வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா … மார்பு துடிக்குதடி …

— கவிஞர் காவிரிமைந்தன். 

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மாஇளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம்! இயக்குநர் ஸ்ரீதரின் முக்கோணக் காதலின் மற்றுமொரு பரிமாணம்! இசை ஞானி இளையராஜா இசையாட்சி! எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இழைந்தோடும் குரல்! திரைக் கதையின் முக்கியக் கட்டத்தில் நாயகன் நாயகியை நோக்கிப் பாடுகின்ற இப்பாடல்!

பாரதியின் கண்ணம்மா என்னும் பெயரை எத்தனை வாஞ்சையாய் பல்லவியில் பொருத்திப் பாடலை துவக்குகின்றார் கவிஞர் வாலி! மேடைப் பாடகனாய் கமலஹாசன் தன் காதல் தாபங்களைக் காட்டும் அற்றைய நாளின் மிகப் பிரபலமான பாடல்! கல்லூரி மாணவர்களின் கரகோஷத்தில் அரங்கங்கள் அதிர்ந்த அந்த நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்! இசை ஞானி தனக்குக் கிட்டிய ஒவ்வொரு திரைப்படத்திலும் முத்திரை பதிக்க வெற்றிநடை போட்ட வெள்ளித்திரை ஓவியங்களில் இதுவும் ஒன்று!

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா2சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா, கமலஹாசன் கூட்டணியில் கொட்டிக்கிடக்கும் நவரச நடிப்பில் இசை மலர்கள் ஆராதனை நம்மை ஈர்க்க வைக்கும்! பழமைக்கும் புதுமைக்கும் தன் கடைசி நாள் வரை ஈடுகொடுத்து எழுதி வந்த பாட்டுப் புலவன் வாலி வரைந்த வரிகள் அர்த்தத்தை அள்ளி வீசும்! இசைக்கோர்வை என்பது அவர் நடந்துவரும் ராஜபாட்டை! சாதாரண வார்த்தைகளைச் சரியான இடத்தில் பயன்படுத்தும்போது அவை அசுர பலம் பெற்றிடும் யுக்தியைக் கற்றுத் தேர்ந்தவரென்பதால் ‘காதல்’ பிரிவின் வலியை எளிதாக வார்த்தைகளில் இறக்குமதி செய்கிறார் கேளுங்கள்!

கால மாற்றத்தில் ‘காதல்’ மாற்றம் பெறுகிற கோலத்தை இயக்குநர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் காண்பது கூட ஒரு இனிய அனுபவமே! அப்பட்டமாய் முக்கோணக் காதலை திரைக்கதையில் சொன்னவர் என்கிற பெருமை இவரையே சாரும்! இவர்தம் திரைப்படத்தில் கதையுண்டு! கருத்துண்டு! சுவையான பாடல்கள் நிரந்தரமாய் உண்டு! இனிதான இசையோடு என்றென்றும் கேட்டு மகிழ… நெகிழ… இப்பாடலும் வருகிறது கேளுங்கள்!!

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா … மார்பு துடிக்குதடி…
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போல் பாவை தெரியுதடி…

என்னடி மீனாட்சி… சொன்னது என்னாச்சு…
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு…
என்னடி மீனாட்சி… சொன்னது என்னாச்சு…
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு…

உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த வனத்தில் மறைந்திருக்கும் துளிவிஷம்…
நெஞ்சம் தவித்திடும் நாளில்
நீயோ அடுத்தவன் தோளில்
எனை மறந்து போனது நியாயமோ
இந்தக் காதல் ஓவியத்தின் பாதை மாறியது
காலம் செய்துவிட்ட மாயமோ…
ஒரு மனம் உருகுது…
ஒரு மனம் விலகுது…
(என்னடி)

அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை …
கண்ணன் தன் வழியே பாட…
ராதை தன் வழியே ஓட…
இந்தப் பிரிவைத் தாங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகிற ஊஞ்சல் போன்றதடி
நாளும் மாறுகின்ற உன் மனம்…
(என்னடி)

காணொளி: https://www.youtube.com/watch?v=3VjfAZzEb88

Share

About the Author

கவிஞர்.காவிரிமைந்தன்

has written 309 stories on this site.

கவிஞர் காவிரிமைந்தன் நிறுவனர் - பொதுச்செயலாளர் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் பம்மல், சென்னை 600 075 தற்போது.. துபாய் 00917 50 2519693 மின் அஞ்சல் முகவரி - kaviri2012@gmail.com Website: thamizhnadhi.com

Write a Comment [மறுமொழி இடவும்]


− 5 = two


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.