— கவிஞர் காவிரிமைந்தன்.

 

 

V. Dakshinamurti

 

Jeevanadi..இசையெனும் இன்பநதியில் இதயம் மூழ்கிவிட்டால் மனம் இன்பலஹரியில் மோகனம் பாடும்! பாண்டித்துவம் பெற்ற விற்பன்னர்கள் மட்டுமே அனுபவித்துவந்த இசையை, பாமரனும் அனுபவிக்கும்வண்ணம் வழி வகை செய்தது திரையிசையால் மட்டுமே சாத்தியமானது. தமிழ்த் திரையிசை இதுநாள் வரை எத்தனையோ ஜாம்பவான்களைக் கண்டிருக்கிறது! அவர்கள் ஒவ்வொருவரின் பாணியும் தனித்துவம் மிக்கதென்பதும் மறுக்க முடியாதது.

இந்தச் சரித்திரத்தில் இசையமைப்பாளர் வி.தக்ஷிணாமூர்த்தி ஏனைய இசையமைப்பாளர்களால் போற்றிப் புகழ்ந்து வணங்கி மகிழும் ‘மகா’ மனிதர். தமிழ்த்திரையில் இவர் இசை அமைத்த படங்கள் குறைவு என்றாலும் எல்லோரின் இதயங்களிலும் ரீங்காரமிடும் இன்னிசைப் பதிவுகள் இவருடையதாகும்.

அப்படி ஒரு சுகானுபவத்தை இவரின் ஒவ்வொரு பாடலும் தட்டாமல் தந்து விடும். கர்நாடக சங்கீதத்தின் வாயிலாக கவிதை சொல்லும் யுக்தியிது என்று கூட நான் நினைப்பதுண்டு.

காவியக் கவிஞர் வாலி அவர்களின் விரல்களில் வழிந்த வார்த்தை நதியில் அயோத்தி அரண்மனைப் பஞ்சணை … இதோ அலங்கரிக்கப்படுகிறது. சுகராக ஜீவிதம் பேர் விரும்புவர்கள் இப்பாடலைக் கேட்டு மகிழலாம்.

அயோத்தி அரண்மனை பஞ்சணையில்
அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன்
வராத சுகம் இன்று வந்ததென
மடியினில் கிடந்தாள் வைதேகி
[ அயோத்தி அரண்மனை ]

சீதையை ராமன் பாராட்டினான்
சீதா ராமனைத் தாலாட்டினாள்
திரும்பவும் காலம் வென்றதென
தேன் எனும் குரலில் சீராட்டினாள்
[ அயோத்தி அரண்மனை ]

கல்லில் நடந்த ராமனுக்கு
கால்கட்டு போட்டாள் வைதேகி
கண்ணில் கலந்த ராமனுக்கு
கால்கட்டு போட்டாள் வைதேகி
ஒரு நாள் ராமனை உறங்க வைக்க
பலநாள் ஜானகி தவமிருந்தாள்
ரகுபதி ராகவன் துயில் கொண்டான்
ரசனையை ஜானகி பயில்கின்றாள்

அயோத்தி அரண்மனை பஞ்சணையில்
அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன்
வராத சுகம் இன்று வந்ததென
மடியினில் கிடந்தாள் வைதேகி

அற்புத வரிகளோடு கவியாட்சி நடக்க, இசையங்கே முடிசூட்டு விழா நடத்திவிடுகிறது. பி.சுசீலாவின் தெய்வீகக் குரலில் தேன் வந்து விழுகிறது. தென்றல் ஒன்று நடந்து வருவதைப் போன்ற சுகம் இப்பாடலைக் கேட்கும்போது உணரலாம்.

ஜீவநாடி திரைப்படத்தில் நம் ஜீவன் தொடும் வி.தக்ஷிணாமூர்த்தி இசையில் வாலி அவர்களின் வரிகள் நம்மை அயோத்திக்கு அழைத்துச் செல்கின்றதல்லவா?

“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

பட: ஜீவநாடி ( 1970 )
இசை: வி. தக்க்ஷிணாமூர்த்தி
பாடல்: வாலி
குரல்: பி. சுசீலா
காணொளி: https://youtu.be/dRd14z6MOTo

https://youtu.be/dRd14z6MOTo

“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *