சு.கோதண்டராமன்

vallavan-kanavu1

காரைக்கால் அம்மையார்

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்

சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்நிறந்திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே

எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.               1

                                                       -அம்மையார்

ஏழு நாட்களில் அமைச்சர் தான் திரட்டிய தகவல்களுடன் அரசரைச் சந்தித்தார். “அந்தப் பாடல்களை இயற்றியவர் புனிதவதி என்ற பெயருடன் காரைக்காலில் ஒரு சமணக் குடும்பத்தில் தோன்றியவர். அவர் சிறுமியாக இருந்தபோது அவர் வீட்டு வாசலில் ஒரு அடியார் உணவு கேட்டு வந்தார். தாயிடமிருந்து அவருக்கு உணவு பெற்றளித்தாள் புனிதவதி. அதன் பின் அடியார் திண்ணையில் அமர்ந்து அங்குள்ள சிறுவர், சிறுமியரைக் கூட்டிக் கதைகள் சொல்லத் தொடங்கினார். அவை ஆலமர்செல்வன் என்னும் தெய்வத்தைப் பற்றியவை. அவை புனிதவதியின் மனதில் ஆழப் பதிந்தன.

புனிதவதியின் பெற்றோர்கள் நாத்திகர்கள் என்பதால் அவர் அதற்கு முன் உலகைப் படைத்துக் காக்கும் இறைவன் ஒருவன் உண்டு என்பதையே அறியாதிருந்தார். அந்தக் கதைகளைக் கேட்ட பின் அவர் இறைவனைப் பற்றியே இரவும் பகலும் சிந்திக்கலானார்.

வயது வந்ததும்    நாகையைச் சேர்ந்த பரமதத்தன் என்ற வணிகனுடன் அவருக்குத் திருமணம் ஆயிற்று. காரைக்காலிலேயே ஒரு தனி வீட்டில் இருவரும் இல்லறம் நடத்தினர். ஒரு நாள் தன் கடைக்குச் சென்றிருந்த அவளது கணவன் இரண்டு மாங்கனிகள் வாங்கி வீட்டிற்கு அனுப்பினான்.

வீட்டு வாசலில் ஒரு அடியார் வந்து, ஈசனைப் போற்றிப் பாடி, உணவு யாசித்தார். புனிதவதி அவருக்குச் சோறு பரிமாறினார். கறியமுதம் எதுவும் சித்தம் ஆகாததால் அதற்கு மாற்றாக, கணவன் அனுப்பிய பழங்களில் ஒன்றை இட்டு அடியவரின் பசி மாற்றி மகிழ்ந்தார்.

வீட்டுக்கு வந்த பரமதத்தன், உணவுடன் கூட மாங்கனியைச் சுவைத்தான். உயர்வான சுவையுடன் கூடியதாக இருக்கவே, இன்னொன்றையும் போடுமாறு கேட்டான். ஈசனடியார்க்குக் கொடுத்து விட்டேன் என்று சொன்னால், நாத்திகனான தன் கணவன் கோபிப்பானோ என்று அஞ்சிய புனிதவதி இந்த இக்கட்டிலிருந்து தன்னைக் காக்குமாறு இறைவனை வேண்டினார். இறை அருளால் அவர் கையில் ஒரு மாங்கனி வந்து சேர்ந்தது. அதைக் கணவனுக்குப் படைத்தார். அது மேலும் அதிகச் சுவையுள்ளதாகவும் வேறுபட்டதாகவும் இருக்கவே அது பற்றி அவன் வினவினான். இறைவன் கொடுத்தது என்னும் செய்தியை அவன் நம்பவில்லை. நிரூபணம் வேண்டினான். இறை அருளால் புனிதவதி மீண்டும் ஒரு பழம் வருவித்தார். இறைவனை நம்பாத அவன் அவளைப் பேய்மகள் என்று கருதி அவளை விட்டு நீங்கிப் பாண்டிநாடு சென்றான். வருடங்கள் பல ஆகியும் அவன் திரும்பாத நிலையில், கணவனே தனக்குக் கதி என்று எண்ணிய அவர் கணவன் இருக்குமிடத்தைத் தேடி விசாரித்துக் கொண்டு சென்றார்.

அங்கு பரமதத்தன் வேறு பெண்ணை மணம் செய்து கொண்டு ஒரு பெண் மகவைப் பெற்றிருந்தான். புனிதவதியார் அவனது வீட்டிற்கு வந்ததும், “பேய் அணங்கே,  எங்களைத் துன்புறுத்தாதே, சென்று விடு” என்று வேண்டி தன் மனைவியுடன் அவரது காலில் விழுந்தான். இதைப் பார்த்த அவளது பெற்றோரும் உறவினர்களும் அவளைப் பேய் எனவே கருதிப் புறக்கணித்தனர்.

அதன் பின் அவர் தன்னைப் பேய் என்று கூறிக் கொள்வதில் இன்பம் அடைந்தார். இறைவனைக் குறித்துப் பாடல்கள் இயற்றிப் பாடிக் கொண்டு ஊர் ஊராகச் சென்றார். பலரும் அவரிடம் அஞ்சி ஓடினர். சிலர் மட்டும் அவரைப் பின் தொடர்ந்து சென்று அவர் கூறும் பாடல்களை எல்லாம் ஏட்டில் எழுதி வந்தனர். இன்று நம்மிடம் வந்துள்ள கவிராயரின் தந்தை அத்தகையோரில் ஒருவர்” என்று சொல்லி முடித்தார் அமைச்சர்.

    அரசர் வியப்படைந்தார். “இதுவரை அவருடைய பாடல்களைக் கேட்டு அளவிலா வியப்பும் மகிழ்வும் அடைந்தேன். இத்தகைய சிறந்த பாடல்களை இயற்றியவர் நிச்சயம் பேயாக இருக்க முடியாது. சேற்றில் பிறந்த செந்தாமரை போல் நாத்திகக் கூட்டத்தில்  தோன்றிய இந்த அம்மையாரை அவரது இயற்பெயர் கொண்டு அழைப்பதும் மரியாதை ஆகாது. இனி அவரைக் காரைக்கால் அம்மையார் என்றே அழைப்போம். அமைச்சரே, காரைக்கால் அம்மையாரைப் போற்றிய மனிதர்கள் யார் யார், எங்குள்ளனர் என்று விசாரியுங்கள்” என்று கட்டளை இட்டார் அரசர்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வளவன் கனவு – 4

  1. புனிதவதி – மாங்கனி – காரைக்காலம்மையார் பற்றி சிறு வயதில் படித்தாலும் 
    பின்னரும் அறிந்தாலும் பேயார் எனும் பெயரை அறியவில்லை. 
    அருமையான தகவல். தெரிந்தது  மகிழ்வாக உள்ளது.
    நன்றி.  இறையருள் நிறையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *