புலவர் இரா. இராமமூர்த்தி.

உலகினர் கடைப்பிடிக்க வேண்டிய அறங்கள், அவரவர் நிலைக்கேற்ப வேறுபடும்! இல்லறத்தார், மூத்த சான்றோர், துறவியர் ஆகியோருக்கு உரிய அறங்கள் என்று அவை பிரித்துணரப் படும்! ‘வெகுளாமை இன்னா செய்யாமை, கொல்லாமை ” என்ற மூன்று அதிகாரங்களில் திருவள்ளுவர், இவற்றை இல்லறத்தார் செய்யத்தக்க அறங்கள், செய்யத்தகாதவை; மூத்த சான்றோர் அல்லது வானப்பிரஸ்தர் செய்யத்தக்க அறங்கள், செய்யத் தகாதவை; துறவியர்க்குரிய அறங்கள்; அவர் செய்யத் தகாதவை என்ற மூவகைகளைக் குறிப்பிடுவார்!

வெகுளி அறம் சார்ந்தும் வரும்! இதனை தர்மாவேசம் என்பார்கள்! “அறத்துக்கே அன்பு சார்பு என்ப அறியார் மறத்துக்கும் அஃதே துணை” என்பார் திருவள்ளுவர்! இல்லறத்தார்க்கு அன்பின்மை, விருந்தினரைக் காணாமை, தீய சொல் கூறல், நன்றிமறத்தல், அடங்காமை, ஒழுங்கீனம், பிறனில் விழைதல், ஆகியவற்றைக் கண்டால் வெகுளியாகிய சினம் உண்டாகலாம்! அந்தச் சினம் எல்லை கடவாத வரையில் ஏற்புடையதே! ஆனால் ஒரு காரணத்தாலோ அறியாமையாலோ தமக்குத் தீமை செய்யும் போது சினம் வரும்! அப்போது பொறுமை காட்டுதல் நன்று இதனை வள்ளுவர் பொறையுடைமை என்கிறார்.

இந்தப் பொறையுடைமைக்கும், வெகுளாமைக்கும் இடையில் பரிமேலழகர் வேறுபாடு காண்கிறார்! பொறையுடைமை, பிறர் தீயன செய்தபோது சினத்தைக் காட்டாமை! வெகுளாமை என்பது எப்போதும் சினம் கொள்ளக் கருதாமை! சினம் கொள்ளுதலுக்கும் சினத்தையே நினையாமைக்கும் இடையில் வேறுபாடு உண்டு. களவு, பொய், வெகுளி, கொடியசெயல், கொலை ஆகியவற்றை இல்லறத்தார் செய்து, அதன் விளைவாகப் பாவியர் ஆகலாம்; ஆனால் இவற்றை மனத்தாலும் நினையாத நிலையே துறவாகும்; அதனால்தான் வெகுளாமை அதிகாரம் துறவறவியலில் அமைந்தது. இதுபோலவே இன்னாசெய்யாமை என்பது தீயன செய்யக் கருதாமை; கொல்லாமை என்பது, கொலையைச் சற்றும் நினையாமை! அதனால் இவை துறவறவியலில் அமைந்தன!

இங்கே கொல்லாமை அதிகாரத்தில் கொலைசெய்ய நினையாமை என்ற துறவொழுக்கம் கூறப்படுகிறது. துறவி தமக்குக் காட்டில் கிட்டியதை உண்பார். அவை கந்த மூல பலங்கள் எனப்படும். அவை இலை, கிழங்கு, பழங்களாகும்! இவற்றையும் அவை காய்ந்து, பழுத்து உதிரும் நிலையில் ஏற்று உண்ண வேண்டும்! இவற்றையும் விருந்தினருடன் பகிர்ந்து உண்ணுதல் துறவிக்குரிய விருந்தோம்பலாகும்! இராமன் காட்டில் தவம் புரிந்தபோது வந்த விருந்தினருக்குப் பச்சிலை, கிழங்கு, பழம் இவற்றைத் தந்தாராம்! இதனைக் கம்பர்,

”பச்சிலை, கிழங்கு, காய் பரமன் நுங்கிய
மிச்சிலே மிசைவது, வேறு வேண்டிலேன்”
என்று இலக்குவன் வாயிலாகவும்,

”அருந்தும் மெல்லடகு ஆரிட அருந்தும் என்றழுங்கும்
விருந்து கண்டபோது என் உறுமோ என்று விம்மும்”
என்று அசோகவனச் சீதை வாயிலாகவும் கம்பர் உணர்த்துகிறார்!

துறவியரிடத்தில் அறுசுவை விருந்தை எதிர்பார்க்க இயலாது! அங்கே இருக்கும் கனி, கிழங்கு, காய்களை மட்டுமே பகிர்ந்து உண்ண முடியும்; அவர்கள் வெகுளி, இன்னாதன செய்தல், கொலை ஆகியவற்றை அறவே துறந்தவர்கள்!

எல்லாவுயிர்களையும் நேசிக்கும் அருளுடைமை துறவிகளின் பண்பாகும். தேவர், மனிதர், நரகர்,மிருகம், பறவை, பாம்பு முதலானோர் தொடுகை, சுவை, நாற்றம், காட்சி, கேட்டல் ஆகிய ஐயறிவை உடை யவர்!
தும்பி , வண்டு , நண்டு, தேனீ ஆகியவை தொடுகை, சுவை,நாற்றம்,காட்சி, ஆகிய நான்கறிவைப் பெற்றவை;
செல், எறும்பு, ஈசல், அட்டை ஆகியவை தொடுகை நாற்றம்,காட்சி ஆகிய மூவறிவைப் பெற்றவை;
சிப்பி, சங்கு, கிளிஞ்சல் ஆகியவை தொடுகை, நாற்றம் ஆகிய ஈரறிவைப் பெற்றவை;
உல், மரம், புதல், கொடி, புழு ஆகியவை தொடுதலாகிய ஓரறிவு மட்டும் பெற்றவை!
இவற்றை ஐவகைப்பட்ட உயிர்கள் என்று தொல்காப்பியர் மரபியலில் குறிப்பிடுகிறார்.

இவ்வகைப்பட்ட எல்லா உயிர்களின் பாலும் அருளுடைய மக்கள் துறவியர்! இத்தகைய அருளுணர்வு அனைவர்க்குமே தேவை! ஆதலால் திருவள்ளுவர் கொல்லாமை என்னும் அதிகாரத்தில் கொலை செய்தலைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாத ஒரு பாடலை எழுதுகிறார்! அப்பாடல்

”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை! (322)

என்பதாகும்! இந்தக் குறட்பாவில் கொல்லுதல், கொல்லாமை என்ற பொருளுடைய எந்தச் சொல்லும் இல்லை! இக்குறளில் மிகுந்த நூல்களைக் கற்றவர்கள் தொகுத்து வைத்த அறச்செயல்கள் என்ற பகுதியும், இருப்பதைப் பிறவுயிர்களுக்குப் பகிர்ந்தளித்தல் என்ற பகுதியும் மட்டிலுமே இடம் பெற்றன. இவை கொல்லாமை எனப்படும் உயிரிரக்கம் பற்றிய செய்தி எதுவும் இப்பாடலில் இல்லை! இதில் நூலோர் தொகுத்த அறங்கள் பற்றிய கருத்தும், விருந்தோம்பல் பற்றிய கருத்துமே இடம் பெற்றுள்ளன! உயிர்க்கொலை பற்றிய கொல்லாமை அதிகாரத்தில் நூலறிவு, விருந்தோம்பல் பற்றிய கருத்தடங்கிய இக்குறள், தனித்த கவனத்துக்கு உரியது! இதில் துறவியர்க்குரிய நூலறிவும், இல்லறத்தார்க்குரிய விருந்தோம்பலும் இணைந்து விளங்குகின்றன! துறவியர் விருந்தோம்பலாம்! இல்லறத்தார் நூலறிவு பெறலாம்! ஆதலால் இப்பாடல் துறவறவியலுக்குள் இல்லறவியலையும் இணைத்துக் கொள்கிறது!

பொதுவாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஜீவகாருண்யத்தினைச் சிறந்த அறமாகக் காட்டியமையால், இக்குறட்பா இல்லறத்தார்க்கும் உரியதாகிப் பிற்காலத்தில் சமரச சன்மார்க்கசங்கம் நிறுவிய வள்ளலாரின் உயிரிரக்கக் கொள்கைக்கு வழிகாட்டுகிறது! புலாலுண்ணாமைக் கருத்தினைக் கொல்லாமை யில் இணைத்து நாட்டுமக்கள் அனைவர்க்கும் உரிய நல்லறத்தினை இக்குறட்பா விளக்கிப் புதிய பொருள் கொள்கிறது!

இருப்பதைப் பகுத்துண்டு பசித்திருப்பவர் இல்லறநிலையிலிருந்து முன்னேறி வானப்பிரஸ்த நிலை அடைவதை, ”பகுத்துண்டு ” என்ற தொடர் குறிக்கிறது! அடுத்துப் ”பல்லுயிர் ஓம்புதல்” என்ற தொடர், விருந்தோம்பல் நிலையிலிருந்து உயர்ந்து எல்லாவுயிர்கள் பாலும் அருள் செலுத்தும் துறவு நிலையைக் குறிப்பிடுகிறது! ”நூலோர் தொகுத்தவற்றுள் ” கற்றறிந்த சான்றோர் தொகுத்த நல்லறங்களைக் குறிக்கிறது! இதுவும் இல்லறத்தார்க்குரிய கல்வி, கேள்வி ஆகியவற்றையும் குறிக்கிறது! ஆகவே இந்தக் குறளின் புதிய பொருளாக – தம்மிடம் இருப்பதை, வந்தவருடன் பகிர்ந்து கொண்டு, பல்வகைப்பட்ட உயிர்களை யும் கொல்லாமல் பாதுகாத்து வாழ்ந்து, வாழ்வித்தல், கற்றறிந்த சான்றோர்கள் சிறந்த அறங்களாகத் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாய பண்பாகும் ” என்பதாகும். இதனை மேலும் வலியுறுத்தவே வள்ளுவர்,

”யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற” (300)
என்று வாய்மையை உயர்த்திப் பாடிய பின்னர்,

”ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று !”(323)
கொல்லாமையை உயர்த்திப் பாடினார்! ஆகவே பகுத்துண்ணுதலும் கொல்லாமையே ஆகும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *