“கர்மவீரர் காமராஜர்” – கர்மவீரர் காமராசர்!

0

— சரஸ்வதி ராசேந்திரன்.

 

 

கர்மவீரர் காமராஜர்

kamarajarவிருதுநகரிலே குமாரசாமி நாடாருக்கும், சிவகாமி அம்மாளுக்கும் பிறந்த மகன் காமராஜர். ஏழைக்குடும்பத்திலே பிறந்தாலும் தமது அயராத உழைப்பால், தூய்மையான தொண்டால், உண்மைத் தொண்டால் உயரமுடியும் என்ற உண்மையை இந்த உலகுக்கு நிரூபித்துக்காட்டிய உத்தமர் அவர். நாட்டு நலனே தமது நலனெனக் கருதி காந்திய வழியிலே நின்று அரும்பாடு பட்டவர் காமராஜர். பதவியைத் துச்சமென எண்ணி துண்டை உதறித் தோளிலே போட்டுக்கொண்டு மக்களுக்குச் சேவை செய்தவர்.

கைப்பொருள் தன்னிலும் மெய்ப்பொருளாய் மேன்மை மிக்கதாய் விளங்குவது கல்வியே. அந்தக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது அவரது தந்தையின் சாவு. அதிலும் நாட்டுப்பற்று வீற்றிருக்கும் மனதில் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டாலும் அவர் மனது எப்படி கல்வியில் நாட்டம் கொள்ளும்? தலைவர்களின் உணர்ச்சி மிக்க சொற்பொழிவுகளை கேட்கக் கேட்க அவர் நெஞ்சில் நாட்டுப்பற்று கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் பரப்புவதில் காமராஜர் மிகுந்த அக்கறை செலுத்தினார். கட்சியை வளர்ப்பதற்காக ரயில் நிலையத்திற்குச் சென்று உண்டியல் குலுக்கினார்கள் அவர் நண்பர்கள். அன்றும் காங்கிரஸ் கட்சியில் இருவகைக் கருத்துடையவர்கள் இருந்தார்கள் அதனால் இரண்டாக உடைந்தது காங்கிரஸ். இதில் முதல் பிரிவுக்குத் தலைவர் சத்தியமூர்த்தி. இரண்டாவது பிரிவுக்குத் தலைவர் ராஜாஜி. அதில் காமராஜர் சத்திய மூர்த்தியின் தலைமையை ஏற்றார். காமராஜர் எப்போதும் அளவோடு பேசுபவர். செயல் புரிவதில் அவர் வல்லவர். மற்றவர்கள் பேசட்டும் நான் பணி புரிகிறேன் என்று பணிவுடன் கூறுவார். அதனால்தான் பிற்காலத்தில் கர்மவீரர் காமராஜர் என்று அழைக்கப்பட்டார்.

காமராஜர் கலந்து கொள்ளாத போராட்டமே இல்லை எனச்சொல்லலாம். உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு முதன் முறையாகச் சிறை சென்றார் அவர். உண்மையான தூய்மையான தொண்டுக்கு என்றும் மதிப்பு உண்டு. அதேபோல் உண்மையாக உழைப்பவர்கள் யாராயினும் அவர்களைத்தேடி பதவி ஓடிவரும். அவரது அயராத உழைப்பின் காரணமாக காமராஜர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுய நலம் இல்லாதவர்களை உலகம் மதிக்கிறது, அவர்கள் சொல்லுக்கு மதிப்பளிக்கிறது. காமராஜரும் நேர்மையாகவும் நெறி தவறாமலும் நடந்து ஒப்பற்றத் தலைவராக விளங்கினார். காமராஜர் கொள்கை பிடிப்பு மிக்கவர். நாளுக்கு நாள் அவர் நெஞ்சில் தேசப்பற்று தழைத்து வளர்ந்தது.

சிறையில் இருந்தபோது கூட அவர் நிரம்பப் படித்தார். அத்துடன் ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொண்டார். இயற்கையாகவே அவரிடம் அமைந்திருந்த நுண்ணறிவுடன் நூலறிவும் சேரவே அவர் சிறந்த அரசியலறிஞரானார். பதவியை விரும்பாதவர்களைத் தேடி பதவி தானே வரும் . சுய நலம் இல்லாத காமராஜரைத் தேடி முதலமைச்சர் பதவி வந்தது. அவர் விரும்பியிருந்தால் முதலமைச்சராகியிருக்கலாம். ஆனால் தமக்கு விரோதமாக இருந்த ராஜாஜியை முதலமைச்சராக்கி அவருக்குத் தனது ஒத்துழைப்பை நல்கினார் . இன்றைய அரசியலில் அவையெல்லாம் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. காமராஜர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவர் விரும்பியிருந்தால் மேல் சபை உறுப்பினராக நியமனம் பெற்றிருக்கலாம். அவர்தாம் பதவி ஆசை இல்லாதவராயிற்றே. சிறந்த ஜனநாயக வாதியாகவும் இருந்ததால் சட்டசபை உறுப்பினராவதற்கே விரும்பினார். அவர் முதலமைச்சர் ஆனபோதுகூட புதிய மாளிகையில் குடியேறவில்லை. அவர்தான் எளிமையானவர் ஆயிற்றே. தி நாகரில் 8ம் நம்பர் வீட்டில் குடியேறினார்.

அவர் எப்போதும் கட்சிக்காக உழைத்த நண்பர்களையும், தியாகிகளையும் மறக்கவில்லை. எதைச்செய்தாலும் அது பொது மக்கள் நன்மைக்காகவே செய்தார். எந்த நேரத்திலும் தான் ஒரு ஏழை இந்தியனாகவே இருக்க விரும்புகிறேன் என்றார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை எதிரியாகா நினைக்கக்கூடாது, அவர்களை நண்பராக்கிக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையுடையவர். குஜராத் பல்கலைக்கழகம் தனது பேரவையை கூட்டி இந்தியாவிலேயே எந்த மா நில அரசும் நினைத்துப்பாராத அளவில் கல்வித்துறையில் செயற்கரிய சாதனைகள் செய்தமைக்காக இவருக்கு டாக்டர் பட்டம் தரத் தீர்மானமானது. டாக்டர் பட்டமா? எனக்கா? நான் என்ன பெரிய சாதனை செஞ்சுட்டேன்னு இதை முடிவெடுத்தீங்க? விஞ்ஞானிகள் மேதாவிகள் இருக்காங்க. அவர்களைத்தேடிப் பிடித்து இந்தப் பட்டத்தை கொடுங்கள். என்று சொன்னவர் அவர். இன்றைய அரசியல் அப்படியிருக்கிறதா?

முதலமைச்சராக இருந்தகாலத்திலும் கூட மக்களிடம் நேரடியாகச்சென்று குறைகள் கேட்டார். மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டதால் இலவசக்கல்வி இலவசச்சீருடை வழங்க ஏற்பாடு செய்தார். ஆசிரியர்களுக்கான நலனிலும் அக்கறை கொண்டதால் நிரந்தர வைப்பு நிதி, ஓய்வுகால ஊதியம், ஆயுள் காப்பீடு ஆகியவை ஆசியா கண்டத்திலேயே காமராஜர் ஆட்சியில்தான் ஆசிரியர் சமுதாயத்திற்கு என இத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன. ஓய்வு பெறும் வயது 55-58 ஆக உயர்த்தப்பட்டது.

இருக்கும் வரை நாட்டுக்காகவே உழைத்த நல்லவர், ஏழைப்பங்காளர், கர்மவீரர், படிக்காதமேதை அவருடைய அரிய பண்புகளுக்காக அவர் செய்த தியாகங்களுக்காக மக்கள் அவரை நேசித்தார்கள். இந்திய மக்களின் இதய வானிலே என்றும் நின்று ஒளிசிந்தும் துருவ நட்சத்திரமாக விளங்கிக் கொண்டிருக்கிறார் கர்மவீரர் காமராஜர்.

சரஸ்வதி ராசேந்திரன்
மன்னார்குடி-614001

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *