கதை கதையாம் காரணமாம் …

0

கவிஜி.

கண்ணுக்கெட்டும் தூரம் வரை மணல்வெளிகள். மணல்வெளிகள் சொல்லும் தத்துவத்தில் ஒட்டாத பாதங்களைக் காண முடியும். சூரியன் காணாத மணல்வெளிகளில் காற்றின் கண்கள். நற நறத்தே கிடக்கின்றனமணல்களின் படிமங்களாய் வழுக்கிக் கொண்டே செல்லும் இரவுகளின் வீரியத்தில் நிழல்கள். தன்னிறம் மாறுவதை ஹைக்கூவாக உணர்ந்த பின் கிடைக்கும் புதுக் கவிதையாக, ஒரு மரபு மாந்திரீகம் விதைக்கிறது. எப்போதும் இரவென்றால் எப்படி இருக்கும் பாலைவனம்!!

வனங்களில், கணிக்க முடியாத வானம் கொண்ட பாலைவனம் குளிர்களின் கம்பிளியை போர்த்திக் கொண்டே இருக்கிறது. கடுங்குளிர் தேகம் நடுக்க, நடுவினில் வளைந்து வளைந்து செந்தளிராய் மூட்டிய நெருப்பு ஒரு அருகாமை சூட்டை சுற்றிலும் தெளித்துக் கொண்டிருக்கிறது. உடல் முழுக்க மணல், அல்லது மணல் முழுக்க உடல். கடல் தவிக்கும் கண்களை நெருப்பு மூட்டிய நிஜமாய் நியந்தா சுமந்து கொண்டிருந்தாள். எதிரே… எல்லாம் தெரிந்தும் தெரியாமல் கவிஜி.

காற்றும் கவிதையும் கதை பேசும் தருணமாக, கண்கள் நான்கும் மணல் கொண்ட புதையலாய் புதைந்து நிமிரும் புதுப் பயணம் சுமந்து கிடக்கிறது. விரல் பிடித்துக் கொண்ட வேகத்தில் நிலவு சற்று நிழல் தேடியது மேகத்துக்குள். இருக்கும் இருட்டில் இன்னும் சிவப்பாய் நியந்தா இனி தாங்காது என்பது போல தாங்கி கொள்ளும் சூட்சுமம் வரைந்தான் கவிஜி. வரைவதில் கிறுக்கல்கள் கொண்ட பித்தனைப் போல வரைந்தாலும் அது அவள்தானே என்பதை போல ஒரு பிக்காசோ அது.

மெல்லிடை படிய, மார்புக்கவளம் விரிய, மை விழிக்காரி நியந்தா. மௌன மொழியில் கத்திக் கொண்டது நாணம் கடந்த பின்னிரவு துவக்கம். கவிஜி மெல்ல பின்னால் சரிய, மேல் நோக்கி சரிந்து கொண்டே இதழ் வருடும் இதழை மிக மிக அருகினில் கொண்டு வந்தாள் நியந்தா. ஒரு மணல் காற்று வந்து கடந்து போனது. முதுகினில் கொஞ்சும் சாரலாய் மணலை அள்ளி வீ சிப் போன நொடியில் உள் வாங்கிய முதுகு வெளியானது, சுவாசம் கூடிய அவனுக்கு.

கண்கள் நான்கும் பார்த்தன. அவள் இதழ் விரியக் கிசுகிசுத்தாள்.

“அது என்னடா பேர் கவிஜி?”

கவிஜி சட்டென முகம் உயர்த்தி அவள் இதழில் ஒரு முத்தம் பதித்தான்.

“நான் கேட்டுட்டு இருக்கேன்ல, அதுக்குள்ளே என்ன அவசரம்?”

மீண்டும் ஒரு முத்தம்.

அவள் சப்பென்று ஒரு அறை வைத்தாள்.

இம்முறை கன்னம் கடித்தான்.

மீண்டும் முத்தம்.

அடிக்க கை எடுத்த அவள் அவனின் தலை கோதினாள். இம்முறை இன்னும் ரகசியமாக கேட்டாள்.

“அது ஏன் கவிஜி? பொண்ணு பேர் மாதிரி இருக்குடா”

“ஏன் நல்ல இல்லையா?”

“இருக்கு”

“பிடிக்கலையா?”

“உன்னையே பிடிச்சிருக்கு, பேர் பிடிக்காதா?”

“சரி, ஏன்னு சொல்றேன் கண்ண திறந்துகிட்டே. இதோடு இதழ் பதி. அப்போ தான் சொல்லுவேன்.”

“அப்போ நீ சொல்லவே வேண்டாம். போடா. இவன் பெரிய கவிஞன்”

“நான் பெரிய கவிஞன்னு யார்டி சொன்னா பிசாசு?”

“என்ன? பிசாசா?”

“ஆமா, இப்டி முடிய விரிச்சு போட்டு இருந்தா பிசாசு தான்.”

அவர்கள் மூன்று முறை உருண்டு சற்று தள்ளி குளிருக்குள் சென்று விட்டார்கள். தீ நாக்கின் எச்சில் குளிரை விரும்பியது போல, தீக்குள் விழுந்த சிறு மணல் ஒன்றின் உள்ளே தீர்த்த கடல் கொண்ட தெற்கு மூளை மறந்த வரியாக.

“டேய்! கை எங்க போகுது கொன்னுடுவேன்.”

“ஆமா, உலகமே அழிஞ்சு போய்டுச்சு, என்னையும் கொன்னுட்டு என்னடி பண்ணுவ? அழகி.”

சற்று விலகிக் கிடந்தவள். உடல் நடுங்கியவளாய் ஓடி வந்து அணைத்துக் கொண்டு முகம் முழுக்க முத்த மழை பொழிந்தாள். ஈர முத்தங்களுக்கிடையில் சிக்கிய மணல் துகள்கள் மோட்சம் போகும் என்பது இரவின் கூப்பாடு/ காற்றை கொண்டு வேவு பார்த்த மனம் குளிர்ந்தது.

வெப்பம் கொண்ட தேகம். தெப்பம் ஆகும் தாகும். மொத்த முத்தம். எச்சில் கத்தும் கூந்தல் நுழைந்த விரல்களில். இரவுச் சூரியன். பின் கழுத்தில் நுழைந்த முகத்தினில் இரு நிலாக்கள்.

“இந்த உலகமே இன்னைக்கு இல்ல. நீ நான் மட்டும். அப்புறம் நம்ம காதல். ஏன் நாம மட்டும் பொழைக்கணும் நியந்தா.”

அவர்கள் பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லை. உடல் தேடும் வார்த்தைகளை உன்னிப்பாக கவனிக்க மறந்த மூளையின் மடிப்பு, மணல் துளிகளால் பயம் நிரப்பிக் கொண்டேயிருந்தது.

காதுக்குள் கிசு கிசுத்த வார்த்தைகளில் அவள் வாக்கியமாய் நெளித்தாள்.

“தெரில கவிஜி, ஆனா, அடுத்து என்ன பண்ணப் போறோம்? இப்டியே எத்தன நாள் இங்க இருக்கறது? எங்க இருக்கோம்ன்னும் தெரியல. சூரிய வெளிச்சமே வர மாடேங்குதே. பயமா இருக்குடா.”

“பயந்தா எப்டி நியந்தா! இப்போ இந்த உலகத்துக்கு நீயும் நானும் தான் ஆதாம் ஏவாள். ஆதாம் ஏவாள் பயந்திருந்தா இன்னைக்கு நீயும் நானும் இல்லடி”

“போடா எப்போ பாரு உனக்கு அதே தான்.”

“என்ன? அது என்ன அவ்ளோ ஈசியா? என் பக்கம் நின்னு பாரு. கஷ்டம் எவ்ளோன்னு தெரியும்.”

அவள் சிரித்து விட்டாள். இப்போது அவள் முறை.

“கூந்தல் சுருட்டு. விடியட்டும்”

“என்ன கவிதையா? நானும் சொல்லி.. லி… லிரூ…வே… ண்டா…”

“முதல்ல மூச்சு வாங்காம இந்த வார்த்தைய சொல்லுடி, பாப்போம்.”

சட்டென்று முன்னோக்கி சரிந்து, நெற்றியில் ஆழமாய் ஒரு முத்தம் பதித்து. மீண்டும் முதல் இருந்த நிலைக்கு வந்தவள், “நெற்றி வியர்வை துடைத்த இதழில் முத்தப் புரியாமை” என்றாள்.

அப்டியா? இப்ப பாரு … என்றவன் இப்படி…

“விழி செய்த மொழியில் சிமிட்டல்-ஜென்.”

“ம்ம் ” என்று நடுங்கிக் கொண்டே யோசித்தாள் இப்படி.

“உணர்தல் வெறுமை. கண்டும் காணாமல் போவது தத்துவம்.”

“நிறம் தாண்டிய சுழற்சியில் பிம்பம் புதுமை.”

“புகைப்படம் எடுக்கப்பட்ட நான், கணம் ஒன்றில் சிறையான வெற்றிடம்.”

அடுத்த கவிதை யார் சொல்ல என்று யோசிக்கும் போதே. இதழும் இதழுமாய் இன்னும் ஆழமாய் எல்லாருக்கும் புரிந்த கவிதையை எழுதிக் கொண்டிருந்தார்கள்.

பின்னிரவு துவக்கம்…

அவள் மடி சாய்ந்து கிடந்தாள், அவன் குடை சாய்ந்து கிடந்தான்.

“இன்னும் எத்தன நாள் கவிஜி? நாம் உலகத்துல தான் இருக்கோமா? இல்ல ஒரு வேலை செத்துட்டோமா?”

“உன்னோடு இருந்தால் செத்து விடுவதும் சுகமடி மூக்குத்தி பெண்ணே.”

அவள் இன்னும் அவனின் மார்புக்குள் தன்னை நெருக்கிக் கொண்டாள்.

“என்ன இது வரை நீ அடிச்சதே இல்லல? ஏன் கவிஜி?”

“ஹே… என்னடி இது கேள்வி? எதுக்கு அடிக்கணும்?”

“ஆணின் அரவணைப்பு போல அடித்தலும் ஒரு வகை கூடல் தானே, கவிஞரே.”

“ஆமாமா, உங்க தமிழ் எனக்கு வராதுடி. நான் அடிக்க மாட்டேம்பா?”

“என் கவிதை உனக்கு புரிஞ்சா போதுண்டா. பொறுக்கி, ப்ளீஸ்… ப்ளீஸ்… அடியேன்”

“ம்ஹும். நீ கவிதைக்காரிதான். அதுக்காக உன்ன அடிக்கவெல்லாம் முடியாது. வேணுன்னா சொல்லு. முத்தம் குடுக்கிறேன்.”

“நீ அடிச்சா. நீ அடிக்கடி கேப்பீல்ல அதை பண்ணுவேன் எப்படி வசதி? என்று அவள் கண்ணடித்தது அந்த வெளிச்சத்திலும் ஒரு மின்னலை வெட்டியது.

“நம்பலாமா?”

“நம்பித்தான காதலிக்கறேன். என் முட்டாள் கவிஞனே”

“ம்…ம்… இந்தா” என்று ஒரு அறை.

“போடா. இதுக்கு நீ ஆக மாட்ட”

“அதுக்கு”என்று அருகினில் சென்று கேட்டான். ரகசியமாய்.

“அதுக்கு மட்டும் தாண்டா நீ ஆவ. ஓடிடு” என்றாள்.

பொய்யான கோபத்திலும் மின்னிய மூக்குத்தி “நெஞ்சம் ஒரு முறை நீ என்றது” என்று முணங்க வைத்தது.

“அடிப்பாவி, சரி, நீ சொல்றதும் சரிதான். ஒரு ஆதாம் அப்டி தான் இருக்கணும். இந்த பூமியே என்ன நம்பிதாண்டி இருக்கு”

“நானும்”என்று தோள் சாய்ந்தவளைமீண்டும் ஒரு அறைஅறைந்தான்.

“ம்ஹும். கொசு கடிச்ச மாதிரி இருக்கு மை மேன்” என்று காது கடித்தாள்.

“சரி இது? “என்று மீண்டும் ஒரு அறை அறைந்தான்.

கீழே கிடந்தவளின் கழுத்துக்குள் சென்று கிசு கிச்சு மூட்டினான் கவிஜி.

நியந்தா எழவில்லை.

“ஹே என்ன இது விளையாட்டு. எந்திரிடி. இப்ப எந்திரிக்கல அப்புறம் அது தான். சொல்லிட்டேன்”

அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை…அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை…

அவள் எழவேயில்லை.

நியந்தா… நியந்தா… நியந்தா…

தலைக்குள் வண்டு, வண்டு புகுந்து கொண்ட ரீங்காரம், மூளை உதிரத் தொடங்கியது.

பெருமூச்சு வாங்கிய எழுத்தாளர் சந்தோஷ் படுக்கையில் இருந்து வேகமாய் பதறியடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தார். அவரின் உடல் நடுங்குகிறது. அதே நேரம்…அதே இரவு… அதே நாள்… அதே கனவோடு…, எழுந்து அமர்கிறார். எழுத்தாளர் சரவணா மற்றும் எழுத்தாளர் அகன் அவர்களும்.

ஒரே கனவு, ஒரே நாள், ஒரே நேரத்தில். மூன்று பேருக்கு.

மூன்று பேரும் ஒரே நேரத்தில் உச்சரித்த பெயர் கவிஜி நியந்தா.

அவர்களின் பெருமூச்சு அவரவர்களின் அறையில், இல்லாத சுவர்களை எழுப்பிக் கொண்டிருந்தன.

இது கனவாஇல்லை. நடக்கப் போவதா இல்லை. நடந்து முடிந்ததா? மூவரின் கேள்விகளும் முதலை தேடும் கண்ணீரை சுரந்து கொண்டே இருந்தன.

நன்றாகத் தெரியும். அது கவிஜிதான். கூட இருந்த பெண் கவிஜி அடிக்கடி சொல்லும் நியந்தாவாகதான் இருக்க வேண்டும். அந்த முகம் சரியாக நினைவுக்கு வராமல் மூவருமே யோசித்தார்கள். யோசனையின் வழியில், ஒற்றையடி பாதைக்கே வழியில்லாமல் தடுமாறிய பாதங்களில் முள் குத்தியது போல, தலைக்குள் ஊசியின் குளிரைஉணர முடிந்தது.

அடுத்த ஒரு மணி நேரத்துக்கு பின் …
கவிஜியின் வீட்டை நெருங்கி விட்ட சந்தோஷ். ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியாமல் அங்கேயே நின்றார். பார்த்துக் கொண்டே நின்றார்.

“கவிஜியை பார்க்க வேண்டும். பேச வேண்டும். பேசியே ஆக வேண்டும்”என்று யோசித்துக் கொண்டே முன்னேற முயற்சி செய்த சந்தோஷால் ஒரு கட்டத்துக்கு மேல் அந்த வீட்டை நோக்கி நகர முடியவில்லை. எதுவோ தடுத்தாற்போல, காற்றில் ஏதோ சுவர் போல ஒரு வித மயக்க நிலைக்குள் விழுவதாக, ஒரு வித கற்பனையை சுமந்து நின்றார். இரவுக்குள் மின்னிய வெளியில் அந்த வீடு மிதந்து கொண்டு இருப்பதாகத் தோன்றியது. தானும் மிதப்பதாக நினைத்த சந்தோஷ் சத்தம் போட்டு கூப்பிட்டார்.

“கவிஜி… கவி…ஜி… வெளிய வாங்க. கொஞ்சம் பேசணும்” இன்னும் இன்னும் கத்தினார். கத்தி கத்தி கத்தினார். தான் கத்துவது தனக்கே கேட்காததை அப்போது தான் உணர்ந்தார். தன்னை ஒருமுறை கூர்ந்து கவனித்தார். காதுகள் அடைத்து இருப்பதை உணர முடிந்தது.

“இந்த இடத்தில் என்னால் ஏன் இயங்க முடியவில்லை? என்னால் ஏன் நகர முடியவில்லை? எல்லாம் புதிராக இருக்கிறதே ஏன்? கேள்விகளால் கண்கள் சிமிட்டுவது, கொடும் விஷத் துளியாகி காட்டுக்குள் தொலைவதைப் போல இருக்கிறதே!”—— எத்தனை யோசித்தும் எதுவுமே நினைவுக்கு வரவில்லை. ஆனால் சந்தோஷால் கவிஜியை இப்போது நன்றாகக் காண முடிந்தது. ஆனால் ஆள் ஒரு மாதிரி வெளுத்துப் போய் இருப்பது போல ஒரு எண்ணம் கண்களில் தூசியாய் விதைந்தது

விலக்க விலக்க காற்றுக்குள் ஒருவித திரை விழுந்து கொண்டே இருந்ததை உணர முடிந்த சந்தோஷ், இன்னும் கண்களை நன்றாகக் கூர்மையாக்கிப் பார்த்தார். கவிஜி வாசல் வருவதும், உள்ளே யாரிடமோ பேசுவது, நின்று நிலவை ரசிப்பதும், ஏதோ எழுதுவதும், உள்ளே சென்று சற்று நேரத்தில் ஒரு கோப்பை மதுவோடு வெளியே வந்து நின்று கொண்டு வானம் பார்த்து குடித்துக் கொண்டே உள்ளே யாரிடமோ பேசுவதையும் நன்றாக பார்க்க முடிந்தது. வானம் முழுக்க நட்சத்திரங்கள், முழு நிலா முன்னிரவு தொடக்கம். பிரபஞ்ச வெளியில் துகள்களால் நெய்யப்பட்ட உருவமாய் கவிஜியின் சாயல் இருந்ததைக் கண்ட சந்தோஷ் முழுக்க முழுக்க குழப்பத்தால் சுழன்றார். இப்போது ஒன்றை கவனிக்க முடிந்தது. இந்த வீட்டை சுற்றி எதுவுமே இல்லாதது போல ஒரு வெறுமை சந்தோஷுக்குத் தெரிந்தது. சந்தோஷ் தலையைப் பிடித்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார். யாரோ தன்னை கடந்து போவதை உணர முடிந்த சந்தோஷ்ஷால் கடந்து போனது என்ன? யார் என்பதைப் பார்க்க முடியவில்லை. அது ஒரு வகை இளம் சூட்டை பனியில் கலந்த மலை உச்சி பயணமாய், சர்ரென கொண்டு போகும் ஒரு பறவையின் தீவிரத் தேடலைப் போல இருந்தது.

அடுத்த அரை மணி நேரத்துக்குப் பின்…
கடந்து போன காற்றில் அதிவேகமாய் நண்பனுக்கு என்ன ஆனதோ என்று தேடி வந்தது போல சரவணா பெருவிழிகள் கொண்டு நின்றார். பெருவெடிப்பின் தூரம் போல கண்களுக்குள் தூசுகளால் நிறைந்து நின்றது கவிஜியின் வீடு.

“அதே வீடு. ஆம், இது அதே வீடுதான். ஆனால், நிறைய மாற்றங்களுடன் இருப்பதை உள் வாங்க சற்று நேரம் பிடித்தது. வழக்கமாக உள்ளே நுழையுமிடத்தில் சட்டென நின்றார். கண்கள் முழுக்க பனி மூட்டம் எத்தனை விலக்கியும் உள்ளே நுழைய முடியவில்லை. “ஏன் இப்படி? ” என்று நினைத்துக் கொண்டே .”கவிஜி …ஜி… ஹலோ…ஜி… நான் சரோ. கொஞ்சம் வெளிய வாங்க. ஒரு முக்கியமான விஷயம் பேசனும் “- கத்த கத்தவே, ஏதேதோ யோசனைக்குள் சிக்கிய மனதை வெளியே பிடித்து எதுவோ இழுப்பது போல உணர முடிந்தது. உணர உணர முடிந்து கொண்டே இருந்தது எதுவோ எதுவோ அது என்று யோசிக்க, யாசித்து வீழ்கிறது. உள்ளுக்குள் ஒரு பிம்பம். உடைவது மட்டுமென்ன உடையாமல் இருப்பதும் தூரங்களா? கேள்விக்குள் பதிலை வண்டாக்கி ரசித்த பூவில் உதிரத் தொடங்கிய இதழ்களை கூர்ந்து கவனிக்க விடாத பனிமூட்டம். மூளையெங்கும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல். கையை அசைத்து அசைத்து கூப்பிட்டார்.

நன்றாகத் தெரிந்தது, அந்த வீட்டில் ஒரு பெண் வெளியே வருவதும், நிலவைப் பார்ப்பதும், உள்ளே யாரிடமோ பேசுவதும், கையில் மதுக் கோப்பையில் மது அருந்திக் கொண்டே சிரிப்பதும். நன்றாகத் தெரிந்தது. ஆனால் அது முழுக்க முழுக்க கவிஜியின் உடல் மொழியில் இருந்தது. இன்னும் கண்களைக் கசக்கும் பனியை ஊதி விலக்கி. கிடைத்த இடைவெளியில் பார்க்க பார்க்க அது கண்டிப்பாக ஒரு பெண்ணாகத்தான் தெரிந்தது.

“நியந்தா நிலவின் வெளிச்சத்தில் ஒரு விதமான சாம்பல் பூத்த நிறத்தில் இருந்தாள். மூக்குத்தி மின்னியது. கண்கள் கண்ட காட்சியில் கவிதைச் சிறகு உடைந்து உடைந்து பறப்பது போல, ஒரு அழுகை ஆளுமையானது. பூத்துவிட்ட விழித் திரைகளில். இனம் புரியாத பூத்தூவல்கள் பனி மூட்டத்தில் நெளி நெளியாய் சரவணா முன் விரிந்தன மீண்டும் ஒரு முறை படிக்க மீண்டும் ஒரு முறை எழுது கவிஜி படிக்க படிக்க அழகாகும் இவள் பற்றிய கவிதையில் இவள் இன்னும் இன்னும் அழகாகிறாள். அழகாவது தானே அத்தனை அழகு காதலில் நிழற்படமாய் நீண்டு கிடந்த நினைவுகளில் திடீர் புகை… திடீர் சோகம் அப்பிக் கொண்டே இருந்தது. நீண்டது. நீட்சியின் சூட்சுமம். சூட்சுமங்கள் நிஜங்களைக் கொண்டே சமைக்கப் படுகிறது. புதிய புதிய கிறுக்கல்களில் வாழ்கிறது காதல் என்று அடிக்கடி கவிஜி கூறும் கூற்று. அங்கு காற்றாய் வாழ்வதாக த்தோன்றியது சில பாறைகள் நீரை வார்க்கத்தான் செய்கிறது பனி மூட்டம் மட்டும் கொஞ்சம் உடன் பட்டால் உள்ளே சென்று விடுவது சுலபம் என்று சரவணா யோசிக்க யோசிக்கவே, நிமிடங்களைக் கடக்க விட்டுக் கொண்டிருந்தது காலம்.

அடுத்த அரை மணி நேரத்துக்கு பின்…
ஒரு பாலைவனக் காற்று. மணல்வெளியை புதைத்துக் கொண்டிருக்க, ஒரு குதிரையில் தரையில் கால் குளம்பு படாமல் காற்றை கிழித்துக் கொண்டு கவிஜி வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தார் அகன். அந்தக் குதிரை நிற்கவே இல்லை அது வந்து கொண்டே இருந்தது.

ஆனால் வீட்டை நெருங்க முடியவில்லை. குதிரையின் கால்களும் நிற்கவில்லை. அது தீராப் பயணத்தை விதைத்து கொண்டே இருந்தது. அவரும் நிறுத்த முயற்சிக்க வில்லை. ஒரு கட்டத்தில் முயற்சித்தும் குதிரை நிற்கவில்லை. நிற்காத ஒன்றாய் நீட்சியின் இரண்டாய். தூரம் விதைத்து தூரம் போய்க் கொண்டே இருப்பது துக்கம் செய்தது. துக்கித்த ஏக்கம் தகித்த துக்கம். சித்திரம் உடைத்து கொண்டே இருப்பதில் காலத்தின் கணக்கை முறியடிக்காத வலிமையைக் கொண்டே இருப்பதாக சிந்தனையின் குளறுபடி. தலைக்குள் பாரமாய், தவிப்பாய், நெருப்பாய் உணர முடிந்தது. இப்போது கவிஜியின் வீட்டை நன்றாக பார்க்க முடிந்தது.

தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தார். ஆனாலும் வீட்டுக்குள் நுழையமுடியவில்லை. யோசிக்க யோசிக்க மணல் வெளிகளின் ஒரு புத்தியில், உதிர்ந்து கொண்டே இருப்பதாக சுழன்ற யுக்தியில்,ஒரு வித மயக்க நிலை காரியம் விதைத்தது. கவிஜியை நன்றாகக் காண முடிந்தது. நிலவொளியில், இரவாய் செய்யப்பட்ட உருவமாய் நின்று நிதானித்து, சுற்றும் கவனித்து, அமர்ந்து எழுதி உள்ளே யாரிடமோ பேசிக் கொண்டே., சிரித்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. மணலால் செய்யப்பட்ட ஏதோ ஒன்றாய் தன்னை உணர்த்தார். “ஏன் தன்னால் இதற்கு மேல் போக முடியவில்லை?” என்று யோசிக்க யோசிக்க மறப்பது நல்லது போல ஒரு வித சுழல் அவரை நிறைக்கத் தொடங்கியது. காற்றில் மிதப்பதாக தோன்றியது. காற்றே மிதப்பதாக தோன்றியது.

கவிஜி இப்போது உள்ளே சென்றான் அகனின் பார்வையும் பின்னால் சென்றது உள்ளே, நியந்தா படுத்துக் கிடந்தாள் கவிஜி அருகில் அமர்ந்தான். ஏதோ பேசினான், சிரித்தான். குனிந்து நெற்றியில் முத்தமிட்டான். கன்னம் பிடித்து கிள்ளினான் அவள் அசையாமல் கிடந்தாள். அகனின் முகம் மெல்ல மாறியது. கண்களின் காட்சியில் வார்த்தைகள் காலம் சுமப்பதாக இருந்தது. இருப்பது எல்லாமே இருப்பது தானா திசை மாறும் மனச் சுழலை மெய் மறந்து கண்டு விடுவது தானே நியதி என்பது போல தீக்குள் விரலைக் கொண்ட நந்தலாலாவாக கண்டு கொண்டே இருந்தார்.

கவிஜி கீழே கிடக்க. நியந்தா எழுந்து அவன் அருகே அமர்ந்து ஏதோ பேசினாள். பின், எழுந்து வெளியே வந்தாள். நிலவைக் கண்டாள். நிலவும் கண்டது. எழுதினாள். காற்றோடு காற்றாக கவிதை வாசித்தாள். அகன் தலையைப் பிடித்துக் கொண்டு கத்தினார். அவர் கத்துவது அவருக்கே கேட்கவில்லை அவர் யோசித்துக் கொண்டே. சிந்தனையை பின்னோக்கிக் குவித்தார்.

அந்த வீட்டைச் சுற்றி ஒரு சுழலாய் சுழன்று கொண்டிருந்தது கவிஜிநியந்தாவின் காதல் கதை.

நமக்குப் பிடித்தது போல ஒருவர் அவருக்கும் நம்மை பிடித்தால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது அவர்களின் பிடிப்பு திகட்டாத காதல். தீர்க்கவே முடியாத காதல் நிலவின் பிடியில் சிக்கியக் கவிதையாக வரிகளின் உள்ளங்கைக்குள் எப்போதும் அடுத்தவருக்கான முத்தத்தை பிடித்துக் கொண்டேதான் இருப்பார்கள். எப்போதும் பேசுவார்கள். பேசப் பேச கவிஜியின் உருவகத்தில் நியந்தா ஒரு சிண்ட்ரெல்லாவாக உருவெடுப்பாள். அவளின் வானம் வெள்ளுடை தரித்தே கிடப்பதாக அதிகாலை எழுப்பிக் கூறுவான். பதில் அணைப்பைத் தவிர வேறு என்ன என்பது போல. அணைப்பாள், மிதப்பாள், கைகள் விதைப்பாள். கவிதை தைப்பாள்கண்கள் தாழ்பாள்.

“போங்க. எப்பவும்” இப்டியேதான் என்று நகைப்பாள்.

கவிஜி (இடைவெளியில் கண்கள் சுருக்குவாள். இதழ்கள் முறுக்குவாள்). கவிஜி, நீ ஏன் இவ்ளோ காதலோட இருக்க? என்று செல்லமாக சண்டை போடுவாள். அவள் நெற்றியில் நிலா என்று எழுதி வைப்பான். அவள் உடனே நெற்றியில் முத்தம் கேட்பா, அவன் கொடுப்பான்.

“இப்போ இது சர்க்கரை நிலா” என்பாள்.

சிரிப்பார்கள் …

கோபம் இருவருக்குமே உச்சத்தில் இருக்கும் போது அழுவார்கள், அடித்துக் கொள்வார்கள். அப்படி ஒரு நாள் அடித்ததில்தான் அவள் செத்தே போனாள். அந்த இரவு. பிணமான பின்னாலும் மறக்கவே முடியாத இரவு. பிணமாகி போக மறுக்காத இரவு. கீழே செயலற்றுக் கிடந்த உடலை குலுக்கி ஆட்டி, எழுப்பி தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அழுத கவிஜி, ஆயுளுக்கும் உண்டான அழுகையைக் கொட்டித் தீர்த்தான். தீர்க்க முடியுமா காதலின் அழுகையைகெஞ்சினான் இனி அடிக்க மாட்டேன் நியந்தா விட்டுப் போகாதே என்று கதறினான். அவளுக்கு காதல் இருந்தும் காதில்லை. கவிதை இருந்தும் நினைவில்லை. திரும்ப திரும்ப யோசித்தான். ஒரு வேகத்தில் ஒரே ஒரு அறைதானே! இந்த கை அடித்தா மரணம் வரும்? இந்த மனம் அடித்தா மறதி வரும்? லயம் மறந்த வரியில் இன்னிசை சாகத்தானே செய்யும். அசரீரி கனவில் காகித கிழிசல். கவிதை என்று சொல்லும் மூடன். தாடிக்குள் கவிஜியாக இருந்தான்.

மரணம் …

“ஏய் சனியனே, உன்னை இங்கு யார் அழைத்தது? என் நியந்தாவை என்னிடமே திருப்பிக் கொடு. அவள் இல்லாத உலகில் என் பார்வை காட்சிக் குருடு தானே. அவள் இல்லாத தூரத்தில் நான் பயணம் அற்றவன் தானே. அவள் இல்லாத போதியில் மீண்டும் நான் சித்தார்த்தன் தானே” காடும் வெளியும் மலையும் கடலும் கதறுவதாக அவனின் மூளை நரம்புகள் முடிச்சை விட்டு விடத் தீர்மானித்தது போல சுழன்று புரண்டான்.

“மரணம் ரணம். ரணம் மனம். மனம் கணம், கணம் கனம். இனி தினம். நான் பிணம். யாரிடம் சொல்லி இவளை பிழைக்க வைப்பது?” தன்னையே அடித்துக் கொண்டான். “இந்த காதலின் மொத்தம். இவள் தானே என்று நினைத்தேனே இனி என்ன செய்வேன்”- அவன் புலம்பல்கள். இலக்கிய சிந்தையில் தப்பு தப்பாய் கவிதை படைப்பதாக யோசித்தான். எல்லாமே தவறாக போவதின் வெளிப்பாடே அண்டத்தில் சிறையாகும். அகத்தின் பிம்பம் அகம் மறைக்கும் அவலத்தில் ஆண்டு விடப் போகிறது யாதும். யாவும் அற்றவன் அவளாகிப் போகும் போது அதுவாகி இன்னும் இருக்கிறது காதல்.

முதல் முறையாக கடவுளை அழைத்தான். காதுள்ள கடவுள் கூப்பிட்ட மறுநொடி முன்னே வந்து நின்றார். வெகு தூரப் பயணமாம். குளிர் வேறு என்று படுக்கையில் கம்பளி போர்த்திக் கொண்டு அமர்ந்திருந்தார்.

மடியில் கிடந்த நியந்தாவைக் கண்டார். மடிந்துக் கிடந்த கவிஜியை கண்டார்.

“எழுதப்பட்டவைகளை மாற்ற நான் யார் கவிஜி? உன் கவிதையை நீதான் முடிக்க வேண்டும் என் பார்வை எப்படி இருப்பினும்.”

“கவிதை சொல்லும் நேரமா இது கடவுளே?”

“நேரம் கடந்தால்தான் கவிதையே கவிஜி. உனக்கு சொல்லித் தர வேண்டுமா?”

“காலம் கடப்பது இருக்கட்டும் காலம் கடக்கும் முன் ஏன் இவளைக் கை விட்டீர்?”

“நீ ஏன் கை வைத்தீர்?”

“அய்யோ விவாதம் செய்யும் நேரமில்லை இவளைக் காப்பாற்று. உயிர் கொடு”

“அத்தனை சுலபமா? கவிஜி உயிர் என்பது சூட்சுமம். அவனவன் உயிரை அவனவன்தான் பாத்துக் கொள்ள வேண்டும். உயிர் கிடைப்பது. வெளிகளின் சிந்தனை.”

கவிஜி பாவமாக பார்த்தான். பாவம் அற்றவனாய் பார்த்தான்.

“பிறப்பது யாவும் இறக்கத்தான் கவிஜி. அது கவிஜியே. ஆனாலும், மரணத்தைப் போல் ஒரு மகத்துவம் இல்லை கவிஜி. நன்றாக யோசித்துப் பார் இது வரை. இவளை ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நினைத்தாய்?”

—————————-

“மொத்தமாக ஒரு 8 மணி நேரம். அவ்ளோ தான். ஆனால், இனி 24 மணி நேரமும் நினைப்பாய். காதல் இப்போது தானே அதிகம் ஆகிறது. காதலுக்கு உடலும் தேவை இல்லை. உயிர் கூடத் தேவை இல்லை. அது நினைவுகளால் கட்டமைக்கப்பட்ட சூத்திரம். அது இயற்கையின் ஒற்றை விரல்.”

கடவுள் மறைந்து போனார். மறந்து போனார்.

யோசிக்க யோசிக்க யாசித்துக் கிடக்கவே தோன்றியது. அழுது அழுது அழுத்தம் நிறைந்த கவிதையாக வெடித்து விட்ட பெரு வெடிப்பாய் சிதறிப் போக மனம் துடித்தது. துளி கண்ணீர் கூட நெருப்புக் குழம்பாய் நியந்தாவின் காதலால் எரிந்து கொண்டிருந்தது.

“என்ன செய்ய யாரை அழைக்க?” -கடவுளைத் திட்டத் தொடங்கினான். அறை முழுக்க ஓடி ஓடித் திரிந்தான். தேடினான் கடவுளைத் தேடினான். கடவுளே உன்னைக் கொல்லவேண்டும். உன்னைக் கொல்ல வேண்டும், உன்னை மட்டும் கொல்ல வேண்டும். கை ஏந்தி நிற்பவனைக் கடந்து போகும் நீ கடவுள் அல்ல. நீ கடவுள் அல்ல சாத்தான். சாத்தான் சாத்தான். சாத்தான் சாத்தான்.”- அழுத்தி அழுத்தி கத்தும் காலம் சற்று நிற்க எதிரே அழுது கொண்டு நின்றார் சாத்தான்.

“இந்த கடவுள்களே இப்படி தான் கவிஜி. நான் இருக்கேன். நியந்தா உனக்கு உயிரோடு வேண்டும் இல்லையா? வா. இது பாவமான உலகம். இங்கே எல்லாமே வெள்ளையாகிப் போன குருட்டுக் கூட்டம். எல்லாவற்றுக்கும் கோஷம் போடும் முட்டாள் மக்களைக் கொண்டு ஜோடிக்கப்பட்ட பூமி. தீர்க்கமுடியாத நோயினால் தினம் தினம் அழுது அழுது சாவான் மனிதன். அது தான் கடவுள்களின் திட்டம். நினைத்தபடி வாழ முடியவில்லை என்றால் எதற்கு இந்த பிறப்பு கவிஜி. ஒரு பக்கம் குடிசை, ஒரு பக்கம் மாளிகை விளங்குமா? கடவுளைக் கொல்ல வேண்டும் கவிஜி.

நாம் எல்லாருக்கும் மாளிகை கட்டி தருவோம். அவர் ஏதோ பாடம் சொல்லித் தருகிறாராம். அதனால் தான் இந்த பொன்னான பூமியில் இத்தனை களேபரங்களாம். இத்தனை மரணங்களாம். ஒரு அறைக்கு யாராவது சாவார்களா! எத்தனை முட்டாள் பார் இந்த கடவுள்! பிடிக்காத மாமியார்க்கு கை பட்டாலும் குத்தமாம் கால் பட்டாலும் குத்தமாம். அப்படி இருக்கிறது இந்தக் கடவுள்களில் செயல்பாடுகள் நான் வன்மையாக கண்டிக்கிறேன் கவிஜி. பிரச்சினை செய்வதெல்லாம் கடவுள்கள். பலி, சாத்தான்களுக்கு என்ன செய்வது? எழுதப்பட்டவை. நாம் அதை உடைப்போம். ப்ரேக் தி ரூல்ஸ். உடைப்பவன்தான் இங்க விஞ்ஞானி. அணுவைப் பிளப்பவன்தான் அடுத்த மானுடம் வா. நியந்தாவை பிழைக்க வைப்போம். ப்ளேக் மேஜிக் கேள்விப் பட்டிருப்பாய் என்று நினைக்கிறேன். அதில் ஒரு கட்டம். இது” என்று ஏதோ ஒன்றை சொல்லிக் கொடுத்தார் சாத்தான்.

“இது பற்றி சித்தர்களே சொல்லி விட்டு போயிருக்கிறார்களே”-என்று கண்கள் விரிய கேட்டான் கவிஜி.

“சித்தனாகி இதை செய்வதற்குள் நீ பித்தனாகி விடுவாய் கவிஜி. இது குறுக்கு வழி. பில்லி சூனியம். இதை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதோ இப்போது இதை வைத்து உன் நியந்தாவின் உடலை எழுப்ப போகிறாய், முதல் கட்டமாக. இதை செய். மற்றவை. இன்னும் ஓரிரு நாட்களில் கற்றுத் தருகிறேன் கற்க இருக்கிறது நிறைய. கற்றவன் கண் இமைப்பது போல. எதுவும் இங்கு சாத்தியம் அல்ல. சாத்தியத் தோற்றங்களே,.உங்க பாரதி பாடினாரே “யாவும் தோற்ற மயக்கங்களே” என்று … அப்படி!”

சாத்தான் மறைந்தது.

இப்போது கூட சாத்தான் வரவுக்காகத்தான் காத்துக் கிடக்கிறான். இன்று முழு நிலா. நியந்தா எப்படியும். உயிரோடு எழுந்து விடுவாள். சிந்தனையை பின்னோக்கி குவித்த அகன்க்கு கவிஜி வீட்டுக்குள் சென்று பிணமாக கிடந்த நியந்தாவின் அருகில் படுத்து தன் உயிரை வெளியே எடுத்து, அவளின் உடம்பில் பொருத்திக் கொள்ளும் கூடு விட்டு கூடு பாயும் கலையை செய்தது கண்களில் விரிந்தது.

“இங்கு எப்படி வந்தோம்”- என்று மயக்கம் தெளிந்து யோசித்துக் கொண்டிருந்த சந்தோஷ் மற்றும் சரவணா இருவருக்கும் தலை மீண்டும் சுற்றியது. இப்போது அகனும் மெல்ல சரிந்தார்.

“மரணத்தை யாராலும் வெல்ல முடியாது” என்று அலையாகி தடுத்துக் கொண்டிருந்தார் கடவுள்.

வாசலில் நின்று உள்ளே போக முடியாமல் வெறிக்க பார்த்துக் கொண்டிருந்த நியந்தாவின் ஆத்மா இம்முறை கொண்டிருந்த உருவம். அது. அது அது அவள்.

கூடு பாயும். கூடு தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *