“வான்புகழ் கொண்ட பாரத ரத்தினம்”– கர்மவீரர் காமராசர்!

0

— ஜெயஸ்ரீ ஷங்கர்.

kamarajar2

பகைவர்களும் மதிக்கும் பண்பாளரான காமராசரின் தலைமையில் தமிழகம் கண்ட வெற்றிகரமான நல்லாட்சி ‘பொற்குடத்தில்’ வைத்துப் பாதுகாப்பதைப் போல இணையத்தில் கல்மேல் எழுத்துக்களாக காலத்துக்கும் மாறாமல் இருக்குமாறு பதிவுகளாகி உள்ளன. ஆடம்பரமில்லா எளியவாழ்கை வாழ்ந்தவரை வெறும் ஆயிரம் வார்த்தைகளுக்குள் எளிமையாகவே எழுதத்தான் இயலுமா?

விருதுப்பட்டியில் குமாரசாமி நாடார்,சிவகாமி அம்மாள் தம்பதியர்க்கு, ஜூலை 15-ஆம் தேதி 1903 ஆம் ஆண்டில் உதித்த ‘வரலாற்று நாயகன்’. தன் தமிழகத்திற்குத் தாரை வார்த்துக் கொடுக்கவென்றே, ‘சிப்பிக்கு- நித்திலமாக, குலதெய்வம் அன்னை ‘காமாட்சி’யின் அருளால் ‘காமராசர்’ வந்து பிறந்திருக்கிறார் என்று அந்த அன்னை சிவகாமியம்மாள் அப்போது நினைத்திருக்க மாட்டார்.

ஆறாம் வகுப்பிற்கு மேல் தன்னால் படிக்கமுடியாமல் போயிற்றே என்கின்ற தீராத வருத்தம் அவரது ஆழ்மனத்தை வாட்டியது. அதனாலேயே உலக விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தவறாமல், ஓய்வு நேரங்களில் பற்பல பத்திரிகைச் செய்திகளைப் படித்து நாட்டு நடப்பை நன்கு அறிந்திருந்தார். இளவயதில் அவர் கேட்ட பொதுக்கூட்டங்களே பிற்காலத்தில் அவரை சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றியது,

அந்நியர்களின் ஆட்சியில் இந்தியா அடிமைபட்டுக் கிடந்த காலகட்டம். ‘வந்தேமாதரம்’ ஒன்றே வீரர்களின் சுவாசமாக, உயிரின் வேதமந்திரமாகக் கொண்ட சுதந்திரப்போராட்ட இயக்கங்களில் காமராசரும் கலந்துகொண்டு காந்தியத்தைப் பரப்பினார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய செய்தி அறிந்தவர், மனம் கலங்கினார். தனது அரசியல் வழிகாட்டியாக தலைவர் ‘சத்தியமூர்த்தி’யின் தொண்டராகி காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழுநேர தேசப்பணிக்குத் தன்னையே அர்ப்பணித்தார். கள்ளுக்கடை மறியல்,அந்நியத்துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், சைமன் கமிஷன் எதிர்ப்பு என பல போராட்டங்களில் கலந்து கொண்டு கிட்டத்தட்ட ஒன்பதரை ஆண்டுகள் சிறைவாசம் பெற்றார்.

சிறையிலிருந்த நேரங்களில் , மனத்தையும் அறிவையும் மேன்மையுறச் செய்யும் பல இலக்கிய நூல்களையும் பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். அன்னபட்சி முத்தை உண்பதைப்போல் காமராசர் தான் படித்த இலக்கியங்களில் வாழ்வியல் வழிமுறைகளை விழுங்கி அதை வழுவாது வாழ்விலும் கடைபிடித்தார்.

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்தியமூர்த்தி அவர்கள் இறந்துவிட்டதால், காமராசர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் தலைவர் சத்தியமூர்த்தி வீட்டிற்குச் சென்று தேசியக்கொடியை ஏற்றினார்.

பல சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து தான் நமக்கு விடுதலைக் கிடைத்ததென்பதை தனது சொந்த அனுபவத்தால் கண்ட காமராசர், சுதந்திரத்தின் அருமையை நன்கு உணர்ந்தவர் ,அதைப் பேணிக் காக்க வழிவகுத்தார்.

“ஒன்றைச் செய்ய விரும்புகிறபோது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்” எனும் தொலைநோக்குச் சிந்தனையோடு காமராசர் திருமணமே செய்து கொள்ளாமல் நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்தார்.

அன்பு, கருணை, உண்மை, நேர்மை, பொறுமை, சமயோசிதம், விவேகம், நியாயம், துணிவு, தியாகம் என்ற மனிதாபிமான நற்பண்புகள் நிறைந்தவராகத் திகழ்ந்தார். காலத்தை உயிர் போல மதித்தவர். நேரம் வீணாகக் கூடாது, காசு விரயமாக்கக் கூடாது என்ற கொள்கைகளைக் கொண்டவர்.

அண்ணல் காந்தியடிகளின் ‘செய் அல்லது செத்து மடி’ எனும் தாரக மந்திரத்தையும், தனக்குப் பிடித்த பாரதியாரின் கனவை நனவாக்கவும் , திருக்குறளின் அறத்தையும், தாகூர் அவர்களின் வீரத்தையும், விவேகானந்தரின் விவேகத்தையும், ஔவையார், நாலடியாரில் நல்லன எல்லாமுமாக காமராசரின் மனசாட்சி மேலோங்கி ஆட்சிபுரிந்ததால் தமிழகத்தில் அவரது ஆட்சி ‘பொற்கால ஆட்சியாக’ அமையப் பெற்றது.

காமராசர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், தலைவர் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி, தன்னுடைய பணியைத் தொடர்ந்தார். அவர் , தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும்படியும்,தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களையே அமைச்சராக்கினார்.

கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும் என்றும் சமதர்ம சமுதாயம் மலர, கல்வியும், உழைப்புமே கண்கள் போன்றது எனவும் தீர்மானித்தார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த தமிழகத்தை உயர்த்த அவருக்கு ஏராளமான வாய்ப்புகளும் காத்திருந்தது. அதைச் சரியாக பயன்படுத்திக் கொண்டு தான் கொண்ட கொள்கையில் வெற்றி பெற அயராது உழைத்தார். நேர்மையும் எளிமையும் அவரைக் கவசமாகவே காத்தது.

தன்னலமற்ற தலைவர் காமராசருக்கு பின்தங்கியவர்கள் , ஏழைகள் , படிக்காத பாமரர்களின் மேல் அளவு கடந்த பாசம் கொண்டவர். அந்த அன்பை வார்த்தைகளில் சொல்லாமல் செயலில் காட்டினார். இலவசத் திட்டங்கள் எதையும் ஏழைகளுக்கு கொடுக்காமல் அவர்கள் குடும்பம் மற்றும் சமூகம் முன்னேற என்ன வழியோ அதை தனது ஆட்சியில் செய்தார்.

முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார் . மேலும், 17000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினை” ஏற்படுத்தி, இலவச சீருடையும் கொடுத்து,ஏழை எளிய மக்களின் கல்வியில் பெரும் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைசிறந்த பணியாகக் கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது.

குஜராத் பல்கலைக் கழகம் கல்வித்துறையில் செயற்கரிய சாதனைகள் செய்தமைக்காக “டாக்டர்” பட்டம் தர காமராசரைத் தேடி வந்தார்கள்.
” டாக்டர் பட்டமா? எனக்கா? என்ன பெரிய சாதனை செஞ்சுட்டேன்னு இந்த முடிவெடுத்தீங்க. நாட்டில் எத்தனையோ விஞ்ஞானிகள், மேதாவிகள் இருக்கிறாங்க… அவுங்களை தேடிப்புடுச்சு இந்த பட்டத்தை குடுங்க. எனக்கு வேண்டாம்… நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன்… போய்வாங்க” என்று சொல்லி அனுப்பிவிட்டார். டாக்டர்.ஐன்ஸ்டீன் ” இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் இந்த நிலவுலகத்தில் ஊனோடும் உதிரத்தோடும் உலவினார் என்பதை வருங்காலச் சந்ததியினர் நம்பவே மறுப்பர்” என்றார்.

“இருக்கு, இல்லைங்கிறதைப்பத்தி எனக்கு எந்தக்கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதைவிட யோக்கியனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப்போச்சா…?” அடுத்த மனுஷன் நல்லாருக்கணும்கிறது தான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறது தான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா… தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்மள வாழ்த்தும்னேன்…!” அதுதான் அவரது இறை நம்பிக்கை.

“வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது” என்று தி.மு.கழகத்தினர் பிரசாரம் செய்தனர். அதிலும் உண்மை இருப்பதை காமராஜரும் உணர்ந்துகொண்டார். எனவே, தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலைகளையும், அணைகளையும் அமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். மத்திய அரசிடம் வற்புறுத்தி, ஐந்தாண்டு திட்டங்களில் தமிழகத்திற்கு அதற்கான நிதியை ஒதுக்கும்படி செய்தார்.

காமராசர் கல்வித் துறையில் மட்டுமல்லாமல், தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். தமிழகத்தில் தொழில்துறைகளை வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வேலை வாய்ப்பை உயர்த்தினார்.

‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன. இதைத் தவிர, ‘மேட்டூர் கால்வாய்த்திட்டம்’, ‘பவானி திட்டம்’, ‘காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்’, ‘மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும்’ ஏற்படுத்தினார். காமராசர் ஆட்சியின் இறுதியில், தமிழகம் தொழில் வளத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

தமிழ்நாட்டின் இரட்சகர், கல்வி வள்ளல் என்று தந்தை பெரியாரால் பாராட்டப் பட்ட பெருந்தலைவர் காமராசர், மக்களாட்சியின் மாண்பிற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கினார். தமிழகத்தில் பஞ்சம் இல்லையெனும் அன்னக்கொடியை பறக்கவைத்தார் பெருந்தலைவர்.

‘முதல்வர் இட ஒதுக்கீடு’ என்ற பிரிவில் மருத்துவ கல்லூரியில் 5 இடங்களுக்கு 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்த நிலையில், பெற்றோர் கையெழுத்து இருந்த இடத்தில ‘கைநாட்டு’ வைத்திருந்த விண்ணப்பங்களை தேர்வுசெய்து படிக்காத பாமரர்களின் பிள்ளைகள் மருத்துவம் படித்து முன்னேறட்டும், அப்போதுதான் எதிர்காலத்தில் அவர்களின் வாரிசுகள் படிப்பறிவு பெறுவர். இதுபோல் ஒவ்வொரு குடும்பமும் முன்னேறினால் நாடே முன்னேறும் என்றார்.

மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராசர் அவர்கள், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதி “கே-ப்ளான் ” எனப்படும் திட்டத்தினை” கொண்டுவந்தார். அதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்பதே நோக்கமாகும். அதன் பேரில் முதலமைச்சர் பதவியைத் துறந்த காமராசர் பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு, தில்லிக்குச் சென்றார்.

பிரதமர் நேரு,உயிரோடு இருப்பவர்களின் சிலையைத் திறந்து வைப்பது சரியல்ல என்ற கருத்தைக் கொண்டிருந்தாலும்,பெருஞ்சாதனையாளரைப் பொறுத்தமட்டில், விதிவிலகில்லை என்பதால் , காமராசரின் சிலையைத் திறந்து வைக்கிறேன்’ என்று காமராசரைப் புகழ்ந்தார். விழாவில் காமராசரும் கலந்துகொண்டார்.

ஒன்பதரை ஆண்டுகள் முதலமைச்சராகச் விளங்கிய காமராசர், அப்பதவியைத் புளியம்பழம் ஓட்டில் ஒட்டாதது போல் உதறிவிட்டார். நேரு மறைந்தபோது, லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கி அவரும் மறைந்தபோது, திருமதி இந்திராகாந்தியை பிரதமராக்கி, ‘கிங் மேக்கர்’ என்ற பெருமையடைந்தார்.

காமராசர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோ வரவேற்பில்,பாரதியின் ‘ஆகா வென்றெழுந்துது பார் யுகப் புரட்சி’ என்ற பாடலைப் பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.

இந்திய காங்கிரசு தலைவர்களுள்ளே, சிறந்த இராஜதந்திரி காமராசர் என்று பாரதம் முழுவதும் பாராட்டும் புகழ்நிலைக்கு உயர்ந்த முதல் தமிழர் காமராசரே ஆவார்.

“எந்த நேரத்திலும் எந்த நிலையுலும் நான் ஒரு ஏழை இந்தியனாகவே இருக்க விரும்புகிறேன்” என்று கூறி அதன்படி ஆடம்பரம் இல்லா எளியவாழ்க்கை வாழ்ந்தவர் காமராசர். கர்மவீரர், புடம்போட்ட தங்கமல்ல.தன்னைத்தானே பட்டை தீட்டிக்கொண்ட நல்வைரம்.

தமிழகத்தில் ‘கள்ளுக்கடை’யைக் கண்ட காமராசர் கண்ணீர் விட்டழுதார், நாடு இப்படி நாசமாப்போச்சே என்று மனமுடைந்தார்.

.உண்மையை உரக்கப் பேசியவர், 1975 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தியன்று காமராசர் என்கின்ற பெரும் தூண் தான் வந்த வேலை முடிந்ததென்று எண்ணித்தானோ , இறுதியாக ‘விளக்கை அணைத்துவிட்டுப் போ’ என்று சொல்லிப் படுக்கையில் சாய்ந்தவர் பின்பு எழுந்திருக்கவேயில்லை.

இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவரது அழியாத ஆன்மாவுக்கு வழங்கப்பட்டது.

காமராசரின் கொள்கைகளைப் பின்பற்றியே அவருக்கு நிகரான டாக்டர். அப்துல்கலாம் சமீபத்தில் நம்மை மீளாத்துயரில் ஆழ்த்தி மறைந்தார்.

இப்போது தமிழகத் தராசு தனது இரண்டு தட்டுக்களையும் இழந்த சோகத்தில், நீதிமுள்ளும் சாயுமோ?

இளையசமுதாயமே, இவர்களைப் படித்தாவது வாழப்பழகுங்கள்..!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *