கவிஜி.

உங்கள் வீட்டில் உள்ள ஒருவரை திட்டமிட்டுக் கொன்று புதைத்தவருக்குத் தூக்கு தண்டனை விதித்தால், “வேண்டாம், மனிதனை மனிதன் கொல்வது தவறு” என்று நீங்கள் கூறுவீர்களா? அப்படி நீங்கள் கூறினீர்கள் என்றால் நீங்கள் இந்தச் சட்டத்துக்கும், இந்த வாழ்வு முறைக்கும் ஏதோ ஒரு வகையில் முரண்பட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சரி, உடன்பாடுதான் வாழ்க்கையா என்றால், அதுவும் இல்லை முரண் பட படத்தான் உடன்பாடு பற்றிய புரிதல் ஏற்படும். அடித்தால் மறுகன்னம் காட்டுதல் அன்பின் தீர்க்க தரிசனம். ஆனால், அதே சமயம் ஒரு கை தவறு செய்கிறதென்றால் அதை வெட்டிப் போடு என்பது வாழ்வின் நிதர்சனம்.

ஏதோ ஒரு வழியில் தவறை முன்னெடுத்துச் செல்வதற்கு சமம், அநீதிக்கு மறைமுகமாக உதவுவது. கொட்டுவது தேளின் குணம். அதை எடுத்து விடுவது என் குணம் என்று பேசுவது மனிதர்களுக்குள் பொருந்தாது என்றே தோன்றுகிறது. தகுந்த தண்டனை இல்லாத காரணமே இன்னும் இன்னும் குற்றங்கள் அதிகமாவது. சரி, அன்பினால் திருத்தி விடலாம் என்றால் இத்தனைக் காலம் அன்பே இல்லாமல்தான் மனித குலம் வாழ்ந்து கொண்டிருந்ததா? சரி தண்டனை தந்தால் மட்டும் குற்றங்கள் குறைந்து விட்டனவா என்ன? என்றும் ஒரு கேள்வி வந்து கொண்டுதான் இருக்கிறது.

கொலைக்குக் கொலை செய்வது மனிதத்தன்மை அற்ற செயல்தான். மறுக்க முடியாத ஒன்று. அப்படியென்றால் கொலை செய்யப் பட்டவன்? செத்தவனைப் பற்றி வருந்துவதைத் தவிர வேறு எந்த ஒரு நியாயமும் செய்யாமல், “கொன்றவனைக் கொன்றால் மட்டும் செத்தவன் திரும்பியா வரப் போகிறான்? இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, கொன்றவன் மன நிலையைப் பொருத்தும் இனி இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்ள இந்தச் சமூகம் முன்னெடுப்பான காரியங்களை செய்ய வேண்டும்,”என்று கூறுவதில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. முரண்பட்டு முரண்பட்டு அது உடன்படும் நிலைக்கு தள்ளிப் போவதைத்தான் இங்கு யோசிக்க வேண்டி இருக்கிறது. எட்டிக் குதித்து பார்த்து விட்டு கிடைக்காது என்று தெரிந்த பின் இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்வதில் பரிணாமம் இருப்பதாகத் தெரியவில்லை.

நூறு சதவிகித குற்றங்களில் நம் கவனம் பெறுவது பாதிக்குப் பாதிதான். அதில் அரசியல், அதிகாரம், செல்வாக்கு, பணம், புகழ், பேர், அந்தஸ்து என்று உள்ளே நுழைந்து அதுவும் பாதியாகக் குறைத்து விடுகிறது. அந்த 25 சதவிகிதம்தான் நாம் இங்குப் பேசி கலாய்ப்பதும், பேசாமலே அங்கலாய்ப்பதும், பேசி உடன்படுவதும், பேசி முரண்படுவதும், வாதமும் மற்றும் பிரதி வாதமும்.

எல்லோருக்கும் எல்லாம் தெரிகிறது. என்ன கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது. அதுதான் ஆணி வேரின் அச்சத்தை ஆட்டிப் பார்ப்பதும், ஆணியே புடுங்க வேண்டாம் என்று பேசித் தீர்ப்பதும்

ஒரு சினிமா சம்பந்தமான தீர்ப்புக்கு தரும் முக்கியத்துவத்தை ஏன் நிலுவையில் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான வழக்குகளுக்கு நம் அரசாங்கம் தருவதில்லை (நாமும் காரில் சென்று இலவச டிவி, இலவச ஃபேன் வாங்கிக் கொண்டிருக்கிறோம்). திடும்மென உள்ளே புகுந்து அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றவனுக்கு என்ன தண்டனை தரலாம் சொல்லுங்கள். ஹிட்லரையும் மன்னிக்கச் சொல்கிறதா உங்கள் தத்துவம்? பிறகென்ன? ராஜபக்சேவையும் மன்னித்து விடலாமா? அங்கு மக்கள் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் போது, இங்கு மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த அத்தனைப் பேரையும் அல்லவா தூக்கில் இட வேண்டும்!!! என்னையும் உள்பட.

மக்களுக்கான, இந்த மண்ணுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு போராளிக்கு தரும் தண்டனை, அது எதுவாக இருந்தாலும், ஒரு போதும் அதை அனுமதிக்க முடியாது, சட்டம் சரி இல்லை என்று கூறுபவனை எல்லாம் வெட்டிக் கூறு போட்டுத் தூக்கில் ஏற்றி விட்டு பின் யாருக்காக இந்த அரசாங்கம் நடக்கும்? ஆனால், அதே சமயம் ஒரு தீவிரவாதிக்கு தண்டனை தராமல் போவதும் சரி அல்ல. இப்போது தான் பிரச்சினைக்கு வருகிறோம். இங்குத் தீவிரவாதி யார்? போராளி யார்? இக்கேள்வி மிகப் பெரிய பதிலை நம் முன்னே வைத்துக் கொண்டு நிற்கிறது. நம் உலகப் பார்வை எடைக்கு அதிகமான எடையை எப்படித் தாங்குவது? தோற்கும் போது அவன் தீவிரவாதி ஆகிறான், வெற்றி பெற்றால் போராளி ஆகிறான் என்ற ஈர வெங்காய வசனங்களை தவிர்த்துப் பார்ப்போம். எல்லா வாதத்துக்குப் பின்னும் ஒரு மிகப் பெரிய வலி இருக்கிறதே இதை எப்படி உள் வாங்குவது? அல்லது கையாள்வது? எல்லாம் இங்கிருந்து எடுக்கப்பட்டவையே, கொலையும் கற்பழிப்பும் இந்தச் சமுதாயம் சொல்லிக் கொடுத்ததுதான் என்று ஒரு குற்றவாளி சமுதாயத்தைப் பார்த்து கை நீட்டும் உரிமை குற்றவாளிக்கும் உண்டு என்று பேசும் அதே வேளையில்; அன்பும் அரவணைப்பும்தான் இந்தச் சமுதாயம் கற்றுக் கொடுத்தது என்று அவர்களைப் பார்த்து கை நீட்ட சட்டத்துக்கும் உரிமை உண்டு என்பதையும் மறுக்கவியலாது.

ஒரு தீவிரவாதியை தூக்கில் தொங்க விடாமல் தடுக்கும் மனித உரிமை, அந்தத் தீவிரவாதி சுட்டுத் தள்ளிய அப்பாவி உயிர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது? “சரி நீ சுட்ட, நானும் சுடறேன்” என்று கூறுவது பரிணாமமா? என்று கேட்கும் மானுடர்களிடம் மீண்டும் ஒரு கேள்வியைத்தான் கேட்க முடிகிறது. சரி, என்னதான் செய்யலாம். மன்னித்து விடலாமா ? இப்படி மன்னித்து விட்டு விட்டுத் தானே துப்பாக்கிக் கிடைத்தவனெல்லாம் போராட்டம் செய்கிறான். போராட்டம் முக்கியம்தான். அந்தப் போராட்டம் எந்தப் புள்ளியில் தீவிரவாதத் தன்மையில் இருந்து விலகி நிற்கிறது? என்பதைப் பற்றிய சிக்கலையும் ஆராய வேண்டி இருக்கிறதே. அதே சமயம் போராடிப் போராடித்தான் இந்த அளவுக்காவது இங்கு பேசும் உரிமையைப் பெற்று இருக்கிறோம் என்பதையும் மறுக்க முடியாத இடத்தில் நின்று ட்ரிகரை சுற்றி ஒரு கதாநாயகன் போல சிரித்து சிந்திக்கவும் வேண்டி இருக்கிறது.

ஆனால் எந்தக் கட்டமைப்புக்குள்ளும் வராமல் குட்டிச் சுவராய் நின்றுவிட்ட மனநிலை கொண்ட தத்துவத்தில் துருப் பிடித்த அறிவீனமாய், அம்பேத்கரின் பாடலைப் பாடிய மனிதனைக் கொன்று போட்ட சமுதாயத்தை என்ன சொல்வது? எந்தச் சட்டத்தின் கீழ் தண்டிப்பது? இப்போது, கொன்றவர் தீவிரவாதியா? போராளியா? மனநிலை பாதித்தவரா சாதி வெறி பிடித்தவரா? இல்லை, தன்னைக் கடவுளாக உணர்ந்தவரா? இல்லை, கடவுள் மறுப்பாளரா? (மிருகமென்று எல்லாம் தயவு செய்து சொல்லாதீர்கள்).

ஆசையை அடக்குதல் பற்றித்தான் இங்கு பேசிக் கொண்டே இருக்கிறோம். ஆசையே வராத மனநிலையைப் பற்றி பேசுவது குறைவு. தவறு, அதன் பின்னணி என்று நீண்டு கொண்டே செல்லும் சங்கிலியின் ஆரம்பம் தனி மனித ஆசையாகத்தான் இருக்கிறது. இங்குதான் பொதுவுடைமை வருகிறது. சரி, பொதுவுடைமை என்றால் என்ன? அது காலத்துக்கு தகுந்தாற் போலத் தன்னை மாற்றிக் கொண்டே போகிறதோ என்று கூட ஒரு எண்ணம் தோன்றுகிறது.

தனியுடைமையாக எல்லா தவறுக்கும் ஒரு சரி இருக்கிறது. சரி… அந்த சரி, எல்லோருக்கும் சரியாக இருக்கிறதா என்று யோசிக்கும் போதுதான் தவறாகிறது. எல்லா தவறுக்கும் தண்டனை உண்டா என்றால், அது மீண்டும் நீளும் கேள்வியாக போகிறது. சரியைத் தவறு என்று வாதிட்டு சம்பந்தப் பட்டவரை வெளியே கொண்டு வரும் வழக்கறிஞர்களையும், தவறே செய்யாதவனை உள்ளே தள்ளி காலம் முழுக்க கொன்று கொஞ்சம் கொஞ்சமாய் குவித்துக் கொண்டே இருக்கக் காரணமான வழக்கறிஞர்களையும் என்ன செய்யலாம்? சரி, எல்லாம் சரியாக இருந்தும் நீதிபதி குளறுபடி செய்தால் என்ன செய்வது? இதில் வருடத்துக்கு 30 முறை ஓட்டுப்பதிவு வேறு. இந்த மாதிரி இருக்கும் சமுதாய, அரசியல் சூழ்நிலையில்தான் தண்டனைப் பற்றியும், தவறுகள் பற்றியும், சட்டம் பற்றியும், குற்றம் மற்றும் அதன் பின்னணி பற்றியும் வாய் கிழிய (விரல் கிழிய) எதையோ சொல்கிறோம் எதையோ எழுதுகிறோம்.

முகநூலில் நான் தூங்குகிறேன் என்று ஸ்டேடஸ் போடுவதும், ட்விட்டரில் நான் குளித்துக் கொண்டிருக்கிறேன் என்று ஸ்டேடஸ் போடுவதுமே புரட்சி என்று ஆகி விட்ட சூழ்நிலையில், புரட்சி பற்றி வேறு எப்படி தான் பேசுவது. சரி ஆளுக்கொரு துப்பாக்கி தூக்குவோம் என்றால் அதற்கும் இங்கு வழி இல்லை. கள்ளத் துப்பாக்கிதான் கிடைக்கும், எல்லாமே கள்ளப் பொருளாகி விட்ட நம் சந்தையில். நாம் பொருளற்றவர்களாகி போனதுதான் தத்துவமோ என்னவோ. வெளி நாட்டுக்காரன் வேண்டாம் என்று கூறிய குப்பைகளையெல்லாம் உபயோகப் படுத்த தயாராக இருக்கின்ற நாம், ஆங்கிலத்தில் தான் சிரிக்கவே செய்கிறோம் என்பது எத்தனைக் கேலியான கூத்து?!

இது சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் தோழர்களே. போலி எது? நிஜம் எது? என்று இனம் பிரித்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. எது நிஜமான தூக்கு? எது நிஜமான கொலை? எது நிஜமான அரசியல்? எது நிஜமான உரிமை? என்று நாம் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

காசு வாங்கிட்டு ஒட்டு போடுகின்ற சமூகம் உருப்படுமா? காசு கொடுத்து ஒட்டு கேட்கின்ற அரசியல் பிழைப்பிடமா?

தண்டனைகள் வலுப் பட வேண்டும் அதே சமயம் நிரபராதிகள் விடுவிக்கப் பட வேண்டும். இங்கு மூடி மறைத்திட்ட அறியாமைத் திரைக்குள் யார் தீவிரவாதிகள்? யார் போராளிகள்? என்று எப்படி இனம் காணுவது. மிகப் பெரிய சிக்கலை இன்றைய உலகமயமாக்கலும், நவநாகரீகமும் விதைத்துக் கொண்டு இருக்கிறது, புதைத்துக் கொன்றுமிருக்கிறது. ஒரு பக்கம் சட்டம், தான் செய்யும் கடமை ஒரு பக்கம், எதற்கெடுத்தாலும் போராட்டம். மறியல்… சண்டை… ஒரு பக்கம், ஒன்றுமே புரியாமல் புரிய விடாத சமுதாயத்தை கண்டும் காணாமலும் இருக்கும் மன உளைச்சல்.

வர்க்கப் போராட்டங்கள், சாதி மத போராட்டங்கள், நிலம் மோசடி பற்றிய போராட்டங்கள், ஊர்… நாடு எல்லை பற்றிய போராட்டங்கள். டாஸ்மாக் போராட்டங்கள், இதில் திருட்டு டிவிடி போராட்டங்கள். கள்ளக் காதல், காதல், கல்லூரி சண்டை, முக நூல் சண்டை, ஓரின சேர்க்கை போராட்டங்கள். சரி… விடுங்கள் போராட்டங்கள்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று சரியாக புரியவில்லை என்றால் நான் சரியாக எழுதி இருக்கிறேன் என்று அர்த்தம். இதுதான் இன்றைய தனிமனிதனின் குழப்பப் பார்வை அவன் அப்படி ஆகி விட்டான் அல்லது ஆக்கி விட்டோம்.

வலுத்தவன் எடுத்துக் கொள்ளும் சட்டம் உடையட்டும் இல்லையெனில் (எடுத்துக் கொள்வதென்பது அரச, அதிகார, வர்க்க, முதலாளித்துவ, தனியுடமை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்) …

“இருப்பவன் தரமாட்டானென்றால். இல்லாதவன் விடமாட்டான்.”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *