வெளிச்சக்கடன் கேட்கும் வெள்ளிநிலா!

0

-மெய்யன் நடராஜ்

முக்கனியின் இரண்டாங்கனி முகமெடுத்த போதிலுமே
–முள்போன்று குத்தாத முகமலர்ச்சி கொண்டிருந்தே
அக்கனியின் உள்ளிருக்கும் அமுதச்சுளை போலிருக்கும்
–அகம்படைத்த குலமகளாய் அன்புஎனும் மேகத்தினால்
சர்க்கரைபோல் இனிக்குமொரு சாரல்மழை பொழிந்திட்டால்
–சாக்கடைபோல் கிடப்பவனும் சந்தனமாய் உருமாறும்
அக்கறையும் கொண்டெழுந்து அடியெடுத்துக் கால்நடக்க
–அமைகின்ற தாரமவன் அரண்மனைக்கு அஸ்திவாரம்!

இல்லையெனும் பாடலினை எந்நாளும் பாடாமல்
–இருப்பதனை கொண்டவளும் பொறுப்புடனே நடந்திட்டால்
தொல்லைதரும் வாழ்வினிலே தொடர்கதையாய் வருகின்ற
–துன்பங்கள் துயரங்கள் தூரத்தில் போய்மறையும்
எல்லையில்லா ஆனந்தம் இல்லறத்தில் பூப்பூக்கும்
–எதிர்கால நிறைவுக்கு எதிர்பார்ப்பை குறைத்தேதான்
நல்லவழி காட்டுகின்ற நாயகியாய்த் திகழ்ந்தென்றும்
–நாயகனுக் கொத்தாசை புரிவதுவே நல்லொழுக்கம்!

 தாய்வீட்டுப் புராணங்கள் தலைக்கேற்றி எந்நாளும்
–தற்பெருமை பேசுகின்ற தப்பிதங்கள் என்கின்றப்
பேய்விட்டு ஓடுதற்கு பெரும்பாலும் பாடுபட்டுப்
–பேசுகின்ற வார்த்தைகளில் பேதைமைகள் என்கின்ற
நோய்தொற்று வாராமல் நுணுக்கமாகக் காப்பாற்றி
–நூறாண்டு இல்வாழ்க்கை நூதனமாய் நிலைத்திருக்க
காய்க்கின்ற மரமாகிக் கல்லடிகள் தனைதாங்கிக்
–கனிந்துவிடும் போதினிலே காதல்கனிச் சுவையாகும்!

பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் பிறவிகளாய் மட்டுமன்றி
–பெண்குலத்தின் பெருமைக்குப் புகழ்சேர்க்கும் வகையினிலும்
உள்ளதெல்லாம் வாரிவாரி இறைக்காமல் கொஞ்சத்தை
–ஊருக்கும் பகிர்ந்தளிக்கும் உயர்குணத்தில் சிறந்தவளாய்க்
கள்ளமில்லா மனத்துடனே கணவனவன் வியர்வைத்துளி
–கரையாமல் காப்பாற்றிக் கரையேறும் போதினிலே
வெள்ளிநிலா விடியும்வரை வாசலிலே காத்திருந்து
–விடிவெள்ளி உன்வெளிச்ச விலாசத்தைக் கடன்கேட்கும்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *