நிர்மலா ராகவன்

மரியாதை

உனையறிந்தால்1-1111
கேள்வி: குழந்தைகளுக்கு சுதந்திரம் அளிப்பது சரிதானா?

விளக்கம்: `என் குழந்தைகள் என்னைப்போல இல்லை. ரொம்ப தைரியசாலிகள்!’
பணிவு, அடக்கம், மரியாதை என்ற பெயர்களில் தாம் அளவுக்கு மீறி ஒடுக்கப்பட்டு விட்டோம் என்ற மனக்குறை உடையவர்கள் பெருமையாகப் பேசுவது இது. பழையகால வளர்ப்பு முறை தவறு என்பது அவர்கள் வாதம்.

சமயம் கிடைத்த போதெல்லாம் மேலதிகாரிகளுக்கு அடிவருடிகளாக, தம் புகழை ஒன்றுக்குப் பத்தாக தாமே பாடிக்கொண்டு, எதிரி என்று தோன்றுபவர்களை எல்லாம் மிரட்டலும், அவதூறும் பிரயோகித்து அவர்கள் தம் நிகராகவோ, அல்லது தம்மை மிஞ்சாதிருக்கவோ செய்து — இன்னும் என்னென்னமோ செய்தால்தானே பிள்ளைகள் முன்னுக்கு வர முடியும் என்றுதான் தற்காலத்தில் பலரின் சிந்தனையும் செல்கிறது.

அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. பொய்யும், பித்தலாட்டமும் நிறைந்த இந்த உலகில் வெற்றி பெற அறிவாற்றலும், நேர்மையும் இருந்தால் மட்டும் பிழைக்க முடியுமா? தில்லுமுல்லு செய்யக்கூட அளவில்லாத துணிச்சல் வேண்டும்தானே?

ஆனால், சுய லாபத்துக்காகப் பிறரிடம் போலி மரியாதையுடன் நடந்துகொள்பவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான். அவனிடமும் அப்படியே பொய்யாக நடப்பவர்களிடம் ஏமாந்துவிடுகிறான். நாளடைவில், இது புரிய. விரக்திதான் மிஞ்சும்.

கதை 1: என் மலாய் மாணவி நோர்லேலா (14) சற்றும் மரியாதை இல்லாமல், எதிர்த்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். பொறுக்க முடியாமல் போய், ஒரு சக ஆசிரியையிடம் அவளைப்பற்றிக் கேட்டேன். `மலாய்க்காரர்களுக்கு மரியாதை ரொம்ப முக்கியமாயிற்றே! இந்தப் பெண் ஏன் இப்படி இருக்கிறாள்?’

நோர்லேலா எங்களுடன் வேலை பார்க்கும் ஒரு வயது முதிர்ந்த ஆசிரியையின் மகள் என்று அவள் கூற, ஆச்சரியப்பட்டுப்போனேன். பிறருக்கு நற்குணம் போதிக்க வேண்டிய ஓர் ஆசிரியை அதெப்படி தன் மகளை இப்படிப் பழக்கி இருப்பாள்?

பெண்ணின் தாய் சற்று வருத்தத்துடன் என்னிடம் சொன்னாள்: `பெரியவர்கள்முன் வாயே திறக்கக்கூடாது என்பதுபோல் என்னை வளர்த்தார்கள். அதனால், நான் பெரியவர்கள்முன் வாயடைத்துப் போய்விடுவேன். என் மகளும் அப்படிப் போய்விடக்கூடாது என்றுதான் அவளுக்கு அளவற்ற பேச்சு சுதந்திரம் கொடுத்தேன். இப்போது எல்லா ஆசிரியைகளும் அவளைக் குறை கூறுகிறார்கள். வீட்டிலும் அப்பா, அம்மா, உடன்பிறந்தோர் எல்லாரையும் மரியாதை இல்லாது பேசுகிறாள். என்ன செய்வது என்றே புரியவில்லை!’

நாகரீக யுகத்தின் குழப்பம் இது.

அதிகம் படிக்காத தாய், `என் மகன் பேசறதும், கேக்கறதும் எனக்கே புரியலே!’ என்று பிறரிடம் பெருமையாகச் சொல்கையில், தன்னையுமறியாது, மகன் அவளை மட்டமாக எடைபோட வழிவகுக்கிறாள்.

தான் பெற்று வளர்த்த பிள்ளை புத்திசாலி என்ற மிதமிஞ்சிய பெருமையுடன், அவன் வயதினரான பிறரை மட்டம் தட்டிப் பேசினால்கூட மகனுக்கும் அந்தப் போக்குதான் வரும். பெரியவன் ஆனதும், அவனைவிடத் தாழ்ந்தவர்கள் எல்லாரையும் –பெற்றோர் உட்பட — அலட்சியம் செய்வான்.

ஒருவன் எவ்வளவு திறமைசாலியாக இருந்தால்தான் என்ன? அவனைப்போன்ற கல்வியறிவோ, செல்வமோ இல்லாததால் மட்டுமே பெற்றோர் அவனைவிடத் தாழ்ந்தவர்கள் ஆகி விடுவார்களா, என்ன?

கதை 2: `உங்களுக்கு எது வேணுமோ, வாங்கிக்குங்கம்மா!’ என்று அன்பும், மரியாதையுமாகச் சொல்லிவிட்டு, ஒரு நகைக்கடை வாசலில் நின்றுகொண்ட ஓர் இளைஞனைப் பார்த்தேன். படித்து, நல்ல உத்தியோகம் பார்ப்பவனாகத் தெரிந்தான்.

அவனுக்கு நேர்மாறான தோற்றத்தில் தாய். ஏழ்மையிலேயே காலமெல்லாம் உழன்றிருப்பவளாகத் தெரிந்தாள். தனது இல்லாமையிலும் மகனைப் பரிவுடன் நடத்தி, அவனுடைய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் பண்புகளைப் போதித்திருக்க வேண்டும்..

தான் முன்னுக்கு வந்தது தன் சுய முயற்சியால் மட்டுமல்ல, தன் பெற்றோருக்கும் அதில் முக்கியப் பங்குண்டு என்று ஒத்துக் கொண்டிருக்கிறான் மகன். தன் நன்றியை இப்படி வெளிக்காட்டுகிறான். இச்சம்பவத்தை நான் கண்டு பல வருடங்களாகியும், இப்போது நினைத்தாலும், பூரிப்பாக இருக்கிறது.

இன்னொரு தாய், `இவர்களால் எனக்கு என்ன லாபம்?’ என்ற வியாபார நோக்கில்தான் குழந்தைகளைப் பார்க்கிறாள்.
தான் பெற்ற பிள்ளைகளிடம், நீ நிறையப் படித்து, பெரிய வேலை கிடைத்ததும், நான் உனக்குச் செய்ததை எல்லாம் மறக்காதே!’ என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறாள். இதில் அன்பு எங்கே இருக்கிறது?

முதலில் பெற்றோரிடமிருந்து அன்பைப் பெறாததால், வளர்ந்தபின்னர் அவர்கள் அளிக்காத அந்த அன்பைத் திருப்பி அளிக்க முடிவதில்லை அப்பிள்ளைகளால். தன்னைச் சம்பாதித்துப்போடும் ஒரு கருவியாகத்தான் அவர்கள் கருதி இருக்கிறார்கள் என்ற எண்ணம் கசப்பைத்தான் விதைக்கும். இத்தகையவர்களால் போலி அன்பைத்தான் காட்ட முடியும்.
வாழ்க்கை எவ்வளவுதான் நாகரீகம் அடைந்தாலும், இரக்க குணம், அன்பு, பிறரிடம் மரியாதையாக நடத்தல் போன்ற பண்புகளுக்கு காலக்கெடு எதுவும் கிடையாது. மனிதர்களிடம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டியவை இவை.

உலகில் 8% மனிதர்கள்தான் அடுத்த வேளை உணவு, இருப்பிடம் போன்ற அத்தியாவசியமான தேவைகள் எப்படிக் கிடைக்கப்போகிறது என்று பரிதவிக்காமல் இருக்கிறார்களாம்.

இது புரிந்து, `இப்படி ஒரு வளமான, அன்பான குடும்பத்தில் பிறக்க நீ எவ்வளவோ புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும். அதற்கு ஈடாக, பிறருக்கு உதவி தேவைப்படும்போது, வலியப்போய் செய்!’ என்று அறிவுரை சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகள் சுயநலமின்றி வளர்வார்கள். ஆனால், சோம்பேறிகளுக்கோ, ஏமாற்றுக்காரர்களுக்கோ உதவி செய்வது அநாவசியம்.

`பிறரிடம் மரியாதையாகப் பழகு,’ என்று ஒரு சிறுவனிடம் சொல்வதைவிட, அதை நம் போக்கில் காட்டினால், அவனும் அப்படியே நடப்பான். இங்கும் ஓர் எச்சரிக்கை தேவைப்படுகிறது.

வயதானவர்கள் தாறுமாறாக (உ-ம்: பாலியல் வதைக்கு உட்படுத்துவதுபோல்) நடந்து கொண்டால், அதைப் பொறுத்துப்போக வேண்டியதில்லை; தாராளமாக எதிர்க்கலாம், ஏனெனில், அவர்கள் மரியாதைக்கு ஏற்றவர்கள் அல்லர் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

இப்படிச் செய்தால், அநீதியைத் தட்டிக் கேட்கும் தைரியம் என்றென்றும் குன்றாது நிலைக்கும்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *