-மெய்யன் நடராஜ்

வாசற்படியில்லாமல்
கட்டிய வீட்டுக்கு
வேயப்படாத கூரை

விருந்தாளிகளாய் வருவோர்                 
விருந்தாகும் வினோத வீடு                             spiderweb

பூச்சிகளின் 
அந்தர மயானம்

சிக்கலான வீட்டுக்குள்
சிறப்பாக வாழ்வது பற்றிக்
கற்றுக் கொள்ள
கட்டப்பட்ட பள்ளிக்கூடம்

சிக்கலுக்குள் வாழ்ந்தாலும்
சிக்கிக் கொள்வதுகளிடத்தில்
சிக்கிக் கொள்ளாமல் வாழ்வதன்
சிறந்த எடுத்துக் காட்டு

சிக்கல் இல்லாமல் போனால்
வாழ்தலில் சுவாரஸ்யம் இல்லை
என்பதையும் உணர்த்தும் சிந்தனை

கூரையில்லா வீட்டுக்குள்
குறைவில்லாக் குடும்பம்
நடத்துவதற்கான குறும்படம்

அரண்மனை வாசலில்
துப்பாக்கியோடு
நிற்கும் காவலனை ஏமாற்றிவிட்டு
அனுமதியில்லாமல்
கொத்தனாரில்லாமல் அரண்மனைக்குள்ளும்
கட்டப்பட்டு விடுகிற இந்த வீடு
அசந்தால் காவலனின்
துப்பாக்கிக்குள்ளும் கட்டப்பட்டுவிடும்  

விளக்கைப் பிடித்துக் கொண்டு
கிணற்றில் விழுவதாய் வீழும்
மின்மினிப் பூச்சிகளிடம்
வெளிச்சத்தையோ…
நிறங்களில் கவர்ச்சியூட்டி
மயக்குவதாக நினைத்து வந்து
மாட்டிக்கொள்கின்ற
வண்ணத்துப் பூச்சிகளிடம்
அழகையோ வாங்கிக்
கொள்ளாவிட்டாலும்
அழகாய் வெளிச்சமாய் வாழும்
சிலந்திகள் தன்னம்பிக்கையின் வேர்கள் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *