நாகேஸ்வரி அண்ணாமலை.

மனித இனத்தில் ஆண், பெண் என்ற பாகுபாட்டைத் தவிர வேறு ஜாதிப் பிரிவுகள் இல்லை என்ற கருத்து தொன்றுதொட்டு வழக்கில் இருப்பது. ஆனால் இப்போது முன்னர் குறிப்பிட்ட இரண்டு பிரிவுகளைத் தவிர இன்னும் ஐந்து பிரிவுகள் (LGBTQ) வந்துவிட்டன. இவர்கள் ஆண் இனத்திலும் சேர முடியாதவர்கள்; பெண் இனத்திலும் சேர முடியாதவர்கள். இதைக் காலத்தின் கோலம் என்பதா அல்லது மனிதன் செய்த தவறுகளால் வந்த விளைவுகள் என்பதா? எது எப்படியாயினும் இவர்கள் தங்கள் உரிமைகளுக்காக வெகுவாகப் பாடுபட வேண்டியதாயிருக்கிறது.

தன்பால் ஈர்ப்பினர்களுக்கு இப்போது அமெரிக்காவில் அவர்களுக்குரிய உரிமைகள் கிடைத்திருக்கின்றன. ஒரு வழியாக அமெரிக்க உச்சநீதிமன்றம் தன்பால் ஈர்ப்ப்பினர்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்வதைச் சட்டமாக்கியிருக்கிறது. பல தசாப்தங்களாக இதற்குத் தீர்வு வேண்டியும் இத்தகைய திருமணங்களை எதிர்த்தும் அமெரிக்கர்கள் போராடி வந்தனர். உச்சநீதிமன்றம் வரை இந்தப் போராட்டம் சென்றது. இப்போது உச்ச்நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளில் ஆறு பேர் தன்பால் ஈர்ப்பினர்கள் திருமணம் என்ற பந்தத்தில் இணையலாம் என்று கூறியிருப்பதால் இம்மாதிரியான சேர்க்கையை அமெரிக்கா சட்டப்படி ஒப்புக்கொண்டுள்ளது என்று உறுதியாகக் கூறலாம்.

எத்தனை போராட்டங்களுக்குப் பிறகு தன்பால் ஈர்ப்பினர்கள் தங்களுக்குரிய உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்! இரண்டாவது உலக யுத்தத்தின்போது ஜெர்மானியப் படைகளின் நடமாட்டத்தைக் கண்டறிய பிரிட்டனைச் சேர்ந்த ஆலன் டூரிங் (Alan Turing) என்னும் பெரிய கணித மேதை ‘ஜெர்மானியர்களின் சங்கேத மொழியை உடைத்தார். இதற்கென்று ஒரு எந்திரத்தை உருவாக்கினார். இவருடைய இந்த முயற்சியால்தான் பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா போன்ற நேச நாடுகள் ஜெர்மன் படைகளின் முன்னேற்றத்தை முறியடிக்க முடிந்தது. இவருடைய இந்தக் கருவிதான் பின்னால் கணினியை விஞ்ஞானிகள் உருவாக்கக் கருவாக அமைந்தது. இவர் மனித குலத்திற்கு இவ்வளவு பெரிய சேவை செய்திருந்தாலும் அரசு இவர் ஒரு தன்பால் ஈர்ப்பினராக இருந்ததால் இவர் சாதனையை அங்கீகரிக்கவில்லை. அது மட்டுமல்ல, இவரை சிறையில் அடைப்பதற்கும் தயாராக இருந்தது. அவர் சிறை செல்வதைத் தவிர்க்க வேண்டுமென்றால் ஹார்மோன் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது.

ஹார்மோன் சிகிச்சையினால் அவருக்கு நிறையப் பக்க விளைவுகள் உண்டாயின. இவற்றின் துன்பம் தாங்காமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். என்ன கொடுமை பாருங்கள் (ஒரு ஆப்பிள் பழத்தில் விஷத்தைத் தட்விச் சாப்பிட்டு இறந்தார்; இதனாலேயே கடிபட்ட ஆப்பிளை ஆப்பிள் கம்பெனி தன் சின்னமாக வைத்துக்கொண்டது என்று யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறேன்). மனித குலத்திற்கு அவர் செய்த சேவைக்கு அவருக்குக் கிடைத்த வெகுமதி சிறைவாசம் அல்லது கட்டாய ஹார்மோன் சிகிச்சை. அப்போதுள்ள மனிதர்களுக்கிருந்த இந்த விஷயங்கள் பற்றிய குறைந்த அளவு அறிவால் ஆலன் டூரிங் போன்றவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாயினர். ‘பூமியை சூரியன் சுற்றவில்லை. பூமிதான் சூரியனைச் சுற்றிவருகிறது’ என்ற மகத்தான கண்டுபிடிப்பை உலகுக்கு வழங்கிய கோப்பர்னிகஸுக்குக் கிடைத்த தண்டனை பற்றி நம் எல்லோருக்கும் தெரியுமல்லவா?

ஆழமான மதநம்பிக்கை உள்ள பல அமெரிக்கர்களுக்கு திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் நடப்பதான உறவே தவிர இரு ஆண்களுக்கும் இரு பெண்களுக்கும் இடையே நடக்கும் உறவல்ல என்பது வேதவாக்கு. ஏனென்றால் கிறிஸ்தவர்களின் வேதப் புத்தகமான பைபிளில் இப்படிக் கூறப்பட்டிருக்கிறதாம். காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஏன் மனிதன் நினைப்பதில்லை? முதலில் பைபிளில் கூறப்பட்டிருப்பதெல்லாம் இறைவன் இட்ட கட்டளைகள் என்று ஏற்றுக்கொள்வதற்கில்லை. இயேசு காலத்திற்குப் பிறகு அவருடைய சிஷ்யர்கள் எழுதியவற்றின் தொகுப்புதான் பைபிள். இந்த வரலாற்று உண்மையை ஏற்க மறுப்பவர்களும் காலத்திற்கேற்ப மனிதன் மாற வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டேயாக வேண்டும். அந்தக் காலத்தில் இருந்த சமூக அமைப்புகள், அரசுகள், உணவு முறைகள் இப்போது இல்லை. அந்தக் காலத்திலும் தன்பால் ஈர்ப்பினர்கள் ஒரு சிலர் இருந்திருக்கலாம். இப்போது பெரிய சதவிகிதத்தினர் தன்பால் ஈர்ப்பினர்களாக இருக்கிறார்கள். இதற்கு மனிதன் இப்போது உபயோகப்படுத்தும் பல ரசாயனப் பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று நான் திடமாக நம்புகிறேன்.

இதற்கு விஞ்ஞான ரீதியாக இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை ஆயினும் பலர் இதில் உண்மை இருப்பதாக ஒப்புக்கொள்கிறார்கள். நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் நிறைய வேதியல் பொருள்கள் கலந்திருப்பதால் மனித உடம்பில் ஹார்மோன்களின் விகிதம் வேறுபடுகிறது. இதுதான் ஆண், பெண் என்ற பாகுபாட்டிற்கு மேலும் சில பாகுபாடுகள் தோன்றக் காரணமாக இருக்கிறது.

தன்பால் ஈர்ப்பினர்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி அவர்கள் பல உரிமைகளைப் பெறுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. மனிதன் ஒரு சமூகமாக வாழ விரும்புவதற்கு மனிதன் தனி மரமல்ல என்பார்கள். அதுபோல் அவன் வாழ்க்கையை நடத்திக்கொண்டு போவதற்கும் துணை தேவைப்படுகிறது. இதை ஏன் சமூகம் அவர்களுக்கு மறுக்க வேண்டும்? அவர்களால் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாதாகையால் குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்க்கிறார்கள். இரண்டு ஆண்களே அல்லது இரண்டு பெண்களே பெற்றோர்களாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் சிறப்பாக வளர முடியாது என்பது சிலரின் வாதம். ஆணான தந்தையும் பெண்ணான தாயும் பெற்றோர்களாக இருக்கும் குடும்பங்களில் வளரும் குழந்தைகளில் எத்தனை பேர் சிறப்பான வாழ்க்கையைப் பெறுகிறார்கள்? ஆண் ஆதிக்கம் செலுத்தும் குடும்பங்கள் பலவற்றில் குழந்தைகள் திசைமாறிப் போகின்றனவே. பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக இருந்து அன்போடும் பாசத்தோடும் குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதுதான் முக்கியம்.

தன்பால் ஈர்ப்பினர்கள் தங்களுக்கென்று ஒரு துணையைத் தேடிக்கொள்வதால் அவர்களுக்கு வாழ்க்கையில் பலவிதத்தில் தார்மீக ஆதரவு கிடைக்கிறது. வாழ்க்கையில் சோதனைகள் ஏற்படும் போதெல்லாம் அவற்றைத் தாங்கிக்கொள்ள, அவற்றைப் பகிர்ந்துகொள்ள ஒரு துணை இருக்கிறது. கடைசிக் காலத்தில் அவர்களின் வயோதிகத்தில் பங்கு பெற ஒரு துணை இருக்கிறது. தன்பால் ஈர்ப்பினர்களின் திருமணங்களை எதிர்ப்பவர்கள் இதை எல்லாம் ஏன் எண்ணிப் பார்ப்பதில்லை? அவர்களும் நம்மைப்போல் மனிதர்கள்தானே. நமக்கிருக்கும் இந்த உரிமைகளை அவர்களுக்கு ஏன் மறுக்க வேண்டும்?

அமெரிக்க உச்சநீதிமன்றம் காட்டிய பாதையை மற்ற நாடுகளும் – இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் நாடுகள் உட்பட – பின்பற்றும் என்று மனமார நம்புவோம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஜாதி இரண்டல்ல, வேறும் உண்டு

  1. காலத்திற்கேற்றாற்போல மாறுபடுவது இவ்விஷயத்தில் சரிவராது. உலகில் எல்லா இடங்களிலும் தாங்கள் குறிப்பிடும் தன்பாலினம்— நட்பு ரீதியாக என்பதுபோல வாழலாமே தவிர தாங்கள் குறிப்பிட்டதுபோல அல்ல.
    குறிப்பாகவே மக்களுக்கு வேறு நாட்டிலிருந்து வந்த பொருள் என்றாலே ஒரு தனிப்பட்ட மோகம்.(தனது வீட்டிலிருக்கும் சமையலைவிட அடுத்தவர் வீட்டு சமையல் ருசி அதிகம்)
    அது அமெரிக்காவிற்கும் பொருந்தும்.(பண்பாட்டிற்கும் சேர்த்துத்தான்) இதுபோல அமெரிக்காவில் உள்ளது எனச் சொல்லித்தான் அனைத்து விஷயங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இன்னமும் இதிலும் மாற்றம் ஏற்பட்டால் உலகநாடுகள் தாங்காது.தயவு செய்து இதுமாதிரியான கருத்து எதற்காக மக்கள் மனதில் எழ வேண்டும் என்பதை எழுதுங்கள்.
    சோதனைகள் வாழ்க்கையில் எல்லோருக்கும் பொதுவானதுதான்.அதைக் கடக்க இது மருந்தாகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *