-மேகலா இராமமூர்த்தி

திரு. ராகுல் ரவீந்திரன் எடுத்த இந்தப் படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்வு செய்து தந்தவர் நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படம் தந்தவருக்கும் அதனைத் தேர்ந்தெடுத்துத் தந்தவருக்கும் வல்லமையின் நன்றி!

lady with veena

காந்தள் மெல்விரல் சிவப்பப்
   -பாந்தமாய் யாழ்மீட்டும் பெண்ணே!
காந்தமாய் உன்னெழில் ஈர்க்கப்
   -பாய்கிறது கவிதையெனும் வெள்ளம்! என்று பாடுமளவிற்குக் கவிமழை பொழிந்திருக்கின்றார்கள் நம் கவிஞர்கள் இவ்வாரம்!

இனி, கவிவெள்ளத்தில் நீந்துவோம் வாரீர்!

’நங்கையிவள் நளின விரல்கள், நம்மில் இல்லாமல் போன இசைவரிகளைப் பதிந்துகொண்டிருக்கின்றன இப்பொன்மாலை வேளையில்…’ என்கிறார் திரு. கவிஜி.

…தீப் பிடித்துக் கொண்ட
தலை விரித்தலில்
இருண்மைத் தத்துவ
புறாக்களின் அணைந்த
வாசத்தோடு
ஒரு மாலையை
பதிந்து கொண்டிருந்தது
நம்மில் இல்லாமல்
போன
இசை வரிகள்

***

ஆத்மாவுக்கு உயிரூட்டும் இசையில்லையேல் புவியும் பாலையாகும்; இசைவெள்ளம் பாய்கையில் பாறையும் பாதைவிடும்; கல்லும் கரையும் என்று உணர்ச்சிப்பெருக்கோடு அற்புதக் கவி வடித்திருக்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

இசைதான் ஆத்மாவுக்கு
உயிரூட்டும் !
[…]
கான
வெள்ளம்
ஓடும் போது
கல்லும் கரையும் !
புல்லும் பசுமை யாகும் !
பாதை விடும்
பாறையும் !
பிறவிப் பயனே
நாத வீணையில் எழும்
கீதம் கேட்பது !
நலந்தானா,’ எனும் கண்ண தாசன்
நாதஸ்வர இசைப் பாடல்
காதில் விழும் போது
இனிக்குது ! இனிக்குது !
தேனாய் இனிக்குது !
[…]
இசைக்கலை
இல்லையேல்
இப்புவியும்
பாலையாய்ப்  போகும் !

***

மடிதவழும் வீணையை மங்கையவள் மீட்டுகையில் அசையும் விரல்களின் அழகை வியக்கிறார் திருமிகு. சியாமளா ராஜசேகர்.

மடிதவழும் வீணையை மங்கையவள் மீட்ட 
கடிதுவரும் கூட்டமுடன் காக்கை –பிடித்த 
இசையில் லயிக்க இனிமை ததும்ப
அசையும் விரல்கள் அழகு. 

***

மணமேடைக் கோலத்தைத் தன் மனமேடையில் அழகாய் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த ஆரணங்கு, கையில் வீணையுடன் கல்யாண ராகங்களையும் இசைத்துப்பார்க்கிறாள் என்கிறார் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கர்.

மணமேடைப் பயணமது  
தொலை தூரமில்லையென 
நாணமுகத் தாமரையும்  
சற்றே குனிந்து  சிவந்திட 
காற்றலைந்த கார்கூந்தல்  
ஏதோ ரகசியம் சொல்லிட 
மடியேந்திய மரகதத்தை  
மோகனத் தளிர்விரல்கள் 
மௌனத்தந்திகளைத் தழுவிடவே   
[…]
கன்னியவள்
மனமேடை 
கண்ணிறைந்த சிருங்காரம் 
காலமெனும் மணல்மேடையில் 
உயிர்த்தந்திகள் மீட்டெடுக்கும் 
கல்யாணராகங்கள் இசைத்திடும் 
ஆனந்த வேளையிது….!

***

’உன் கார்மேகக் கூந்தலும், குளிர்மதி முகமும், படபடக்கும் இமைச்சிறகுகளும் என்னை வேரோடு சாய்க்கின்றனவே’ என்றுக் காதல் சொட்டும் கவிதையொன்றைத் தந்திருக்கிறார் திருமிகு. கார்த்திகா.

…செஞ்சாந்துக் குழம்புகள் 
தொடாமலே விரல்நுனிகள் 
சிவக்குமடி ….கீதங்கள் தோற்கும்!

பூவொன்று வந்தமர்ந்ததாலே 
நிலமிங்கு மலர்ச் சொரியுதே..
புள்ளினங்கள் ஆனந்த பள்ளு
பாடித் திரியுதடி!
[…]
மேகங்கள் உடுத்தி 
வானவிற் கவிதையாய் 
குளிர் முழுமதிக்  
கண்களில் படபடக்கும் 
இமைச் சிறகுகளால் 
எனை சாய்ப்பது ஏனடி!!

***

’கருநிறப் புறாவே! நீ வெண்புறாவாய் மாறிச் சாந்தியும் சமாதானமும் நிலவும் உலகைப் படைக்கமாட்டாயா?” என்று பூவையொருத்தி தன் ஏக்கத்தை வீணையில் விளம்புவதைக் காண்கிறோம் திருமிகு. லட்சுமியின் கவிதையில்.

…வான்வெளியில் சிறகடிக்க
தனக்குரிய  இடத்தை 
எந்நாளும் தாரைவார்க்க
அமைதிப்பூங்கா அதிபதி
தமிழ்ப்பேடை அனுமதியாள்!
[…]
இன்னொருமுறை
வெடிகுண்டுப் பாடம்
படிக்க தமிழ்ப்பேடை தயாரில்லை!
அமைதிப்பூங்காவில் தமிழ்மகள் ரோஜாக்கள்
அமைதியாக உறங்குகின்றன!
அனாதைகள் யாரும் அவர்களாய்
பிறப்பதில்லை!
[…]
பறந்துவிடு
! உரிமையான
பங்கிருந்தால் உணர்ந்து
வெள்ளைப்புறாவாய் மாறி
அதனை வென்றுவிடு!
அர்த்தமற்ற அனர்த்தங்கள்
இனியாவது இல்லாமலிருக்க
மனதை மாற்றிப் பறந்திடுவாய்!
[…]
தமிழ்ச்சுவையால் மட்டுமே
ஒருங்கிணைந்தோமன்றி
வேறெதாலும் அல்ல
என்றே உணர்ந்திடுவாய்!…

***

’மாசில் வீணையை மீட்டிக் கானல்வரியிசைக்கும் காரிகை மாதவியை ஒத்த மாதிவள்!’ என்று இப்பெண்ணைப் போற்றுகிறது திரு. ரா. பார்த்தசாரதியின் கவிதை.

மாசில் வீணையும் மாலை மதியமும்,
வீசு தென்றல் விளங்கிடவே
நாவுக்கரசின்  சொல்லிசை செப்பிடவே
வீணையில் எழும் நாத  இன்பம்
கலைமகள் எழுப்பிடும் கைவண்ணம்
வாணியை நினைந்து காரிகை வீணை மீட்டுகிறாள்
தன் விரலால் இன்னிசையை கூட்டுகிறாள்
மாதவி போல் கடற்கரையில் கானல்விரி பண் இசைக்கின்றாள் !

***

’கைகள்முளைத்து வீணையிசைக்கும் இச்செந்தாமரை கண்டு கரகோசம் செய்கின்றன பறவைகள்!’ என்ற திரு. சாக்கிரின் சுவையான கற்பனை நன்று!

தரையினில் செந் தாமரை இதழிற்குக்
கைமுளைத்து
வீணையையேந்தி விரலசைத்துஅதன்
நரம்புகள் துடிக்கவைத்து
காற்றின் அணுக்கள் அதிர வைத்து
அதன் அமைதியை லங்கரிக்க
சிறகடித்து படபடத்து கரகோசம் செய்தாடுதே பட்சிகள் அவளருகே

***

பெண்ணையும் வீணையையும் அழகாகச் சிலேடையாக்கியிருக்கின்றார் திரு. பழனிச்சாமி.

தேன்போல் மொழிவதால் தெய்வீகம் உள்ளதால்
வான்போல் பொழிந்திடும் வன்மையால் – மேன்மையாய்
வல்லவர்கை சேர்ந்து சிறப்புறும் தன்மையால்
நல்லதோர் வீணையாம் பெண்.

***

’பொன்னகையை நிறமிழக்கச் செய்யும் புன்னகைச் செல்வியின் மென்கைகள் எனைத் தழுவ என் நரம்புகள் மெல்லிசையை வார்க்கும்’ என்கிறது வீணை திரு(மிகு?). மணிச்சிரலின் கவிதையில்.

மென்விழியால் பொன்னகையும் தன்னிறமிழக்கும்
மாடந்துறந்து ஆண்புறாவும் உன்பின்னலையும்
மதிமயக்க உன்கரங்கள் என்மேல்தவழும்
மங்கையின் மென்மடிபடர்ந்த என்னையிசைக்கும்
மென்னொளியில் மெல்லிசையில் என்நரம்பதிரும்

***

இசைக்குள் நீயும் உனக்குள் இசையுமாக ஓர் அத்வைதம் இங்கே அரங்கேறுகிறதே’ என்று வியந்துபோகிறார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

…வீணையின் மீதான
உன் விரல் ஸ்பரிசம்
ஞானத்தை ஆக்கும்
நல் இசையாகி
வெளியில் விரிந்து
வேதனைத் தவிர்க்கும்

இசைக்குள்  நீ
உனக்குள் இசை
அத்வைதம் ஒன்று
அழகாய் இங்கே அரங்கேறுகிறது!

***

பெண்ணிவளின் விரலெனும் குழந்தை வீணையை மீட்டக் கிடைக்கிறதே இசையெனும் சிணுங்கல் என்கிறார் திரு. மெய்யன் நடராஜ்; மெய்தானோ?

இவளின் விரல்குழந்தை வீணை நரம்பில் 
தவழ்கின்ற வேளை இசையாய் சிணுங்கும் 
இவளின் மனமென்னும் வீணையை மீட்ட 
எவருண்டு என்பதைக் கேட்டு.

***

வீணை நரம்புகள் கொஞ்ச, கல்யாணி ராகம் கெஞ்ச, அணங்கிவளின் ராக வேள்வியில் நாகம்கூட மயங்கிப் படமெடுக்கும் என்பது திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் நம்பிக்கை.

கலை மகள் கைப் பொருளாம் வீணை
கையிலெடுத்து மீட்டிடுவாய் இசைத் தேனை
கேட்போருக்கு உன் இசை தேவகானம்
கவி விரித்து இசைக்கின்றாய் அமுதகானம்
இசை பாடும் வீணை நரம்புகள் கொஞ்ச கொஞ்ச
[…]
ஆடிவரும் தென்றலோ துஞ்ச துஞ்ச
ஒப்பில்லா உன் மீட்டலுக்கு நாகம் கூடபடமெடுக்கும்

***

விரகதாபத்தில் வீணைமீட்டும் வனிதையின் இசைவழியே தூது செல்லும் புறா, நல்ல சேதி கொண்டு வருமா? என்று வினவுகிறார் திரு. இளவல் ஹரிஹரன். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

…தொட்டுத்தடவி மீட்டும் விரல்கள்
இட்டுக்காட்டும் இசையின் இசைவில்
தொலைதூரப் பணியில் இருக்கும்
கணவன் காதுகளை எட்டும் விழைவில்

நெஞ்சக் கூட்டில் படபடக்கும் சிறகுகளால்
கொஞ்சும் புறாவாய்த் துடிதுடிக்கும் மனதால்….

விரகதாபத்தில் வீணைமீட்டும்
இசைவழியே தூது செல்லும் புறா
நல்ல சேதி கொண்டு வருமா……
[…]
சோகத்தின் சுக ராகங்களில்
தீரா விரகப் பெரு மூச்சுடன்…..
இசைக்க மறந்த இராகம்
எதுவென்று புரிந்ததா பெண்ணே…..!

***

’அச்சம் மடத்தையெல்லாம் துச்சமெனத் தூக்கியெறியச் செய்துவிட்ட என் விரகத்தின் உச்சம் இவ்வீணையின் வழியே இசையாய்க் கசிவது உன் காதில் விழவில்லையா?’ என ஏக்கப்பெருமூச்சுவிடும் ஏந்திழையைக் காட்டுகிறார் திருமிகு. புனிதா கணேசன்.

…கம்பீரமான உன் நடையின் ஞாபகங்கள்
கம்பீர நாட்டையாகி என் வீணைத் தந்திக்
கம்பிகளின் நாதமாய் கலந்தே நடமிட்டு ……….
[…]
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பிழந்து என் காதல்
கச்சிதமாய் உன் சிருங்கார நினைவுடனே……….
[…]
காலைப் பனியின் உருக்கம் கதிரவன் வரவில்
சோலைக் குயிலின் கீதம் முகாரியாக நின்
மேலான வரவின்றி என் வீணைத் தந்திகளில்…………
ஆதலினால் பூங்காற்றுச் சுமந்து வரும் என்
காதலின் கதன குதூகலங்கள் இன்னும் உன்
காதில் கனிந்தே விழவில்லையோ?

***

’குடும்ப வாழ்க்கை எனும் வீணையையும் பெண்ணிவள் இசைவாய் மீட்டிட, நல்லிசை பிறக்கும்; துயரங்கள் பறக்கும்’ என்பது திரு. செண்பக ஜெகதீசனின் எண்ணம்.

வீணை மீட்டிப் பண்பாடும்
வாணி யொத்த பெண்மகளே,
பேணும் குடும்ப வாழ்க்கையையும்
பண்புடன் வீணையாய் மீட்டிடுவாய்,
காணுவாய் கணக்கிலா ராகங்களை
களிப்பெலாம் கொண்டு வந்திடுமே,
துணென ஆவாய் குடும்பத்திலே
துயரதைப்  போக்கிடும் உன்னிசையே…!

***

பொன்னிகர்த்த பெண்ணின் கரத்தில் இலாவணியமாய்த் தவழும் தஞ்சாவூர் வீணையின் சிறப்பை நம் செவியினிக்கப் பேசுகிறார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

தஞ்சையை
ஆண்ட ரகுநாத மன்னன் காலத்திலுருவாகி
ஈண்டது தஞ்சாவூர் வீணை என்றும்
ஆண்டது ரகுநாத வீணை என்றும்.
சக்தி அம்சம் சிவ அம்சமும்
பொத்திய மெல்லிசை, நரம்புக் கருவி
இலயித்திங்கு இரசித்து இலயம் தவறாது
இலாவணியமாய் வாசிக்கிறாள் இளம் கோதை.
[…]
பலாமரத்தி
லுருவகமான அழகிசைக் கருவி.
விலாவாரியான நுட்பங்கள் தத்துவங்கள் நிறையிசை.
உலகளவு புவிசார் குறியீடு இதற்கு!
ஆம்! தஞ்சாவூர் வீணையென அழைப்பு.

***

’கடலலைகளோடு போட்டியிடும் நாத அலைகளில் திளைக்கவே புறாவும் பறந்தோடி வந்ததோ?’ என்று ஐயமுறுகிறார் திருமிகு. தமிழ்முகில்.

விரலின் ஸ்பரிசம் பட்டதும்
இசையாய்
தந்திகள் புன்னகைக்க
கடல்
அலைகளுக்கு போட்டியாய்
நாத
அலைகளும்காற்றினில்
கலந்து
தவழ்ந்து வர
எங்கும்
நீக்கமற நிறைந்திருக்கும்
இசையின்
வாசம் தனை
சுவாசிக்க
புறாவும் கூட
பறந்தோடி
வந்ததுவோ ? …

***

’ஆயிழை இவளின் இசையொலி கேட்டு ஆதவனும் மயங்குகிறான்’ என்பது திரு. செ. பாரதியின் கணிப்பு.

குழந்தை யென வீணை
மடி மீது தவழ
சித்திரமாய் யுவதி யொருத்தி
இசைத்துக் கொண்டிருகிறாள்
சமுத்திர மணற்  துகள்களில்
பகலை ஆண்டிட்ட
ஆதவனும்
புலம்பி அலையும்
மேகக் கற்றைகளில்
மயங்கிக் கொண்டிருக்கிறான்… 

***

விரல் புண்ணுற வீணை மீட்டியபடிப் பெண்ணொருத்தி எழுப்பும் வினாக்களின் பட்டியலைக் காண்கிறோம் திரு. சத்தியமணியின் கவிதையில்.

மடியினில் தவழ்ந்திடும் பொன்வீணையே  – பெண்
மனதினில் எழுந்திடும் பலகேள்வியே
விரல்கள்    புண்ணுறவே உனைமீட்டினேன் – மென்
தந்திகள் அதிர்வினில் விடைகேட்கிறேன்  ()

பேருடன் பிறந்தகத்தில் அலைமகளா பின்
சீருடன் புகுந்தகத்தில் விலைமகளா
கல்லான மனங்கண்டேன் மலைமகளா – மதி 
இல்லாமல்  உனைமீட்டும் கலைமகளா
இல்லற வாழ்க்கைதர கல்யாணமா ? – இல்லை
இதுவும் ஒருவியாபார வைபோகமா ?   ()
[…]
பெண்பாதி  ஆண்பாதி  சிவனாகினான்
பெருமாட்டி  தன்நாவில் அயனேந்தினான்
தாயாரை   தன்மார்பில் மால்தாங்கினான்
ஓயாமல் சக்தியென புகழ்பாடினார்
கற்பழிப்பு கருசிதைவு  இவை ஏற்பதா ?-  இனும்
அவமதிப்பு ஆபாசம்! பெண் தோற்பதா? ()

***

நல்ல சிந்தனைகளைக் கவிதைகளில் பெய்திருக்கும் கவிஞர் பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய் நான் தெரிவு செய்திருப்பதை இப்போது உங்களுக்கு அறியத் தருகிறேன்.

’நல்லதோர் வீணைகொண்டு நல்லிசையை நாளும் பயின்றால் மனமது தூய்மையுறும்; செயலது செம்மையுறும்; அகவிருள் அகன்றோடி அறிவொளி துலக்கமுறும்’ என்று வீணையின் வழியே வாழ்வியல் தத்துவத்தைப் பாங்காய்ப் பாய்ச்சியிருக்கின்றது பின்வரும் கவிதை…

நாதம் தருமின்பம் நாளும் சுகமென்பேன்
போதும் எனும்சொல்லே போகும் மொழியின்றி
நானும் விரல்கொண்டு மீட்ட வரும்நாதம்
வீணை விளக்கும் ஒருவாழ்க்கைத் தத்துவமே!
வாழும் உலகினிலே வாழ்வும் பொருளாக
எந்தன் ஓலிபோல இன்பம் பரப்பிடுக!

மண்ணும் மயங்கிடுமே புள்ளும் உணர்ந்திடுமே
மானுடம் போற்றும் இசையின் வடிவமெலாம்
மங்கை உளத்தினிலே தெய்வம் குடிகொண்டு
மாறும் உலகிற்கே வேராய் இருந்திடுமே
பண்பு நெறிகளெலாம் தானாய் வளர்ந்திட்டு
எண்ணம் மலர்வண்ணம் எங்கும் விரிந்திடவே!

சொல்லில் வருமோசை கூட்டும் சுவைதனையே
சுற்றம் வளர்ந்தோங்கி நல்லுறவும் பெற்றிடவே
சுத்தம் மனதேகி உச்சம் செயலாக்கி
சூழும் இருளகற்றும் நாதம் நமக்கென்றும்
நல்லவை நாடுமென்றும் அல்லவை விலக்கிடும்
நல்லிசை பயின்றிடுவோம்  நீடு உயிர்வாழ!

தானும் தலைக்கேறா வீணை மனதிருந்தால்
தானாய்த் தகைசேரும் நாதம் இணையாக!

இக்கவிதையை இயற்றியிருக்கும் கவிஞர் திரு. சுரேஜமீயை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுசெய்துள்ளேன். பாராட்டுக்கள் கவிஞரே!

***

வீணை ராகங்கள் வழியே தன் காதலை ஓதிடும் மங்கையொருத்திக்கு ஏழிசைச் சுரங்கள்கூடத் தன் காதலனின் நகைப்பெனக் காதில் விழுகின்றதாம்! விந்தைதான் அல்லவா!

அக்கவிதை…

…சத்தமில்லா மலென்
உள்வளர்ச் சங்கது,
என்மனக் காதலை
ஓத வரும்…!

நல்மனக் காதலன் 
கள்தரும் காதலை
புள்ளது பாடவே
தேடி வரும்…!

வாதமும் காதலின்
தேனதைக் கோதவென்
கார்குழல் தோளிலே
ஆடி விழும்…!

கைமுதற் கால்வரை
ஊறுமென் காதலை
வீணையின் தந்திகள்
பாடிடு மோ?

தீண்டினேன் தீண்டவும்
வீணையும் தந்ததே
நாயகன்  நகைக்கின்ற
ஏழு சுரம்……!

திரு. சுந்தர் புருஷோத்தமனின் இப்புதுக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகிறேன்.

***

உற்சாகத்தோடு தொடர்ந்து கவியெழுதுங்கள் தோழர்களே! மீண்டும் சந்திப்போம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 24-இன் முடிவுகள்

  1. அன்பிற்கினிய சகோதரி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு,

    வணக்கம்.  மீண்டும் ஒருமுறை தங்களின் தேர்வுக்கு மிக்க நன்றி!  

    இதயங்கள் தொட வேண்டும்; இன்பம் பெருக வேண்டும்; வாழும் வையகம் சொர்க்கமாக வேண்டும்; உறவுகள் பேண வேண்டும்!  

    இதைத்தான் அன்றே சொன்னார் தாயுமானவர்…..’எல்லோரும் இன்புற்றிருப்பதுவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே!’ என்று!

    அடுத்து வந்த பாரதி

    ‘மண் பயனுற வேண்டும்!’ என்றார்

    அதுதான் நம் எழுத்துக்களில் இருக்க வேண்டும் என விரும்புபவன் நான்!  

    பாராட்டு தமிழுக்கு!  பாராளும் இனத்திற்கு!

    நன்றி
    சுரேஜமீ

  2. கவிதையெழும் தினந்தோறும், கவிதையை நம் வாயிதழ் பருகிற்றா வல்லது, கவியிதழ் நமைப் பருகிற்றா வெனவெழும் வினவல்கள்… தொன்றுதொட்டு இன்றும் எழுந்தவண்ணம் தானிருக்கின்றன………!! 🙂

    ஊற்றெடுக்க, உருஆக்கும் கவியில் கிடைக்கும் இன்பம்தான் எத்தனை?!
    நினைக்க இன்பம்! வடிக்க இன்பம்!! நண்பர்களிடத்தே அதைப் படிக்க இன்பம்!! பின்னர் பிறக்கும் விவாதத்திலு மின்பம்..!

    கவிதையாய்யொரு படம்படைத்து (படம் எடுத்தவரின் ரசனை, அலாதியானது! அவர்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் 🙂 ), அதற்குக் கவிதையும் படைத்து, கவிதைகோர் அழகான அறிமுகம் படைத்து என, கவிதைக்குக் கவிதைக்குக் கவிதையாய் விரிகின்றன இங்கே கவிதைகள்…. 🙂

    அனைத்துக் கவிதைகளும் ஆன்மாவை வருடுபவை!! அவர்களின் கவிதைகளுக்கு மிக்க நன்றிகள் 🙂

    அழகான இந்த போட்டியை நடத்தும் அன்பு நண்பர்களுக்கு என் அன்பு நன்றிகள் 🙂
    இனிக்கும் வர்ணனைகளோடு கவிதைகளின் வனப்பை எடுத்தியம்பிய அன்பு சகோதரிக்கு மனம் நிறைந்த நன்றிகள்!!

    தங்களின் பாராட்டிற்கு, மேலும் ஒரு கூடை நன்றிகள் தனியாக 🙂 🙂 🙂

    அன்புடன்,
    சுந்தர் புருஷோத்தமன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *