பவள சங்கரி

aaa

‘பெரிய புராணம்’ எனும் தெய்வீக நூலில், அடியார்களைப் பற்றிப் பாடும்போது சேக்கிழார் பெருமான்,

கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
ஒடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்
கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

குறைவதும் மிகுவதும் இல்லாத நிலைத்த ஐசுவரியத்தை உடையவர்கள், பிச்சைபுக்கு மண் ஓட்டையும் பசும் பொன்னையும் ஒன்று போலவே காண்பவர்கள். இறைவனை இதயக்கூட்டிலே கட்டி வைக்கும் அன்பு மேலீட்டினால் அவனை வழிபடும் பிறப்பு ஒன்றேயன்றி வீட்டையும் விரும்பாத வன்மையுடையார்.

அதாவது, வறுமையை எவரும் வெறுப்பர்; செல்வத்தை அனைவரும் விரும்புவர். ஆயின் அடியவர்கள் இவ்வாறன்றி இவ்விரண்டு நிலையிலும் மனம் மாறாது ஒன்று போலவே நின்று தம்பணிசெய்து நிற்பர்.

சிவனைத் தவிர வேறு சிந்தனையற்றவராய் தன் கொள்கையில் நிலைநின்றவராய் இருந்த தம் பக்தியியக்கத்தைச் சாதி வேறுபாடற்ற, பொருள் ஏற்றத்தாழ்வற்ற, ஒன்றே சிவம் என எண்ணுகின்ற மக்களைக் கொண்டதாக அமைக்க விரும்பியவர் அப்பரடிகள்.

சாத்திரம் பலபேசும் சழக்கர்காள் கோத்திரமும்
குலமும் கொண்டென் செய்வீர்
பாத்திரம் சிவமென்று பணிதிரேல்
மாத்திரைக்கு ளருமாற் பேறரே

அறப்போராளியின் உன்னத தன்மையான, பகைவர்கள் தமக்குச் செய்யும் தீங்குகளைப் பொறுத்தலும் தீங்கு செய்த பகைவர்களுக்கு மனத்தாலும் தீங்கு செய்யாதிருத்தலும் தலையாயக் கடமையாகக் கொள்பவர்கள்.

“எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை” (குறள்-317)
என்ற ஐயன் வள்ளுவனின் வாக்கின்படி நடந்து மக்களுக்கு பல நன்மைகளையும் செய்தவர்கள் அடியார்கள்.

ஆனால் இன்று அனைத்துமே வணிக மயமாகிவிட்டது. ஆடிக்காற்றிலே அம்மியே பறப்பது போல இன்று பக்தியும் கூட வர்த்தகமாகிவிட்டது. விளம்பரமும், பிரச்சாரமும் வேண்டி நிற்கிறது.

ஒரு ஜென் கதையைப் பார்ப்போம்;

ஒரு ஜென் குரு தன் வழியே போய்க்கொண்டிருந்தவரை சீடர் ஒருவர், கட்டாயப்படுத்தி, மன்றாடி தன் இல்ல விருந்திற்கு அழைத்துச் செல்கிறார். மிகப்பிரம்மாண்டமான விருந்து அது. செல்வச் சீமான்களின் படாடோபமான செயல்பாடுகளில் அரங்கமே பொன்னாக மின்னிக் கொண்டிருந்தது. அத்தனை பெரிய விருந்தை தம் வாழ்நாளில் அதுவரைக் காணாதவர், கண்ணிமைப்பதையும் மறந்து பிரம்மிப்பாக பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிலும், மரியாதையிலும் ஒரு கணம் தம்மை மறந்துதான்விட்டார். விருந்துபச்சாரம் முடிந்தவுடன், அவருக்காகக் காத்திருந்த தம் அடியார்களைச் சந்திக்கச் செல்லாமல் விரைவாக எங்கோ சென்று கொண்டிருந்தவரைத் தொடர்ந்து சென்ற அவருடைய அடியார்களிடம், தாம் குருவாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டதாகக் கூறி, மீண்டும் ஒரு குருவிடம் சென்று பத்து ஆண்டுகள் மாணவராக பாடம் பெற்று, அதன் பிறகே மற்றவர்களுக்கு குருவாக பாடம் கற்பித்தாராம்….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அடியாரும் ஆன்மீகமும்! (1)

  1. அடியாரும் ஆன்மிகமும் தொடர் நல்ல பீடிகையுடன் தொடங்கியுள்ளது. பெரியபுராணம் ஒரு பொக்கிஷம். அள்ள அள்ளக் கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடிய சுரபி. ஜென் கதையும் அருமை. பாராட்டுக்கள்.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *