மீ. விசுவநாதன்

vallamai111-300x1501111111111
ஓடைக் கரையோராம் ஓடுகின்ற பாம்புதனின்
வாடை தெரிந்தால் வலைக்குள்ளே ஓடுகின்ற
நண்டிடம் கற்றேன், “நமைத்தேடும் சூததனைக்
கண்டிபாய் கண்டு கட”. (191) 09.07.2015

பெண்களைப் பூசிக்கப் பிள்ளைமனம் வேண்டுமாம் !
அண்மையில் அம்மாவாய் , அன்புடைய உண்மை
மனைவியாய்த் தோழியாய் வந்த திருவை
நினைவில் நிறுத்தல் நெறி. (192) 10.07.2015

பிறந்தே(ன்) இருந்தேன் பிரியமாய் வாழ
மறந்தே(ன்) இதற்காநான் வந்தேன் – சிறந்தே,
உறவை மதித்தே உயர்குரு தாளை
மறவா திருக்கவே தான்.. (193) 11.07.2015

வாயாற வாழ்த்தவும் வந்தோர்கள் உள்ளத்து
நோயாறப் பேசவும் நூலோரைப் போற்றவும்
மேலான ஞானியர்கள் மெச்சவுமே வாழ்வோர்க்கு
பூலோகம் இன்ப புரி. (194) 12.07.2015

பொன்வண்டு பூவறியும் பூங்காற்று காடறியும்
முன்கொண்ட நட்பை முகமறிந்து நன்றாய்ச்
சிரித்தே ஒளிவீசும் ! தீராநோய் “நானைத்”
தெரிந்தறிந்தோர் நாளெலாம் தேன். (195) 13.07.2015

கட்டுகட்டாய்ப் புத்தகங்கள் காட்சிக்காய் வைத்தாலும்
சொட்டாசை வந்தால்தான் புத்தகத்தைத் தொட்டெடுத்துப்
பார்ப்பார்கள் ! தெய்வப் பழக்கமும் அப்படித்தான் !
பார்பார்நீ உள்ளே பழகு. (196) 14.07.2015

மெல்லிசை மன்னர் விசுவநாதன் சங்கீதம்
நல்லிசையாய் என்றுமே நம்முள்ளே மெல்லியதாய்
கேட்டிடுமே ! அந்தசுகம் கொட்டியவர் ஈசனருள்
விட்டு விலகா விசு. (197) 15.07.2015

வானவில் வண்ணம் மனதில் அழகினைத்
தானாகத் தூண்டும் ; தவசிகள் ஞானவண்ணம்
மூர்க்கத்தைப் போக்கி முழுஅறிவைத் தூண்டிவிடும் !
சேர்க்கை நலமே சிறப்பு. (198) 16.07.2015

கண்ணன் நிறமோ கருப்பென்றேன் ; தின்னுகிற
வெண்ணை நிறமோ வெளுப்பென்றாள் – மண்ணுண்ட
வாய்க்குள் சிவப்பென்றேன் ; மாறாத வண்ணனே
தாய்க்குள்ளே பாலென்றா ளே ! (199) 17.07.2015

இளமையும் மூப்பும் எதிர்மறைத் தோழர் !
வளமையும் ஏழ்மையும் வாழ்வின் விளைவுகள்!
வித்தையும் பண்பும் விலகிய பாதைகள் !
சுத்தறிவே தூய துணை. (200) 18.07.2015

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *