-மேகலா இராமமூர்த்தி

உட்டோபியாவில் ஓர் உலா!

உலகமக்கள் அனைவருக்கும் தற்போது பரவலாகப் பரிச்சயமாகிவிட்ட ’தத்துவம்’ எனும் துறையை மேற்குலகுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியது கிரேக்கமே (Greece) ஆகும். இத்துறையைக் குறிப்பிட ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் Philosophy என்ற சொல்லானது Philo + Sophy என்ற இருசொற்களின் இணைப்பாகும். ’Philo’ என்பது காதலையும், ’Sophy’ என்பது அறிவையும் குறிக்கும் கிரேக்கச் சொற்கள். ஆதலால், ’அறிவின் மீது கொள்ளும் அளவற்ற காதலே’ (Love of Wisdom) தத்துவமாகும் என்பது தெற்றெனப் புலப்படுகின்றது.

இவ்வாறு அறிவுத்தேட்டத்தோடு வாழ்க்கையை அணுகியவர் கிரேக்கத் தத்துவத்துறையின் பிதாமகராய் அறியப்படும் மாமேதை சாக்ரடீஸ். ஒரு சிற்பியின் மகனாய்ப் பிறந்து சிற்பியாகவே தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், அறிவுத்துறையின் தந்தையானது விந்தையே! வீதிகளில் திரிந்தவண்ணம் ஏதென்ஸ் நகர இளைஞர்களுக்கு அறிவுகொளுத்திய சான்றோர் அவர். ”உன்னையே நீ அறிவாய்” என்பது அவருடைய புகழ்பெற்ற வாசகமாய் இன்றளவும் பேசப்படுகின்றது. ”தன்னை அறிய தனக்கொரு கேடில்லை’ என்ற திருமந்திரமும் இதே கருத்தைத்தான் எடுத்தியம்புகின்றது. ”ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள்! எதையும் அப்படியே நம்பிவிடாதே!” என்றுகூறி மெய்ப்பொருள் காணும் அறிவுக்கு வித்திட்டவர் சாக்ரடீஸ். அவருடைய அறிவார்ந்த சிந்தனைகளால் அன்று ஈர்க்கப்பட்டனர் ஏதென்ஸ் நகரத்து இளைஞர்கள் பலர்.

அத்தகையோரில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஏதென்ஸ் நகரின் Platoசெல்வச்செழிப்பான குடும்பமொன்றில் கி.மு. 427/428-இல் பிறந்து பொருட்செல்வத்தில் பற்றற்றவராய், சாக்ரடீஸின் அறிவுச்செல்வத்தின் மீது பற்றுவைத்து அவரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்ட பிளேட்டோ. தன் இருபதாவது வயதில் சாக்ரடீஸின் சீடராய் இணைந்தார் பிளேட்டோ என்று கூறப்படுகின்றது. ஆயினும் நீண்டகாலம் குருவும் சீடரும் இணைந்திருக்கவியலாதபடி விதி குறுக்கிட்டுவிட்டது.

ஆம்! சாக்ரடீஸின் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் தத்துவ அறிவையும் புரிந்துகொள்ளாத கிரேக்கம், அவர் கடவுளுக்கு எதிரான சிந்தனைகளை விதைக்கிறார்; ஏதென்ஸ் நகர இளைஞர்களை ஒழுக்கக்கேடான பாதைக்கு இட்டுச்செல்கின்றார் என்றெல்லாம் அவர்மீது அபாண்டமாகப் பழிசுமத்திச் சிறையிலடைத்தது. அத்தோடு விட்டதா? ஹெம்லாக் (hemlock) எனும் கொடிய விஷத்தையும் அவரைப் பருகவைத்து அவர் உயிரைக் குடித்தது. அப்போது பிளேட்டோவின் வயது இருபத்தெட்டுதான்!

குருவின் கொடூரமரணம் சீடரின் உள்ளத்தை வெகுவாய்ப் பாதித்தது. ”சாக்ரடீஸுக்கு மரணதண்டனை அளித்த ஆட்சி ஓர் இழிவான ஆட்சியே!” என்று துணிந்து குற்றஞ்சாட்டிய பிளேட்டோவுக்கும் அதிகாரவர்க்கத்தால் ஆபத்து நேர இருந்ததால் அவர் உடனடியாக ஏதென்ஸைவிட்டு வெளியேறினார். இத்தாலி, எகிப்து, சிசிலி போன்ற பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அம்மக்களின் வாழ்க்கைமுறைகளை ஊன்றிக் கவனித்தார்.

பத்தாண்டுகளுக்கு மேலாகத் தன் வாழ்நாளை வெளிநாடுகளில் கழித்துவிட்டு ஏதன்ஸ் திரும்பிய பிளேட்டோ, அங்கே கி.மு. 380களின் தொடக்கத்தில் ’கலைக்கழகம்’ (Academy) ஒன்றை நிறுவிக் கல்விகற்பிக்கத் தொடங்கினார். கணிதம் முதல் உயிரியல் ஈறாக, தத்துவம் முதல் வானியல் ஈறாகப் பல்வேறு துறைகளும் அக்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்பட்டன. அவர் தொடங்கிய கலைக்கழகமே பின்னாளைய பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் முன்னோடியாகும் (Plato’s Academy was the ultimate ancestor of the modern university; the English term ‘Academic’ had been derived from that ’Academy’). இந்தக் கலைக்கழகத்தில் பயின்றவர்தான் பிளேட்டோவின் புகழ்பெற்ற மாணாக்கரும், கிரேக்கத்தின் சிறந்த தத்துவஞானியும், மாவீரன் அலெக்சாண்டரின் குருவுமான அரிஸ்டாட்டில். அவர் இக்கழகத்தில் கல்விபயிலச்சேர்ந்தபோது அவருடைய வயது பதினேழு; அப்போது பிளேட்டோவின் வயது அறுபதாகும்.

தாம் தோற்றுவித்த கலைக்கழகத்தில் மாணாக்கர்களுக்குக் கல்வி பயிற்றுவித்த அதேகாலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட அரசியல், அறவியல், தத்துவம் சார்ந்த புத்தகங்களையும் எழுதியிருக்கின்றார் பிளேட்டோ என்பது குறிப்பிடத்தக்கது. பிளேட்டோவின் நூல்களில் இன்றளவும் பேசப்படும் அவருடைய சாதனைநூல் (masterpiece) ’குடியரசு’ (The Republic) எனும் அரசியல் நூலேயாகும்.

’எண்ணமே செயலுக்கு அடிப்படை’ எனும் கொள்கையுடைய பிளேட்டோ, பலகாலம் ஓயாது சிந்தித்து ஓர் இலட்சியக் குடியரசு எவ்வாறிருக்கவேண்டும் எனும் தன் எண்ணத்தைத் தம்முடைய ’குடியரசு’ நூலில் பதிவு செய்திருக்கின்றார். ஏதென்ஸ் நகரத்து மக்களோடும், வெளிநாட்டினரோடும் தம் குருநாதர் சாக்ரடீஸ் நீதியின் பொருள்குறித்து உரையாடுகின்ற வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் பிளேட்டோ படைத்துக்காட்டிய கற்பனையான சொர்க்கபுரி (Utopia) நடைமுறைக்குச் சாத்தியப்படாத ஒன்று என அவருக்குப் பின்வந்தோர் (ஏன் அரிஸ்டாட்டிலே அக்கருத்துடையவர்தான்) முத்திரை குத்திச் சென்றாலும் பிளேட்டோ விவரிக்கும் அந்த அதிசயச் சமூகத்தில், அற்புதக் குடியரசில் நாமும் வாழமாட்டோமா என்று நம்மை ஏங்கவைக்கின்றது இந்நூலில் அவர் படைத்துக்காட்டியிருக்கும் சிறந்த குடியாட்சிமுறை!

’அறிவுடையோரே ஆளுதல் வேண்டும்’ எனும் சாக்ரடீஸின் கோட்பாட்டைத் தன் உள்ளத்தில் ஆழப்பதித்திருந்த பிளேட்டோ, அதனை மையமாக வைத்து, மூன்றுவகை மனிதர்களை உள்ளடக்கிய தம் கற்பனைக் குடியாட்சியை ஒரு பிரமிட் வடிவில் உருவாக்கியிருந்தார்.

1. அதன் தலைமை நிலையில் இருப்பவர்கள் அறிவிற்சிறந்த  அரச ஞானிகள் (Philosopher-rulers).

2. இரண்டாம் நிலையில் இருப்பவர்கள் போர்வீரர்கள்/காப்பாளர்கள் (Warriors/ Guardians).

3. மூன்றாம் நிலையில் இருப்பவர்கள் தொழிலாளர்கள் (Workers).

ஓர் நல்ல மனிதனின் பண்புகள் யாவை? ஓர் இலட்சியச் சமுதாயம் என்பது என்ன? ஆட்சியாளரின் பண்புகள் எவை எவை? உயர்ந்த சமுதாயத்தை உருவாக்குவதில் கல்வியின் பங்கு யாது? என்பன போன்ற பல வினாக்களுக்கு இந்நூலில் விடைகாண முயன்றிருக்கின்றார் ’மேற்குலகின் முதல் அரசியல் சிந்தனையாளர்’ என்று போற்றப்படும் பிளேட்டோ.

செருப்பு அறுந்துபோனாலோ, வீட்டுக்கதவு பழுதானாலோ, அல்லது நோய் வந்தாலோ அதனைச் சரிசெய்வதற்கு ஏற்ற மனிதரைத் தேடிச்செல்லும் நாம், ஆட்சிப் பொறுப்பை மட்டும் எந்தத் தகுதியும் இல்லாதவரிடத்து ஒப்படைப்பது சரியானதா? என்று வினாயெழுப்பி, ஆட்சியாளர்களுக்கென்று சில தகுதிகளை வரையறை செய்திருக்கின்றார் அவர்.

பத்து வயதுவரைச் சுதந்திரமாகவும், அதற்குப்பின் கட்டாயப்படுத்தலின்றி பத்து வருடகாலம் விருப்பத்தோடு கல்விபயின்றும், அதன்பின்பு தத்துவ அறிவுபெறச் சுற்றுப்பயணம் செய்து மக்களின் வாழ்வை நேரடியாக அறிந்துமென… இவ்வகையில் தன் வாழ்நாளின் ஐம்பதாண்டு காலத்தைச் செலவழித்து, படிப்பறிவும் பட்டறிவும், மெய்யியல் அறிவும் ஒருங்கே பெற்றவனாகவும், மக்களுக்காக உழைக்கும் தன்னலமற்ற குணம் உடையவனாகவும் எவன் இருக்கிறானோ அவனே நாட்டைத் தலைமையேற்று நடத்த வல்லவன் என்பது பிளேட்டோவின் தீர்மானம்.

அரசாள்வோரோ அல்லது சமுதாயக் காப்பாளரோ யாருமே பிறப்பதில்லை; மாறாக அவர்கள் முறையான கல்வியாலேயே அவ்வாறு உருவாக்கப் படுகின்றார்கள்  என வலுவாக நம்பிய பிளேட்டோ, தன்னுடைய இலட்சிய அரசினை உருவாக்குவதற்கு ஏற்ற கல்வித்திட்டம் ஒன்றையும் வகுக்கத் தவறவில்லை. ’எல்லாரும் சமன்’ என்ற கருத்து, கல்வியையும் அறிவாற்றலையும் பொறுத்தவரையில் தவறானது என்ற நிலைப்பாடுடைய அவர், அவரவர் ஆற்றலுக்கேற்பக் கல்வி பெறப்படுவதனாலும், பணிகள் பங்கிடப்படுவதனாலுமே சமுதாய அமைப்புச் சீரடையும்; கல்வியானது அறிவுசார் கருத்துக்களை மனிதனுக்குள் திணிப்பதற்கு பதிலாக அக்கருத்துக்களின் உள்ளீடான நற்பண்புகளை அவனிடத்து விதைப்பதாய், வெளிப்படுத்துவதாய் இருக்கவேண்டும் என்றார்.

மக்களுக்கு வழங்கப்படும் கல்வி அடிப்படைக்கல்வி, உயர் கல்வி என இரண்டாகப் பிரிக்கப்படும். இருபது வயதுவரை  அடிப்படைக்கல்வியும், இருபதிலிருந்து முப்பத்தைந்து வயதுவரை உயர்கல்வியும் அவர்களுக்கு அளிக்கப்படும். இத்தகைய கல்வித்திட்டமானது அறிஞர்களை ஆள்வோராக உருவாக்குவதையும், உடல்வலிமையில் வல்லோரைக் காப்பாளராக நியமிப்பதையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்தகைய கல்விநிலைகளை எட்டாத எவரும் ஆட்சியாளராக முடியாது எனக் கட்டுப்பாடு விதிக்கின்றது பிளேட்டோவின் குடியரசு.

அடுத்து, பிளேட்டோ முன்வைக்கும் முக்கியக் கருத்து ஆண், பெண் இருபாலர்க்கும் சமமான கல்வி தரப்படவேண்டும் என்பது. தான் காண விழைந்த இலட்சியக் குடியரசில் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் பொதுப்பணியில் ஈடுபட வேண்டும் என்று பிளேட்டோ விரும்பினார். ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவில், ஆற்றலில் வேறுபாடு உண்டு என்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை (he rejected the notion of the sexes having different capacities). ஆடவர்க்கு இணையான கல்வி பெண்களுக்கு அளிக்கப்படாவிட்டால் அவர்களால் சமுதாயத் தொண்டுகளைத் திறம்பட ஆற்றமுடியாது என்றெண்ணிய அவர், மக்கள் தொகையில் (ஏறத்தாழ) பாதியளவுள்ள பெண்களைப் பொதுப்பணிகளிலிருந்து விலக்கிவைப்பது அறியாமையும், சமுதாயத்திற்குப் பேரிழப்பை ஏற்படுத்தும் செயலுமாகும் என்று உறுதிபடக் கூறினார்.

அனைத்திற்கும் மேலாக, நாட்டைக் காக்கும் பொறுப்பிலிருப்பவர்கள் தம் கடமையை வழுவின்றிச் செய்யவேண்டுமானால் அவர்களுக்கென்று குடும்பமோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களோ இருக்கக்கூடாது; பொருள்தேடவேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கக்கூடாது என்று வலியுறுத்திய பிளேட்டோ, சுயநலமெனும் கடுகு உள்ளமற்றுப் பொதுநலமெனும் தாயுள்ளம் – தொண்டுள்ளம் கொண்ட ஓர் பொதுவுடைமைவாதியே நாட்டின் தலைவனாயிருக்கவேண்டும் என்று விரும்பினார்.

ஆள்வோரைத் ’தலை’க்கும், போர்வீரர்களை ’நெஞ்சு’க்கும், தொழிலாளர்களை ’வயிற்று’க்கும் ஒப்பிட்டார் பிளேட்டோ. ஆள்வோர் மூளைபலம் மிக்கோராயும் , போர்வீரர்கள் நெஞ்சுரம் மிகுந்தோராயும், தொழிலாளர்கள் உலகாயதங்களில் நாட்டம் கொண்டோராயும் இருப்பர். வெவ்வேறு சிந்தனையும், செயல்திறனுமுடைய இம்மூவகைப் பிரிவினரும் ஒருங்கிணைந்து செயற்படுவது ஓர் இலட்சிய அரசை – ஆதர்ச சமூகத்தை உருவாக்கும் என்பது அரசியல் அறிஞர் பிளேட்டோவின் அசைக்கமுடியாத நம்பிக்கையாயிருந்தது.

ஆனால், சராசரி மனிதர்களையே அதிகம் கொண்ட சமுதாயத்திற்குப் பிளேட்டோவின் உயர் இலட்சியங்களைக் கொண்ட குடியரசை உருவாக்குவது சாத்தியப்படாமல் போய்விட்டபோதினும், ஆட்சியாளர்களுக்கு இன்றியமையாதது என்று அவர் போதித்த பொதுவுடைமைத் தத்துவமே பின்னாளில் கார்ல் மார்க்ஸ் (Karl Marx) போன்றோரின் அரசியல் சித்தாந்தங்களுக்கு அடிப்படையாய், ஆதாரமாய்த் திகழ்ந்தது என்பது அரசியல் அறிஞர்களின் துணிபு.

’பிளேட்டோ’ என்ற சொல்லுக்குக் கிரேக்க மொழியில் ’பரந்த’ (the broad one) என்று பொருள். (அவருடைய தோள்கள் பரந்து விரிந்திருந்தமையால் இப்பெயர் அவருக்கு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது). பெயருக்கேற்பவே பரந்த சிந்தனைகளுக்குச் சொந்தக்காரராய், பொன்னுலகைத் தன் எழுத்துக்களில் உருவாக்கிக் காட்டிய தன்னலமற்ற தகைமையாளராய்த் திகழ்ந்த பிளேட்டோ, மேற்குலகின் தத்துவத்துறை வளர்ச்சிக்கும், அரசியல் மறுமலர்ச்சிக்கும் பெரும் வழிகாட்டியாய்த் திகழ்ந்திருக்கின்றார் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

***

கட்டுரைக்குத் துணைநின்ற தளங்கள்:

https://en.wikipedia.org/wiki/Plato

http://www.koodal.com/youth/history/biography.asp?id=37&content=tamil&name=plato

100 philosophers – Peter J. King

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *