்ணன், லதா தம்பதியருக்கு “ரஷாந்த் அரவிந்த்” என்ற மகன் இருக்கிறார். அவரும் நல்ல இசை ஞானம் உள்ளவர். வீணைக்கலைஞர். திரைப்படங்களுக்கும், சின்னத்திரைத் தொடர்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

சி.எஸ்.கண்ணன்-லதா இசைக்கலைஞர்கள் தமிழ் நாட்டில் ஸ்ரீரங்கத்தில் அம்மாமண்டபம் சாலையில் “மார்ஸ் வின்” (Maar’s Win – School for Music) என்ற பெயரில் ஒரு “இசைப் பள்ளி”யை நடத்தி வருகின்றனர். பதினைந்து வருடங்களுக்கு மேலாக மிகச் சிறப்பாக நடந்துவருகின்ற இந்த இசைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வாய்பாட்டு மற்றும் இசைக்கருவிகளை வாசிப்பதற்கும் கற்றுத்தருகின்றார்கள்.

மிகச் சிறந்த இசைமேதை சி.ஆர்.சுப்புராமன் தனது நாற்பத்தொன்றாவது வயதிலேயே இறைவன் திருவடியை அடைந்தாலும் அவரது சந்ததியர்கள் மூலமாகத் தொடர்ந்து தனது “இசைப் பயணத்தை”த் தொடர்ந்து கொண்டேதான் இருப்பார். அவனோடு சேர்ந்து நீங்களும் கேட்டு இன்புற்றுக் கொண்டுதான் இருப்பீர்கள்.
“பாட்டினைப்போல் ஆச்சர்யம் பாரின்மிசை இல்லையடி” என்ற மஹாகவி பாரதியாரின் வாக்கு சத்தியம் அல்லவா.

18.06.2015 அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அவன், அது , ஆத்மா (17)

  1. “அவன்,அது,ஆத்மா” கட்டுரையில் ஒரு சிறிய திருத்தம். இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் அவர்கள் இருபத்தி எட்டு ஆண்டுகளே வாழ்ந்தார். அவர் 18.05.1924ல் பிறந்து 27.06.1952ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரது கடேசிப் படம் “தேவதாஸ்” தமிழ், தெலுங்கு இரண்டு மொழிப் படத்திற்கும் இசை  அமைத்தார். இரண்டு படங்களிலும் கதாநாயகனாக நாகேஸ்வர ராவும், கதாநாயகியாக சாவித்ரியும் நடித்திருந்தனர். இந்தத் தகவலை அவரது மகனும், இசையமைப்பாளருமான சி.எஸ்.கண்ணன் இன்று(19.06.2015)  என்னிடம் தெரிவித்தார். அவருக்கு நன்றி.
    அன்பன்,
    மீ.விசுவநாதன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *