நமது நாட்டில் அதுவும் நம் தமிழ்த் திருநாட்டில் எத்தனை தலைவர்கள் தங்கள் செயலிலும், பேச்சிலும் நாகரீகம் காத்தனர். கொள்கைளை விமர்சித்தார்கள். வெள்ளையர்களோ கொள்ளையர்களோ அவர்களை நாகரீகமான முறையிலேதான் விமர்சித்தார்கள். என்னுடைய தலைமுறையில் நான் நேரில் பார்த்து வியந்த தலைவர்களில் பெருந்தலைவர் காமராஜர் என் மனதில் இன்றும் சிம்மாசனம் போட்டு அமர்துள்ள அரிய தலைவர். இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டிய அருமையான தலைவரும் கூட.

1973ம் வருடம் சென்னையில் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் துவங்குவதற்கு முன்பாக திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களது குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அது முடிந்தவுடன் கூட்டம் துவங்கியது. தலைவர் காமராஜர் மேடையில் அமர்ந்திருந்தார். சின்ன அண்ணாமலை, குமரி அனந்தன்,சிவாஜி கணேசன், கண்ணதாசன் போன்றவர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். ஒரு பேச்சாளர் தனது உரையில் தி.மு.க.தலைவர்களை ஒருமையில் அழைத்துப் பேசத் துவங்கினார். உடனேயே மிகுந்த கோபத்துடன்,” பேச்ச நிறுத்தைய்யா..” என்று தலைவர் காமராஜர் உரத்த குரலில் அவரைப் பார்த்துக் கூற அவரும் உடனேயே நிறுத்திக் கொண்டு திரும்பி விட்டார். மேடைக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்ததால் இதை நான் நன்றாகக் கவனிக்க முடிந்தது. எப்படிப் பட்ட உயர்ந்த தலைவர், பண்பாளர் காமராஜர் அவர்கள் என்ற எண்ணம் என்னுள்ளே ஆழப் பதிந்தது. 1971ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் சுதந்திராக் கட்சியின் சார்பாக நின்ற டாக்டர் மத்தியாஸ் அவர்களை ஆதரித்து ஒரு கூட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள வீரப்பபுரம் தெருவில் நடைபெற்றது. கூட்டத்தில் காமராஜர் பேசத் துவங்கும் பொழுது பெண்கள் பகுதில் கூச்சலும் பேச்சுமாக இருந்தது. “இப்படி பொம்பள ஆட்கள்லாம் பேசிட்டிருந்தா…நான் எதுக்குப் பேசணும்னேன்…உங்க வேட்பாளர் நல்லவருன்னு ஒட்டுக் கேக்க வந்தேன்…நீங்க கேக்காம பேசிக்கிட்டிருந்தா எப்படி” என்று தனது உரையை முடித்துக் கொண்டு சென்று விட்டார். அவர் யாரையும் அநாகரீகமாகப் பேசிக் கேட்டதில்லை. ஆனால் அந்த மகத்தான தலைவரை மிக வும் இழிவாகப் பேசிய திராவிட இயக்கப் பேச்சாளர்களை, அவர்களது தலைவர்களே ஆதரித்ததை நாடு நன்றாக அறியும். 1967ல் சென்னை சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் திருமதி. அனந்தநாயகி அம்மையார் கேட்ட கேள்விக்கு அப்பொழுது அமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் தரம்தாழ்ந்த விதத்தில் பதில் கூறி, அதற்கு அவருக்கே உரிய தமிழில் கேலியாக விளக்கம் தந்ததையும் “ஆஹா..என்ன அருமையான தமிழ்” என்று அவரது ஆதரவாளர்கள் வியந்தார்களே தவிர அப்படிச் சொன்னது தப்பு என்று கூற யாருமே முன்வர வில்லை. அதனால்தான் “தலைவன் எவ்வழி, தொண்டன் அவ்வழி” என்ற நிலையை இன்றும் காண்கிறோம். இன்றைய நிலையில் நாடு முழுவதும், குறிப்பாகத் தமிழகத்தில் நாகாரீக அரசியல் இல்லவே இல்லை. அதன் ஒரு காட்சிதான் தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கின்ற திரு. இளங்கோவனின் சமீபத்திய தரம்தாழ்த்த, மலிவான பேச்சு. அவரது நாகரீகமற்ற பேச்சைக் கண்டிக்காமல் காழ்ப்புணர்ச்சியில் அவருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. தமிழகத்தில் ஒரு தலைவர்கூட திரு. இளங்கோவனின் அநாகரீகமான பேச்சைக் கண்டிக்கவில்லை.(இளைஞனாக இருக்கும் பொழுது திரு. E.V.K. சம்பத் அவர்களது உரையைக் கேட்டிருக்கிறேன்…அவருக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லையே அவருடைய மகன் இளங்கோவனின் பேச்சு என்று வருந்துகிறேன்) மாறாக ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆளும் கட்சியோ எதிர்க் கட்சியோ இரண்டிலுமே நாகரீகமான தலைவருக்குப் பஞ்சம்தான். அப்படியே இருக்கும் ஒன்றிரண்டு நல்ல தலைவர்களின் வழிகாட்டுதல்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் “தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு இல்லை. இந்தப் பதவிப் பித்தர்களுக்கு நேர்மையான நம் தேசத்து இளைஞர்கள்தான் சாதி, மத,பேதம் இல்லாமல் ஒன்றிணைத்து நல்ல பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். இன்னும் நம்பிக்கை இருக்கிறது. நீரைக் கொதிக்க வைத்துக் கிருமிகளை அழிப்பதுபோல் நேர்மையும், எளிமையும், நாகரிகமும் உள்ள இளைய சமுதாயம் நம் தேசத்தைக் காக்கும். அதை என் தலைமுறை காணும் நாள் விரைவில் வரும்.

” தெய்வம் மனுஷ்ய ரூபேண”
அன்பன்,
மீ.விசுவநாதன்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அநாகரீக அரசியல்வாதிகள்

  1. கண்டிக்கப்படவேண்டிய இந்த அநாகரீகப் பேச்சை எதிர்கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும், அதற்கு எதிராக ஆளும்கட்சியினர் செய்யும் அராஜகத்தை மேலிடம் கண்டுகொள்ளாமல் இருப்பதும் வேதனையளிக்கும் நிகழ்வுகள்.

  2. சின்ன சின்ன விசயங்களையும் அரசியலில் பெரிய பெரிய பிரச்சனைகள் ஆக்கும் வித்தையை கற்றவர்கள் அரசியலில் அதிகம். இவர் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் வருகின்ற எதிர்ப்புக்களை வைத்து பார்க்கும் போது எதோ தவறாகத்தான் பேசியிருப்பார் என்று எண்ணுகிறேன். எது எப்படியோ பொது மக்கள் கொஞ்ச நாளைக்கு நாட்டுக்கு அவசியமான “மதுவிலக்கு” பிரச்னையை மறந்து இருப்பார்கள். இதற்கு எதிராக ஆளும்கட்சியினர் செய்யும் அராஜகத்தை மேலிடம் கண்டுகொள்ளாமல் இருப்பதும் வேதனையளிக்கும் நிகழ்வுகள்.

  3. இதுபோன்ற தரம் தாழ்ந்த பேச்சுக்கள் நாற்பது ஐம்பது ஆண்டுகளாக அதிகம் இருக்கின்றன. பண்டாரநாயக கணவனை இழந்தவர், நேரு மனைவியை இழந்தவர், இருவரும் தனிமையில் என்ன பேசியிருப்பார்கள் என்ற பேச்சையும் கேட்டிருக்கிறேன். சட்டமன்றத்தில் டி.என்.அனந்தநாயகி பட்ட அவமானத்தைக் கண்டிருக்கிறேன். காந்தியையும், நேருவையும் கூட விட்டுவிடவில்லை இவர்கள். இப்படியெல்லாம் பேசினால் அழிந்து போன தன் கட்சியைத் தூக்கி நிமிர்த்திவிடலாம் என்று இளங்கோவன் நினைத்திருக்கலாம். முன்பு போல பேசிய பேச்சு காற்றோடு போனால் எப்படி வேணுமானாலும் திசை திருப்பலாம், இப்போது அப்படியில்லையே, அனைத்தையும் படம் எடுத்து யூ ட்யூபில் போடுகிறார்களே. அதில் பேசியது அப்படியே பதிவாகியிருக்கிறதே. தலைகீழாக நின்று முக்குருணி தண்ணீர் குடித்தாலும் உண்மையை மறுக்க முடியாதே. ஒரே வழி, “உணர்ச்சி வேகத்தில் சற்று நிதானம் தவறி பேசியமைக்காக வருந்துகிறேன்” என்று சொல்லுவதுதான்.

  4. இளங்கோவன் பேசியதை நான் ஞாயப்படுத்த வில்லை.இருந்தாலும் அரசியல் நாகரீகத்தை இங்கே பேசுபவர்கள் ஒருபுறமே கைநீட்டி குரல் எழுப்புகிறார்கள்.அத்தனையுமே பொய்யும் புரட்டும் கலந்த ஒரு அநாகரீக ஆட்சியை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.இன்றைய அரசியலில் குஷ்புவும் கனிமொழியும் கூட பெண்கள்தாம்.ஒருகாலத்தில் திமுகாகாரனின் நாக்கை வெட்டுவேன் என்று பேசியதும் பெருந்தலைவர்தாம்.அரசியல் ரீதியாக காமராஜரை எதிர்த்த கலைஞர்தான் அவரதுபூத உடலுக்கு கொட்டும்மழையிலும் தோள்கொடுத்தவர் அவருக்கு சிலையெழுப்பி மணிமண்டப் கட்டி போற்றிப்புகழ்ந்தவர் அவரைத்தவிற வேறு யார்..- வில்லவன்கோதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *