உலக வாழ்க்கைக்குத் தமிழ்-கற்றல் கற்பித்தல்

0

முனைவர் பி.ஆர்.லக்ஷ்மி.

தமிழ் இன்றைய அளவில் உலகில் பல நாடுகளிலும் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வி கிராமங்களை மிகுதியாகக் கொண்டதனால் மேசைக்கணினி, மடிக்கணினி என்ற அளவில் கற்பித்தல் முறைகளை இணையத்தினை துணைக்கருவியாகப் பயன்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் இருப்பதுபோல திறன்பேசிகள் வழியாகக் கற்பித்தல் பணியினைத் தமிழ்நாட்டில் அளிக்க இயலாது. தமிழ்நாட்டில் ஆசிரியர்களினால் செய்யப்பட்ட பல படைப்பாற்றல் திறன்மிகுந்த துணைக்கருவிகள் வழியாகக் கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாசிப்புப் பயிற்சியில் துணைக்கருவிகளின் பயன்பாடு இன்றிமையாதது. வாசிப்புப் பயிற்சியின்றி ஒரு மாணவனால் முழுமையாக எழுதும் பயிற்சியினை அடைய இயலாது. வகுப்பறையில் மின்பலகைக்கணினி வழியாகவோ, ஏடுகளில் தொடர்ச்சியாக எழுத வைப்பதாலோ தமிழ் எழுத்துகளை முழுமையாகக் கற்பித்தல் என்பது இயலாத ஒன்று. எழுதும்போதே அந்த எழுத்துக்குரிய உச்சரிப்பினைச் சொல்லிக்கொண்டே எழுதப் பழக்கினால் உச்சரிப்பும் தெளிவாகும்.

வெளிநாடுகளில் தமிழ்-கற்றல் கற்பித்தல் வாரம் ஒருமுறை தமிழ்க்கல்வி என்ற அளவில் இயங்கி வருகிறது. புலம்பெயர்ந்து வாழும் அத்தமிழ் மக்களுக்குப் பண்பாட்டினை அறிய வைப்பதற்கும், எழுதவும், பேசவும் தமிழ் அறிந்து கொள்ள மட்டுமே தமிழ்மொழி தேவைப்படுகிறது. எனவே அவர்கள் வாழும் இடத்திற்கேற்ற வகையில் திறன்பேசிகள் வழியாகவும் மின்பலகைக்கணினி வழியாகவும் தமிழ் கற்க இயலும்.

வகுப்பறைக்குச் செல்லும் ஆசிரியர் அன்றைய பாடத்திட்டத்திற்கான செயல்முறைவடிவ அட்டையினைத் தயார் செய்து கொள்ளவேண்டும். கற்பித்தல் முறைகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு முறைகள்தான் ஒரு வகுப்பறையில் உட்புகுத்த இயலும். வகுப்பறையில் சாதாரணமாக 45 நிமிட வகுப்பறையில் 20 முதல் 25 நிமிட நேரங்கள் மட்டுமே ஒரு மாணவனால் கற்பித்தலை மேற்கொள்ள இயலும். வெளிநாடுகளில் வாரம் 1.30 மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் என்பதால் அத்தகைய வகுப்பறையைச் செயல்திட்ட வகுப்பறையாக்கினால் மாணவர்கள் ஆர்வத்துடன் தமிழ் கற்பர்.

பாடத்துடன் இணைந்த செயல்திட்ட விளையாட்டுமுறைக் கல்வியினை ஆசிரியர் உட்புகுத்திக் கற்பித்தால் மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும். அதற்கான பல படைப்பாற்றல் மிகுந்த செயல்திட்டஏடுகளை ஆசிரியர் முன்னரே தயார் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். வகுப்பறை என்பது மனனம் செய்து வைக்கும் போர்ப்பயிற்சி அளிக்கும் போர்க்களமாக ஒரு மாணவனுக்கு இருக்கக்கூடாது. சமூகத்தில் வாழும் வாழ்க்கையில் அவர்கள் அணுகக்கூடிய அனைத்து விஷயங்களையும் (இளவயது முதல் முதுமைப்பருவம்வரை) அணுகி வெற்றியடையக்கூடிய வகையில் அமைவதுதான் கல்வியின் உண்மையான நோக்கமாக ஆசிரியர்கள் அமைத்துக்காட்டவேண்டும். பணியும்,புகழ்சார்ந்த பணமும் நிறைந்தது மட்டுமே வாழ்க்கையன்று என்பதை ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தால் வளமையான உலக வாழ்க்கை மாணவர்களுக்கு அமையும். மொழிக்கல்வியின் உண்மையான அடிப்படை நோக்கமே இதுதான் என்பதை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *