-செண்பக ஜெகதீசன்

மைய லொருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின். (திருக்குறள்-838: பேதைமை)

புதுக் கவிதையில்…

பித்தனைப் பார்த்தாலே
பயப்படும் உலகில்,
அவன் மது அருந்தி
போதையிலுமிருந்தால்,
கொடுமைதான்…

அறிவற்றவன் கையில்
அரும்பொருள் கிடைத்தாலும்
கதை இதுதான்!

குறும்பாவில்…

பைத்தியக்காரன் குடித்த போதையும்,
பேதையிடம் அரும்பொருள் கிடைப்பதும்,
பலன் ஒன்றுதான்!

மரபுக் கவிதையில்…

பித்தன் ஒருவன் மதுவருந்திப்
-போதை மிகுந்தே வந்திட்டால்,
சித்தம் மேலும் தடுமாறிச்
-சேட்டை செய்தே கலங்கவைப்பான்,
இத்தரை மீதில் கதையிதுதான்
-ஏது மறியாப் பேதையிடம்
சொத்தாய் அரும்பொருள் கிடைத்திட்டால்
-சேர்வ தில்லை நற்பலனே!

லிமரைக்கூ…

அஞ்சுதலை அதிகரிக்கும் பித்தனவன் போதை,
அப்படித்தான் பேதைபெற்ற நற்பொருளும்,
அதுமாற்றிடும் அவனது வாழ்க்கையின் பாதை!

கிராமிய பாணியில்…

போவாத போவாத
பக்கத்தில போவாத
பைத்தியங்கிட்ட போவாத,
ஆபத்து ஆபத்து பேராபத்து
அவன்
போதயிலயிருந்தா பேராபத்து…

அறிவில்லாதவன் கதயும்
அதே கததான்,
இல்ல இல்ல பயனேயில்ல
யாருக்கும் பயனேயில்ல,
அவங்கிட்ட
நல்லபொருள் கெடச்சாலும்
இல்ல இல்ல பயனேயில்ல
யாருக்கும் பயனேயில்ல!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *