சிந்துசமவெளியும், குமரிக்கண்டமும்

0

–முனைவர் பி.ஆர்.லக்ஷ்மி.

மொகஞ்சதாரோ, அரப்பா நகரங்களில் புதையுண்ட பல பொருட்கள் 1920களில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் காணப்படும் பல முத்திரைகள் குறித்து இன்னமும் தெளிவுபடாத பல கருத்துகள் நிலவி வருகின்றன. ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியாவின் தென்பகுதி, இந்தியப்பெருங்கடலின் சில பகுதிகள் என அழிந்து போன குமரிக்கண்டத்தின் பகுதிகளாக ஆய்வுகள் வரையறுக்கின்றன.

கொடுமுடி சண்முகத்தின் ஆய்வுகள் குமரிக்கண்டம் இல்லையெனக் குறிப்பிடுகின்றன. இதற்குக் காரணம் தமிழகத்தில் காணப்படும் நில அமைப்பினைக் குறிப்பிட்டுள்ளார். நில அமைப்பு மாறுபடும் தன்மை கொண்டதாலும், மூழ்கிக் கிடக்கும் புகார் குறித்த இடங்கள் குறித்த ஆய்வுகளும் குமரிக்கண்டம் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதிப்படுத்துபவையாக இருக்கின்றன.

கடல்கோள் என்பது ஒரே நேரங்களில் நிகழ்வது அல்ல. சிறிதுசிறிதாக நிலம் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டுவருவது ஆண்டாண்டுகாலமாக நடைபெற்றுவரும் நிகழ்வாகும். குமரிக்கண்டத்தின் அழிவினால் இடம்பெயர்ந்த மக்கள் பல இடங்களுக்கும் குடி பெயர்ந்துள்ளனர். இடப்பெயர்வு ஏற்படினும் தாங்கள் வசித்துவந்த ஊர்ப்பெயரினை வைத்து அந்தந்த இடங்களில் வாழ்ந்து வந்திருக்கலாம்.இராமாயணத்தில் குமரிக்கண்டம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. அழிந்துபோன தமிழ்நூல்களின் பெயர்களே இதற்கு ஆதாரமாக இருக்கின்றன.

குமரிக்கண்டத்தில் பரவியிருந்த தமிழ்மொழி சிந்துவெளி நாகரிகத்திலும் வேரூன்றி காணப்பட்டது. ஆதிச்சநல்லூரில் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இதைப்போன்றே மொகஞ்சதாரோவிலும் காணப்பட்டுள்ளது. ஆனால், அங்கு காணப்பட்ட தாழிகளில் எழுத்துகள் தென்படவில்லை.

ஆதிச்சநல்லூரில் காணப்பட்ட தாழிகளில் எழுத்துகள் காணப்படுகின்றன. சேரர், சோழர் ,பாண்டியர் என்ற மூவேந்தரின் கீழ் தமிழ்மொழி வளர்ந்துள்ளதை பண்டைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. சிந்துவெளி நாகரிகத்தின் சின்னங்களை அடையாளப்படுத்த இவ்வரசர்கள் பயன்படுத்திய குறியீடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

குமரிக்கண்டத்தில் முத்து, பவளம், வாசனைத்திரவியங்கள், மருந்துப்பொருட்கள் எனப் பல ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அக்காலத்தில் பொருளுக்குப் பதிலாகப் பொன்னோ, பணமோ பெறப்படவில்லை. பெரும்பாலும் பண்டமாற்றுமுறைகள் நடந்து வந்துள்ளன. மகாபாரதத்தில் கிருட்டிணன் குடக்கூத்து ஆடிய இடம் வாணன்பேரூர் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வாணன்பேரூர் என்பது மலாய்க்கா என்ற மாமல்லபுரத்தைக் குறிப்பதாகும்.

பொருட்களை ஏற்றிச் செல்லும் வணிக இடமாக மாமல்லபுரம் இருந்திருப்பதன்வழி தமிழ்நாட்டின் பழமை புலப்படுகிறது. மகாபலிபுரம் போன்ற துறைமுகத்தினை ஒட்டிய பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் ஆய்வுகளின் முடிவுகள் இன்னமும் மாறுபடலாம்.

சிவ வழிபாடு சிந்துவெளிநாகரிகத்தில் இருப்பதைக் கணக்கில்கொண்டு இந்நாகரிகம் வேதங்களுக்குப் பிந்தையது என்ற கருத்து தவறானது. இராமாயணக் காலத்திலேதான் இருக்கு, யசூர், சாம வேதங்கள் இயற்றப்பட்டுள்ளன. சிவ வழிபாட்டின் அடையாளச்சின்னத்தை ஒப்புநோக்கும்போது மயன்வம்சத்துத் தலையலங்காரம் புலப்படுகிறது.

குமரிக்கண்டமக்கள் இரும்பின் பயன்பாடு அறிந்தவர்கள். எனவேதான் எகிப்தியப்பிரமிடுகள் இரும்பினால் ஆன கருவியினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. நிலப்பிரிவுகளின் அடிப்படையில்தான் தொழில்கள் நடந்துள்ளன எனவே சிந்துவெளிச் சின்னங்களில் காணப்படுபவை நிலத்தின் கருப்பொருள் குறித்த குறியீடுகளாக இருக்கலாம்.

செங்கோல் வடிவம் கொண்ட குறியீடு அந்த நாட்டின் மன்னனுடையதாக இருந்திருக்கலாம். நான்கு முதல் ஏழு வரை கொண்ட மேல்வரிசைக் குறியீகளில் காணப்படும் மீன்கள் நெய்தல் நிலம் சார்ந்தனவையாகவோ, அல்லது பாண்டிய மன்னனைக் குறிப்பதாகவோ இருக்கலாம். மரஇலை குறித்த சின்னம் சேர மன்னனுடையதாக்க் கருதுவதற்கு இடமுண்டு. மனிதன் இருபுறமும் காவடி தூக்குவதுபோல அமைந்துள்ள குறியீடு தேனெடுத்தலைக் குறிப்பதாகும்.தேனெடுத்தல் தொழில்குறிஞ்சி நிலத்திற்குரியதாகும்.

பொதுவாக வணிகம் என்பது கற்றவர், கல்லாதவர் என இருவேறுபட்ட சமுதாயத்தினரிடையில் நிகழ்வதாகும். அவ்வாறு நோக்கிடின் கடினமான எழுத்துப்பகுதிகள் இலக்கிய நோக்கில் அமைந்திருக்க வாய்ப்புகள் இல்லை. எனவே சதுரம் சார்ந்த குறியீடு நான் மாடக்கூடல் எனக் கூறுவது பொருந்தாது. வணிகர்களும் தங்களுக்கென்ற குறியீடுகளை ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்துள்ளனர். இதைப்போன்று குழுவாக வாழ்ந்த குடும்பங்களுக்கென்று ஒரு குறியீட்டினையும் ஏற்படுத்தி வாழ்ந்துள்ளனர். இவை பெரும்பாலும் விலங்கு, பறவை, மரம் இவற்றை அடிப்படையாக்க் கொண்டு அமைத்து வந்துள்ளனர். இதனால் சிவன் குறித்த சின்னங்களும், விலங்குகள் குறித்த சின்னங்களும் குறிக்கப்பட்டிருக்கலாம்.

இருமீன் சார்ந்த குறியீடு என்பது குற்றாலத்தில் காணப்படும் கோவில் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. அம்மீனினை உற்று நோக்கும்போது ஒரு மீனினைப்போல மற்றொரு மீன் அமைக்கப்படவில்லை.

ஈஸ்தர் தீவில் கண்டெடுக்கப்பட்ட மரச்சட்ட எழுத்து முத்திரையும் இதைப்போன்றதாகவே கருதலாம். ப்ரோஎலமைட் மொழியில் காணப்படும் குறியீடுகள் சிந்துசமவெளியில் கிடைத்த முத்திரைகளோடு ஒத்து வருகின்றன.

ஒரு பொருளை அளக்கப் பண்டைக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அளவைக் குறியீடுகளே மேல்வரிசையில் காணப்படும் தமிழ்ப்பிராமி எழுத்துகள் எனக் கருதலாம். சாலைவிதிகளுக்கு என வரையறுக்கப்பட்ட சில குறியீடுகளும் இவற்றில் காணப்படுகின்றன.

பொதுவாக ஒரு தாழியில் இறந்தவரைப் புதைக்கும்போது பெயர், பிறப்பு, இறப்பு குறித்தவற்றையே பதிவு செய்யும் வழக்கம் நடந்து வந்துள்ளது. எனவே கிடைத்துள்ள பானை ஓடுகளில் காணப்படும் எழுத்துகள் அத்தகையனவாக இருந்திருக்கலாம்.

வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களின் அருகே காணப்படும் சிறு தீவுகளிலும் தமிழ்மொழி இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இயற்கைச் சீரழிவினால் நிகழ்ந்துள்ள மாற்றங்களினால் பல இடங்களுக்கும் சென்ற குமரிக்கண்ட மக்கள் தங்கள் பண்பாட்டினை மறக்காமல் வாழ்ந்துவருவது ஆய்வுகளின்வழி அறிய இயலுகிறது.

தமிழ்மொழியின் பழமையினை இன்னமும் உறுதிப்படுத்த பல நிலைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *