இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(159)

0

–சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்களுடனும் துயரம் நிறைந்த மனதுடனும் உங்களிடம் இம்மடல் மூலம் மனம் திறக்கிறேன்.

இருவாரங்களுக்கு முன்னால் தமிழ்த் திரையுலகின் இசைவேந்தனாக திகழ்ந்த மெல்லிசை மன்னன் எம்.எஸ்.வி அவர்களை இறைவன் தன்னுடன் அழைத்துக் கொண்ட நிகழ்வின் போது என் உள்ளத்து உணர்ச்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

இதோ இருவாரங்களில் மீண்டும் ஒரு மாமனிதனின் மறைவின் தாக்கங்கள் கொடுத்த உணர்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் வகையில் மீண்டுமொரு நிகழ்வு.

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்ட துயரமான செய்தியைத் தாங்கி வந்தது கடந்த செவ்வாய்க்கிழமை.

இதற்கு முன்னால் இந்திய தேசம் எத்தனையோ ஜனாதிபதிகளைச் சந்தித்துள்ளது. அவர்களும் திறமையில் ஒன்று சளைத்தவர்களல்ல.

அப்படியாயின் டாக்டர் அப்துல் கலாம் அவர்களில் இருந்து எப்படி வேறுபட்டவர் ?

மக்களின் ஜனாதிபதி எனும் மாபெரும் மதிப்பை, கெளரவத்தை அவர் நேசித்த மக்களிடமிருந்தே பெற்றுக்கொண்ட ஒரு அரசியல் கலக்காத உன்னதமான “மனிதர்” என்பதே அவருடைய தனிப்பெரும் விசேடத் திறமையாகும்.

தான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் என்பதை அவர் தான் வாழ்வில் எந்த நிலையை அடைந்த போதும் மறக்கவில்லை.

தான் தன்னுடைய மதத்தை மதித்த அதே சமயம் தன்னை மதத் தீவிரவாதி எனும் முத்திரை குத்தி என்றுமே அடையாளைப் படுத்தியவரில்லை.

அதற்கு மேலாக மற்றைய மதங்களின் சிறப்பம்சங்களை அறிந்து அவற்றையும் மதித்தார் என்பதுவே அவரது மனிதத்தன்மை மதங்களைக் கடந்த ஒரு மகத்துவம் வாய்ந்தது என்பதற்கு உதாரணமாகிறது.

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி அதன் முதுகெலும்பாகிய மாணவ சமுதாயம் தம்முடைய நாட்டின் முன்னேற்றத்தில் எத்தனை தூரம் ஆர்வம் கொண்டிருக்கிறது என்பதிலேயே தங்கியுள்ளது என்பதில் முழு நம்பிக்கை வைத்திருந்தார்.

தாம் எத்தனை வறுமை நிலையிலிருந்தாலும் தமது கனவுகளை, லட்சியங்களை இளைஞர்கள் தொலைத்து விடக்கூடாது என்பதில் அவர் முனைப்பாக இருந்தார்.

இந்தியா 2020இல் வல்லரசாக மாறும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்த அவர், அந்நம்பிக்கை கொண்டதோடு மட்டுமல்லாமல் அந்நம்பிக்கையை நிஜமாக்க இளைய சமுதாயத்தை எழுச்சி மிக்க ஒரு சமுதாயமாக மாற்ற தன்னாலான முழு முயற்சிகளையும் எடுத்து பாரத தேசத்தின் பட்டி தொட்டியெல்லாம் சென்று இளைஞர்களின் உணர்வைச் சரியான பாதையில் கூர்மைப்படுத்தினார்.

இத்தனைக்கும் மேலாக அவர் தமிழ் மீதும் இலக்கியத்தின் மீதும் கொண்டிருந்த காதல் அளப்பரியது.

ஒரு மனிதன் வாழ்வில் எத்தனை பெரிய சிகரத்தைத் தொட்டாலும் தான் ஒரு மனிதன் என்பதை எப்போதும் மறந்து விடக்கூடாது என்பதை வாழ்ந்து காட்டிய அவரது எளிமை போற்றத்தக்கது.

தனது 83வது வயதிலும் தான் கொண்ட நம்பிக்கையை நிஜமாக்க மாணவ சமுதாயத்தின் முன்னே உரையாற்றிக் கொண்டிருந்த போது உயிர்நீத்த அவருக்கு இத்தகைய ஒரு மகத்தான இறுதி நேரத்தை அளித்து இறைவன் தான் அவரது மகத்துவத்தை இரட்சித்தேன் என்று கூறிவிட்டான்.

இந்த அரும் பெரும் மனிதன் வாழ்ந்த காலத்தில் அவன் உதித்த தமிழகத்தின் மண்ணில் எனது கால்களும் பதிந்தது என்பதே எனது வாழ்வின் பாக்கியமென்பேன்.

இதோ அம்மாமனிதனுக்கு இச்சிறியேனின் அஞ்சலிக் கவிதை …

புண்ணியர் பூமி என
போற்றிப் பாடிடும்
தென்கோடிக் கரையதுவாம்
ராமேஸ்வரம் தனிலே
விழுந்த ஒரு விதை
வித்தாகிச் செடியாகி
பொன்னெழில் பொங்கிடும்
ஆலமரமாக ஓங்கியெழுந்ததுவே !

ஐயா ! அப்துல் கலாம்
ஐக்கியமாகியிருக்கலாம் நீ
ஆண்டவனுடன்
ஆனால்
அழியாமல் பதிந்து விட்டாய்
அகிலத்தோர் நெஞ்சங்களில்

சிந்தி விளையாடும் சிகையுடன்
சிரிப்பினை அள்ளி வீசிடும்
சிங்கார வதனத்துடன்
சிந்தனைச் சிற்பியாய் நீ
வலம் வந்தனையே !

தூக்கத்தில் காணும்
கனவல்ல கனவு
இளைஞனே ! உன்னைத்
தூங்க விடாமல்
வைத்திருக்கும் இலட்சியக்
கனவுகளை வளர்த்திடு
அவற்றை நோக்கி
அயராமல் உழைத்திடு
எனும் உனது ஊக்கமிகு
வார்த்தைகள் எத்தனை
இளந்தலைமுறையினரை
எழுச்சி கொள்ள வைத்தது

இந்திய தேசத்தினை
உலகின் விஞ்ஞான வரைபடத்தில்
வரைந்து வைத்த வித்தகனே !
விரைந்து நீ சென்றாயே !
வேகுதய்யா எம் மனது

கல்வியின் மகத்துவத்தை
பட்டி தொட்டியெலாம்
எடுத்துச் சென்று
வள்ளுவன் வகுத்த வகை
வாழ்ந்து காட்டிய
வாழ்க்கைச் சிற்பி ஐயா நீ !

மாணவ சமுதாயமே !
ஒரு நாட்டின் முதுகெலும்பென
ஓயாமல் ஓங்கி ஒலித்தது
உந்தன் ஓங்காரமான குரல்

ஏழ்மையில் அவதரித்து
கல்வியெனும் ஏணியில் ஏறி
விஞ்ஞானத்தின் உச்சியை
அஞ்சாமல் தொட்டவன் நீ !

எளிமையின் மறு உருவமாய்
மனிதாபிமானத்தின் மொத்த வடிவாய்
பண்பெனும் மகத்துவத்தின்
மாபெரும் உதாரணம் நீ !

அன்பு நிறைந்தவனே ஐயா
அப்துல் கலாம்
நீ காலமாயிருக்கலாம்
ஆனால் உன் தாய்த்திருநாட்டின்
மாற்றத்தைப் பற்றி
நீ கண்ட கனவுகள்
கால காலமாய் கலாம்
எனும் ஓசையோடு பாரத தேசத்து
இளைய சமுதாயம் மட்டுமின்றி
பாரெங்கும் வாழும் தமிழர்களின்
இதயங்களில் வாழ்ந்து கொண்டுதானிருக்கும்

ஆண்டவனுக்கு உந்தன்
ஆலோசனை தேவைப்பட்டது போலும்
அழைத்துக் கொண்டான் உன்னை
அவசரமாக . . .
அங்கிருந்து கொண்டே
உந்தன் மணிச் சிரிப்பின் மூலம்
மனித நேயத்தை மேலும்
வளர்த்தெடுக்க ஊக்குவிப்பாய்

ஐயா உந்தன்
கடைசி மணித்துளி மூச்சு
உள்ளவரை
எந்த மாணவர் சமுதாயத்திற்காக
உழைத்தாயோ
அந்த மாணவ சமுதாயத்தின்
முன்றலில் உந்தன் இறுதி மூச்சி
விடைபெற்றதய்யா !

ஆண்டவன் உன்னை
அந்தரிக்க விடவில்லை
நோயில் அழுந்தி நீயும்
கட்டிலில் விழவில்லை
உழைத்துக் கொண்டே
உயிர் விட்டாய்
உயர்த்தி விட்டாய்
உன் இலட்சியத்தை

உன் ஆத்ம சாந்திக்காய்
லட்சோப லட்ச தமிழர்களோடு
இணைந்து நானும் பிரார்த்திக்கின்றேன்

அஞ்சலிகளுடன்
சக்தி சக்திதாசன்

மீண்டும் அடுத்த மடலில்
துயரத்துடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *