படக்கவிதைப் போட்டி – 24

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

11736935_869711359749731_1255709504_n
61341525@N03திரு. ராகுல் ரவீந்திரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.08.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

About the Author

has written 1213 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

25 Comments on “படக்கவிதைப் போட்டி – 24”

 • கவிஜி wrote on 3 August, 2015, 12:31

  வீணையடி…. நீ எனக்கு….

  வாசித்தவைகளை
  அழித்த பின்னும் 
  போதும் என்ற 
  மனதோடு மீண்டும் 
  தீப் பிடித்துக் கொண்ட 
  தலை விரித்தலில் 
  இருண்மைத் தத்துவ
  புறாக்களின் அணைந்த 
  வாசத்தோடு 
  ஓரு மாலையை 
  பதிந்து கொண்டிருந்தது….
  நம்மில் இல்லாமல்
  போன 
  இசை வரிகள்….

  கவிஜி 

 • சி. ஜெயபாரதன் wrote on 3 August, 2015, 20:07

  கலைமகள் இவள்.

  சி. ஜெயபாரதன்

  இசைதான் ஆத்மாவுக்கு
  உயிரூட்டும் !
  ஊஞ்சலில் போட்டுத்
  தாலாட்டும்.
  வெந்த புண்களை
  மந்த மாக்கிப்
  பாலூட்டும். 
  திகட்டாத கனிகளாய்த்
  தேனூட்டும்.
  கான வெள்ளம் 
  ஓடும் போது
  கல்லும் கரையும் !
  புல்லும் பசுமை யாகும் ! 
  பாதை விடும்
  பாறையும் !
  பிறவிப் பயனே 
  நாத வீணையில் எழும் 
  கீதம் கேட்பது ! 
  ‘நலந்தானா,’ எனும் கண்ண தாசன்
  நாதஸ்வர இசைப் பாடல் 
  காதில் விழும் போது
  இனிக்குது ! இனிக்குது ! 
  தேனாய் இனிக்குது !
  எத்தனை தரம் கேட்டாலும்
  செவியில்
  இனித்துக் கொண்டே
  இருக்குது !
  ‘நெஞ்சில் ஓர் ஆலயத்தில்’
  ‘சொன்னது நீ தானா,’ 
  என்னும்
  வீணையின்
  நாத ஒலி
  கண்ணீர் விடும் போது
  இதயம் 
  கரைந்தோடும். 
  இசைக்கலை இல்லையேல்
  இப்புவியும்
  பாலையாய்ப்  போகும் !

  ++++++++++++++
   

 • Shyamala Rajasekar wrote on 3 August, 2015, 20:29

  மடிதவழும் வீணையை மங்கையவள் மீட்ட 
  கடிதுவரும் கூட்டமுடன் காக்கை -பிடித்த 
  இசையில் லயிக்க இனிமை ததும்ப
  அசையும் விரல்கள் அழகு . 

 • ஜெயஸ்ரீ ஷங்கர். wrote on 3 August, 2015, 23:47

  மணமேடைப் பயணமது  
  தொலை தூரமில்லையென 
  நாணமுகத் தாமரையும்  
  சற்றே குனிந்து  சிவந்திட 
  காற்றலைந்த கார்கூந்தல்  
  ஏதோ ரகசியம் சொல்லிட 
  மடியேந்திய மரகதத்தை  
  மோகனத் தளிர்விரல்கள் 
  மௌனத்தந்திகளைத் தழுவிடவே   
  வெண்கல மணியிசை 
  ஸ்வரத்துடன் நழுவிட  
  இசைமணத்தை ஓடிவந்த 
  தென்றலும் அள்ளிச்சென்றிட  
  அசைந்தமனம்  கனவுகளுள்  
  இசைந்து கரைந்து 
  சிறகுகள் விரித்திட 
  கன்னியவள் மனமேடை 
  கண்ணிறைந்த சிருங்காரம் 
  காலமெனும் மணல்மேடையில் 
  உயிர்த்தந்திகள் மீட்டெடுக்கும் 
  கல்யாணராகங்கள் இசைத்திடும் 
  ஆனந்த வேளையிது….!, 

  ஜெயஸ்ரீ ஷங்கர்.

 • கார்த்திகா AK wrote on 4 August, 2015, 15:04

                                        என் இனிய பொன் நிலவே-கார்த்திகா AK

  இளம் பட்டு வண்ண மயிலாய்
  கரங்களில் வீணை ஏந்தி 
  இசை மீட்டும் உன் சுருதியில் 
  ராகங்கள் தோற்குமடி!

  செஞ்சாந்துக் குழம்புகள் 
  தொடாமலே விரல்நுனிகள் 
  சிவக்குமடி ….கீதங்கள் தோற்கும்!

  பூவொன்று வந்தமர்ந்ததாலே 
  நிலமிங்கு மலர்ச் சொரியுதே..
  புள்ளினங்கள் ஆனந்த பள்ளு
  பாடித் திரியுதடி!

  ஆப்பிள் துண்டென 
  வடிவுற்ற கன்னங்களில் 
  கொஞ்சி ஆடத்தான் தங்கம் 
  குடை ஜிமிக்கிகள் ஆனதடி!

  வலம்புரிக் கழுத்தை 
  சுற்றி பெருமை சேர்த்ததடி 
  அழகிய நித்திலங்கள்!

  நீ ஒன்று 
  சொல்லாய் பெண்ணே!

  மேகங்கள் உடுத்தி 
  வானவிற் கவிதையாய் 
  குளிர் முழுமதிக்  
  கண்களில் படபடக்கும் 
  இமைச் சிறகுகளால் 
  எனை சாய்ப்பது ஏனடி!!
    

 • Sundar Purushothaman wrote on 4 August, 2015, 17:02

  ராகநகை மீட்டுகின்றேன்…..
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

  சங்கிலிக் கனவுகள் 
  சல்லடைச் சன்னலில்
  வில்லதன் அம்பெனச்
  சீறி வரும்…..!

  சத்தமில்லா மலென்
  உள்வளர்ச் சங்கது,
  என்மனக் காதலை
  ஓத வரும்…!

  நல்மனக் காதலன் 
  கள்தரும் காதலை
  புள்ளது பாடவே
  தேடி வரும்…!

  வாதமும் காதலின்
  தேனதைக் கோதவென்
  கார்குழல் தோளிலே
  ஆடி விழும்…!

  கைமுதற் கால்வரை
  ஊறுமென் காதலை
  வீணையின் தந்திகள்
  பாடிடு மோ?

  தீண்டினேன் தீண்டவும்
  வீணையும் தந்ததே
  நாயகன்  நகைக்கின்ற
  ஏழு சுரம்……!

  ~~~~~~~~~~~~~~~~~~~
  அன்புடன்,
  சுந்தர் புருஷோத்தமன்

 • Lakshmi wrote on 4 August, 2015, 18:51

  கார்குழல் பேடையாள்
  கானமிசைக்க இந்திய வீணை
  கானம் பாட தயார்!
  ஒண்ட வந்த பேடையாலே
  ஒருங்கு திரண்ட தந்திகள்
  அபஸ்வரமாய் மாறலாமோ!
  விருந்தும் மருந்தும்
  பேடைக்கும் ஒன்றுதான்!
  வான்வெளியில் சிறகடிக்க
  தனக்குரிய  இடத்தை 
  எந்நாளும் தாரைவார்க்க
  அமைதிப்பூங்கா அதிபதி
  தமிழ்ப்பேடை அனுமதியாள்!
  வெண்டைப்பிஞ்சு விரலாள்
  சாமகான வீணை தடவ
  சப்தஸ்வரங்கள் இனிதாக
  சப்தமின்றி பறந்திடுவாய்!
  தமிழ்மகள் கானம் இனிதாக
  யாரும் இருக்கும்இடத்தில்
  இருந்து விட்டால்
  எல்லாம் சுகமே!
  பிரிவினை வேண்டும்
  வரலாறு இங்கே
  முடிந்து போன அத்தியாயங்கள்!
  மண்மகள் விரிந்திட்டால்
  பூமிதனில் ஒருசாண்கூட
  யாருக்கும் சொந்தம் இல்லை!
  கடல்எல்லைகள் கணக்காக
  யாருக்கும் சொந்தமில்லை!
  இன்னொருமுறை வெடிகுண்டுப் பாடம்
  படிக்க தமிழ்ப்பேடை தயாரில்லை!
  அமைதிப்பூங்காவில் தமிழ்மகள் ரோஜாக்கள்
  அமைதியாக உறங்குகின்றன!
  அனாதைகள் யாரும் அவர்களாய்
  பிறப்பதில்லை!
  உருவாக்கும் விதிகளுக்கு
  யார் இங்கே பொறுப்பேற்பது!
  சுயநல துதி பாடிய மக்களிடையே
  கருடபுராணம் பாடி யார் அங்கே நிற்பது?
  குடும்பக்கோவிலில் ஒவ்வொரு
  சிலைகளும் அதி முக்கியமே!
  பறந்துவிடு! உரிமையான
  பங்கிருந்தால் உணர்ந்து
  வெள்ளைப்புறாவாய் மாறி
  அதனை வென்றுவிடு!
  அர்த்தமற்ற அனர்த்தங்கள்
  இனியாவது இல்லாமலிருக்க
  மனதை மாற்றிப் பறந்திடுவாய்!
  சிந்தாமணி மீட்டிய தமிழ்ச்சுவையில்
   கின்னரங்கள் மயங்கலாம்!
  கிடைக்காத பனுவல்களைத் தேடி
  எடுத்துக் கொணர்ந்திடுவாய்!
  தமிழ்ச்சுவையால் மட்டுமே
  ஒருங்கிணைந்தோமன்றி
  வேறெதாலும் அல்ல
  என்றே உணர்ந்திடுவாய்!
  அரிதினும் அரிதான
  அப்துல்கலாமின் புகழ்பாடி
  நற்புகழ் பேடை ஆசிரியனாய் உயர்ந்திடுவாய்!

 • Raa.Parthsarathy wrote on 4 August, 2015, 21:03

  மாசில் வீணையும் மாலை மதியமும்,
  வீசு தென்றல் விளங்கிடவே 
  நாவுக்கரசின்  சொல்லிசை செப்பிடவே 
  வீணையில் எழும் நாத  இன்பம் 
  கலைமகள் எழுப்பிடும் கைவண்ணம் 
  வாணியை நினைந்து காரிகை வீணை மீட்டுகிறாள் 
  தன் விரலால் இன்னிசையை கூட்டுகிறாள் 
  மாதவி போல் கடற்கரையில் கானல்விரி பண் இசைக்கின்றாள் !

  ரா.பார்த்தசாரதி 

 • திரு.பாரதி. செ wrote on 4 August, 2015, 21:12

  விரல் மீட்டிடும்
  வீணைக்கும் 
  இவள் மேல்
  தான் காதலோ… 

  திரு. பாரதி. செ 

 • சாக்கிர் wrote on 5 August, 2015, 1:04

  காற்றதிர்கும் பூவி(வள்)தழ் 

  தரையினில் செந் தாமரை இதழிற்குக்
  கைமுளைத்து
  வீணையையேந்தி விரலசைத்து – அதன்
  நரம்புகள் துடிக்கவைத்து
  காற்றின் அணுக்கள் அதிர வைத்து
  அதன் அமைதியை அ லங்கரிக்க 

  சிறகடித்து படபடத்து கரகோசம் செய்தாடுதே பட்சிகள் அவளருகே

 • எஸ். பழனிச்சாமி wrote on 5 August, 2015, 10:46

  வீணையும் பெண்ணும் – சிலேடை

  தேன்போல் மொழிவதால் தெய்வீகம் உள்ளதால்
  வான்போல் பொழிந்திடும் வன்மையால் – மேன்மையாய்
  வல்லவர்கை சேர்ந்து சிறப்புறும் தன்மையால்
  நல்லதோர் வீணையாம் பெண்

 • மணிச்சிரல் wrote on 5 August, 2015, 15:46

  மென்விழியால் பொன்னகையும் தன்னிறமிழக்கும்
  மாடந்துறந்து ஆண்புறாவும் உன்பின்னலையும்
  மதிமயக்க உன்கரங்கள் என்மேல்தவழும்
  மங்கையின் மென்மடிபடர்ந்த என்னையிசைக்கும்
  மென்னொளியில் மெல்லிசையில் என்நரம்பதிரும்

 • கொ,வை அரங்கநாதன் wrote on 5 August, 2015, 18:17

  அரங்கேற்றம்

  நரம்பினை மீட்டி
  நரம்பினை உருக்கி
  வரம்பில்லா இசையொன்று
  வானில் சிறகடிக்கும்

  வீணையின் மீதான
  உன் விரல் ஸ்பரிசம்
  ஞானத்தை ஆக்கும்
  நல் இசையாகி
  வெளியில் விரிந்து
  வேதனைத் தவிர்க்கும்

  இசைக்குள்  நீ
  உனக்குள் இசை
  அத்வைதம் ஒன்று
  அழகாய் இங்கே அரங்கேறுகிறது!

 • ஜெயஸ்ரீ ஷங்கர். wrote on 6 August, 2015, 15:54

  இசைக்கின்றாய் 
  கல்யாண ராகம் 
  கல்யாணியில் 
  கல்யாணி நீ 
  பாடக் கேட்டுக் 
  காதல் புறாக்கள் 
  ஆசைச் சிறகடிக்க 
  மனத்தின் மந்தஹாசங்கள் 
  உன் மடியில் தவழும் 
  மகரத்தின் மனத்தோடு 
   கூடித் தேடிடுமோ  தோடி..! 

  ஜெயஸ்ரீ ஷங்கர் 

 • மெய்யன் நடராஜ் wrote on 7 August, 2015, 15:19

  இவளின் விரல்குழந்தை வீணை நரம்பில் 
  தவழ்கின்ற வேளை இசையாய் சிணுங்கும் 
  இவளின் மனமென்னும் வீணையை மீட்ட 
  எவருண்டு என்பதைக் கேட்டு.

 • saraswathiRjendran wrote on 7 August, 2015, 16:18

  கலை மகள் கைப் பொருளாம் வீணை
  கையிலெடுத்து மீட்டிடுவாய் இசைத் தேனை
  கேட்போருக்கு உன் இசை தேவகானம்
  கவி விரித்து இசைக்கின்றாய் அமுதகானம்
  இசை பாடும் வீணை நரம்புகள் கொஞ்ச கொஞ்ச
  இயல்பான கல்யாணி கெஞ்ச கெஞ்ச
  அசைபோடும் தமிழ்ப்பாடல் மிஞ்சமிஞ்ச
  அலை பாடும் கடல் கூட அஞ்ச அஞ்ச
  ஆடிவரும் தென்றலோ துஞ்ச துஞ்ச
  ஒப்பில்லா உன் மீட்டலுக்கு நாகம் கூடபடமெடுக்கும்

  சரஸ்வதி ராசேந்திரன்

 • சுரேஜமீ wrote on 7 August, 2015, 21:20

  தானாய்த் தகைசேரும் நாதம் இணையாக!

  நாதம் தருமின்பம் நாளும் சுகமென்பேன்
    போதும் எனும்சொல்லே போகும் மொழியின்றி
  நானும் விரல்கொண்டு மீட்ட வரும்நாதம்
    வீணை விளக்கும் ஒருவாழ்க்கைத் தத்துவமே!
  வாழும் உலகினிலே வாழ்வும் பொருளாக
    எந்தன் ஓலிபோல இன்பம் பரப்பிடுக!

  மண்ணும் மயங்கிடுமே புள்ளும் உணர்ந்திடுமே
    மானுடம் போற்றும் இசையின் வடிவமெலாம்
  மங்கை உளத்தினிலே தெய்வம் குடிகொண்டு
    மாறும் உலகிற்கே வேராய் இருந்திடுமே
  பண்பு நெறிகளெலாம் தானாய் வளர்ந்திட்டு 
    எண்ணம் மலர்வண்ணம் எங்கும் விரிந்திடவே!

  சொல்லில் வருமோசை கூட்டும் சுவைதனையே
    சுற்றம் வளர்ந்தோங்கி நல்லுறவும் பெற்றிடவே
  சுத்தம் மனதேகி உச்சம் செயலாக்கி
    சூழும் இருளகற்றும் நாதம் நமக்கென்றும் 
  நல்லவை நாடுமென்றும் அல்லவை விலக்கிடும் 
    நல்லிசை பயின்றிடுவோம்  நீடு உயிர்வாழ!

  தானும் தலைக்கேறா வீணை மனதிருந்தால்
    தானாய்த் தகைசேரும் நாதம் இணையாக!

  அன்புடன்  
  சுரேஜமீ 

 • சத்திய மணி wrote on 7 August, 2015, 23:51

  உன்னை ஒன்று கேட்டேன்
  உண்மை சொல்ல வேண்டும்
  என்னை மீட்ட சொன்னால்
  என்ன      மீட்ட தோன்றும்   ()

  படத்தை பார்த்து  நானும்  கவிதை சேர்க்க‌வில்லை 
  பாராட்டு   மட்டும் பரிசு கேட்க‌வில்லை ()

  மடிமீது  நீயும்  விரலோடு   நானும்
  மனதோடு தாளம் இயல்பாகும் நாத‌ம்
  கனவோடு  கண்டு கண்ணை மூடி கொண்டு
  என்னை மீட்ட சொன்னால்
  என்ன     மீட்ட தோன்றும்   ()

  சுரம் ஏழைத்தேக்கி எனை ஏழையாக்கி
  சுகமோடு   மோகம்  எனிலின்று  ஏகும்
  தமிழோடு நானும் உறவுகாணும்  போது
  என்னை மீட்ட சொன்னால்
  என்ன     மீட்ட தோன்றும்   ()

  (கவியரசே கும்படரேணுங்க)

 • இளவல் ஹரிஹரன் wrote on 8 August, 2015, 12:55

  இசைக்க மறந்த இராகம்
  எதுவென்று அறிவாயா  பெண்ணே!

  கட்டுக் கலைந்த கூந்தல்
  கார்மேகங்களாய்க் காட்டும் அழகு…

  தொட்டுத்தடவி மீட்டும் விரல்கள்
  இட்டுக்காட்டும் இசையின் இசைவில்
  தொலைதூரப் பணியில் இருக்கும்
  கணவன் காதுகளை எட்டும் விழைவில்…

  நெஞ்சக் கூட்டில் படபடக்கும் சிறகுகளால்
  கொஞ்சும் புறாவாய்த் துடிதுடிக்கும் மனதால்….

  விரகதாபத்தில் வீணைமீட்டும் 
  இசைவழியே தூது செல்லும் புறா
  நல்ல சேதி கொண்டு வருமா……

  வீணை நரம்புகள் இற்று இசை
  வீழும் முன்னர் 
  கணவன் வருகை காட்டும்
  ஒரு தேதி சொல்லி விடுமா…….

  சோகத்தின் சுக ராகங்களில்
  தீரா விரகப் பெரு மூச்சுடன்…..

  இசைக்க மறந்த இராகம்
  எதுவென்று புரிந்ததா பெண்ணே…..!

                 இளவல் ஹரிஹரன் மதுரை
                     98416 13494

 • புனிதா கணேசன் wrote on 8 August, 2015, 14:55

  பூங்காற்றுச் சுமந்து வரும் என்காதலின் கதன குதூகலங்கள்

  உன்னை ஆராதித்தே மீட்டும்
  என் விரலின் பூபாளங்கள்
  இன்னும் உன் துயில் போக்காமலே….
  நின் நினைவுகள் என்னுள் கூடி ஒரு
  புன்னகவராளியின் கட்டுண்ட நாகம் போல்
  என் விரல்களோடு வீணையின் தந்திகளில்…
  கம்பீரமான உன் நடையின் ஞாபகங்கள்
  கம்பீர நாட்டையாகி என் வீணைத் தந்திக்
  கம்பிகளின் நாதமாய் கலந்தே நடமிட்டு ……….
  நிர்மலமாம் காதலுடன் நெஞ்சம் நெகிழ்ந்து
  அர்ப்பணித்தே -கரகரப்பிரியாவை கை
  விரல்கள் மீட்டும் உயிர் கீதம் வீணையிலே……….
  காந்தர்வ வதனத்தின் எழிலழகில் கிறங்கும்
  மாந்தர் வரிசையிலே என்னை நான் இணைத்தே
  சுந்தரமாய் நின் மோகனத்தில் என் மன வீணை………..
  இச்சித்து இந்தோளம் சுண்டுகிறது விரல்கள்
  அச்சம் மடம் நாணம் பயிர்ப்பிழந்து என் காதல்
  கச்சிதமாய் உன் சிருங்கார நினைவுடனே……….
  நிலவின் குளிர்மையில் வீசும் தென்றலாய்
  நீலாம்பரி மீட்டி நின் தூக்கம் கண் தழுவ
  குலவும் வீணை ஒலி காதில் தாலாட்டாய்…..
  காலைப் பனியின் உருக்கம் கதிரவன் வரவில்
  சோலைக் குயிலின் கீதம் முகாரியாக நின்
  மேலான வரவின்றி என் வீணைத் தந்திகளில்…………
  ஆதலினால் பூங்காற்றுச் சுமந்து வரும் என்
  காதலின் கதன குதூகலங்கள் இன்னும் உன்
  காதில் கனிந்தே விழவில்லையோ?………………..

  புனிதா கணேசன்
  07.08.2015

 • Shenbaga jagatheesan wrote on 8 August, 2015, 16:54

  மீட்டிடு வாழ்க்கையையும்…

  வீணை மீட்டிப் பண்பாடும்
       வாணி யொத்த பெண்மகளே,
  பேணும் குடும்ப வாழ்க்கையையும்
       பண்புடன் வீணையாய் மீட்டிடுவாய்,
  காணுவாய் கணக்கிலா ராகங்களை
       களிப்பெலாம் கொண்டு வந்திடுமே,
  துணென ஆவாய் குடும்பத்திலே
       துயரதைப்  போக்கிடும் உன்னிசையே…!

  -செண்பக ஜெகதீசன்…

 • வேதா. இலங்காதிலகம். wrote on 8 August, 2015, 19:45

  படம்  24.
  இசையவைக்கும் தேவ வாத்தியம்.

  பண்டைய வாத்தியம் வீணை, தஞ்சையை
  ஆண்ட ரகுநாத மன்னன் காலத்திலுருவாகி
  ஈண்டது தஞ்சாவூர் வீணை என்றும்
  ஆண்டது ரகுநாத வீணை என்றும்.
  சக்தி அம்சம் சிவ அம்சமும்
  பொத்திய மெல்லிசை, நரம்புக் கருவி
  இலயித்திங்கு இரசித்து இலயம் தவறாது
  இலாவணியமாய் வாசிக்கிறாள் இளம் கோதை.

  இசைத்து நிறுத்திடினும்  இன்னொலியாய் கமகம்
  அசைந்து அலையலையாய் பின்னும் நீளும்.
  இசைந்து பிரணவநாதமாய் மெல்லத் தேயும்.
  நசையறு நயம் கம்பீரம் இணையுமொலி.
  பலாமரத்தி லுருவகமான அழகிசைக் கருவி.
  விலாவாரியான நுட்பங்கள் தத்துவங்கள் நிறையிசை.
  உலகளவு புவிசார் குறியீடு இதற்கு!
  ஆம்! தஞ்சாவூர் வீணையென அழைப்பு.

  பா ஆக்கம்
  பா வானதி வேதா. இலங்காதிலகம்.
  டென்மார்க்.  8-8-2015

 • பி.தமிழ்முகில் wrote on 8 August, 2015, 19:54

  விரலின் ஸ்பரிசம் பட்டதும்

  இசையாய் தந்திகள் புன்னகைக்க

  கடல் அலைகளுக்கு போட்டியாய்

  நாத அலைகளும் – காற்றினில்

  கலந்து தவழ்ந்து வர

  எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்

  இசையின் வாசம் தனை

  சுவாசிக்க – புறாவும் கூட

  பறந்தோடி வந்ததுவோ ?

  பொன் நகையினும்

  கீற்றுப் புன்னகை அது

  நங்கையினை அலங்கரிக்க

  அவர்தம் விரல் மீட்டும்

  வீணையின் நாதம்

  சுற்றத்தையும் வசீகரிக்க

  மண் வாசனையும்

  நாசிகளை கவர்ந்திழுக்க

  இனிமையானதோர் பொழுதின்

  எழில் காட்சி !

  இயற்கையின் அழகிற்கோர்

  நற்சாட்சி !

 • திரு. பாரதி. செ  wrote on 8 August, 2015, 21:49

  குழந்தை யென வீணை 
  மடி மீது தவழ
  சித்திரமாய் யுவதி யொருவள் 
  இசைத்துக் கொண்டிருகிறாள் 
  சமுத்திர மணற்  துகள்களில்
  பகலை ஆண்டிட்ட
  ஆதவனும் 
  புலம்பி அலையும் 
  மேகக் கற்றைகளில் 
  மயங்கிக் கொண்டிருகிறான் 
  அவள் வீணையின் நாடிகளை 
  விரல்களால் மீட்டிடும்
  மாலை கணத்தில் 
  எச்சமிடும் காக்கைகளும்
  மிச்சமில்லாமல் வந்துக் கொண்டிருகின்றன  
  சொச்சமில்லாமல்  இவளின் வனப்பை காணிட….

  திரு. பாரதி. செ 

 • சத்தியமணி wrote on 8 August, 2015, 22:44

  மடியினில் தவழ்ந்திடும் பொன்வீணையே  – பெண்
  மனதினில் எழுந்திடும் பலகேள்வியே
  விரல்கள்    புண்ணுறவே உனைமீட்டினேன் – மென்
  தந்திகள் அதிர்வினில் விடைகேட்கிறேன்  ()

  பேருடன் பிறந்தகத்தில் அலைமகளா பின்
  சீருடன் புகுந்தகத்தில் விலைமகளா
  கல்லான மனங்கண்டேன் மலைமகளா – மதி 
  இல்லாமல்  உனைமீட்டும் கலைமகளா
  இல்லற வாழ்க்கைதர கல்யாணமா ? – இல்லை
  இதுவும் ஒருவியாபார வைபோகமா ?   ()

  நாமத்தில் பலராகம் நான்பாடினேன் பெரும்
  காமத்தில் வீணாக்கி அவன் ஓடினான்
  அன்பெனும் அரவணைப்பை தான்வேண்டினேன்
  அழிகின்ற அழகுக்குள் அவன் தோண்டினான்
  மும்தாஜ்போல் பிரசிவித்தால் அதுபோதுமா
  முடியாதப் பிறவிக்கு  பலியாடமா?     ()

  பெண்பாதி  ஆண்பாதி  சிவனாகினான்
  பெருமாட்டி  தன்நாவில் அயனேந்தினான்
  தாயாரை   தன்மார்பில் மால்தாங்கினான்
  ஓயாமல் சக்தியென புகழ்பாடினார்
  கற்பழிப்பு கருசிதைவு  இவை ஏற்பதா ?-  இனும்
  அவமதிப்பு ஆபாசம்! பெண் தோற்பதா? ()
                                                            ***********            சத்தியமணி

Write a Comment [மறுமொழி இடவும்]


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.