மீ. விசுவநாதன்

vallamai111-300x150111111111

கண்கவரும் மாளிகையாய் கட்டியதில் வாழ்ந்தாலும்
பண்புமிகு அன்புடைய பக்கத்து மண்குடிசை
வாசிகளை நேசிக்க வார்த்தையே இல்லையெனில்
வாசித்த கல்விபயன் மாசு. (181) 29.06.2015

காலையிலே கேட்கின்ற காட்டுக் குயிலோசை
சோலைக்கே செய்திதனைச் சொல்கிறது – வேலைச்
சுமையை மறந்து சுகமாய் இருக்க
இமைக்குள் இறைவ(ன்) இசை. (182) 30.06.2015

ஊர்ரூராய்ப் போனாலும் உள்ளத்துள் அன்பென்னும்
பேரானை, நானறுக்கும் பித்தனது வேரினைத்
தோராய மேனும் தொழாத மனிதருக்குத்
தோன்றாது தெய்வத் துளி. (183) 01.07.2015

அவசர காலத்தில் ஆதிமூலா என்றோ
சிவசிவ என்றோ சிறிதும் இவன்மனம்
எண்ணாது போகாமல் ஈசனே காப்பாயே !
புண்பட்ட உள்நீ புகு. (184) 02.07.2015

ஏசுவும் கண்ணனும் எப்படி வந்தாலும்
மாசு மருவில்லாத் தாய்க்கவர் தேசு
குறைவில்லா தெய்வக் குழந்தைகள் ! இந்த
நிறைவுதான் நெஞ்சுக் கினிப்பு.. (185) 03.07.2015

கல்யாண மண்டபத்தில் கட்டியுள்ள வாழைமரம்
சொல்லாமல் சொல்லுகிற சூட்சுமம் – “நல்லதுவே
ஆனாலும் ஆசையை வாசலோடு விட்டுவி(டு)
ஆனால்தான் ஆனந்த மாம்”! (186) 04.07.2015

மனம்கனத்த வேளையில் வான்வெளியைப் பார்த்து
கனம்குறைக்க எண்ணுவேன்! காலம் தினமொரு
செய்திதரும் ! “சின்னக் குழந்தையைக் கொஞ்சியே
மெய்மறப்பாய் என்றதின்று மெய்!” (187) 05.07.2015

குல்மோகர் , செவ்வரளி , குண்டுமல்லி, தும்பைப்பூ
எல்லாமே நித்தம் எழில்பரப்பி நில்லாது
சென்றுவிடும் ! நம்நினைவில் சிக்கென நிற்பதெல்லாம்
நன்று மணந்தந்த நாள். (188) 06.07.2015

கோபத்தில் வார்த்தை கொதிக்கு(ம்) ; உடனேயே
தேகத்தில் சூடேறும் தீப்போலே -வேகத்தால்
சிந்திக்கும் ஆற்றல் சிதறுமே ; நெஞ்சேநீ
சந்திக்கும் துன்பமே சான்று. (189) 07.07.2015

தவறு நிகழும் தருணத்தில் அங்கே
தவறிதெனச் சொல்லித் தடுக்கும் எவருமே
ஆசான்தான் ! ஏற்கும் அடிமனந்தான் மாணவனாம் !
பாசாங்கு வேண்டாம் பணி. (190) 08.07.2015

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *