முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ …

1

— கவிஞர் காவிரிமைந்தன். 

 

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களது இசையில் எப்போதும் ஒரு மயக்கம் பெறலாம். வசந்த மாளிகை முதலான வெற்றிப் படங்களும் சங்கராபரணம் போன்ற சங்கீதத் திரைப்படங்களும் அவருக்கே உரித்தானவை. அவர்தம் இசையில் உருவாகிய பாடல்களில் கர்நாடக சங்கீதம் கலந்திருப்பது இசை ரசிகர்களுக்கு நிச்சயம் பரிச்சயம். மன்னவன் வந்தானடி திரைப்பாடல் திருவருட்செல்வரில்கூட ‘கல்யாணி ராகத்தில் உருவானது’ என்று பெருமிதத்துடன் பகிர்ந்துகொள்வர்.

இப்போது நாம் காணவிருக்கும் திரைப்படப்பாடல் “முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ…” பால்குடம் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு வரிவடிவம் தந்தவர் கவிஞர் வாலி ஆவார். இசைவடிவம் தந்தவர் கே.வி.மகாதேவன் ஆவார். முழுமையான உற்சாகத்தில் பாடியிருக்கிறார் பி.சுசீலா.

ஆணுக்குப் பெண் எப்படி துணையிருக்க முடியும் என்பதற்கு இந்தப்பாடல் ஒரு நல்ல உதாரணம். குறிப்பாக கணவனின் இன்ப துன்பங்களில் சரிநிகர் பங்கேற்க துணைவரும் மனைவி, அன்பைப் பொழிந்து ஆதரவாய் இருந்து உபசரிப்பதில்தானே ஒரு ஆடவனின் உலகம் அடங்கிவிடுகிறது. குழப்பத்திலிருக்கும் ஆடவனை ஆதரவு மொழிபேசி அன்பின் வலைவீசி இன்பபுரி நோக்கி அழைத்துச் செல்லும் மனைவியை எப்படி ஒரு பாடலில் இப்படி பதிவு செய்து காட்ட முடியும். பாருங்கள்… கவிஞர் வாலியின் கவித்திறம்!!

இரவின் மடியில் இப்பாடல் இதயங்களுக்கு கிடைக்கும் இன்பத்தாலாட்டு! உறவின்பிடியில் உள்ளங்கள் இணைந்தெழுதும் ஓரின்பக் காவியம்! எத்தனை முறை கேட்டாலும் இன்பமாகவே இருக்கும் அமுதமழை! மெய்மறந்து கேட்டு இன்புறவேண்டுமென்றால் தனிமையில் இப்பாடலை ஒலிக்கவிட்டு அந்த இசையின்பத்தில் மூழ்குங்கள், வாழ்க்கையின் இன்பம் வந்துவிடும்!

முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ
அது கண்குளிர தண்ணொளியை வழங்கவில்லையோ

பாலும் நீரும் பிரித்து உண்ணும் அன்னப் பறவை நான்.
உன் கண்ணிரடில் குடியிருக்கும் வண்ணப் பறவை நான்

அன்பின் ஸ்பரிசத்திலே ஆராதனை நடத்தும் இன்பக்காட்சிகள் இப்பாடலைக் கேட்கும்போதே மனத்திரையில் தோன்றுவது தவிர்க்க முடியாதது. ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் என்கிற பாலும் பழமும் திரைப்பாடலில் கண்ணதாசன் கடைசிவரியில் சொல்வதுபோல, அடைக்கலமானேன் முடிவினிலே… அதைப்போலவே, ‘என்றும் இரவினிலே தனிமையிலே துணைவியாகினேன்’ என்கிற வார்த்தைகளோடு நிறைவு செய்திருக்கிறார் வாலி!

முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ அது
கண்குளிர தண்ணொளியை வழங்கவில்லையோ
முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ

பனிமலரும் முள்நடுவே மலர்ந்ததில்லையோ அதைப்
பூங்காற்றும் ஆசை கொண்டு கலந்ததில்லையோ
பனிமலரும் முள்நடுவே மலர்ந்ததில்லையோ அதைப்
பூங்காற்றும் ஆசை கொண்டு கலந்ததில்லையோ
(முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ)

பாலும் நீரும் பிரித்து உண்ணும் அன்னப்பறவை நான் உன்
கண்ணிரண்டில் குடியிருக்கும் வண்ணப்பறவை நான்
பாலும் நீரும் பிரித்து உண்ணும் அன்னப்பறவை நான் உன்
கண்ணிரண்டில் குடியிருக்கும் வண்ணப்பறவை நான்
பொன்னகையும் புன்னகையும் பெண்மை கொண்டது
நான் கொண்டதெல்லாம் திருமகனே நீ கொடுத்தது
(முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ)

மாலையிட்ட நேரம் தொட்டு மனைவியாகினேன் உன்னை
மடியில் வைத்து கொஞ்சும்போது அன்னையாகினேன்
சேவை செய்யும் வேளையிலே தாதியிகினேன் என்றும்
இரவிலே தனிமையிலே துணைவியாகினேன்
(முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ)

காணொளி: https://youtu.be/ySOa67zaIWw

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *