பழமொழி கூறும் பாடம்

0

தேமொழி.

 

பழமொழி: அயிரை விட்டு வராஅஅல் வாங்குபவர்

 

சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால்
பெரிய பொருள்கருது வாரே – விரிபூ
விராஅம் புனலூர வேண்டயிரை விட்டு
வராஅஅல் வாங்கு பவர்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

 

பதம் பிரித்து:
சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால்,
பெரிய பொருள் கருதுவாரே;-விரி பூ
விராஅம் புனல் ஊர! வேண்டு அயிரை இட்டு,
வராஅஅல் வாங்குபவர்.

பொருள் விளக்கம்:
சிறிய பொருளைக் கொடுத்துச் செய்கின்ற செய்கைக்குப் பலனாக, பெரிய பொருள் ஒன்றைப் பயனாக அடையக் கருதுபவரின் செய்கை, விரிந்து மலர்ந்த பூக்கள் விரவி மிதக்கும் நதிநீர் பாயும் ஊரைச் சேர்ந்தவரே; தேவை கருதி சிறிய அயிரை மீனைத் தூண்டிலில் இட்டு பெரிய வரால் மீனைப் பிடிக்கும் செயலை ஒத்தது.

பழமொழி சொல்லும் பாடம்: சிறிய மீனை தூண்டிலில் இட்டு பெரிய மீனைப் பிடிக்கும் செய்கையைப் போல, ஒரு பயனை எதிர்நோக்கிச் செய்த உதவியை ஈகை என்று கூற இயலாது. அதனால் இன்று கொடுக்கும் ஒரு கொடையின் பயனாகப் பின்னர் பலன் பெறலாம் என்ற எண்ணத்தில் செய்ய நினைக்கும் செயலை ஈகை எனக் கருத வழியில்லை. இதனையே வள்ளுவரும்,

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள்: 221)

வறியவர்க்கு உதவும் நோக்கில் ஒரு பொருளைக் கொடுப்பதையே ஈகை எனக் கூறலாம், அதைத் தவிர்த்து பலன் ஒன்றைப் பெரும் நோக்கில் மற்றவர்களுக்கு வழங்குவது ஈகை ஆகாது, அது ஏதேனும் ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவது மட்டுமே என்கிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *